Sunday, April 6, 2008

 

ஜிகிர்தண்டா..ஜிகிர்தண்டா...கிர்தண்டா...தண்டா...ண்டா...டா..டா..டாஆஆஆஆஆஆ!!

மதுரைக்குப் போகும் போதெல்லாம் எல்லோரும் சொல்லிச்...சொல்லி..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரடிக்கும் ஜிகிர்தண்டாவை சாப்பிட்டுப் பார்த்தேயாக வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் கில்லியடித்துக்கொண்டேயிருந்தது. ஓர் ஊரின் பிரபலமான உணவுப் பண்டமென்றால் அதை ருசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.இரண்டு வருடங்கள் முன்பு போயிருந்த போது நம்ம மீனாட்சியை பார்க்க....அம்மாடீ....தரிசிக்க டாக்ஸியில் போயிருந்தோம். உடன் வந்த மதுரக்காரி நாத்தனாரிடம் ஜிகிர்தண்டா சாப்பிட வேண்டும் என்று பேசிக்கொண்டே வந்தேன். நீ சாப்பிட்டிருக்கிறாயா என்றதற்கு. மதுரையிலேயே இருந்தாலும் சாப்பிட்டதில்லை என்றாள். அடிப்பாவி! உன் ஜென்மம் சாபல்யமே ஆகாது என்று செல்லமாக சபித்தேன். அதுதான் உங்களோடு இன்று சாப்பிடப் போகிறேனே! ஜென்மம் ஜிகிர்தண்டா சாப்பிட்டு சாபல்யம் அடைந்துவிடும் உங்க புண்ணியத்தில் என்றாள்.இப்படியே நாங்கள் பேசிக் கொண்டு வந்ததை சுவாரஸ்யமாக காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே வந்த டாக்ஸி ஓட்டுனர், 'அம்மா! நீங்க கோவிலுக்குப் போய்ட்டு வாய்ங்க.


அருமையான ஜிகிர்தண்டா கிடைக்கும் இடத்துக்கு நான் அழைத்துப்போகிறேன்.' என்றாரே பார்க்கலாம்!!இதுக்குத்தான் மூன்றாம் மனிதர் கேட்க பேசக்கூடாது என்பது. ஆனாலும் அவர்களுக்குப் பழக்கமான டாக்ஸி, அதன் ஓட்டுனர் என்பதால் பரவாயில்லை, சரியான இடங்களுக்கு அழைத்துப் போவாரே!! அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு, ஜிகிர்தண்டாவை, 'சற்றே விலகியிரும் பிள்ளாய்!' என்று சொல்லிவிட்டுநிம்மதியாக....திவ்யமாக அம்மனை தரிசித்துவிட்டு என் வழக்கப்படி கோவில் வாசல் கடைகளில் சின்னச்சின்ன சாமான்கள் வாங்கிக்கொண்டு வண்டியிலேறினோம்.ஓட்டுனார் எங்களை கோவிலின் ரத வீதிகளில் ஒன்றிலுள்ள சின்ன டீகடை மாதிரியுள்ள கடை


அருகில் நிறுத்தி, 'அம்மா! கடை பார்க்கத்தான் சிறுசு. ஆனால் இங்கே தரும் ஜிகிர்தண்டா ரொம்ப நல்லாருக்கும். பயங்கரமாக விற்பனையாகும்!' என்றார். சரி..சரி.. உள்ளூர்காரர்களுக்குத்தானே எதுஎது எங்கே நல்லாருக்கும் என்று தெரியும்.காரிலிருந்து இறங்கி கடையுள் நுழைந்து அங்கேயிருந்த பெஞ்ச்சில் அமர்ந்தோம். ஓட்டுனரே இரண்டு ஸ்பெஷல் ஜிகிர்தண்டா ஆர்டர் செய்தார். அவருக்கும் சேர்த்து மூன்றாக சொல்லச் சொன்னேன். அவருக்கு முகமெல்லாம் ஜில்தண்டா ஆகிவிட்டது.ஆசைதீர ருசித்து சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம். இது முடிந்து ரொம்ப நாள் கழித்துத்தான் நான் ஒரு ப்ளாக்கரானேன். அது முதல் ஜிகிர்தண்டாவைப் பற்றி ப்ளாக்கில் எழுதவேண்டும் என்ற ஆசை மனதில் ட்ண்..டண் என்று மணியோசை போல் ஒலித்துக்கொண்டேயிருந்தது.நீ ஆசைப்படு! நான் நிறைவேற்றித் தருகிறேன் என்ற தெய்வ வாக்கும் பலித்தது. போன மாதம்


மதுரைக்குப் போயிருந்த போது பைபாஸ் சாலையருகே உள்ள ஒரு பேக்கரிக்கடையில்


கொறிக்ஸ் வாங்கிவிட்டு அங்குள்ள ஸ்டாலில் ஜிகிர்தண்டா சாப்பிட்டோம். இப்போதுதான் கைப்பையில் காமிரா தயாராக இருக்குமே!
அவர் ஜிகிர்தண்டா தயாரிக்கும் முறையைப் பார்த்தேன். ஒவ்வொரு பாத்திரத்தில் உள்ளதையும் டக்டக் என்று டம்ளாரில் நிரப்பிக் கொண்டேவந்தார். அவருக்கு ஒரு ஸ்பீட் ப்ரேக் போட்டு, 'என்னென்ன போடுகிறீர்கள் என்று எனக்கு சொல்லிக்கொண்டே போடுங்கள் என்று வேண்டுகோளினேன். கூடவே காமிராவையும் தயார் செய்து கொண்டேன். அவர் முகமெல்லாம் லஜ்ஜையும் பெருமையும் வழிய சொல்லிக்கொண்டே வந்தார். அதை க்ளிக் செய்து கொண்டேன். பக்கத்து பழரச ஸ்டாலிலிருந்தவர் அருகே வந்து, 'ஐ! உன்னை மட்டும் போட்டோ எல்லாம் எடுக்கிறாய்ங்க!!' என்று கலாய்த்தார்.ஜிகிர்தண்டாவை அவர் எப்படி கலக்கினார்?


சின்னச்சின்ன பாத்திரங்களில் முன்பே தயாரித்த பொருட்களை வைத்திருந்தார். நாம் போய்


எத்தனை கப் வேண்டுமென்று சொன்னவுடன் அத்தனை கப்....ப்ளாஸ்டிக் டம்ளார் எடுத்து வைத்துக்கொண்டு......கடகடவென்று நிரப்பவாரம்பித்தார். முதலில் கடல் பாசி என்ற சைனாக்ராஸ் ஒருகரண்டி (அதாவது ஒரு குழம்புக்கரண்டி)....அடுத்தது பாலாடை ஒரு கரண்டி..


நன்னாரி எசன்ஸ் ஒரு கரண்டி.... சுண்டக்காய்ச்சிய பால் டம்ளார் நிரம்ப இறுதியில் ஒரு


ஸ்கூப் வெனிலா ஐஸ்கிரீம் மிதக்கவிட்டு குட்டி ஸ்பூனோடு தருகிறார்.மதிய வெயிலுக்கு இதமாக....சாப்பாட்டுக்குப் பின் சாப்பிட வேண்டியதை அதற்கு முன்பே.... நானும் நாத்தனாரும்ஒரு வெட்டு வெட்டிவிட்டு, சாப்பிட்டபின்னும் சாப்பிட , 'நாலு பார்சேல்!!!' என்று ரங்கமணிகளுக்கும் சேர்த்து வாங்கிகொண்டு வீடு திரும்பினோம்.


இனி 'சிந்துபூந்துறை கமழ் திருநெல்வேலியில்' நான்...நானே கேள்விப்பட்டிராத, தெரியாத ஒரு பானம் பேர் பெற்று விற்பனையாகிக்கொண்டிருக்கிறது என்று வார இதழ் ஒன்றில் சமீபத்தில் படித்தறிந்தேன். ஹையகோ! இதுவரை நமக்குத்தெரியாமல் விற்றுக்கொண்டிருக்கிறதே...சும்மா விடலாமா? அடுத்தமுறை திலி போகும்போது அதையும் ருசித்துவிடவேண்டியதுதான்!!

அதுதான் நெல்லை டவுனில் நெல்லையப்பர் கோவிலுக்குப் போகும் வழியில்.....சரியான லோக்கேஷன் போய்தான் தேடவேண்டும், ஒருகடையில் பரபரப்பாக விற்பனையாகும்....
'நன்னாரிப்பால்!!' இதுவரை இப்படி கேள்விப் பட்டதேயில்லை.

அதற்குள் திருநெல்வேலி உறை செல்வர்களே!!! நன்னாரிப்பாலை ருசித்து அது எப்படியிருந்தது என்று தெரியப்படுத்துங்கள்!!!!!!!!
Labels:


Comments:
இந்த ஜிகிர்தண்டாவை நான் இதுவரை ருசிக்கவே இல்லைப்பா. விடுமுறையை வேற அறையில் 'கழி'க்க வேண்டியதாகிருமோ என்ற பயம்தான்.

ஒரு மூணுமாசம் தங்கும் ப்ளானோடு வந்து எல்லாத்தையும் ஒரு கை பார்க்கணும்.


நம்ம கால்கரி சிவாவும் கொத்ஸ்ம் பதிவுலகில் ஜிகிர்தண்டா செய்முறையெல்லாம் போட்டுக் கலக்கிட்டாங்கப்பா, ஒரு ரெண்டுவருசத்துக்கு முந்தி.

இன்னும் இருட்டுக்கடை அல்வா வேற கணக்கில் பாக்கி இருக்கு.
 
நானானி,

நான் 1963 - 1972 ல் மதுரையில் இருந்த பொழுது - மீனாட்சி அம்மன் கோவில் அருகே - அந்தக்கால இம்பீரியல் ( பெயர் சரியா - சென்ட்ரல் மார்க்கெட் அருகே) தியேட்டருக்கு எதிரே - ஒரே ஒரு ஜிகர்தண்டா கடை (ஜிகர் தண்டா மட்டுமே) ஒண்ணே ஒண்ணு கண்னே கண்ணு ன்னு மதுரைக்கே அதிசயமாக இருந்தது. அங்கு குடிக்க வேண்டும் ஜிகர்தண்டா - அடடா அடடா எத்தனை தடவை குடித்திருப்பேன் = கணக்கில்லை.

நானானி நன்றி - கொசுவத்தி சுத்த வைச்சதுக்கு
 
\\நெல்லை டவுனில் நெல்லையப்பர் கோவிலுக்குப் போகும் வழியில்.....சரியான லோக்கேஷன் போய்தான் தேடவேண்டும், ஒருகடையில் பரபரப்பாக விற்பனையாகும்....
'நன்னாரிப்பால்!!\\

அந்த கடை விஞ்சை விலாஸ்.
கார்பரேஷன் ஆர்ச்க்கு அடுத்து இருக்கும்..
 
மதுரையில் 1971 முதல் 76 வரை மதுரையில் இருந்தேன். ஜிகர்தண்டா சாப்பிட்டதே (சாப்பிடணுமா குடிக்கணுமா) இல்லை.
திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறவன். நன்னாரிப்பால் கேட்டதே இல்லை.
இரண்டையும் சாப்பிட்டு பார்த்து விடுகிறேன்.
நீங்கள் நன்னாயிருக்கணும்
சகாதேவன்
 
நானும் பார்த்ததில்லை இந்த ஜிகிர் தண்டாவை.
மதுரைல மட்டும் தான் கிடக்குமா?
அடுத்து நன்னாரிப்பாலும் எழுதுங்கள்.
 
இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டதேயில்லையா துள்சி? அடுத்தமுறை நெல்லை போகும் போது நெல்லையப்பரையும் தரிசித்துவிட்டு சுவாமி சன்னதிக்கு வெளியே வந்து வலப்புறமாக சாலையைக்கடந்து நிமிர்ந்துபார்த்தால் இருட்டுக்கடைதான். போர்டெல்லாம் பெரிசாக இருக்காது. 6-30 க்கு வாழையிலையில் சுடச்சுட வாங்கி வாயில் போட்டால் நாக்கு ருசி அறிவதற்குள் தொண்டையில் வழுக்கி வயிற்றில் இறங்கும் ஆனந்தம் இருக்கே! அனுபவித்துத்தான் பார்க்கோணும், துள்சி!
இன்னும் என்னென்ன எங்க ஏரியாவிலே இருக்கு என்று என்னோட 'ஊருக்கு ஊர் என்ன பிரசித்தம்' பாருங்கள்.
 
சீனா! எங்கே ரொம்ப நாளா காணோம்?
நீங்க சொன்ன இடத்தில் அடுத்த முறை மதுரை செல்லும் போது பார்த்துவிடுகிறேன். நன்றி!
 
சினேகிதனுக்கு ரொம்ப நன்றி! வழி காட்டியதுக்கு. நீங்க தின்னவேலியா?
பேரைபாருங்க, தின்றதிலேயே குறி!
நம்பளால 'விஞ்சை விலாஸுக்கு' நல்ல விளம்பரம்!!
ஆமாம்...நன்னாரிப்பால் சாப்பிட்டுருக்கிறீர்களா? எப்படி இருந்தது என்றும் சொல்லியிருக்கலாமே?
 
சகாதேவன்!
ஜிகர்தண்டா சாப்பிட்டதேயில்லையா?
அதை முதலில் சாப்பிடலாம் பிறகு குடிக்கலாம்.
முதல் வேலையாக விஞ்சை விலாஸ் போய் நன்னாரிப்பால் குடித்துப்பார்த்துவிட்டு எனக்கும் சொல்லிவிட்டு மறுவேலை பாருங்கள்! சேரியா?
 
நீங்க குடிச்ச ரெண்டு கடையில எதுல நல்லா இருந்திச்சின்னு ஒரு ஜட்ஜ்மென்ட் கொடுக்காம போனா எப்படி?
 
Never heard of jigirdhandaa before... name made me think it might be something like "zarda beeda" or related to the beeda family. Looks like it might be an item worth trying while at Madurai.

Madurai is not in my trip list. Any chance this might be available in "thinnaveli"? :)
 
தருமி!
முதல் முறை குடித்ததுதான் நல்லாருந்துச்சு!! ஆமாம்!
இந்த தீர்ப்பு...மண்டபத்தில் யாரோ சொல்லிக்கொடுத்து சொன்னதல்ல...நான்..நானேதான் சொல்கிறேன்!!
 
ஆரெல்!!
எங்கே இத்தனை நாள் ஊறிக்கிடந்தீர்கள்? ஜிகர்தண்டா..(ஜிகிர் இல்லை) பீடா போல்தான் தொனிக்கும். ஆனால் அது நம்மூர் ஃப்லூடாவுக்குத் தம்பி முறை வேண்டும்.ஃப்லூடாவிலிருக்கும் சில சமாச்சாரங்கள் அதில் மிஸிங். அவ்ளோதான். நாந்தேன் ரெஸிபி கொடுத்திருக்கிறேனே. சுலபமாக நீங்கள் இருக்குமிடத்திலேயே செய்யலாம்.
 
ஆரெல்!
தின்னவேலி போகும் போது நன்னாரிப்பால் தின்ன மறக்காதீர்கள்!!!
 
சாண்டியாகோவில் என்னோட மதுரை நண்பன் வீட்டில் ஜிகர்தண்டா செஞ்சு (கலக்கி?) குடுத்தான். அதுக்கு ஏகப்பட்ட மூலப் பொருட்கள் சீனக்கடையில் அலைந்து வாங்கினோம்! நானும் வீட்டுல செஞ்சு பாத்தேன்....சகிக்கலே (இருந்தாலும் ரெண்டு கிளாஸ் குடிச்சுட்டோம்ல!!!)

அவன் செஞ்சு குடுத்ததே அவ்வளவு நல்லா இருந்தது. 'உண்மையான' ஜிகர் தண்டா ஹ்ம்ம்ம்.. இதுக்காகவே மதுரைக்குப் போகணும் :)

அக்கா, பகிர்தலுக்கு நன்றி! ஆனா கிளாஸ் சின்னதா இருக்கே? :))
 
சிறீவில்லிபுத்தூர் பால் கோவா மாத்திரம் தான் எனக்கு தெரியும், ஒரு மதுரைக்காரனும் எனக்கு ஜிகிர்தண்டா பற்றி சொல்லலையே!
 
தஞ்சாவூரான்!
சகிக்காவிட்டாலும் நாம செஞ்சதல்லோ..
ஒரு கிளாஸ் என்ன அம்புட்டையும் காலி....செய்துதானே ஆகவேண்டும்?
கிளாச் சின்னதாத்தானிருக்கு விலை 20ரூபா!! மீனாட்சி அழைப்பாள் கட்டாயம் மதுரை போய்வாருங்கள்.
 
ஃபலூடா மாதிரி இருக்குமா?

இப்ப ஒரு மாதிரி புரியுது:-))))
 
நானும்தான் தின்னவேலியிலேயே பிறந்து வளர்ந்து 30 வருசம் குப்பை கொட்டிருக்கேன். இதுவரை யாரும்
நன்னாரிப்பாலைப் பற்றி ஷொல்லவேயில்லையே! என்ன கொடுமையிது காரூரன்?
இன்னும் எந்தெந்த ஊரில் என்னென்ன சிறப்பாக கிடைக்கும் என்று அறிய என் முந்தைய பதிவான(2007-மார்ச்)
'ஊருக்கு ஊர் என்ன பிரசித்தம்' படித்துப் பாருங்கள். திருநெல்வேலி மாவட்டத்தையே ஒரு மா..வட்டமடித்துவிடுவீர்கள்!!!!
 
சகோதரி, துளசி மேடம் என்னை இன்னும் ஞாபகத்தில் வைத்துள்ளார். ஜிகர்தண்டாவை நினைவு படுத்திவிட்டீர்கள்.
என்னுடைய பதிவு இதோ
 
கல்கரி சிவா!
'கல்கரிக்கு' என்ன அர்த்தம்? சிவா?
உங்க பதிவு போய் பார்த்தேன். ஜிகர்தண்டாவை அப்போதே பிரபலப் படுத்திவிட்டீர்கள்!!
 
துள்சி, காரூரான்!
உங்களுக்காக என்ன பிரசித்தம் சுட்டி கொடுத்திருக்கிறேன்.http://9-west.blogspot.com/2007/03/blog-post_05.html

பாத்துட்டு சொல்லுங்கோ! சேரியா?
 
நானானி,

கால்கரி - Calgary என்பது கனடாவில் நான் வசிக்கும் நகரம். கனடாவின் நான்காவது பெரிய நகரம் அழகான ஊர். ஆனால் நான் மதுரை மண்ணின் மைந்தன்.
 
நானானி,

நான் சொன்னது 1972ல் - தற்போது இல்லை அக்கடை
 
சீனா!
ஓஓஓஓஓ.........!
 
அடிக்கிற வெயிலுக்கு "ஜில்"லுன்னு ஒரு பதிவு!
 
rl,
இந்த 'தின்னவேலி' குசும்புதானே வேண்டாங்கிறது!
 
திருச்சியில் மார்கெட்டில் உள்ள வளைவு அருகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மு்ஸ்லீம் நபர்கள் ஜிகர்தண்டா ரூ.5 என கொடுப்பார்கள், அதில் என்ன விசேஷம் என்றால், ஒரு டம்பளரில் இருந்து மற்றொரு டம்பளருக்கு ஆற்றுவது போல் கையை உயரே துாக்கி துாக்கி ஊற்றும் போது மிக அழகாக இருக்கும், இதை அந்த பகுதியை கடந்து போகும் அனைத்து பேருந்து பயனிகளும் கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பார்கள்.
 
பாட்டி,


இதை கொஞ்சம் பாருங்க.....
 
நெல்லையில் ஜிகிர்தண்டா ஸ்டாலைப் பார்த்தபோது ,நானானி ,கடையில் நின்றதுபோல் ஒரு கிராஃபிக்ஸ் பண்ணிப் பாத்தேன்.....
இப்படித்தான் எனக்கு ஒரு சகோதரி ,நன்னாரி பன்னாரி என்னாரின்னு கின்னாரின்னு ,ஒரு போர்டு பார்த்தால் போதும் சடன் பிரேக்தான்.....நீங்களும் அந்த ரகம் போலும்
 
துரை தியாகராஜ்!
முதல் வருகைக்கு என் முதல் வணக்கம்!
எனக்கென்னவோ இந்த ஜிகர்தண்டாவை
முஸ்லிம் அன்பர்கள்தான் முதலில் அறிமுகப்படுத்திரிருப்பார்கள் என்று தோன்றுகிறது.
 
கோமா! "நெல்லையில் ஜிகர்தண்டாவா?
எங்கே...எங்கே..சொல்லு!" இப்படிக்கேட்பது நானில்லை உங்க சகோதரி. பாவம் பறக்குறாங்க அவர்க்கு சொல்லிடுங்க.
அப்படியே எனக்கும் சொல்லுங்க....!
சேரியா?
 
"திருச்சியில் மார்கெட்டில் உள்ள வளைவு அருகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மு்ஸ்லீம் நபர்கள் ஜிகர்தண்டா ரூ.5 என கொடுப்பார்கள், அதில் என்ன விசேஷம் என்றால், ஒரு டம்பளரில் இருந்து மற்றொரு டம்பளருக்கு ஆற்றுவது போல் கையை உயரே துாக்கி துாக்கி ஊற்றும் போது மிக அழகாக இருக்கும், இதை அந்த பகுதியை கடந்து போகும் அனைத்து பேருந்து பயனிகளும் கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பார்கள்"

Yes That shop make the Gikkirthanda by method of " AHALALL" by musilm type.

you know the news நானானி??

and நானானி my area is pondicherry so you know what is special :))))

siva
pondicherry.
 
அதாண்டா இதாண்டா ஜிகிர்தண்டா நாந்தாண்டா நெல்லைதமிழ் ஊரிலே நான் அனைவருக்கும் சொந்தண்டான்னு ஜோரா நிக்குதே பாளையம்கோட்டை ஆர்யாஸ் வாசலிலே
 
சிவா!
திருச்சி ஜிகர்தண்டா இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
பாண்டிச்சேரி......ன்னாலே தலையெல்லாம் கிர்.....தண்டா ஆகிவிடுமென்றும் தெரியும்.
 
ஆகா!கோமா!
இனிமே திலி போகும்போது வீட்டுக்கே வரவழைத்துச் சாப்பிடுவேனே!!
 
பதிவர் துரை சொன்ன கடைக்கு (திருச்சி) சமீபத்தில், நானும் தங்கமணியும் சென்று ஜிகர்தண்டா குடித்தோம். பரவாயில்லை!

மன்னார்குடியில் 20 வருஷங்களுக்கு முன், பேருந்து நிலையத்தின் உள், 'வேலு சர்பத் கடை' யில், இந்த ஜிகர்தண்டாவை, ரோஸ் மில்க் என்று குடித்த ஞாபகம் இருக்கிறது. இருந்தாலும், மதுரை சென்று குடித்த பின் தான் எது சிறந்தது என்று கூற முடியும் :)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]