Monday, March 10, 2008

 

வெயிலோடு உறவாடி..வெயிலோடு விளையாடி..வெயிலோடு ஆட்டம் போடலாமா?


சுள்ளென்று சூரியன் தன் உக்கிரத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டான். தன் ஆயிரம் கரங்கள் நீட்டி அனலென்னும் சாட்டையை சுழற்றி விளாச ஆரம்பித்தும்விடுவான். என்ன செய்யப்போகிறோம்? இன்னும் மூன்று மாதங்களை எப்படி ஓட்டப்போகிறோம்? தென் மாவட்டங்களில் அடிக்கடி பவர்கட் வேறு.

மின்சார பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து மாற்று ஏற்பாடுகள் செய்யத்தெரியாது கையைப் பிசையும் அரசு. எல்லா மந்திரிகளும் 'லல்லு மாதிரி இருந்துவிட்டால் எவ்வளவு லல்லாயிருக்கும்!!'

சேரி...நடக்கமுடியாததைப் பற்றி பேசி என்ன பயன்?
நடக்கக் கூடியவற்றை பேசுவோமா?

கொழுத்தும் வெயிலிலும் நம்மை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி?

அதிகம் தண்ணீர்,மோர்,இளநீர் போன்றவற்றை அருந்துவதால் தாகமும் தீரும் குளிர்ச்சியும் கிடைக்கும்.

சேரி...பூவாவுக்கு என்ன செய்வது? வெயிற்கேற்ற உணவுண்டு.....உண்டால் குளிர்ச்சியடையும் வயிறுண்டு.

முன் பதிவில் சொன்னாற்போல் காலையில் நீராகாரம் அல்லது தண்ணிசாதம்..பழங்கறி..சின்ன வெங்காயம்...சுண்டக்கீரை. அற்புதமான இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம் இந்த தண்ணிசாதம்!!!!!!

ஒரு கையில் ரிமோட்டோடு டி.வி. பார்த்துக்கொண்டே தண்ணிசாதம், பழங்கறி, சின்னவெங்காயத்தோடு ஒரு பிடிபிடிக்கும் என் மகன். அவனுக்கு மிகவும் பிடித்தமானது.

அடுத்து, கேழ்வரகை நாம் மெஷினில் திரித்து வைத்துக்கொண்டு தேவையான அளவு தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் கூழாகக் காய்ச்சி வெந்ததும் ஆற வைத்து அதில்......

"உங்களுக்கு ரொம்பத்தான் கொழுப்பு" இருந்தால் வெண்ணெய் எடுத்த மோரில் உப்பிட்டு கரைத்து மேலும் தேவையானால் குடிக்கும் பதத்தில் நீர் விட்டு அருந்தினால் தொண்டையில் இறங்கும் போதே அதன் குளிர்ச்சியை உணரலாம்.

கொழுப்புப் பற்றி கவலையில்லையா?....அது தேவையா? அப்படியானால் நல்ல "கட்டித்தயிரை வெட்டியெடுத்து ஆடையோடு ராகியில் கலந்து" குடிக்கலாம். ஒரே மாதத்தில் ஒரு சுற்றோ ரெண்டு சுற்றோ பெருக்கலாம். இது எப்படியிருக்கு?

ராகிகூட கொத்தமல்லி அல்லது புதினா சடனி ஒன்றிரண்டு ஸ்பூன் கலந்து கரைத்து குடித்தால் சூ.................ப்பராயிருக்கும், ஒரு முறை உறவினர்களோடு கோவிலுக்குப் போன போது பாட்டிலில் ராகிகூழ், புதினாச் சட்னி கரைத்து கொண்டு போயிருந்தேன். போகும் வழியிலேயே அடிபிடியென்று காலியாயிற்று.

இனி, .....மேல் தட்டு மக்களுக்கு ரொம்பவும் அறிமுகமில்லாத...நாட்டின் முதுகெலும்பான கிராமத்து உணவு. "கம்பு சாதம்" கிராமீய மொழியில் சொல்வதானால்..கம்பஞ்சோறு!

இப்போது டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களில் சுத்தமாக பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அதைவாங்கி ஒரு கப் லேசாக கடாயில் வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டு
பாத்திரத்தில் அளவாக நீரூற்றி குக்கரில் வேக விடவும்.

காலையில் சாப்பிட வேண்டுமென்றால் முந்தினநாள் மாலையில் செய்து நன்றாக ஆற வைத்து இரவு மண்பானையில் நல்ல தண்ணீர் விட்டு அதில் வேக வைத்த கம்பு சாதத்தை பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி நீரில் மிதக்கவிடவும்.

மறுநாள் காலையில் அதில் இரண்டு உருண்டைகளை எடுத்து கட்டித்தயிர் விட்டு பிசைந்து வற்றல்குழம்பு, பழங்கறி, சுண்டக்கீரை, சின்ன வெங்காயம், காய்கறிஊறுகாய் இதில் ஏதாவது ஒன்றோடு சேர்த்து சாப்பிட்டால்....ஆஹா!!தண்ணீர் தொட்டிக்குள் உட்கார்ந்தாற்போலிருக்கும்!!

ரங்கமணி சைட்டில் வெயிலில் நிற்க வேண்டிய வேலையிருந்தால் கம்பு சாதம்தான் சாப்பிட்டுவிட்டுப் போவார். குளிர்ச்சிக்கு குளிர்ச்சி,பசியும் தாங்கும்.

வயலில் வேலை செய்வோர் நல்ல கட்டுடம்போடு இருப்பதற்கும் புல்லுக்கட்டு விறகு கட்டு சுமந்து செல்லும் பெண்கள் இடுப்பை வெடுக் வெடுக் ஒடித்துக்கொண்டு ஓடுவதற்கும் தேவையான பலத்தை கொடுப்பது கம்புசாதம்தான் என்று நினைக்கிறேன்.

அடுத்து வெயிலோடு உருண்டோடி வரும்....மாம்பழமாம் மாம்பழமாம் மல்கோவா மாம்பழம்,
ராஜபாளையம் சப்பட்டை, பங்னப்பள்ளி மாம்பழம்!!!!அடடா...! அதை அப்படியேவும் சாப்பிடலாம் துண்டு போட்டும் விழுங்கலாம்.

சம்மர் வந்தால் எங்க வீட்டில் சாதம் வைப்பதைத் தவிர வேறு சமையலே கிடையாது. சாப்பாடு ஏற்காது என்பது ஒருபுறம். மாம்பழம் இருக்கையில் வேறேதும் வேண்டோம் என்பது மறுபுறம்.
மதிய உணவு... கெட்டித்தயிர் விட்டுப்பிசைந்த தயிர்சாதம்...மாம்பழத்துண்டுகள்!!!!!

தயிர்சாதமும் மாம்பழமும் சூப்பர் காம்பினேஷன். இரண்டும் அதுபாட்டுக்கு உள்ளே போய்க்கொண்டேயிருக்கும். 'மாம்பழம் வேண்டாங்குற குரங்கு உண்டா' என்பார்கள்.
அப்படிப் பார்த்தால் நானும் குரங்குதான்!!


இலையில் மற்ற பதார்த்தங்கள் பரிமாறினால் வேண்டாமென்றால் கைகொண்டு தடுப்போம். ஆனால் மாம்பழத்துக்கு கை குறுக்கே வரவே வராதே!

மேற்சொன்ன மாம்பழ வகைகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அபார ருசி கொண்டது
சின்னண்ணன் வீட்டு மரத்தில் காய்க்கும் பேர் தெரியாவகை மாம்பழம்!
போன வருடம்தான் அதன் ருசி கண்டேன். ருசிகண்ட பூனையானேன். இந்த வருடம் அந்த மரத்தை யாம் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். அஹ்ஹஹ்ஹா!!!ஹிஹ்ஹிஹ்ஹீ....!!!

மக்கள்ஸ்!! எல்லோரும் குளிர குளிர சாப்பிட்டு வெயிலை விரட்டு விரட்டு என்று விரட்டுவீகளாக!!!சேரியா? வர்ட்டா?

Labels:


Comments:
ஜில்லென்று ஒரு பதிவு :)
நல்லாத்தேன் சொல்லுதீக!
 
நான் இங்கே வெயில் எப்போ வருமின்னு தவம் கிடந்துட்டு இருக்கேன்... நீங்க விரட்ட நெனைக்கிறீகளே ஆத்தா. இது உமக்கே நல்லாயிருக்கா தாயீ. :)

கம்பு தோசையும், இட்லியும் சாப்பிட்டா குளிர்ச்சியா? நமக்கு சோறுன்னாலே இறங்காது. அதான் கேட்டேன்.
 
தமிழ்பிரியன்!
'நல்லாதானிருக்கு' என்றால் எங்க வீட்டுப் பாஷையில்..'ஏதோ இருக்கு..என்ன மாதிரி வருமா?' என்று அர்த்தம். நீங்கள் சொன்னதும் அப்படித்தானா?
ஆனாலும் சந்தோசம்!
 
காட்டாறு!
அங்கு விண்ட்டர் வரப்போகுதே..என்று அலறுவீர்களல்லவா? அது போல்தான் இதுவும். கம்புதோசையும் இட்லியும் குளிர்பிரதேசத்திலிருக்கும்
உங்களுக்கெதற்கு? ஆனாலும் அது குளிர்ச்சியில்லை. சோறுதான்!
 
yummmm.....
Maambalam and thayir saadam is my son's favorite summer dinner.

Hoping to be there in India this time before the mango season ends....
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]