Sunday, April 20, 2008

 

அசுவதியும் ஹஸ்தமும் பொருந்துமா?

எதெதற்கோ பொருத்தம் பார்க்கிறோம். திருமணத்துக்கு பெண்ணுக்கும் பையனுக்கும், வியாபாரத்துக்கு பார்ட்னருக்குள், வேறு எதெற்கெல்லாமோ பொருத்தம் பார்க்கிறார்கள்.

ஆனால்...ஏ சோக கதையை கேளு பதிவர் குலமே...!

ஆச்சிக்கும் பேரனுக்கும் பொருத்தம் பார்க்கவேண்டுமே! நான் அசுவதி அவன் ஹஸ்தம்.
அவனுக்காக அவன் பெற்றோர் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த விளையாட்டுப் பொருட்கள்
ஒரு வண்டியிருக்கும். ஆனால் அவனுக்குப்பிரியமானது...


என் சமையலறையில் உள்ள உப்பு பாட்டில், சர்க்கரை பாட்டில் மற்றும் உள்ள மசாலா பாட்டில்கள்!! டிராயரைத்திறந்து அத்தனையையும் வாரியிறைத்து விளையாடுவது அவனுக்குப் பிடித்தமான விளையாட்டு.

நான் சமையல் செய்யும் போது காலடியில் அமர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டி... ரசிக்கக்கூடியது.

கொஞ்சம் நகர்ந்தால் போதும் மறுபடியும் டிராயர் திறக்கப்பட்டு பாட்டில்கள் எல்லாம் தரையில் அவனோடு கும்மி அடித்துக் கொண்டிருக்கும். மறுபடிமறுபடி அவற்றை அடுக்கிவைப்பதே நாள் முழுக்க வேலையாயிருக்கும். மிக்ஸி ஜார்களும் பிடித்தமான விளையாட்டுப் பொருள்.
ஏதாவது அரைக்கவேண்டுமானால் ஹாலில் வந்து ஜாரை தேடவேண்டும்.
நான் மிக்ஸியில் அரைக்கு முன் ஓடிவந்துவிடுவான், உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று உறுமிக்கொண்டே.

அதே போல் பூஜை முடித்து மணிசத்தம் கேட்டதும் 'சாமி காப்பாத்து' ன்னு கைகளை கூப்பிக்கொண்டே வந்திடுவான். அவன் அம்மா வெளியே போயிருக்கும் போது பால் ஆத்தி பாட்டிலில் ஊற்றியவுடன் சமத்தாக என் மடியில் வந்து படுத்துக்கொள்வான். டையபர் மாத்திக்கொள்வான். அவன் தேவைகளையெல்லாம், உம்..உம்..என்று சைகை காட்டி நிறைவேற்றிக்கொள்வான்.

இவ்வளவும் செய்யும் எனக்கு, காலையில் எழுந்தவுடன் தாத்தாவுக்கு 'குட் மார்னிங்' சொல்வான்.
எனக்கு 'குட்மார்னிங்' சொல்லு என்றால் முகத்தை திருப்பிக் கொள்வான். அவன் தாத்தா தூக்கியவுடன் கழுத்தைக்கட்டிக்கொண்டு கொஞ்சிக்கொள்வான். நான் தூக்கி, 'ஆச்சி கொஞ்சிக்கோம்மா!!' என்று கெஞ்சினால் ஒரேயடியாக பின்னால் வளைந்து கொள்வான்.
காரணம், தாத்தா ஒரு ஒபீடியண்ட், ரிடயர்ட் தாத்தா. அவன் சொல்படி கேட்டு வெளியில் கூப்பிடும்போதெல்லாம் அழைத்துப்போகும் தாத்தா,
கடைக்குக் கூட்டிப்போய் விதவிதமாய் வித்யாசமாய்...பந்து வாங்கித்தரும் தாத்தா!!

போதாதா கொஞ்சிக்கொள்ள? இதற்கெல்லாம் ஏது நேரம்? ரெண்டு காதுகளிலிருந்தும் எனக்கு புஸ்புஸ் என்று புகை வரும்.

'வா'என்றால் முகத்தை இப்படித் திருப்பிக்கொள்வான். எங்கே தப்பு? நான் என்ன செய்தேன்? அல்லது செய்யவில்லை? ஒத்துக்கிறேன், குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே-தான்.
எத்தனையோ குழந்தைகளை கொண்டாடி என் வசமாக்கியிருக்கிறேன். இவன் மட்டும், நான் தூக்கினால் செல்லமாக கொஞ்சிக்க மாட்டேங்கிறானே.....என்ன கொடுமையிது சண்முகா...!

ஆகவே அசுவதிக்கும் ஹஸ்தத்துக்கும் பொருத்தம் இருக்கா? எங்கள் ஜோஸ்யரை பார்க்கச் சொல்லவேண்டும்.
இவையெல்லாம் சீரியஸான ஆவலாதிகள் இல்லை. என்னோட செல்லமான அங்கலாய்ப்பு அவ்ளோதான்.

இவற்றையும் நான் ரொம்ப ரசிக்கிறேன்.

Labels:


Comments:
அஸ்வினி (அசுபதி) மேஷ ராசி
ஹஸ்தம் கன்னி ராசி
மேஷத்திலிருந்து கன்னி 6ம் இடம்
கன்னியிலிருந்து மேஷம் 8ம் இடம்
6/8 அஷ்டம சஷடமம் தளை தட்டும்
ராசிப்பொருத்தம் லேதண்டி...!
மற்ற பொருத்தம் உன்னதண்டி...ஹி,ஹி,ஹி!
 
பேரனோடு நீங்கள் அடிக்கும் லூட்டியை ரசித்தேன்...:):)ஏங்க நானானி."familiarity breeds contempt".....ன்னு உங்க பேரன் ஷேக்ஸ்பியர் படிச்சிருப்பானோ>??:):)
 
ரொம்ப கஷ்டமம்! வாத்தியாரே!
தட்டும் தளைகளை வெட்டியெறிந்து
ஒட்டிக் கொள்வேன்.
....ஏதாவது பரிகாரம் உன்னாரண்டி?
ஹி..ஹி..ஹி.....

ஓடோடி வந்து பொருத்தம்(இல்லைன்னு)
சொன்னதுக்கு டாங்ஸண்டி!
 
ராதா!
பேரன் படிச்சாலும் படிச்சிருப்பான்.
யாருகண்டா!
 
ஆஹா...நம்ம வீட்லேயும் இருக்கே.. நானும் நம்ம ஜூனியரும்...அவ இதை படிக்க விடக்கூடாது... புதுசா காரணம் ஒன்னு கிடச்சுடும்..:-))

\\ஏதாவது அரைக்கவேண்டுமானால் ஹாலில் வந்து ஜாரை தேடவேண்டும்.
நான் மிக்ஸியில் அரைக்கு முன் ஓடிவந்துவிடுவான், உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று உறுமிக்கொண்டே.\\\

ஆஹா கண்ணும் முன்னாடி சீன் வந்து நிக்குது.. பார்த்தீங்களா உங்களுக்கு பேரன் செலவில்லாம உடற்பயிற்சி சொல்லிக்குடுக்குறான்..சந்தோஷப்படுங்க
 
பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் தாத்தா தான் பிடிக்கும்.

அது எழுதப் படாத ரூல்.
தாத்தா செருப்புப் போட்டுக்க ஏதுவா எங்க ப்பேத்தி தன் ஷூவையும் அங்க ஒட்டி கொண்டு வந்து வைத்து விடுவா.:)
வெளில போகிற தாத்தாவை மிஸ் பண்ணிடுவோம்கிற பயம் தான்:))
 
நல்லா இருந்தது. என் பசங்க (அப்பா அந்த பக்கம் போனவுடனே) அஞ்சறை பொட்டியில தான் விளையாடுவாங்க. அவங்க கை எட்டுற மாதிரி எடுத்து வச்சிடுவோம்ல! அவர் பார்த்தா தான் (என்னை) திட்டுவார்! இதுல இரண்டுமே அப்பா செல்லங்கள்.... என்னத்தை சொல்றது?

படத்தில பார்த்தா நீங்க எப்ப பார்த்தாலும் சமைச்சுட்டே இருக்காப் போலிருக்கு! இனிமே பேரனை கையிலயோ கவுன்ட்ட்ர்லெயோ வைச்சு சமையலுக்கு மிக்ஸ் பண்ணச் சொல்லுங்க. பேரனும் கையில! சாப்பாடும் அவ்வளவு ருசி;-)) (உருப்படற ஐடியா தான் சொல்லணும்னு இல்லியே:-)
 
மங்கை!
உங்க ஜுனியர் இதை கட்டாயம் படிக்கவேண்டும். அப்பத்தானே நான் படும் பாடு நீங்களும் படலாம்?
ரொம்ப நல்ல மனசு...எனக்கு!!
 
கெக்கேபிக்குணி!
கெக்கேபிக்கேன்னு நீங்க சொன்னதும் உருப்படியான ஐடியாதான்! ஏன்னால்
கிச்சனில் அதுவும் நடக்கும். தோசை ஊத்தும் போது கவுண்டரில் உக்காந்து கொண்டு பார்வையிட்டுக் கொண்டே
சாப்பிடுவார்.
 
நான் ஒன்னும் சமைத்துக் கொண்டேயிருக்க மாட்டேன். 9 மணிக்குள் சமையலை முடித்துவிட்டு
வெளியேறிவிடுவேன். அடிக்கிற வெயிலோடு யாரால உறவாடவும் விளையாடவும் முடியும்?
 
பேரனோடு சேர்ந்து பாட்டி, 'அடிக்கிறாங்கன்னு சேதி வந்துச்சே!!!

அது நிசந்தானா? :-))))

நல்லாருங்கப்பா.

மொளகாய்ப்பொடி பாட்டில் மட்டும் கைக்கெட்டாத தூரத்தில் இருக்கட்டும்.
 
ஆகா ஆகா - நானானி - பேரனோட செல்லக் கோபத்தையும் குறும்பையும் ரசிக்க நமெக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணூம் இல்லையா - ஆமா ஹஸ்தத்தோட வாக்குமூலம் எங்கே ?

சகோதரி - நானும் அசுவதி தான்
 
எல்லா ஆச்சிகளுக்கும் இந்த பொறாமைதானோ. காலை எழுந்ததும் என் இரண்டு பேத்திகளும் ஆச்சியை தாண்டி தாத்தா என்று ஓடி வரும். தட்டை எடுத்து வந்து தாத்தா ஊட்டி விடு என்று சொல்லும். கதை சொல்லிக் கொண்டே முழுவதும் சாப்பிடச் செய்வேன்.
சகாதேவன்
 
அட உங்க தபால்பெட்டிக்கு பசி கூடுதலா?

சொல்லை இப்படி முழுங்கிருச்சு!!!!!பேரனோடு சேர்ந்து பாட்டி 'லூட்டி'ன்னு இருக்கணும்:-)))))
 
ஹையோ! துள்சி! குழந்தகளை அடிக்கிற வேலையே எங்கிட்ட கிடையாதே! அது ஏதோ ராங் சேதியாயிருக்கும்.
மிளகாய் பொடி பாட்டில் கொட்டி மொழக்கி எல்லாம் ஏற்கனவே ஆச்சு!
 
சகா!
உங்க பேத்திகளோட ஆச்சி எப்படியோ? பேரன் என்னிடம் எல்லாம் செய்து கொள்வான். ஆனால் கொஞ்சிக்க மட்டும் நோ..ங்கிறானே!
 
நானானி,

என்னுடைய மறு மொழிக்கு பதில்மொழி எங்கே ?
 
சீனா!
பேரனிடம் வாக்குமூலம் வாங்க இவ்ளோ நேரமாச்சு. மன்னிக்கவும்.
இதோ வாக்குமூலம், "ஞஞஞஞா..அஷ்ஷுஅஷ்ஷு..த.த.த..தாத்தாஅத்தாத்தாஆ..
வெவவேவெ..ஹூ..ஹூம்ம்ம்ம்ம்"
போதுமா? இன்னும் வேணுமா?
புரிஞ்சுதா?....உங்களுக்குப் புரிஞ்சா சரி!!
 
சீனா! உங்களுக்கும் உங்க பேரப்பிள்ளைகளுக்கும் ஒத்துப்போகுதா?
பொருந்துதா?
 
சின்ன புள்ளைங்க... பாவம் விளையாடிட்டு போகுது....
 
விக்னேஷ்வரன்!
வாங்க..வாங்க!
பிள்ளைங்க தாராளமா விளையாடட்டும்.
அதைத்தானே ரசிக்கிறேன். ஆனால் என்னோட ஆதங்கம் என்னான்னு படிக்கலையா?
 
நானானி,

பேரனின் வாக்குமூலம் சமர்ப்பிக்கும் போது அதன் மொழி பெயர்ப்பையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டாமா

ஆமா - என்னோட மூத்த பேத்திய்யொட கொஞ்ச நாள் காய் விட்டிருந்தேன் - இப்ப அவ எனக்கு பெஸ்ட் பேத்தி - மத்த பேரன் பேத்தி கூட எல்லாம் ஒத்துப் போகுது - பிரச்னை இல்ல
 
சீனா!
பேரப்பிள்ளைகளோடு நான் காய் விட்டதேயில்லையே!
உங்களுக்கு ஒத்துப் போவது பத்தி சந்தோசம். அனா, 'தாத்தா'ன்னு கழுத்தைக் கட்டிக்கிட்டு கொஞ்சிக்கிறானா?
அங்கதானே இடிக்குது.
ஞஞாஞாஞா = ஏ பந்து அங்கே விழுந்திட்டு எடுத்துத் தா!

அஷ்ஷுஅஷுஷ் = இங்கே வந்து பார்
தத்தாததாஆஆஆ = கதவைத்திறந்து வெளியே கூட்டிட்டுப் போ! (கொஞ்சம் தாமதமானாலும் வால்யூம் கூடிக்கொண்டே போகும்)
வெவவேவே = நான் கையில் என்ன வெச்சு வெளாடுறேன் பார்!(பேனா, வயர்,போன்ற கூடாத பொருளாயிருக்கும்)
ஹுஹூம்ஹூம்ம்ம் = தாத்தா கையிலிருக்கும் போது நான் வாவென்று அழைத்தால் தப்பாமல் கூறும் 'பொன் எழுத்தில் பொறிக்க வேண்டிய வார்த்தை!'

போதுமா சீனா?
 
என்னோட அத்தை/மாமியார் இங்கே அமெரிக்காவில் எங்களோடு இருந்தார் ஒரு வருடமாக. 2007 ஜனவரி எங்கள் மகன் பிறந்த போது வந்தவர் கிருஸ்துமஸ் அன்று தான் திரும்பிச் சென்றார். அந்த ஒரு வருடம் நாங்கள் இருவரும் பணிக்குச் சென்ற பின்னர் அவரோடு தான் வீட்டில் இருந்தான் பையன். நீங்கள் சொன்னதெல்லாம் அவனும் செய்து கொண்டிருந்தான்/கொண்டிருக்கிறான். :-) இப்போதும் வீட்டில் எல்லா பாத்திரங்களும் எப்போதும் தரையில் தான் கிடக்கின்றன. சமையல் அறை மட்டும் இல்லை. வீடு முழுக்கத் தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான். :-) அவங்க பாட்டி இங்கே இருந்த வரை நல்லா ஒட்டிக்கிட்டு தான் இருந்தான். ஒரு வேளை இவன் இராசி அவங்க இராசியோட பொருந்திப் போகுதோ என்னவோ? :-)
 
நானானி,

அருமையான மொழிபெயர்ப்பு - அழகு தமிழ். பேரனுக்கு நல்வாழ்த்துகள்.

எனது பெயர்த்தியும் பெயரனும் " I want to sit there " என்று என் தோளில் அமர்ந்து கொண்டு என் தலையைப் பிடித்துக் கொண்டு ஆடுவதிலே மிக மகிழ்ச்சி அடைவார்கள். அதில் அவர்களுக்குள் சண்டை போட்டி எல்லாம் உண்டு - யார் முதலில் அமர்வது என்பதில். எனது பெரிய (காய் விட்ட) பெயர்த்திக்கு அமர முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு. அவளைத் தூக்கிக் கொண்டு ( சில மணித்துளிகள்) சமாதானப்படுத்துவதும் உண்டு.

ஆன ஆன அம்பாரி ஆன - அழகரு ஆன - அசஞ்சாடும் ஆன - என யானை( குதிரை) விளையாட்டெல்லாம் உண்டு.
 
"விழாமலே இருக்க முடியுமா விழுந்து விட்டேன் பாச மழையிலே" என்று எல்லா பாட்டி தாத்தாக்களும் நிச்சயமாகப் பாடுவார்கள் என்று நினைக்கிறேன் .
அந்த பேரன் பேத்தி என்ற சொல்லெ ஒரு மேஜிக் டச் .
வெற்று வானத்தில் ஒரு வட்ட நிலா,
கள்ளித் தோட்டத்தில் ஒரு பட்டு மலர்.

அனைத்து ஆச்சிகளின் சார்பில் பேரக் குழந்தைகள் என்ற ஓவியத்தை அழகாக வரைந்திருக்கிறீர்கள்
 
கோமா!
வரண்ட பாலையில் ஒரு நீரூற்று!
இபடியும் சொல்லலாமில்லையா?
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்!!
 
சாரி நானானி. லேட்டா மறுமொழி சொல்றேன்.
என் பேத்தி ப்ரதாபத்தில ஒன்றிப் போயிட்டேன்.
உங்க பேரன் பதிவைப் பார்க்க விட்டுப் போச்சு.:)
அதெல்லாம் தாத்தாவிடம் தான் ஓடும்.
சமையலறைல ஏதாவது வேணும்னா பாட்டி வேணும்:)
 
ஆஹா...குமரன்! எல்லார் வீட்டிலும்
இப்படித்தானா? திடீரென்று வீட்டுக்கு யாரும் வந்தால் ஹால், கிட்சன், பெட்ரூம் எல்லாம் போர் முடிந்த போர்க்களம் போலிருக்கும்.
ஆனால் அதுவும் நல்லாத்தானிருக்கும்.
 
சீனா! காய் விட்ட பேத்தி 'பழம்'
விட்டுட்டாளா?
நேற்று பேரனை குளிப்பாட்டும் போது
தலையில் தண்ணீர் ஊத்திட்டேன்னு என்
கன்னத்தில் 'சப்பாணி விட்ட அறை' மாதிரி சப் என்று விட்டானே ஒரு அறை!!!
சூப்பர் அறை!!
 
வல்லி!
உங்க பேத்தி பிரதாபத்தையும் பதிவாப் போடலாமே! நாங்களும் ரசிப்போமல்லோ!
ஆமாங்க எல்லாம் காரியக்கார குட்டீங்க!
 
தங்கள் பெயரன் பெயர்த்திகளுடன் கொஞ்சி விளையாடும் தாத்தா பாட்டிகள் தங்கள் மகன் மகள்களிடம் இளமைக்காலத்தில் கண்டிப்பாக இருப்பதும் தங்கள் எண்ணங்களைத் திணிப்பதும் ஏன் ?
:-)
 
//என்ன கொடுமையிது சண்முகா...!//

இது நல்லா இருக்கே...
 
//என்ன கொடுமையிது சண்முகா...!//

இது நல்லா இருக்கே...
 
லதா!
தங்கள் மகன், மகளிடம் கண்டிப்பாக
இருக்கும் காரணம்...அவர்கள் எதிர்காலம் நல்ல விதமாக அமைய வேண்டுமே என்ற தவிப்பு...அதற்காக, அவர்களோடு கொஞ்சி விளையாடக் கூட நேரமில்லாமல்
ஓடியாடி சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், ஓய்வு காலத்தில் பிள்ளைகளோடு செலவிட முடியாததையும் சேர்த்து பேரப்பிள்ளைகளோடு கொஞ்சி விளையாடி தங்கள் ஏக்கங்களை தீர்த்துக்கொள்கிறார்கள். பேரப்பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பொறுப்பு அவர்களது பெற்றோரைச் சேர்ந்தது. இல்லையா?
 
விக்னேஷ்! பேரனின் செல்லக் கொடுமைகளை அவனிடம்தானே
முறையிட வேண்டும்?
 
ஆஹா

இந்த மாதிரி விளையாடவும், விளையாட்டை ரசிக்கவும் கொடுப்பினை வேண்டுமே.
என் அன்பு உங்கள் பேரனுக்கு.

ஒருவேளை எங்க மாமியாரை கேட்டா சொல்லுவாங்களா இருக்கும், என் பொண்ணும் இதே கதைதான் நாளெல்லாம் பாத்துக்கிட்டாலும், அவங்க தாத்தா கிட்டதான் அட்டாச்ட்.
 
Hmmm yen ammavukum peranai konja vendum endru thaan aasai aanaal enno andavan antha bagiyatha ithu varai ennaku tharala.ungaloda peran neraya naal vazha aandavanai prathikiren
 
அமிர்தவர்ஷிணி அம்மா!
வீட்டுக்கு வீடு வாசல்படி ஒரே மாதிரிதானா....?
நன்று..நன்று..!!!
 
புனிதா பாரி,
வெகு சீக்கிரமே ஒரு பேரனையோ பேத்தியையோ உங்கள் மூலம் பெற்று கொஞ்சிவிளையாடும் பாக்கியத்தை உங்கள் தந்தைக்கு அருளுமாறு நான் வணங்கும் தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன்.

பேரப்பிள்ளைகள் வந்து தாத்தாவை ஓடஓட விரட்டி செல்லமாய் விளையாடும் காட்சி கண் முன் விரிகிறது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]