Tuesday, April 22, 2008

 

போகுமிடம் வெகுதூரமில்லை நீ போவாய்


நாவிகேட்டர் எனப்படும் சாலை வழிகாட்டி. யூஎஸ்ஸில் எல்லாம் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப்போக, போகும் போது ஆங்காங்கே வழி கேட்டுக்கொண்டே போகலாம் என்றெல்லாம் போக முடியாது. சாட்டலைட் மூலம்
நம் வீட்டிலிருந்து ஓர் இடத்துக்குப் போகவேண்டுமென்றால் முதலில் போகுமிடம், சேருமிடம் இரண்டையும் கம்ப்யூட்டரில் அந்த சைட்டுக்குப்போய் கொடுத்து ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நாவிகேட்டர் இல்லாத கார்களுக்கு.

நாவிகேட்டர் உள்ள காரில் இந்த இரண்டு இடங்களையும் பதிவு செய்துவிட்டால்..அது வழிகாட்டும் அழகே அழகு! '500 அடியில் வலது புறம் திரும்பு, 700 அடியில் இடது புறம் திரும்பு, இந்த லேன் எடு அந்த எக்ஸிட்...இந்த எக்ஸிட் எடு என்று மேப்பில் வழியும் காட்டி
வழியும் சொல்லிக்கொண்டே வரும்.

மேலும் கீழும் உள்ள படங்கள் சிகாகோ வீட்டனிலிருந்து டவுண்டவுன் செல்லும் பாதை..நாம் இருக்குமிடத்தையும் அம்புக்குறியிட்டுக் காட்டிக் கொண்டே வரும்.

இந்த அழகை என் காம்கார்டரில் படமெடுக்க ஆசைப்பட்ட போது ரங்கமணியின் சகோதரர் என்னை தன்னோட பென்ஸ் காரில் அழைத்துச் சென்றார். வீட்டிலிருந்த்து சிறிது தூரம் போய்
திரும்பி, நாவிகேட்டரில் வீட்டு முகவரியை பதிவு செய்தார். போகும் வழியை சரியாகச் சொல்லிக்கொண்டே வந்து, வீடு இருக்கும் சாலையில் திரும்பியதும் 'இன்னும் 100 அடியில் வீடு வந்துவிடும் என்று சொல்லி காராஜ் அருகில் வந்ததும் வலது புறம் திரும்பு என்றும் சொல்லி,
முடிவில், 'YOU HAVE REACHED YOUR DESTINSTION!' என்று ஒரு முத்தய்ப்பும் வைத்தது.

சாட்டலைட் தகவல்கள் எவ்வளவு கூர்மையாயிருக்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம்:

நான், ரங்கமணி, அவரது சகோதரர்(அவர்தான் எங்களை அழைத்துச் சென்றது) மூவரும்
நியூயார்க் சென்று சுதந்திரதேவி சிலை பார்க்க திட்டமிட்டோம். குறிப்பிட்ட தினத்தில் சிகாகோவிலிருந்து விமானம் பிடித்து நெவாக் ஏர்போர்ட் போய்சேர்ந்தோம். சகோதரர்
முன்பே ரெண்டல் கார் வித் நாவிகேட்டர் புக் செய்திருந்தார். கீழே இறங்கி ரெண்டல் கார்
கவுண்டரில் கார் சாவியை வாங்கிக்கொண்டு அங்கிருந்த போர்டில் அவர் பெயர் போட்டு கார்
எந்த பார்ங்கிங்கில் நிற்கிறது என்று அறிவித்திருந்தது. அருமையான ஏற்பாடு.

கீழே பேஸ்மெண்டில் வந்து காரை எடுத்துக்கொண்டு நேரே லிபர்டி ஸ்டாச்சு பார்க்கப்போனோம். அடுத்து நியூயார்க் வீதிகளில் உலா வந்தோம் அன்று எனக்கு அறுபதாவது பிறந்தநாள்!...ஊரிலிருந்திருந்தால் சகோதரிகளோடு கொண்டாடியிருப்பேன். நியூயார்க் நகர நட்ட நடுவீதிகளில் லோலோ என்று அலைந்து திரிந்து வித்தியாசமாய் கொண்டாடினேன். அன்று எங்களோடு
ரங்கமணியின் சகோதரர் மட்டுமே இருந்ததால் இரவு டின்னர் அவருக்கு நாங்கள் கொடுத்து
செலபெரேட்டினோம்!!!

இரவு மாரியாட் ஹோட்டலில் தங்கி விட்டு காலையில் கிளம்பினோம். அங்கு பார்கிங் பெரிய ப்ராப்ளம்...எங்கோ பார்க் செய்துவிட்டு எங்கோ போகவேண்டும் என்பதால் சகோதரர் எங்களிடம், 'ஒவ்வொரு இடத்திலும் உங்களை இறக்கிவிட்டுவிட்டு காரில் நான் ஒரு பெரிய ரவுண்ட் அடித்து மறுபடி உங்களை இறக்கிவிட்ட இடத்துக்கே வருகிறேன்...அதற்கே அரைமணி, முக்கால் மணியாகும் அதற்குள் அவ்விடத்தி சுற்றிப் பார்த்துவிடுங்கள்.' என்று சொல்லி எம்பயர் ஸ்டேட் பில்டிங், வால்ஸ்டிரீட், யூஎன் பில்டிங் போன்ற பார்க்கவேண்டிய இடங்களிலெல்லாம் எல்லாம் இறக்கிவிட்டு, மறுபடி வந்து ஏற்றிக்கொண்டு சுற்றிகாட்டிய அவரது பெருந்தன்மையும்
பொறுமையும் குறிப்பிடத்தக்க ஒன்று. நாங்களும் எல்லா இடங்களையும் இந்த அளவாவது
பார்க்கக் கிடைத்ததே என்று ஜஸ்ட் பார்த்துவிட்டு காரில் ஏறி ஏர்போர்ட் போக
நாவிகேட்டரில் செட் செய்துவிட்டு புறப்பட்டோம். சிகாகோவிலிருந்து கிளம்பு முன் அனைத்து ரூட்டுக்கும் மேப்பும் பிரிண்ட்டவுடும் வைத்திருந்தோம்.

வழியில் ஓரிடத்தில், மேப் அடுத்த வலது புறம் திரும்ப வேண்டுமென குறித்திருந்தது.
ஆனால் நாவிகேட்டரோ அதற்கு அடுத்த வலதுபுறம் திரும்பு என்றது. நாங்கள் சிறிது குழம்பி
மேப் காட்டியபடி முதல் வலதில் திரும்பி சிறிது தூரம் சென்றிருப்போம்...அங்கே ரோடு
ரிப்பேர் வேலை நடந்து கொண்டிருந்தது. போலீஸ் எங்களை அடுத்த வலது எடுத்து போகும்படி
சொன்னார்கள். இனி திரும்ப முடியாது என்பதால் ஒரு பெரிய ரவுண்ட் எடுத்து மறுபடி அதே சாலைக்கு வந்து 'மரியாதையாக' நாவிகேட்டர் சொன்ன வலது எடுத்து ஏர்போர்ட்
சென்றடைந்தோம்.

மேப் இரண்டு நாட்கள் முந்தி எடுத்தது. ஆனால் சாட்டலைட் மூலம் வழிகாட்டும் நாவிகேட்டர்
அந்த நிமிஷத்து மாற்றங்களையும் உடனுக்குடன் தெள்ளத்தெளிவாக காட்டிவிடும்.
ரங்கமணியின் சகோதரிடம், 'இனி நாவிகேட்டரையே நம்புங்கள்!' என்று சொல்லி சிரித்துக்கொண்டே ஊர் வந்து சேர்ந்தோம்.

Labels:


Monday, April 21, 2008

 

பலாக்காய் துவரம்...சுலபமுறை

ஆஹா! பார்க்க கண் கொள்ளா காட்சி!!
இன்று சித்ரா பௌர்ணமி! மாமனார் திதி. ஒவ்வொரு வருடமும் என்றைக்கு என்று தேட அவசியமில்லாத நாள்!இதே போல் மாமியார் திதி ஆடி அம்மாவாசை! என்ன பொருத்தம்!!
காலையிலேயே சமையல் முடித்துவிட்டேன். மெனு? பலாக்காய் துவரம், அவியல், தயிர்பச்சடி,
சர்க்கரையில்லாத அவல் பாயாசம்....ஐய..சர்க்கரையில்லாமலா? அட! அதுதாங்க சுகர்ஃப்ரி மாத்திரைகள் இரண்டு போட்டு அரைக்கப் அவலில் எக்ஸ்க்ளூஸிவலி ரங்கமணிக்காக மட்டும்(டையபெட்டிக் பேஷண்ட்) செய்த பாயாசம். புடிச்சுச்சோ புடிக்கலையோ. லல்லாருந்துச்சோ லல்லாலையோ.

சேரி...பலாக்காய்க்கு வருவோம். ரெண்டு நாள் முன்னால் பழமுதிர்சோலை போனபோது பிஞ்சு பிஞ்சா பலாக்காய் பார்த்தேன். இருந்ததிலேயே பிஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சாக ஒன்று வாங்கிக்கொண்டேன். திதி சமையலுக்காக.


இதைவிட பிஞ்சாக இருக்கவேண்டும்.

ப்ரிட்ஜில் வைத்திருந்து இன்று காலை எடுத்து முட்களை சீவ முயன்ற போது கத்தி மொண்ணையாயிருந்தது. முடியவில்லை. எஸ் ஒ எஸ் என்று ரங்கமணியை அழைத்தேன்.
அவராலும் முடியவில்லை. அடடா! பலாக்காய் துவரம் என்று முடிவு செய்திருந்தேனே! என்செய்வது? எங்களோட ஐடியா கோடவுனிலிருந்து ஒரு ஐடியாவை உருவினேன்.

பலாக்காவை ஒரு அங்குல அளவுக்கு வட்டவட்டமாய் ந...று...க்..கி...னே...ன்.
அவ்ளோ சிரமம்! அவைகளை பருப்பு வேக வைக்கும் போது மேலே ஒரு தட்டில் பலா வட்டங்களை அடுக்கி குக்கரில் மூன்று விசிலுக்கு வேக வைத்தேன்.

குக்கரைத் திறந்தபோது 'காய்...பூவாய்' வெந்திருந்தது. ஆறியவுடன் வெகு சுலபமாக முள்ளோடு தோலை சீவியெடுத்தேன். காயை நன்றாக உதிர்த்து. கடாயில் எண்ணெய் ஊற்றி
தாளித்து மஞ்சள்பொடி, மிளகாய்பொடி,உப்பு சேர்த்து கிளறி, உதிரியாக வேக வைத்த பாசிப்பருப்பு, துருவிய தேங்காய் கலந்து புரட்டி கொத்தமல்லை தூவி பரிமாறிய போது..
சூப்பர்! என்று காலியாயிற்று.

எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் இது. முதன்முதலாக இது எனக்கு எப்போது, எப்படி அறிமுகமாயிற்று?

எனக்கு சின்ன வயதில் எங்கள் பெரிய தாத்தாவின் ஒவ்வொரு பிறந்தநாளும் அவரது சொந்த ஊரான ஆழ்வார்குறிச்சியில் சிவசைலம் கோவிலில்தான் கொண்டாடுவார். அப்போது எங்கள் குடும்பம் மொத்தமும் அங்கேதான் டேரா போட்டிருக்கும். 'கிராமத்திலே டேரா போட்டு கொட்டி முழக்குவோம்'. அருமையான நாட்கள் அவை.

காலையில் கோவிலில் எல்லா சன்னதிகளிலும் விசேஷ பூஜைகள் நடந்துமுடிய 11 மணி ஆகிவிடும். அதன் பிறகு மதிய உணவு. அது தயாராகும் வரை கோவிலைச்சுற்றி நாங்கள் அடிக்கும் லூட்டி..இன்றும் நெஞ்சில் நீங்காது நிழலாடுகிறது.

மதிய உணவு..வெறும் உணவல்ல அறுசுவைகளும் கொண்ட ஸ்பெஷல் மீல்ஸ்!! இன்று வரை
அந்த சுவையில் மற்றொரு மீல்ஸ் சாப்பிட்டதில்லை. ஒவ்வொரு பதார்த்தமும் பார்த்துபார்த்து
சமைத்திருப்பார்கள். மேற்பார்வை எங்கள் மாமா! அவரே ஒரு சாப்பாட்டுப் பிரியர். பின் கேட்கவேண்டுமா?

விபரம் தெரிந்து அங்குதான் பலாக்கா துவரம் சாப்பிட்டிருக்கிறேன். ஆழ்வார்குறிச்சி சமையர்காரர்கள் அவ்வளவு கெட்டிக்காரர்கள்! சாப்பிடுபவர்கள் வயிறும் மனமும் குளிர வேண்டும்
என்று நினைப்பவர்கள். மேலும் அவர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கும் எங்கள் மாமாவும்
ஒரு காரணம்.

அதன் பிறகு வருடங்கள் பல கழிந்து மாமாவின் சதாபிஷேகத்தின் போது ஆழ்வார்குறிச்சியில் அதே மெனுவை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாமா,'சாப்பாடு எப்படியிருக்குடீ!' என்று கேட்ட போது
'சூப்பர்! மாமா!' என்றோம் எல்லோரும் ஒரே குரலாக.

Labels:


Sunday, April 20, 2008

 

அசுவதியும் ஹஸ்தமும் பொருந்துமா?

எதெதற்கோ பொருத்தம் பார்க்கிறோம். திருமணத்துக்கு பெண்ணுக்கும் பையனுக்கும், வியாபாரத்துக்கு பார்ட்னருக்குள், வேறு எதெற்கெல்லாமோ பொருத்தம் பார்க்கிறார்கள்.

ஆனால்...ஏ சோக கதையை கேளு பதிவர் குலமே...!

ஆச்சிக்கும் பேரனுக்கும் பொருத்தம் பார்க்கவேண்டுமே! நான் அசுவதி அவன் ஹஸ்தம்.
அவனுக்காக அவன் பெற்றோர் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த விளையாட்டுப் பொருட்கள்
ஒரு வண்டியிருக்கும். ஆனால் அவனுக்குப்பிரியமானது...


என் சமையலறையில் உள்ள உப்பு பாட்டில், சர்க்கரை பாட்டில் மற்றும் உள்ள மசாலா பாட்டில்கள்!! டிராயரைத்திறந்து அத்தனையையும் வாரியிறைத்து விளையாடுவது அவனுக்குப் பிடித்தமான விளையாட்டு.

நான் சமையல் செய்யும் போது காலடியில் அமர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டி... ரசிக்கக்கூடியது.

கொஞ்சம் நகர்ந்தால் போதும் மறுபடியும் டிராயர் திறக்கப்பட்டு பாட்டில்கள் எல்லாம் தரையில் அவனோடு கும்மி அடித்துக் கொண்டிருக்கும். மறுபடிமறுபடி அவற்றை அடுக்கிவைப்பதே நாள் முழுக்க வேலையாயிருக்கும். மிக்ஸி ஜார்களும் பிடித்தமான விளையாட்டுப் பொருள்.
ஏதாவது அரைக்கவேண்டுமானால் ஹாலில் வந்து ஜாரை தேடவேண்டும்.
நான் மிக்ஸியில் அரைக்கு முன் ஓடிவந்துவிடுவான், உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று உறுமிக்கொண்டே.

அதே போல் பூஜை முடித்து மணிசத்தம் கேட்டதும் 'சாமி காப்பாத்து' ன்னு கைகளை கூப்பிக்கொண்டே வந்திடுவான். அவன் அம்மா வெளியே போயிருக்கும் போது பால் ஆத்தி பாட்டிலில் ஊற்றியவுடன் சமத்தாக என் மடியில் வந்து படுத்துக்கொள்வான். டையபர் மாத்திக்கொள்வான். அவன் தேவைகளையெல்லாம், உம்..உம்..என்று சைகை காட்டி நிறைவேற்றிக்கொள்வான்.

இவ்வளவும் செய்யும் எனக்கு, காலையில் எழுந்தவுடன் தாத்தாவுக்கு 'குட் மார்னிங்' சொல்வான்.
எனக்கு 'குட்மார்னிங்' சொல்லு என்றால் முகத்தை திருப்பிக் கொள்வான். அவன் தாத்தா தூக்கியவுடன் கழுத்தைக்கட்டிக்கொண்டு கொஞ்சிக்கொள்வான். நான் தூக்கி, 'ஆச்சி கொஞ்சிக்கோம்மா!!' என்று கெஞ்சினால் ஒரேயடியாக பின்னால் வளைந்து கொள்வான்.
காரணம், தாத்தா ஒரு ஒபீடியண்ட், ரிடயர்ட் தாத்தா. அவன் சொல்படி கேட்டு வெளியில் கூப்பிடும்போதெல்லாம் அழைத்துப்போகும் தாத்தா,
கடைக்குக் கூட்டிப்போய் விதவிதமாய் வித்யாசமாய்...பந்து வாங்கித்தரும் தாத்தா!!

போதாதா கொஞ்சிக்கொள்ள? இதற்கெல்லாம் ஏது நேரம்? ரெண்டு காதுகளிலிருந்தும் எனக்கு புஸ்புஸ் என்று புகை வரும்.

'வா'என்றால் முகத்தை இப்படித் திருப்பிக்கொள்வான். எங்கே தப்பு? நான் என்ன செய்தேன்? அல்லது செய்யவில்லை? ஒத்துக்கிறேன், குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே-தான்.
எத்தனையோ குழந்தைகளை கொண்டாடி என் வசமாக்கியிருக்கிறேன். இவன் மட்டும், நான் தூக்கினால் செல்லமாக கொஞ்சிக்க மாட்டேங்கிறானே.....என்ன கொடுமையிது சண்முகா...!

ஆகவே அசுவதிக்கும் ஹஸ்தத்துக்கும் பொருத்தம் இருக்கா? எங்கள் ஜோஸ்யரை பார்க்கச் சொல்லவேண்டும்.
இவையெல்லாம் சீரியஸான ஆவலாதிகள் இல்லை. என்னோட செல்லமான அங்கலாய்ப்பு அவ்ளோதான்.

இவற்றையும் நான் ரொம்ப ரசிக்கிறேன்.

Labels:


Tuesday, April 15, 2008

 

கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம்

நாம ஜிகர்தண்டா பாத்தாச்சு, நன்னாரிபால் சுவைக்காமலேயே கேள்விப்பட்டாச்சு.இனி அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம் பத்தி எனக்குத் தெரிந்ததைப்
பார்ப்போமா?
எந்த 'மால்'க்குள் நுழைந்தாலும் கட்டாயம் நம் கண்களில் தென்படுவது 'கோல்ட்ஸ்டோன்'
ஐஸ்கிரீம் பார்லர்கள்.

இங்கே ஐஸ்கிரீம் பார்லர்களில் விதவிதமான கலர்களிலும் ருசிகளிலும் ஐஸ்கிரீம்களும் அதற்கு தொட்டுக்கொள்ள....?! விதவிதமான ஸாஸ்களும் பழவகைகளும் மேலே தூவ வகைவகையான பருப்புகளும் இருக்கும். நம் ஊரில் நாம் கேட்கும் பழங்களை கப்புகளில் வாரிப் போட்டு, விரும்பும் ஐஸ்கிரீமை அதன் மேல் இட்டு, கேட்ட ஸாஸை ஊற்றி, பருப்புகள் தூவி தருவார்கள், அவ்வளவுதான்.

ஆனால் யூஎஸ்ஸில்லோ குறிப்பிட்ட கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம் பார்லடில், பழங்கள், வகைவகையான ஐஸ்கிரீம்கள், ஸாஸ்கள், பருப்புவகைகள்(பாதாம்,பிஸ்தா,முந்திரி,வால்நட், உலர்ந்தபழங்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

பார்லரின் ஒரு பக்கத்தில் விதவிதமான காம்பினேஷன்களில் ஒரு மெனு கார்ட் இருக்கும்.
அதை பார்த்து, படித்து(புரிந்தால்), தேர்வு செய்து பணம் செலுத்தி...அதுவும் க்யூவில் நின்று,
பில்லை கவுண்டரில் கொடுத்தவுடன் அங்கிருக்கும் சேல்ஸ் பர்சன்ஸ்...boy,man, girl, woman, old woman என்று வயது வாரியாக நின்று கொண்டிருப்பார்கள்.
அவர்கள் பில்லை வாங்கி படித்து அதிலுள்ள பழங்கள், ஐஸ்கிரீம்கள், நட்ஸ், முதலியவற்றை கப்புகளில் அள்ளித்தராமல், 'cup or waffle/' என்று கேட்கிறார்கள். நாம் சொன்னவுடன்
கப் அல்லது வாஃபலில் தருமுன்...அவர்கள் எதிரில் இருக்கும் மார்பிள் ஸ்லாபில் பழங்கள், ஐஸ்கிரீம்,நட்ஸ்களை கொட்டி இரண்டு உலோக கரண்டிகளைக்கொண்டு கொத்துபரோட்டாவுக்கு
கொத்துவதுபோல் 'டண்டனக்கடி டண்டனக்கடி..' என்று கொத்துகொத்து என்று கொத்தி
வாரி விரும்பிய பேஸிலிட்டு ஸாஸ் ஊற்றி தாரும் விதம் இருக்கிறதே!!! பார்த்துக்கொண்டே
இருக்கலாம்.

அந்த மார்பிள் ஸ்லாபும் கரண்டிகளும். பார்க்கும் போதே காதில் 'டண்டனக்கடி..டண்டனக்கடி..'
என்று ஒலிக்கிறது. படம் எடுக்கத்தோணாமல் பார்த்துக்கொண்டேயிருந்தேன்நாங்கள் வாங்கிய ஐஸ்கிரீமுடன் நாங்கள்!!

என்னோடது:பனானா காரமல் க்ரஞ்ச் (பிரஞ்ச்பனானா ஐஸ்கிரீம்,பனானா, ரோஸ்டட் ஆல்மெண்ட்ஸ், காரமல்)
ரங்கமணிக்கு: மங்கிபைட்ஸ் (பனானா ஐஸ்கிரீம்,பனானா, டெஸிகேடட் கோகனட்,பட்டர்பீகான்ஸ்)
இதை கொத்திக்கொத்தி கொடுத்தது பார்க்கவே சுவையாயிருந்தது!
ஐஸ்கிரீமை சுவைத்துக்கொண்டே மால் முழுவதும் சுற்றிசுற்றி வந்தோம்.

அடுத்த மால் விசிட் அடுத்தவாரம்தான் என்பதால் ஒரு பக்கெட் ஐஸ்கிரீம்..டுகோ..பண்ணிக்கொண்டோம்.

எங்கள் நெருங்கிய உறவினர் தம் பிள்ளைகள் அமெரிக்காவிலிருப்பதால் தாமும் அங்கேயே
நிரந்தரமாக குடியேறிவிட முடிவு செய்தார்கள். அப்போது அந்தப் பெண்மணி சொன்னது,
"ஹையா! இனிமேல் நானும் அமெரிக்காவில் வீட்டில் சும்மாயிருக்காமல் சம்பாதிப்பேனே!!" என்றார்கள். எப்படி என்று கேட்டபோது. என்னை மாதிரி வயதானவர்கள் safeway-ல் காஷ்கவுண்டரில் வேலை செய்கிறார்கள்..அல்லது coldstone ஐஸ்கிரீம் பார்லரில் வேலை செய்கிறார்கள் அதுபோல் நானும் செய்வேன் என்றார்கள். அதற்கு பிள்ளைகள், 'அம்மா!
சேஃப்வே காஷ்கவுண்டரிலாவது வேலை செய்யலாம்..ஆனால் கோல்ட்ஸ்டோன் பார்லரில்
அவ்வளவு சுலபமாக வேலை கிடைக்காது. அதற்கு தனியாக பயிற்சி எடுத்துத் தேறவேண்டும்.
மேலும் நாள் முழுதும் உட்காரவே கூடாது, நின்றுகொண்டே வேலை செய்யவேண்டும் என்றார்கள்.
அம்மா அதற்குப்பிறகு மூச்சே காட்டவில்லை.

Labels:


Thursday, April 10, 2008

 

ஏப்ரல்-தனிமை...PiTக்கு என் இரண்டாவது முயற்சி!!


யாராவது என்னோடு....இல்லையில்லை எனக்கு கடலை போடுங்களேன்!

ம்ம்ம்ம்ம்ம்ம் அம்மா வரதுக்குள்ள இந்த சேட்டையை செஞ்சிரணும்!

Labels:


 

வல்லிக்கு ஆசிகள்!

அன்பு வல்லிக்கு அறுபதாவது பிறந்த நாளாம்!! தமிழ்மணம் பார்த்து அறிந்துகொண்டேன்.

வல்லி! சஷ்டியப்தபூர்த்தி விழாவுக்கு என் அன்பான ஆசிகள்!!!
60-தாவது பிறந்த நாளுக்கு என் மனம் நிறைந்த "பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!"

ஆம்! ஆசிகள்தான் அவரைவிட இரண்டரை வயது மூத்தவளாயிற்றே!!!

சிங்கமும் நீங்களும் இன்று போல் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!!!

Labels:


Wednesday, April 9, 2008

 

சதுரங்கம் வெளியரங்கில்

சன்னிவேலில் ஒரு நாள் சாப்பிங் மால் ஒன்றில் கால் ஓயுமட்டும் சுற்றிவிட்டு அருகில் ஒரு ரெஸ்டொரண்ட்க்கு சாப்பிடச் சென்றோம். நம்ம ஊரில் உள்ளே இடமில்லையென்றால் அங்கேயே
காத்திருக்க வேண்டும். ஆனால் அங்கு நம் கையில் பாட்டரியில் இயங்கும் டிஸ்க் ஒன்றைக் கையில் கொடுத்து பக்கத்து கடைகளில் சுற்றிக்கொண்டிருங்கள் மேஜை தயாரானதும் தகவல் வரும் அப்போது வாருங்கள் என்று பணிவோடு வேண்டிக்கொள்கிறார்கள்.

சரியென்று வெளியே வந்தோம். வாவ்!!!என்ன அருமையான இடம். இரு பக்கங்களிலும் கடைகள் வரிசையிட்டிருக்க, நடுவில் பார்க் போன்ற இடத்தின் இரண்டு ஓரங்களிலும் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு மேஜைகளின் மேல் செஸ்போர்டும்
காய்களும் தயாராக இருந்தன.விரும்பினால் அதில் இருவரிருவராக அமர்ந்து விளையாடலாம்.
மேஜை நாற்காலிகளுக்கு நடுவே நாமே காய்களாக நின்று விளையாடுமளவுக்கு பெரிய பெரிய செஸ் போர்டுகளும் இரண்டடி உயரமான காய்களும் வா..வா..என்றழைத்தன.எங்களை அழைத்துச்சென்றிருந்த குட்டித்தம்பியும் அவன் பிள்ளைகளும் சுவாரஸ்யமாக விளையாட
களமிறங்கினர். பெரியவன் கார்த்தி ஒரு புறமும் சின்னவன் சாகேத்தும் அப்பாவும் எதிர்புறமுமாக விளையாடவாரம்பித்தனர். சாகேத் கிராமத்து திருவிழா பார்க்கப்போகும் சிறுவன் போல் அப்பாவின் தோள் மீது ஏறிக்கொண்டான். அங்கு வெகு சகஜமான காட்சியிது. காய்களை நகர்த்தி விளையாடியது போய் தூக்கிக் கொண்டு போய் அடுத்த கட்டத்தில் வைப்பது வேடிக்கையாயிருந்தது.


ஆட்டையின் சுவாரஸ்யத்தின் நடுவே...திடீரென்று டிஸ்க் அதிர ஆரம்பித்தது. ஓஹோ!! இதுதான் டிஸ்க்தரும் சிக்னலா? என்ன அருமையான ஏற்பாடு? இல்ல? காத்திருக்க்கும் நேரத்தை
வீணாக்காமல் வேடிக்கையாக செலவளித்தது நன்றாக இருந்தது.


Labels:


Tuesday, April 8, 2008

 

'அம்மா! உனக்கு கல்யாணமாயிடுச்சா?'

செல்லம்மாள் காலையிலிருந்தே பரபரவென்று இயங்கினாள். வேலைக்காரியை விரட்டுவிரட்டென்று
விரட்டி வேலை வாங்கினாள். கணவரையும் காலையில் எழுப்பி குளித்து தயாராக இருக்கச்சொன்னாள்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்துகொண்டிருந்த மருமகளையும் துரிதப்படுத்தினாள், 'சுஜிதா! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியதும் நீயும் எங்கும் கிளம்பிவிடாதே! நீயும் தயாராகி குமாரையும் ரெடியாயிருக்கச் சொல்! இன்றைக்கு என்ன விசேஷம் என்று தெரியும்தானே?' என்று படபடத்தாள்.

அப்படியென்ன பரபரக்கும் விசேஷம் நம் வீட்டில் என்று குழம்பினாள் சுஜி. 'என்ன முழிக்கிறே!
இன்று காரடையான் நோன்பு! அதை நல்லபடியாக முடித்து லேடீஸ் கிளப்பில் எனக்கு ஒரு மீட்டிங்...என் தலைமையில்..'டிவிசீரியல்களும் சினிமாவும் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது' என்ற தலைப்பில் நான் பேசவேண்டும்.

ஆ..மா! ஒரு சீரியலும் விடாமல் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பார்க்கும் நீங்கள்தான் இந்த தலைப்பில் பேச ச...ரியான ஆள்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் சுஜிதா.
அவளுக்கும் அவள் கணவன் குமாருக்கும் இந்த பூஜை புனஸ்காரத்திலெல்லாம் ஆர்வமில்லை.
மனதார ஒரு நிமிடம் நினைத்தாலே தெய்வம் ஏற்றுக்கொள்ளும் மேலும் நாம் செய்யும் நல்ல
காரியங்களில் எல்லாம் தெய்வம் துணையிருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.

வயதான காலத்தில் அவ்வளவு பூஜை சாமான்களையும் தானே துலக்கி, பூஜை அறையிலிருக்கும்
அத்தனை படங்களையும் துடைத்து பொட்டிட்டு பூப்போட்டு சுலோகங்கள், தேவாரம் இத்யாதிகளை பாடி முடித்து மூசுமூசுசென்று பூஜையை முடித்து, 'அம்மா! கால்வலி கைவலி என்று புலம்புவதற்குப் பதில் இத்தனை வருடங்கள் செஞ்சாச்சு, இப்போ உடம்பு ஒத்துழைக்கவில்லை என்னும் போது சிம்பிளாக பூஜையை முடித்துக்கொண்டால் என்ன?
அதை அந்த தெய்வம் ஏற்றுக்கொளாதா? என்பதுதான் குமாரின் வாதம். இதனால் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும். சுஜி ஃபஸ்ட் கியரில் இருப்பதா அல்லது டாப்
கியருக்கு மாறுவதா என்று புரியாமல் ந்யூட்ரல் கியரிலேயே நின்றுவிடுவாள்.

இன்று நோன்பு என்பதால் அனைவரும் கலந்துக்கணும் என்று விரும்பினாள். ஓகே!
நோன்பு பூஜை நல்லபடியாக முடிந்தது. 'உருகாத வெண்ணெய்யும் ஓரடையும்.....' என்று பாடி கொண்டவன் காலை வாரி....சேச்சேசே...வணங்கியெழுந்து பூஜையிவைத்த மஞ்சள் பூசிய நோன்பு சரடை கழுத்தில் கட்டிக்கொண்டாள் செல்லம்மாள். சுஜிதாவையும் அவ்வாறே செய்யவைத்து அவளுக்கும் மஞ்சள் சரடை கொடுத்து கழுத்தில் கட்டிக்கொள்ளச்சொன்னாள்.

அம்மா மனம் நோகக்கூடாது என்று இருவரும் அவளை திருப்தி செய்தனர். பூஜை திவ்யமாக முடிந்த மகிழ்ச்சியோடு செல்லம்மாள் உணவருந்திவிட்டு லேடீஸ் கிளப் மீட்டிங்குக்குச் சென்றாள்.
அங்கு கொடுத்த தலைப்பில் சும்மா விளாசிவிட்டு பெருமை வழியவழிய வீடுதிரும்பினாள்.

கணவர், மகன், மருமகள் ஆகியோரிடம் தான் பேசியதையும் அதற்கு கூட்டம் 'கை தட்னாதட்னா தட்டிக்கிட்டேயிருந்தான்'ன்னு டணால் பாணியில் அலம்பிக்கொண்டிருந்தாள்.

அப்போது பள்ளியிலிருந்து பிள்ளைகள் வீடுதிரும்பினர். சின்னவன் விக்ரம் சிறுவயதிலேயே டீவி விளம்பரங்கள் பார்த்துக்கொண்டேதான் சாப்பிடுவான். அவன் அம்மா அவனை குளிப்பாட்டி
உடம்பில் பவுடர் தூவும் போது, அம்மா! எம்மேலேருந்து பூப்பூவா வருதா? 'என்று கேட்கும் அளவு அதன் பாதிப்பு இருந்தது.

அந்த விக்ரம் பள்ளியிலிருந்து திரும்பியதும் அம்மா கழுத்தில் புத்தம் புது மஞ்சள் கயிறு
மின்னிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், 'அம்மா! உனக்கு கல்யாணமாயிடுச்சா?' என்று முகமெல்லாம் ஆச்சரியம் வழியக் கேட்டானே ஒரு கேள்வி!!!!!!!!!!

மஞ்சக்கயிறு கட்டிவிட்டால் கல்யாணம் ஆச்சு என்று டீவி சீரியல்களிலும் சினிமாவிலும் காட்டிக்காட்டி குழந்தைகள் மனதில் எப்படி பதியவைத்திருக்கிறார்கள்!!!
இவையெல்லாம் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது என்று தான் தாளித்து வந்த பேச்சு
தன் வீட்டிலேயே தனக்கு வைத்துவிட்டதே ஆப்பு!!!!!என்று விக்கித்து நின்றாள் செல்லம்மாள்!!

Labels:


Monday, April 7, 2008

 

இனிது இனிது ஏகாந்தம் இனிது...ஏப்ரல் மாத PiT-க்கு


தன் முதுகை தானே பார்த்து கோதிக்கொள்ளும் சுவாரஸ்யம்!


ஒத்தரும் வேண்டா நா மட்டு வெளாடிக்குவேன்!


ஹையா! யாருமில்லே அவ்ளோ மீனும் எனக்குத்தான்!


யாராவது துணைக்கு வாங்களேன்! எவ்ளோ காலமா நாமட்டும் தனியாவே நிப்பது?


ரங்கமணியின் தனிமையின் இனிமை!


LONE TREE! ஆம் பேரே அதுதான். யூஎஸ்ஸில் சன்னிவேலிலிருந்த்து 17-mile dreive போகும் வழியில் இதே பேரோடு உள்ள ஒரு வியூ பாயிண்ட்!

Labels:


Sunday, April 6, 2008

 

ஜிகிர்தண்டா..ஜிகிர்தண்டா...கிர்தண்டா...தண்டா...ண்டா...டா..டா..டாஆஆஆஆஆஆ!!

மதுரைக்குப் போகும் போதெல்லாம் எல்லோரும் சொல்லிச்...சொல்லி..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரடிக்கும் ஜிகிர்தண்டாவை சாப்பிட்டுப் பார்த்தேயாக வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் கில்லியடித்துக்கொண்டேயிருந்தது. ஓர் ஊரின் பிரபலமான உணவுப் பண்டமென்றால் அதை ருசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.இரண்டு வருடங்கள் முன்பு போயிருந்த போது நம்ம மீனாட்சியை பார்க்க....அம்மாடீ....தரிசிக்க டாக்ஸியில் போயிருந்தோம். உடன் வந்த மதுரக்காரி நாத்தனாரிடம் ஜிகிர்தண்டா சாப்பிட வேண்டும் என்று பேசிக்கொண்டே வந்தேன். நீ சாப்பிட்டிருக்கிறாயா என்றதற்கு. மதுரையிலேயே இருந்தாலும் சாப்பிட்டதில்லை என்றாள். அடிப்பாவி! உன் ஜென்மம் சாபல்யமே ஆகாது என்று செல்லமாக சபித்தேன். அதுதான் உங்களோடு இன்று சாப்பிடப் போகிறேனே! ஜென்மம் ஜிகிர்தண்டா சாப்பிட்டு சாபல்யம் அடைந்துவிடும் உங்க புண்ணியத்தில் என்றாள்.இப்படியே நாங்கள் பேசிக் கொண்டு வந்ததை சுவாரஸ்யமாக காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே வந்த டாக்ஸி ஓட்டுனர், 'அம்மா! நீங்க கோவிலுக்குப் போய்ட்டு வாய்ங்க.


அருமையான ஜிகிர்தண்டா கிடைக்கும் இடத்துக்கு நான் அழைத்துப்போகிறேன்.' என்றாரே பார்க்கலாம்!!இதுக்குத்தான் மூன்றாம் மனிதர் கேட்க பேசக்கூடாது என்பது. ஆனாலும் அவர்களுக்குப் பழக்கமான டாக்ஸி, அதன் ஓட்டுனர் என்பதால் பரவாயில்லை, சரியான இடங்களுக்கு அழைத்துப் போவாரே!! அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு, ஜிகிர்தண்டாவை, 'சற்றே விலகியிரும் பிள்ளாய்!' என்று சொல்லிவிட்டுநிம்மதியாக....திவ்யமாக அம்மனை தரிசித்துவிட்டு என் வழக்கப்படி கோவில் வாசல் கடைகளில் சின்னச்சின்ன சாமான்கள் வாங்கிக்கொண்டு வண்டியிலேறினோம்.ஓட்டுனார் எங்களை கோவிலின் ரத வீதிகளில் ஒன்றிலுள்ள சின்ன டீகடை மாதிரியுள்ள கடை


அருகில் நிறுத்தி, 'அம்மா! கடை பார்க்கத்தான் சிறுசு. ஆனால் இங்கே தரும் ஜிகிர்தண்டா ரொம்ப நல்லாருக்கும். பயங்கரமாக விற்பனையாகும்!' என்றார். சரி..சரி.. உள்ளூர்காரர்களுக்குத்தானே எதுஎது எங்கே நல்லாருக்கும் என்று தெரியும்.காரிலிருந்து இறங்கி கடையுள் நுழைந்து அங்கேயிருந்த பெஞ்ச்சில் அமர்ந்தோம். ஓட்டுனரே இரண்டு ஸ்பெஷல் ஜிகிர்தண்டா ஆர்டர் செய்தார். அவருக்கும் சேர்த்து மூன்றாக சொல்லச் சொன்னேன். அவருக்கு முகமெல்லாம் ஜில்தண்டா ஆகிவிட்டது.ஆசைதீர ருசித்து சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம். இது முடிந்து ரொம்ப நாள் கழித்துத்தான் நான் ஒரு ப்ளாக்கரானேன். அது முதல் ஜிகிர்தண்டாவைப் பற்றி ப்ளாக்கில் எழுதவேண்டும் என்ற ஆசை மனதில் ட்ண்..டண் என்று மணியோசை போல் ஒலித்துக்கொண்டேயிருந்தது.நீ ஆசைப்படு! நான் நிறைவேற்றித் தருகிறேன் என்ற தெய்வ வாக்கும் பலித்தது. போன மாதம்


மதுரைக்குப் போயிருந்த போது பைபாஸ் சாலையருகே உள்ள ஒரு பேக்கரிக்கடையில்


கொறிக்ஸ் வாங்கிவிட்டு அங்குள்ள ஸ்டாலில் ஜிகிர்தண்டா சாப்பிட்டோம். இப்போதுதான் கைப்பையில் காமிரா தயாராக இருக்குமே!
அவர் ஜிகிர்தண்டா தயாரிக்கும் முறையைப் பார்த்தேன். ஒவ்வொரு பாத்திரத்தில் உள்ளதையும் டக்டக் என்று டம்ளாரில் நிரப்பிக் கொண்டேவந்தார். அவருக்கு ஒரு ஸ்பீட் ப்ரேக் போட்டு, 'என்னென்ன போடுகிறீர்கள் என்று எனக்கு சொல்லிக்கொண்டே போடுங்கள் என்று வேண்டுகோளினேன். கூடவே காமிராவையும் தயார் செய்து கொண்டேன். அவர் முகமெல்லாம் லஜ்ஜையும் பெருமையும் வழிய சொல்லிக்கொண்டே வந்தார். அதை க்ளிக் செய்து கொண்டேன். பக்கத்து பழரச ஸ்டாலிலிருந்தவர் அருகே வந்து, 'ஐ! உன்னை மட்டும் போட்டோ எல்லாம் எடுக்கிறாய்ங்க!!' என்று கலாய்த்தார்.ஜிகிர்தண்டாவை அவர் எப்படி கலக்கினார்?


சின்னச்சின்ன பாத்திரங்களில் முன்பே தயாரித்த பொருட்களை வைத்திருந்தார். நாம் போய்


எத்தனை கப் வேண்டுமென்று சொன்னவுடன் அத்தனை கப்....ப்ளாஸ்டிக் டம்ளார் எடுத்து வைத்துக்கொண்டு......கடகடவென்று நிரப்பவாரம்பித்தார். முதலில் கடல் பாசி என்ற சைனாக்ராஸ் ஒருகரண்டி (அதாவது ஒரு குழம்புக்கரண்டி)....அடுத்தது பாலாடை ஒரு கரண்டி..


நன்னாரி எசன்ஸ் ஒரு கரண்டி.... சுண்டக்காய்ச்சிய பால் டம்ளார் நிரம்ப இறுதியில் ஒரு


ஸ்கூப் வெனிலா ஐஸ்கிரீம் மிதக்கவிட்டு குட்டி ஸ்பூனோடு தருகிறார்.மதிய வெயிலுக்கு இதமாக....சாப்பாட்டுக்குப் பின் சாப்பிட வேண்டியதை அதற்கு முன்பே.... நானும் நாத்தனாரும்ஒரு வெட்டு வெட்டிவிட்டு, சாப்பிட்டபின்னும் சாப்பிட , 'நாலு பார்சேல்!!!' என்று ரங்கமணிகளுக்கும் சேர்த்து வாங்கிகொண்டு வீடு திரும்பினோம்.


இனி 'சிந்துபூந்துறை கமழ் திருநெல்வேலியில்' நான்...நானே கேள்விப்பட்டிராத, தெரியாத ஒரு பானம் பேர் பெற்று விற்பனையாகிக்கொண்டிருக்கிறது என்று வார இதழ் ஒன்றில் சமீபத்தில் படித்தறிந்தேன். ஹையகோ! இதுவரை நமக்குத்தெரியாமல் விற்றுக்கொண்டிருக்கிறதே...சும்மா விடலாமா? அடுத்தமுறை திலி போகும்போது அதையும் ருசித்துவிடவேண்டியதுதான்!!

அதுதான் நெல்லை டவுனில் நெல்லையப்பர் கோவிலுக்குப் போகும் வழியில்.....சரியான லோக்கேஷன் போய்தான் தேடவேண்டும், ஒருகடையில் பரபரப்பாக விற்பனையாகும்....
'நன்னாரிப்பால்!!' இதுவரை இப்படி கேள்விப் பட்டதேயில்லை.

அதற்குள் திருநெல்வேலி உறை செல்வர்களே!!! நன்னாரிப்பாலை ருசித்து அது எப்படியிருந்தது என்று தெரியப்படுத்துங்கள்!!!!!!!!
Labels:


Friday, April 4, 2008

 

ஏசி ரூமும் காரும் எட்டாக்கனியா?

'செல்வா! தூக்குச் சட்டியில் சோறும் குழம்பும் வெச்சிருக்கேன். மறக்காம எடுத்திட்டுப் போ!'
வேலைக்குப் போகிறபோக்கில் மகனிடம் சொல்லிவிட்டு தனக்கு ஏதும் எடுத்துக்கொள்ளாமல் ஆபீசுக்கு நடையைக் கட்டினாள் மலர். பேரெல்லாம் நல்லாத்தானிருக்கு ஆனால் அவள் உழைத்து உழைத்து வாடிய மலர்!
ஆபீஸ் என்றதும் ஏதோ பெரிய வேலையில் இருக்கிறாள் என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். காலை 9-மணிக்கு முன் அந்த ஆபீசை திறந்து கூட்டிப் பெருக்கி துடைத்து, தண்ணீர் ரொப்பி வைக்கவேண்டும். அதற்கு அவளுக்கு எழுநூறு ரூபாய் சம்பளம்!
அங்கிருந்து நேராக கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் ஒரு வீட்டுக்கு சமையல் செய்யப் போகவேண்டும். காலை டிபன் செய்து மதியத்துக்கும் இருவருக்கும் கையில் சாப்பாடு செய்து கட்டிக்கொடுக்கவேண்டும். பின் இரவு சாப்பாடும் செய்யவேண்டும். அதற்கு அவளுக்கு 2500 ரூபாய் சம்பளம்.

பிறகு நேராக வீட்டுக்கு வந்து மாலை பசியோடு வரும் மகனுக்கு ஏதாவது சமைத்து வைத்துவிட்டு வெளிவேலைகள்
செய்யும் இரண்டு வீடுகளுக்குச் சென்று..வீடு பெருக்கி பாத்திரம் துலக்கி துணி துவைத்து விட்டு வீடு திரும்பி அக்கடா என்று சிறிது நேரம் ஓய்வு எடுப்பாள். அந்த இரண்டு வீடுகளிலும் சேர்த்து ரூபாய் 1000 சம்பளம். மொத்தம் ரூபாய் 4300-யில் வீட்டு செலவு போக மீதி செல்வாவின் படிப்பு, உடைகள் மற்றும் அவன் தேவைகளுக்கு செலவு செய்வாள்.

மறுபடி மாலை ஐந்து மணிக்கு சமையல் செய்யும் வீட்டுக்குச் சென்று இரவு சமையல் செய்துவிட்டு, முடிந்தால் மறுநாளைக்கான காய்கறிகள் வாங்கிவந்து நேரமிருந்தால் நறுக்கி ப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஏழு மணிக்கு வந்தால் செல்வா வீடு திரும்பி படித்துக்கொண்டிருப்பான். 'சாப்பிட்டயாடா?' என்பாள் பரிவோடு. 'ம்ம்!' என்பான் புத்தகத்திலிருந்து
திரும்பாமலேயே.

இவன் படித்து முடித்து நல்ல வேலைக்குச் சென்று விட்டால் தன் கஷ்டமெல்லாம் தீரும்
என்று எண்ணீக்கொள்வாள். செல்வாவும் அதே நினைப்போடவே நன்றாகப்படித்தான். அம்மாவை உக்கார வைத்து சோறு போடவேண்டும் என்ற ஆசையும் அவனை மேலும் நன்றாக படிக்கத்தூண்டியது.

ஒரு நாள் மலரும் செல்வாவும் பேசிக்கொண்டிருந்தார்கள், கிடைத்த சிறிது ஓய்வு நேரத்தில்.
'ஏண்டா செல்வா! நான் சமையல் செய்யும் வீட்டில் ஓர் அறையில் நுழைந்ததும் 'ஜில்லுன்னு இருக்கு. எப்படிடா?' 'அம்மா..அது ஏசிரூம்மா! அதுக்குன்னு மெஷின் இருக்கு அதை அறையில் மாட்டிவிட்டால் ரூம் சும்மா ஜில்லுன்னு இருக்கும்மா!' என்றான் செல்வா, அறியாத அம்மாவுக்கு தெளிவாக சொன்னான். கூடவே 'கவலைப்படாதே அம்மா! நான் படிச்சு முடிச்சு
நல்லவேலைக்குச் சென்றதும் நமக்குன்னு வீடு வாங்கி அதில் ஒரு ரூமில் ஏசி போட்டுடலாம். என்ன?' என்றான் ஆசையாக. 'அப்படீன்னா, அந்த வீட்டில் உள்ளது போல் நீயும் ஒரு கார்
வாங்கவேண்டும்.' என்றாள் மலர், அன்றலர்ந்த பூப்போல் மலர்ந்து. 'ஓஒகேம்மா!' என்றான் செல்வா சிரித்துக்கொண்டே. மலரும் சேர்ந்து சிரித்தாள் மகனோடு.

காலம் ஓடியது. மலரின் கடும் உழைப்பில் செல்வா நன்றாகப் படித்து பட்டம் வாங்கி கை வழிய சம்பளத்தோடு நல்ல வேலையிலும் சேர்ந்துவிட்டான். முதல் மாதம் சம்பளம் வாங்கி
அம்மாவின் உழைத்துக்காய்த்த கைகளில் கொடுத்து, 'அம்மா! இது உன் உழைப்பின் பலன். இனி நீ வேலைக்குப் போகவேண்டாம். ஒரு வருஷம் பொறு நாம் வீடு வாங்கலாம்...அதில் ஏசி போடலாம், ஏன் கார்கூட வாங்கலாம்!' என்றான் ஆசையும் பரிவும் கலந்து. கண்களில் கண்ணீர் கசிய நின்றாள் மலர்.

ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய செல்வா அம்மா மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டு நாற்காலியில் சாய்ந்திருப்பதைக் கண்டு 'அம்மா! என்னம்மா ஆச்சு?' என்று பதறி தாங்கி படுக்கையில் படுக்க வைத்துவிட்டு டாக்ஸி பிடிக்க ஓடினான்.

செல்வா திரும்பிவந்தபோது வாடிய அந்த மலர் உதிர்ந்து விட்டது. செல்வாவிடம் சொல்லாமலேயே சென்றுவிட்டாள் அவன் தாய்! செய்வதறியாது திகைத்து நின்றுவிட்டான் செல்வா. இருவரின் ஆசைகளும் கனவுகளும் அந்தரத்தில் ஆட, இங்கு வாடி உதிர்ந்த அந்த மலர், வாடா மலராக தெய்வத்தின் திருப்பாதங்களை அடைந்தது. ஆனால் அத்தெய்வம் அவர்கள் ஆசைகளையும் நிறைவேற்றித்தான் விட்டது.

காரியங்கள் மளமளவென்று நடக்கவாரம்பித்தன. செல்வாவின் அலுவலக நண்பர்கள் ஓடோடி வந்தார்கள். மாலைகள் வந்தன. அதோடு வந்தது ஒரு ப்ரீஸர்பாக்ஸ்!!!! மலர் ஆசைப்படி ஏசிரூமுக்குப் பதிலாக ஏசிபெட்டி! செல்வா தாங்கமாட்டாமல் அழுதான்.

சடங்குகள் எல்லாம் முடிந்து மாலைகள் வழிய வழிய மாருதி வேன் ஒன்றில் தன் முதலும் கடைசியுமான கார் சவாரியை செய்கிறாள் மலர்!!!

குமுறி குமுறி அழும் செல்வாவை தேற்றமுடியாமல் தவித்தார்கள் அவன் நண்பர்கள்.

ஏசிரூமும் கார் சவாரியும் ஏழைகளுக்கு எட்டாக்கனியா? இப்படி எட்டும் கனிதான்.
பி.கு.
நேற்று மந்தவெளி அருகே எங்களைக் கடந்து சென்ற ஒரு மாருதி வேனில் ஒரு பெண்ணின் கடைசிப் பயணத்தைப் பார்த்ததும் மனதில் ஓடிய ஒரு கற்பனைக் கதை.

Labels:


Tuesday, April 1, 2008

 

எல்லோரும் இங்கே வந்து என்னான்னு பாருங்கள்!!

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////

/////////////////////////////////?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

????????????????????????????????????????#########################################################################
#############################*********************************************************************************************
***************************************<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஹாஹாஹா!!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]