Tuesday, April 8, 2008

 

'அம்மா! உனக்கு கல்யாணமாயிடுச்சா?'

செல்லம்மாள் காலையிலிருந்தே பரபரவென்று இயங்கினாள். வேலைக்காரியை விரட்டுவிரட்டென்று
விரட்டி வேலை வாங்கினாள். கணவரையும் காலையில் எழுப்பி குளித்து தயாராக இருக்கச்சொன்னாள்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்துகொண்டிருந்த மருமகளையும் துரிதப்படுத்தினாள், 'சுஜிதா! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியதும் நீயும் எங்கும் கிளம்பிவிடாதே! நீயும் தயாராகி குமாரையும் ரெடியாயிருக்கச் சொல்! இன்றைக்கு என்ன விசேஷம் என்று தெரியும்தானே?' என்று படபடத்தாள்.

அப்படியென்ன பரபரக்கும் விசேஷம் நம் வீட்டில் என்று குழம்பினாள் சுஜி. 'என்ன முழிக்கிறே!
இன்று காரடையான் நோன்பு! அதை நல்லபடியாக முடித்து லேடீஸ் கிளப்பில் எனக்கு ஒரு மீட்டிங்...என் தலைமையில்..'டிவிசீரியல்களும் சினிமாவும் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது' என்ற தலைப்பில் நான் பேசவேண்டும்.

ஆ..மா! ஒரு சீரியலும் விடாமல் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பார்க்கும் நீங்கள்தான் இந்த தலைப்பில் பேச ச...ரியான ஆள்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் சுஜிதா.
அவளுக்கும் அவள் கணவன் குமாருக்கும் இந்த பூஜை புனஸ்காரத்திலெல்லாம் ஆர்வமில்லை.
மனதார ஒரு நிமிடம் நினைத்தாலே தெய்வம் ஏற்றுக்கொள்ளும் மேலும் நாம் செய்யும் நல்ல
காரியங்களில் எல்லாம் தெய்வம் துணையிருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.

வயதான காலத்தில் அவ்வளவு பூஜை சாமான்களையும் தானே துலக்கி, பூஜை அறையிலிருக்கும்
அத்தனை படங்களையும் துடைத்து பொட்டிட்டு பூப்போட்டு சுலோகங்கள், தேவாரம் இத்யாதிகளை பாடி முடித்து மூசுமூசுசென்று பூஜையை முடித்து, 'அம்மா! கால்வலி கைவலி என்று புலம்புவதற்குப் பதில் இத்தனை வருடங்கள் செஞ்சாச்சு, இப்போ உடம்பு ஒத்துழைக்கவில்லை என்னும் போது சிம்பிளாக பூஜையை முடித்துக்கொண்டால் என்ன?
அதை அந்த தெய்வம் ஏற்றுக்கொளாதா? என்பதுதான் குமாரின் வாதம். இதனால் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும். சுஜி ஃபஸ்ட் கியரில் இருப்பதா அல்லது டாப்
கியருக்கு மாறுவதா என்று புரியாமல் ந்யூட்ரல் கியரிலேயே நின்றுவிடுவாள்.

இன்று நோன்பு என்பதால் அனைவரும் கலந்துக்கணும் என்று விரும்பினாள். ஓகே!
நோன்பு பூஜை நல்லபடியாக முடிந்தது. 'உருகாத வெண்ணெய்யும் ஓரடையும்.....' என்று பாடி கொண்டவன் காலை வாரி....சேச்சேசே...வணங்கியெழுந்து பூஜையிவைத்த மஞ்சள் பூசிய நோன்பு சரடை கழுத்தில் கட்டிக்கொண்டாள் செல்லம்மாள். சுஜிதாவையும் அவ்வாறே செய்யவைத்து அவளுக்கும் மஞ்சள் சரடை கொடுத்து கழுத்தில் கட்டிக்கொள்ளச்சொன்னாள்.

அம்மா மனம் நோகக்கூடாது என்று இருவரும் அவளை திருப்தி செய்தனர். பூஜை திவ்யமாக முடிந்த மகிழ்ச்சியோடு செல்லம்மாள் உணவருந்திவிட்டு லேடீஸ் கிளப் மீட்டிங்குக்குச் சென்றாள்.
அங்கு கொடுத்த தலைப்பில் சும்மா விளாசிவிட்டு பெருமை வழியவழிய வீடுதிரும்பினாள்.

கணவர், மகன், மருமகள் ஆகியோரிடம் தான் பேசியதையும் அதற்கு கூட்டம் 'கை தட்னாதட்னா தட்டிக்கிட்டேயிருந்தான்'ன்னு டணால் பாணியில் அலம்பிக்கொண்டிருந்தாள்.

அப்போது பள்ளியிலிருந்து பிள்ளைகள் வீடுதிரும்பினர். சின்னவன் விக்ரம் சிறுவயதிலேயே டீவி விளம்பரங்கள் பார்த்துக்கொண்டேதான் சாப்பிடுவான். அவன் அம்மா அவனை குளிப்பாட்டி
உடம்பில் பவுடர் தூவும் போது, அம்மா! எம்மேலேருந்து பூப்பூவா வருதா? 'என்று கேட்கும் அளவு அதன் பாதிப்பு இருந்தது.

அந்த விக்ரம் பள்ளியிலிருந்து திரும்பியதும் அம்மா கழுத்தில் புத்தம் புது மஞ்சள் கயிறு
மின்னிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், 'அம்மா! உனக்கு கல்யாணமாயிடுச்சா?' என்று முகமெல்லாம் ஆச்சரியம் வழியக் கேட்டானே ஒரு கேள்வி!!!!!!!!!!

மஞ்சக்கயிறு கட்டிவிட்டால் கல்யாணம் ஆச்சு என்று டீவி சீரியல்களிலும் சினிமாவிலும் காட்டிக்காட்டி குழந்தைகள் மனதில் எப்படி பதியவைத்திருக்கிறார்கள்!!!
இவையெல்லாம் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது என்று தான் தாளித்து வந்த பேச்சு
தன் வீட்டிலேயே தனக்கு வைத்துவிட்டதே ஆப்பு!!!!!என்று விக்கித்து நின்றாள் செல்லம்மாள்!!

Labels:


Comments:
ஹாஹாஹாஹா

நானானி சூப்பர்ப்பா.

சிரிச்சுக்கிட்டே இருக்கேன்::))))
 
சிரிங்க..சிரிங்க...சிரிச்சுக்கிட்டே இருங்க!!துள்சி! சேரியா?
 
ஆகா நல்ல கேள்விக்கேக்குதுங்கப்பா.. குட்டீஸ்..? :))
 
ஆமா! கயல்விழி முத்துலெட்சுமி!
இந்தக்கால குட்டீஸ் படு ஷார்ப். நாமதான் ஜாக்கிரதையாக இருக்கோணும்.
 
நானானி சூப்பர்பா.பேரன் கேட்க வேண்டிய கேள்வியைத் தான் கேட்டான்.
எங்க வீட்டுல ஒரு பாப்பா இருந்தது. அது இருபது வருஷத்துக்கு முன்னாலியே,

அத்தை(என்னை) அந்த லேடி வொயிட்டாத்(white) துப்பறா இல்லையா, அங்க பாப்பா வரப் [போறது பாரு'' அப்படீனு
சொல்லித்து.
 
நல்ல வேளை வல்லி! குழந்தை, அத்தை
துப்பும் காரணமெல்லாம் கேட்காமல் முடிவை மட்டும் சொல்லிற்றே! அந்த மட்டும் சந்தோசம்!!!!
 
aarti,goma-வின் ரசனைக்கு முந்தைய கதை என்றால், rl-ன் ரசனைக்கு இந்த கதை. ninewest ஜனரஞ்சகமாகக் கலக்குது போங்க!
 
அவரவர் ருசிக்கேத்த சாப்பாடு போடணுலிலையா? மருமகளே!
 
Sometimes entha kulanthaigal kelvi ketkarathu namma romba yosika vekuthu... epadi avaunganalla epadi think panna mudiyuthu? their mind is so innocent and not polluted... title is very nice and apt
 
Simply superb. After a long gap enjoyed good humour based on factual happenings! Congrats to the author.
 
Dr.KSV,
after a long long gap i got such a complement from you. thank you for the same.
 
Dr.KSV,
After a long long gap I got such a complement from you.
Thank you for the same.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]