Monday, April 21, 2008

 

பலாக்காய் துவரம்...சுலபமுறை

ஆஹா! பார்க்க கண் கொள்ளா காட்சி!!
இன்று சித்ரா பௌர்ணமி! மாமனார் திதி. ஒவ்வொரு வருடமும் என்றைக்கு என்று தேட அவசியமில்லாத நாள்!இதே போல் மாமியார் திதி ஆடி அம்மாவாசை! என்ன பொருத்தம்!!
காலையிலேயே சமையல் முடித்துவிட்டேன். மெனு? பலாக்காய் துவரம், அவியல், தயிர்பச்சடி,
சர்க்கரையில்லாத அவல் பாயாசம்....ஐய..சர்க்கரையில்லாமலா? அட! அதுதாங்க சுகர்ஃப்ரி மாத்திரைகள் இரண்டு போட்டு அரைக்கப் அவலில் எக்ஸ்க்ளூஸிவலி ரங்கமணிக்காக மட்டும்(டையபெட்டிக் பேஷண்ட்) செய்த பாயாசம். புடிச்சுச்சோ புடிக்கலையோ. லல்லாருந்துச்சோ லல்லாலையோ.

சேரி...பலாக்காய்க்கு வருவோம். ரெண்டு நாள் முன்னால் பழமுதிர்சோலை போனபோது பிஞ்சு பிஞ்சா பலாக்காய் பார்த்தேன். இருந்ததிலேயே பிஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சாக ஒன்று வாங்கிக்கொண்டேன். திதி சமையலுக்காக.


இதைவிட பிஞ்சாக இருக்கவேண்டும்.

ப்ரிட்ஜில் வைத்திருந்து இன்று காலை எடுத்து முட்களை சீவ முயன்ற போது கத்தி மொண்ணையாயிருந்தது. முடியவில்லை. எஸ் ஒ எஸ் என்று ரங்கமணியை அழைத்தேன்.
அவராலும் முடியவில்லை. அடடா! பலாக்காய் துவரம் என்று முடிவு செய்திருந்தேனே! என்செய்வது? எங்களோட ஐடியா கோடவுனிலிருந்து ஒரு ஐடியாவை உருவினேன்.

பலாக்காவை ஒரு அங்குல அளவுக்கு வட்டவட்டமாய் ந...று...க்..கி...னே...ன்.
அவ்ளோ சிரமம்! அவைகளை பருப்பு வேக வைக்கும் போது மேலே ஒரு தட்டில் பலா வட்டங்களை அடுக்கி குக்கரில் மூன்று விசிலுக்கு வேக வைத்தேன்.

குக்கரைத் திறந்தபோது 'காய்...பூவாய்' வெந்திருந்தது. ஆறியவுடன் வெகு சுலபமாக முள்ளோடு தோலை சீவியெடுத்தேன். காயை நன்றாக உதிர்த்து. கடாயில் எண்ணெய் ஊற்றி
தாளித்து மஞ்சள்பொடி, மிளகாய்பொடி,உப்பு சேர்த்து கிளறி, உதிரியாக வேக வைத்த பாசிப்பருப்பு, துருவிய தேங்காய் கலந்து புரட்டி கொத்தமல்லை தூவி பரிமாறிய போது..
சூப்பர்! என்று காலியாயிற்று.

எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் இது. முதன்முதலாக இது எனக்கு எப்போது, எப்படி அறிமுகமாயிற்று?

எனக்கு சின்ன வயதில் எங்கள் பெரிய தாத்தாவின் ஒவ்வொரு பிறந்தநாளும் அவரது சொந்த ஊரான ஆழ்வார்குறிச்சியில் சிவசைலம் கோவிலில்தான் கொண்டாடுவார். அப்போது எங்கள் குடும்பம் மொத்தமும் அங்கேதான் டேரா போட்டிருக்கும். 'கிராமத்திலே டேரா போட்டு கொட்டி முழக்குவோம்'. அருமையான நாட்கள் அவை.

காலையில் கோவிலில் எல்லா சன்னதிகளிலும் விசேஷ பூஜைகள் நடந்துமுடிய 11 மணி ஆகிவிடும். அதன் பிறகு மதிய உணவு. அது தயாராகும் வரை கோவிலைச்சுற்றி நாங்கள் அடிக்கும் லூட்டி..இன்றும் நெஞ்சில் நீங்காது நிழலாடுகிறது.

மதிய உணவு..வெறும் உணவல்ல அறுசுவைகளும் கொண்ட ஸ்பெஷல் மீல்ஸ்!! இன்று வரை
அந்த சுவையில் மற்றொரு மீல்ஸ் சாப்பிட்டதில்லை. ஒவ்வொரு பதார்த்தமும் பார்த்துபார்த்து
சமைத்திருப்பார்கள். மேற்பார்வை எங்கள் மாமா! அவரே ஒரு சாப்பாட்டுப் பிரியர். பின் கேட்கவேண்டுமா?

விபரம் தெரிந்து அங்குதான் பலாக்கா துவரம் சாப்பிட்டிருக்கிறேன். ஆழ்வார்குறிச்சி சமையர்காரர்கள் அவ்வளவு கெட்டிக்காரர்கள்! சாப்பிடுபவர்கள் வயிறும் மனமும் குளிர வேண்டும்
என்று நினைப்பவர்கள். மேலும் அவர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கும் எங்கள் மாமாவும்
ஒரு காரணம்.

அதன் பிறகு வருடங்கள் பல கழிந்து மாமாவின் சதாபிஷேகத்தின் போது ஆழ்வார்குறிச்சியில் அதே மெனுவை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாமா,'சாப்பாடு எப்படியிருக்குடீ!' என்று கேட்ட போது
'சூப்பர்! மாமா!' என்றோம் எல்லோரும் ஒரே குரலாக.

Labels:


<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]