Sunday, March 30, 2008

 

தோலை உறிக்கலாம், வறுக்கலாம், சாப்பிடலாம்!!!மறைந்த நமது பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி தன் வீட்டு சமையல்காரருக்கு தரும் ஒரு குறிப்பு...முடிந்தவரை காய்கறி, பழங்களின் தோலோடு உபயோகிக்க வேண்டும் என்பதுதான்.

உடனே பலாப்பழத்தோல், அன்னாசிப்பழத்தோல்,முருங்கக்காய்த்தோல், சேனைக்கிழங்குத்தோல்
எல்லாம் உபயோகிக்கலாமா? என்று லொள்ளு கேள்விகள் வேண்டாமே!

முதலில் வாழைக்காயை எதையும் வீணாக்காமல் சமைக்கும் முறையைப் பார்க்கலாம்.
என் பேரிக்கா(பெரிய அக்கா) சொல்லிக்கொடுத்தது.
வாழைக்காயை இரு ஓரங்களையும் நறுக்கி விட்டு, முழுசாக தண்ணீரில் வேகவிடவும்.

வெந்ததும் தோலை உறித்து வைத்துக்கொள்ளவும். தோல் உறித்த வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்புக்காரம் போட்டு தளித்து பொறியலாகவும் செய்துகொள்ளலாம்.
அல்லது துருவி சிறியதாக நறுக்கிய சின்னசெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளித்து வாழக்காய் புட்டாகவும் செஞ்சிக்கலாம்.

இப்போ தனியாக எடுத்து வைத்த வாழைக்காய் தோலை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து தோல் துண்டுகளையும் போட்டு புரட்டி எடுத்தால் சுவையான வாழைக்காய்த் தோல் கறி ரெடி! இதை பெரியவர்கள் மட்டும்தான் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடுவார்கள். காரணம் பொருளை வீணாக்காமல் செய்தது, தோலிலும் சத்துக்கள் நிரம்பியுள்ளன என்ற உண்மையையும் உணர்ந்தது. சரிதானே?

இதே போல் தேங்காய் சேர்க்கக்கூடாது என்ற நிலைமை வந்ததும். வேறு எதையெல்லாம் துவையல் செய்து சாப்பிடலாம் என்று தேடிய போது கிடைத்தவை...கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, பீர்க்ங்காய், தோசைக்காய் ஆகியவற்றைக் கொண்டு துகையல் செய்யலாம் என்று தெரிந்தது. வேறு காய்கள் தெரிந்தாலும் சொல்லுங்கள்! எல்லாவற்றையும் சேர்த்து அல்ல...தனித்தனியாக ஒவ்வொரு நாளும் ஒரு ஒரு காய் கொண்டு துகையல் செய்யலாம்.

மேற்சொன்ன காய்களில் ஏதாவது ஒன்று......பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் காய்ந்தமிளகாய்...காரத்துக்கேற்ப, கறிவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கி வைத்துள்ள காயும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் விரும்பும்படி ஒன்றிரண்டாகவோ அல்லது மையாகவோ அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தியுடனோ அல்லது சூடான சாதத்தில் போட்டு பிசைந்தோ ச்சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பிக்கேட்டால் கொடுக்கலாம்!!!!!!!!!!!
ஆப்பிளை முடிந்தவரை தோலோடுதான் சாப்பிடவேண்டும். தோல் சீவித்தான் ஆகவேண்டுமென்றால் அந்தத்தோலை தூரப்போடாமல் சட்னி அரைக்கும் போது உடன் சேர்த்துக்கொள்ளலாம்.
மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து எடுத்தவுடன் முத்துக்களைக் கவ்விக்கொண்டிருந்த இளம் மஞ்சள் பகுதியை அப்படியே சாப்பிடலாம். அதன் துவர்ப்பு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல மருந்துபோன்றது.
இனிமேல் எல்லோரும், ....'தோலோடுதான் நான் சாப்பிடுவேன்...!' என்று பாடலாம்தானே?!

Labels:


Friday, March 28, 2008

 

பல்சிறைக்கழகம்!!!!!!!

சிறைச்சாலை என்ன செய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அது எதுவும் செய்யும் என்று உறுதியாயிருக்கிறது

முன்பெல்லாம் ஒரு கைதி விடுதலை பெற்றுப் போகும் போது சிறை அதிகாரி, அவனுடய உடமைகளையும் சிறையிலிருந்தபோது செய்த வேலைகளுக்கான சம்பளத்தையும் கொடுத்து பொத்தாம்பொதுவாக ஓர் அறிவுரையும், 'இனிமேல் ஒழுங்காக இரு. திருந்தி வாழப்பார். திரும்பி இங்கே வராதே!' என்று கூறி அனுப்பிவைப்பார்.

ஆனால் இப்போது எவ்வளவு மற்றங்கள்!!!சிறை சட்டதிட்டங்களிலும் சரி, கைதிகளின் மனவோட்டங்களிலும் சரி, மகிழத்தக்க மாற்றங்கள்.

இவ்வார விகடனில் வந்த ஒரு கட்டுரை...."சூழ்நிலைகளாலும் சுருக்கென்று எழுந்த கோபத்தாலும் குற்றவாளிகளாகி, சிறைச்சாலைகளில் ஆயுளைத்தொலைத்த பலர், இப்போது பண்பான பட்டதாரிகள்!"

புழல் மத்தியசிறையில்தான் இத்தனை மாற்றங்கள். காரணம் கடுமை காட்டாத சிறை கண்காணிப்பாளர்களின் கனிவும் மனிதாபிமானமும்தான். குற்றவாளிகள் என்றோ கைதிகள் என்றோ அழைக்கப்படுவதில்லை சிறைவாசிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.

அவர்களின் மனமாற்றம், யோகா, கவுன்சிலிங், தியானம், சுயவேலை வாய்ப்பபுப் பயிற்சிகள், கல்வி இவைகள்தான் சாத்தியப்படுத்தியிருக்கிறன என்கிறார் தமிழக சிறத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.சுப்பிரமணியன் ஐ.பி.எஸ்.

B.Sc., M.Com., M.C.A., M.A., PGDLA என்று பல பட்டங்கள் வாங்கிய பலர், உணவு மற்றும் ஊட்டச்சத்து,டூ-வீலர் மெக்கானிசம், டைப்ரைட்டிங், டி.வி. மெக்கானிசம் என்று நான் -
ஸ்டாப்பாக படித்துக் கொண்டிருப்போரும் உண்டு. விடுதலைக்குப் பிறகு வெளியே சென்றதும் எந்த வேலைக்கும் தன்னை தயார் படுத்திக்கொள்ளவே இத்தனை படிப்பும் என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும் போது உள்ளே நடக்கும் இது போன்ற நல்ல விஷயங்கள் வெளியிலும் நடந்தால் நம் நாடு எங்கோஓஓஓஓஓஓஓஓஒ போய்விடுமல்லவா?

Labels:


Monday, March 24, 2008

 

சிறைச்சாலை..என்ன செய்யும்? எதுவும் செய்யாது, செய்யவும் முடியாது!

சிகாகோ நகரின் சிறைச்சாலை, நம்மூரைப்போல் ஊருக்கு வெளியே புழல் சிறையைப் போல் அமைந்திருக்கவில்லை. நட்ட நடுநகரில் போக்குவரத்து மிகுந்த சாலைகள் அருகே கம்பீரமாக எழும்பி நிற்கிறது. 'என்னை மீறி நீ எங்கே போய்விடமுடியும்?' என்று கேட்பதைப்போல்.

எப்பேர்பட்ட ஓமக்குச்சியும் இந்த இடுக்கு வழியாக நுழைந்து தப்பிக்க முடியாது என்று மிடுக்காக சொல்லிக்கொண்டு நிற்பதைப் பாருங்கள்!!!

பலமான போக்குவரத்து நிரம்பிய சாலை வழியே போகும் போதே எடுத்தது.

Labels:


 

நானும் கடலை போடுவேம்ல....அதுவும் யாரோட?

கடலை போடுதல் என்பது ஒரு வழக்குச் சொல்லாகவே அமைந்துவிட்டது. கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றுமில்லாத விஷயங்களை மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பதுதான் கடலை போடுதல் என்று அறிந்தேன். ஓகே..ஓகே..

இந்த வயதில்தான் கடலைபோடமுடியும். பின்னாளில் கடலையாவது ஒண்ணாவது.
இப்போது ஒண்ணுமில்லாத விஷயங்களை மணிக்கணக்காக பேசுபவர்கள் திருமணத்துக்குப் பிறகு
அவசியமான விஷயங்களைக்கூட 'உம்..உஹூம்..' அடித்தொண்டையில் உறுமிக்கொண்டு போய்க்கொண்டேயிருப்பார்கள்!!! ஆகவே இளைஞர்களே! போடும் கடலையை இப்போதே போட்டு மகிழ்ந்து கொள்ளுங்கள்!!!

இவ்வளவும் சொல்லிவிட்டு நான் கடலை போடாமலிருந்தால் லல்லாருக்குமா?
நானும் போட்டேனே கடலை....யாருக்கு? கொழுத்த அணிலுக்கு.


கலிபோர்னியாவில் சன்னிவேலிலிருந்து '17-மைல் ட்ரைவ்' (பேரே அப்படித்தான்) என்னுமிடதுக்குப் போயிருந்த போது அங்கு 'பெபிள்பீச்'(pebble beach)-சில் தான் அணிலுக்கு கடலை போட்டேன். அங்கு வருபவரெல்லாம் அணிலுக்கும் கடற்பறவைகளுக்கும் தின்பதற்கு வேற்கடலை..ஒவ்வொன்றும் எம்மாம் பெரிசு!, சிப்ஸ், மற்றும் அவர்கள் கொண்டுவரும் பிற 'கொறிக்ஸ்' எல்லாவற்றையும் வாரியிறைகிறார்கள். அவைகள் ஆவலோடு வந்து கொறிக்கின்றன. நம் கைகளிலிருந்தும் கைகளால் எடுத்து கொறிக்கின்றன. பறவைகள் மேலே வீசினால் அழகாக கவ்விக்கொண்டு பறக்கின்றன. என்னோட அணில் என்னிடம் கடலைகள் 'காலி......!'என்ற பின்னும் போகாமல் என் பின்புறம் வந்து "பின்னலைப் பின்னின்றிழுத்தான்.." என்பது போல் என் முந்தானையைப் பின்னின்றிழுத்தான். சிறிது நேரம் அதோடு விளையாடிவிட்டுப் போகும்போது என் பின்னேயே வந்தது....அதற்குத்தான் என் மேல் எவ்வளவு பாசம்!!!!!

Labels:


Sunday, March 23, 2008

 

கடை...எட்டாவது வள்ளல்!!!! மீள்பதிவு


சங்க காலத்தில் கடையேழு வள்ளல்கள் இருந்ததாக தமிழ் வரலாறு கூறுகிறது.
இந்த கலிகாலத்திலும் அப்படி வாரிவாரி வழங்கிய வள்ளல்தான்...புரட்சித்தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப் படும் 'மக்கள்திலகம் எம்ஜியார்!'

மக்கள்திலகம் என்ற பேருக்கேற்ப இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். அரசியலில் அவர் பெயரை ஆதாயத்துக்காக பயன் படுத்துவோர் ஒரு புறமிருக்க, எந்தவித எதிர்பார்ப்புமின்றி அவர் பெயரைச் சொன்னாலே பொங்கி, பூரித்து, மெய்சிலிர்த்து நிற்க ஒரு மாபெரும் கூட்டமே இருக்கு. இதைத்தான் அரசியல்வாதிகள் வோட்டுவங்கி என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் நைச்சியமாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

இவ்வகையான ஏமாற்று வித்தைகளையெல்லாம் சட்டை செய்யாமல் இன்றும்...அவர் மறைந்து 20ஆண்டுகள் கழிந்தபின்னும் அவரது பிறந்தநாள், நினைவுநாட்களில் சொந்த செலவில் ஷாமியானா கட்டி மேஜை போட்டு அவர் படம் வைத்து மாலைபோட்டு காலையிலிருந்து மாலைவரை அவரது படப் பாடல்களை ஒலிபரப்பி அஞ்சலி செலுத்தும் பாமரமக்கள்தான் எம்ஜியார் சேர்த்து வைத்த மாபெரும் சொத்து!!

அவரது தனிப்பட்ட குணங்கள் எப்படியிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு மேலேறி நிற்பது அவரது வள்ளல் குணம்தான்.

அரசு ஊழியர்களிடம் அவர் காட்டிய பரிவு,பாசம் பற்றி பொதுப்பணித்துறையிலிருந்து ஓய்வு பெற்ற எங்க வீட்டு ரங்கமணி அடிக்கடி நினைவு கூர்வார். அப்படி அவர் கூறிய இரண்டு சம்பவங்கள் உங்களுக்காக.

தலைநகரில் தமிழ்நாடு இல்லத்தில் பொறுப்பிலிருந்த பொறியாளர் எம்ஜியார் அங்கு வந்த போது அவருக்கான அறையில் சகல ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து முடித்திருந்தார்.
அதில் மகிழ்ந்து போனவர் தன் பாதுகாவலரை விட்டு பொறியாளரை அழைத்து வரச்சொன்னார்.

அவர் வந்ததும் அவரைப்பாராட்டி தன் பாக்கெட்டில் கைவிட்டு வந்த பணத்தை பொறியாளரிடம் நீட்டினார். அதிர்ந்து போனவர் செய்வதறியாமல் திகைத்தார்!! முதலமைச்சரிடமிருந்தே பணம் வாங்குவதா? அதுவும் ஓர் அரசு ஊழியர்!

அவரது தயக்கத்தைப் பார்த்த பாதுகாவலர் வாங்கிக்கொள்ளும்படி சைகை காட்டினார். காரணம் அப்போது அவர் முதலமைச்சரில்லை...மக்கள்திலகம் எம்ஜியார்!!!

பின்னொரு சமயம் வெளியூருக்கு காரில் செல்லும் போது திடீரென்று அவருக்கு எங்காவது ஓய்வு எடுக்கவேண்டியிருந்தது. வழியில் பல்லடம் என்னும் ஊரிலுள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இன்ஸ்பெக்ஷன் பங்ளாவுக்குள்(IB)கார் நுழைந்தது. சிஎம் காரைக்கண்டதும் ஓடோடி வந்த உதவிப் பொறியாளர் சிஎம்க்கான அறை மற்றும் குளியலறைகளை தயார் செய்தார்.

எம்ஜியார் அறைக்குள் நழைந்ததும் நேரே பாத்ரூமுக்குத்தான் சென்றார். அங்கு ரெண்டு பெரிய பக்கெட்டுகள் நிறைய தண்ணீர் நிரப்பியிருந்தது. வெளியே வந்ததும் உதவிப்பொறியாளரைப் பார்த்து, 'குழாயில் ஏன் தண்ணீர் வரவில்லை?' என்று கேட்க அவர், 'மோட்டார் ரிப்பேர் சார்!' என்க, 'ஏன் ரிப்பேர் செய்யவில்லை?' என்று விடாமல் வினவ, 'கோவையிலிருந்து மெக்கானிக் வரவேண்டும்.' என்று உடம்பெல்லாம் பதற பதிலளித்தவர்...கடைசியாக அந்த ஹைவேஸ் என் ஜினியர் சொன்னதுதான் ஹைலைட், முதலமைச்சரிடமே, 'சார்! சார்! எங்க டி.இ.கிட்ட சொல்லிடாதீங்க சார்!'என்றார். எம்ஜியார் குபுக்கென்று சிரித்துவிட்டு அவரிடம் அவரது குடும்பம், பிள்ளைகள் படிப்பு எல்லாம் அக்கறையாக விசாரித்துவிட்டு, வழக்கம்போல் சட்டைப்பையிலிருந்து வந்த பணத்தையும் கொடுத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.

பொறியாளர் நெகிழ்ந்து நின்றார். வெளியில் வந்து காரில் ஏறப்போகும் போது திரும்பி பொறியாளரைப் பார்த்து குறும்பாக சிரித்துக்கொண்டே, 'அடுத்த முறை வரும் போது குழாயில் தண்ணீர் வர வேண்டும்! இல்லாவிட்டால் உங்க டி.இ. கிட்ட சொல்லிடுவேன்!!' என்றாரே பார்க்கலாம்!!

இப்போது இப்படி நடந்தால் அந்த பொறியாளர் எந்த தண்ணியில்லா காட்டுக்கோ? யாரறிவார் பராபரமே!
இந்த மனிதாபிமானம்தான் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெறக் காரண்மோ?

Labels:


 

பங்குனி உத்திரத்தன்று கருவறைப் பணி!


இந்த வருடம் பங்குனி உத்திரத் திருநாளில் பௌர்ணமியும் சேர்ந்துகொள்ள போதாதற்கு மிலாடிநபியும் புனிதவெள்ளியும் கைகோக்க மும்மதங்களும் இணைந்த திருநாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

நேற்று அதாவது மார்ச் 21-ம்நாள் பங்குனி உத்திரம் நாளில் எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. மேல்மருவத்தூரில் கருவறைப்பணி செய்யும் பேறுதான் அது.

அதி..அதிகாலை 2-மணிக்கு நானும் என்னோடு சின்னக்கா மகனும் மருமகளும் சேர்ந்துகொள்ள
காரில் கிளம்பினோம். செங்கல்பட்டு தாண்டி வருணபகவான் காலமில்லாத காலத்தில் தன் அளவில்லா பெருங்கருணையை வாரிவாரிப் பொழிந்து கொண்டிருந்தான். கோவிலுக்குள் நுழைவதற்குள் நன்றாக நனைந்துவிட்டோம். அன்று முழுவதும் ஈர உடையோடேயே பணிகள் செய்தோம். விரைவாகப்போயும் அபிஷேகம் முடிந்துவிட்டது. எங்கள் கைகளால் அபிஷேகம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

பரவாயில்லை என்று தேற்றிக்கொண்டு நமக்கென்ற பணியை அம்மா கூப்பிட்டுத்தருவாள் என்று கருவறை அருகே நின்றிருந்தேன். டக்கென்று "புற்று மண்டபத்தில் பணியிருக்கிறது வாருங்கள்." என்று ஒரு சக்தி அழைத்தார். நானும் மருமகளும் அவர் பின்னே புற்று மண்டபத்திற்குச் சென்று அங்கு அவர் சொன்ன பணிகளை சிரத்தையாக செய்து முடித்தோம். அங்கு முன் தினம் செய்திருந்த அலங்காரங்களைக் களைந்து வாடியமலர்களை சேகரித்து அப்புரப்படுத்தி அவ்விடத்தை பெருக்கி நீர் கொண்டு துடைத்து சுத்தப்படுத்தினோம்.

புற்றுமண்டப பணி செய்யும்போதே மனதில் திடீரென ஒரு மின்னலடித்தது!!ராகு தோஷத்துக்கு
திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் செய்யச் சொன்னார்கள். போகமுடியாமல் தள்ளிக்கொண்டே போனது. அது மனதில் நெருடிக் கொண்டேயிருந்தது. "அங்கு போய் பரிகாரம் செய்ய முடியாவிட்டால் என்ன? என் சந்நிதியில் புற்றுமண்டபத்தில் போய் பணி செய்! அதுவே பரிகாரம் செய்ததற்குச் சமம் மகளே!" என்று அம்மா சொன்னதுபோல் உணர்ந்தேன். உடம்பெல்லாம் புல்லரித்தது...மனமெல்லாம் நிறைந்தது.

நம் மனதில் எழும் சந்தேகங்களுக்கும் சஞ்சலங்களுக்கும் தக்க பதில் தந்து அவள் அருள் மழை பொழிந்தாள். ஆம்! அன்று நாட்டு மக்கள் எல்லோருக்கும் தன் அருளை (எதிர்பாராத) மழையாய் பொழிந்து விட்டாள்.

அடுத்து அம்மா சந்நிதிக்கு முன் பெருக்கி சுத்தம் செய்ய அழைப்பு வந்தது. அதெற்கென்றிருந்த துடைப்பத்தை அங்கிருந்து எடுத்து சந்நிதியின் இருபுறமாக குறுக்கும்நெடுக்கும் செல்லாமல் சுத்தமாக பெருக்கி வாரி அப்புரப்படுத்தினேன். நம் மன அழுக்கையும் அம்மா சுத்தப் படுத்துவாள் அல்லவா?

அன்று பெய்த பெருமழையால் பிரகாரத்துக்குள் வழிந்த மழைநீரை வெளித்தள்ளும் பணி, ஓர் அதிகபடி பணியாக அமைந்துவிட்டது. தொண்டர்கள் அசரவில்லையே! விரைவாக நீர் வழியவழிய தள்ளிக்கொண்டே இருந்தார்கள்.

அன்று அருள்திரு அடிகளார் வெளிநாடு சென்றிருந்தமையால் மன்றத்தினர் பாதபூஜை செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அந்த கூடுதல் சிறப்பு இல்லாமல் போனது வருத்தம்தான்.

அதற்கு பதிலாக அன்று பௌர்ணமி நாளானதால் அம்மாவின் தங்கரதம் இழுக்கும் பெறும் பேறு கிட்டியது. எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக மூன்று சுற்றுகள் ரதம் இழுத்து நிலைக்கு கொண்டுவந்தோம். நம்மை நல்ல நிலைக்கு இழுத்துக் கொண்டுசெல்பவளை நாம் இழுத்து நிலைக்குக் கொண்டுவந்தோம்! என்ன பேறு செய்தோம் நாம்!!

மாலையில் திருவிளக்கு பூஜை. 108 விளக்குகள் வைரவடிவில் அமைக்கப் பட்டு மகளிர் எதிரெதிராக அமர்ந்து வேப்பிலை கொண்டு அர்ச்சனை செய்து வெகு சிறப்பாக செய்து முடித்தனர்.

பின்னர் கோவில் நடைசாத்தும் நேரமும் வந்தது. எல்லோரும் அம்மா சந்நிதி முன் அமர்ந்து பாடல்கள் பாடி அம்மாவை மகிழ்வித்து இறுதியில் வாழ்த்துபாடி நடைசாத்தி எங்கள் கருவறைப்பணி இனிதாக சிறப்பாக மனதுக்கு நிறைவாக நடந்து முடிந்தது.

செய்த பணி என்னவோ குறைவுதான் ஆனால் மனதுக்கோ பெரும் நிறைவுதான்!!!!

ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா!!!
குருவடிசரணம் திருவடி சரணம்!!!

Labels:


Friday, March 14, 2008

 

தமிழ் பாடல் பங்களிப்பு பாகம்-3

உற்சாகம் பீறிட ஓடி வந்த பாடல்கள்.

1)மாங்காய் தலை முருகன்
கட்டை வண்டியில் ஏறி
சந்தை கடை சென்றான்
விதவிதமாய் கடைகள்
சந்தையிலே கண்டான்
லட்டு கடைக்குச் சென்று
லட்டு வேண்டும் என்றான்
லட்டு கேட்ட பையா
துட்டு எங்கே என்றான்
மாங்காய்தலை முருகன்
துட்டு இல்லை என்றான்
லட்டு மிட்டாய்காரன்
லட்டும் இல்லை என்றான்

2)சின்ன விஜயராணி செல்ல விஜயராணி
வடைக்காகப் பாடுகிறாள்
வானம் பார்த்து சிரிக்கிறாள்
மிளகாய்த் துண்டு சிறு துண்டு
நறுக் என்று கடித்தாள்
தேம்பித்தேம்பி அழுகிறாள்
-----------------------
-----------------------

கோடிட்ட இடங்களை யாராவது தெரிந்தவர்கள் நிரப்புங்களேன். எனக்குத் தெரிந்தவுடன் நானும் செய்கிறேன். ஓகேவா?

Labels:


Thursday, March 13, 2008

 

தமிழ்பாடல்..பங்களிப்பு...பாகம்-2

சிறுவர் பாடும் பழைய தமிழ் பாடல்களை ஞாபகப்படுத்தி சொல்லும்படி பிள்ளைகளையும் மதினியையும் கேட்டதற்கு என்னனொரு உற்சாகம்!!!!
கொசுவத்தி ஏத்தி எனக்குக் கிடைத்த பாடல்கள்.

1) அப்பாக்குட்டி மகன் சுப்பாக்குட்டி
சுப்பாக்குட்டி மகன் சுண்டெலியாம்
சுண்டெலி ராஜனுக்கு கலியாணமாம்
கொக்கைக் கூப்பிடுங்கள் பந்தல் போட
குருவியை கூப்பிடுங்கள் பூப்போட
தவளையை கூப்பிடுங்கள் தாரை ஊத
அப்பாக்குட்டி மகன் சுப்பாக்குட்டி
சுப்பாக்குட்டி மகன் சுண்டெலியாம்.


2) ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பல வாத்துகள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் குவாக் குவாக்
இங்கே பாத்தாலும் குவாக் குவாக்

ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பல பூனைகள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் மியாவ் மியாவ்
இங்கே பாத்தாலும் மியாவ் மியாவ்

ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப்பக்கத்திலே
அங்கே பல நாய்கள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் லொள் லொள்
இங்கே பாத்தாலும் லொள் லொள்

ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பல மாடுகள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் ம்மா ம்மா
இங்கே பாத்தாலும் ம்மா ம்மா

சின்னச்சின்ன அபிநயனங்களோடு பாடினால் நல்லாயிருக்கும்.


ஆறு மாதக் குழந்தைக்கு கைதட்ட சொல்லிக்கொடுக்கும் பாட்டு

3) சப்பாணி கொட்டுவானாம்
தயிருஞ்சோறும் திம்பானாம்
அப்பஞ்சுட்டா திம்பானாம்
அவலிடிச்சா மொக்குவானாம்
மொக்குவானாம் மொக்குவானாம்

Labels:


Tuesday, March 11, 2008

 

ஓவியரின் அன்பளிப்பு


இவரது ஓவியங்களைப் பார்த்து "ஒண்ணுமே புரியலே.." என்பார்கள்.
தலை எது வால் எது என்று குழம்பியவர்கள் பலர். யார் அவர்? நவீன ஓவியக்கலையின் பிதாமகர் அவர்.
அட! யார்ன்னுதான் சொல்லுங்களேன்? வேறு யார் அவர்தான் பிரபல ஓவியர் பிக்காசோ!

அவர் சிகாகோ டவுண்ட்டவுன் நகருக்கு அன்பளிப்பாக கொடுத்த சிற்பம்தான் மேலே உள்ள படத்திலிருப்பது. என்னான்னு புரிந்ததா? பிள்ளையார் என்று நினைத்துப்பார்த்தால் அவரே தெரிகிறார். பறவை என்று கற்பித்தால் அமெரிக்காவின் தேசீயப்பறவை போலும் இருக்கிறது.

ஏதோ ஒன்று பரிசாக கிடைத்ததை பிரிச்சு மேஞ்சு பாக்கக் கூடாது...அதாவது தானம் வந்த மாட்டை பல்லைப்............கூடாது. சேரியா?

Labels:


Monday, March 10, 2008

 

வெயிலோடு உறவாடி..வெயிலோடு விளையாடி..வெயிலோடு ஆட்டம் போடலாமா?


சுள்ளென்று சூரியன் தன் உக்கிரத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டான். தன் ஆயிரம் கரங்கள் நீட்டி அனலென்னும் சாட்டையை சுழற்றி விளாச ஆரம்பித்தும்விடுவான். என்ன செய்யப்போகிறோம்? இன்னும் மூன்று மாதங்களை எப்படி ஓட்டப்போகிறோம்? தென் மாவட்டங்களில் அடிக்கடி பவர்கட் வேறு.

மின்சார பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து மாற்று ஏற்பாடுகள் செய்யத்தெரியாது கையைப் பிசையும் அரசு. எல்லா மந்திரிகளும் 'லல்லு மாதிரி இருந்துவிட்டால் எவ்வளவு லல்லாயிருக்கும்!!'

சேரி...நடக்கமுடியாததைப் பற்றி பேசி என்ன பயன்?
நடக்கக் கூடியவற்றை பேசுவோமா?

கொழுத்தும் வெயிலிலும் நம்மை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி?

அதிகம் தண்ணீர்,மோர்,இளநீர் போன்றவற்றை அருந்துவதால் தாகமும் தீரும் குளிர்ச்சியும் கிடைக்கும்.

சேரி...பூவாவுக்கு என்ன செய்வது? வெயிற்கேற்ற உணவுண்டு.....உண்டால் குளிர்ச்சியடையும் வயிறுண்டு.

முன் பதிவில் சொன்னாற்போல் காலையில் நீராகாரம் அல்லது தண்ணிசாதம்..பழங்கறி..சின்ன வெங்காயம்...சுண்டக்கீரை. அற்புதமான இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம் இந்த தண்ணிசாதம்!!!!!!

ஒரு கையில் ரிமோட்டோடு டி.வி. பார்த்துக்கொண்டே தண்ணிசாதம், பழங்கறி, சின்னவெங்காயத்தோடு ஒரு பிடிபிடிக்கும் என் மகன். அவனுக்கு மிகவும் பிடித்தமானது.

அடுத்து, கேழ்வரகை நாம் மெஷினில் திரித்து வைத்துக்கொண்டு தேவையான அளவு தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் கூழாகக் காய்ச்சி வெந்ததும் ஆற வைத்து அதில்......

"உங்களுக்கு ரொம்பத்தான் கொழுப்பு" இருந்தால் வெண்ணெய் எடுத்த மோரில் உப்பிட்டு கரைத்து மேலும் தேவையானால் குடிக்கும் பதத்தில் நீர் விட்டு அருந்தினால் தொண்டையில் இறங்கும் போதே அதன் குளிர்ச்சியை உணரலாம்.

கொழுப்புப் பற்றி கவலையில்லையா?....அது தேவையா? அப்படியானால் நல்ல "கட்டித்தயிரை வெட்டியெடுத்து ஆடையோடு ராகியில் கலந்து" குடிக்கலாம். ஒரே மாதத்தில் ஒரு சுற்றோ ரெண்டு சுற்றோ பெருக்கலாம். இது எப்படியிருக்கு?

ராகிகூட கொத்தமல்லி அல்லது புதினா சடனி ஒன்றிரண்டு ஸ்பூன் கலந்து கரைத்து குடித்தால் சூ.................ப்பராயிருக்கும், ஒரு முறை உறவினர்களோடு கோவிலுக்குப் போன போது பாட்டிலில் ராகிகூழ், புதினாச் சட்னி கரைத்து கொண்டு போயிருந்தேன். போகும் வழியிலேயே அடிபிடியென்று காலியாயிற்று.

இனி, .....மேல் தட்டு மக்களுக்கு ரொம்பவும் அறிமுகமில்லாத...நாட்டின் முதுகெலும்பான கிராமத்து உணவு. "கம்பு சாதம்" கிராமீய மொழியில் சொல்வதானால்..கம்பஞ்சோறு!

இப்போது டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களில் சுத்தமாக பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அதைவாங்கி ஒரு கப் லேசாக கடாயில் வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டு
பாத்திரத்தில் அளவாக நீரூற்றி குக்கரில் வேக விடவும்.

காலையில் சாப்பிட வேண்டுமென்றால் முந்தினநாள் மாலையில் செய்து நன்றாக ஆற வைத்து இரவு மண்பானையில் நல்ல தண்ணீர் விட்டு அதில் வேக வைத்த கம்பு சாதத்தை பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி நீரில் மிதக்கவிடவும்.

மறுநாள் காலையில் அதில் இரண்டு உருண்டைகளை எடுத்து கட்டித்தயிர் விட்டு பிசைந்து வற்றல்குழம்பு, பழங்கறி, சுண்டக்கீரை, சின்ன வெங்காயம், காய்கறிஊறுகாய் இதில் ஏதாவது ஒன்றோடு சேர்த்து சாப்பிட்டால்....ஆஹா!!தண்ணீர் தொட்டிக்குள் உட்கார்ந்தாற்போலிருக்கும்!!

ரங்கமணி சைட்டில் வெயிலில் நிற்க வேண்டிய வேலையிருந்தால் கம்பு சாதம்தான் சாப்பிட்டுவிட்டுப் போவார். குளிர்ச்சிக்கு குளிர்ச்சி,பசியும் தாங்கும்.

வயலில் வேலை செய்வோர் நல்ல கட்டுடம்போடு இருப்பதற்கும் புல்லுக்கட்டு விறகு கட்டு சுமந்து செல்லும் பெண்கள் இடுப்பை வெடுக் வெடுக் ஒடித்துக்கொண்டு ஓடுவதற்கும் தேவையான பலத்தை கொடுப்பது கம்புசாதம்தான் என்று நினைக்கிறேன்.

அடுத்து வெயிலோடு உருண்டோடி வரும்....மாம்பழமாம் மாம்பழமாம் மல்கோவா மாம்பழம்,
ராஜபாளையம் சப்பட்டை, பங்னப்பள்ளி மாம்பழம்!!!!அடடா...! அதை அப்படியேவும் சாப்பிடலாம் துண்டு போட்டும் விழுங்கலாம்.

சம்மர் வந்தால் எங்க வீட்டில் சாதம் வைப்பதைத் தவிர வேறு சமையலே கிடையாது. சாப்பாடு ஏற்காது என்பது ஒருபுறம். மாம்பழம் இருக்கையில் வேறேதும் வேண்டோம் என்பது மறுபுறம்.
மதிய உணவு... கெட்டித்தயிர் விட்டுப்பிசைந்த தயிர்சாதம்...மாம்பழத்துண்டுகள்!!!!!

தயிர்சாதமும் மாம்பழமும் சூப்பர் காம்பினேஷன். இரண்டும் அதுபாட்டுக்கு உள்ளே போய்க்கொண்டேயிருக்கும். 'மாம்பழம் வேண்டாங்குற குரங்கு உண்டா' என்பார்கள்.
அப்படிப் பார்த்தால் நானும் குரங்குதான்!!


இலையில் மற்ற பதார்த்தங்கள் பரிமாறினால் வேண்டாமென்றால் கைகொண்டு தடுப்போம். ஆனால் மாம்பழத்துக்கு கை குறுக்கே வரவே வராதே!

மேற்சொன்ன மாம்பழ வகைகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அபார ருசி கொண்டது
சின்னண்ணன் வீட்டு மரத்தில் காய்க்கும் பேர் தெரியாவகை மாம்பழம்!
போன வருடம்தான் அதன் ருசி கண்டேன். ருசிகண்ட பூனையானேன். இந்த வருடம் அந்த மரத்தை யாம் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். அஹ்ஹஹ்ஹா!!!ஹிஹ்ஹிஹ்ஹீ....!!!

மக்கள்ஸ்!! எல்லோரும் குளிர குளிர சாப்பிட்டு வெயிலை விரட்டு விரட்டு என்று விரட்டுவீகளாக!!!சேரியா? வர்ட்டா?

Labels:


Sunday, March 9, 2008

 

கண்ணுக்குத் தெரியாத மின்வேலி

வருடா வருடம் தீபாவளி, கிறிஸ்மஸ், ரம்ஜான், புதுவருடம் வருவது போல்.....கழுதை...மகளிர்தினமும் கடனே என்று வந்து போய்க் கொண்டிருக்கிறது.

என்ன பிரயோஜனம்? இன்னும் பெண் விடுதலை,உரிமை, அங்கீகாரம், இடஒதுக்கீடு...இத்யாதி இத்யாதி என்று பேசிக்கொண்டும் கொடி பிடித்துக்கொண்டும் ஊர்வலம் போய்க்கொண்டும் இருக்கிறது நாடு..ஏன் உலகம் கூட.

காரட்டைக் காட்டி குதிரையை ஓட்டிச்செல்வது போல் மேலே சொன்ன கோஷங்களை கூவிக் கொண்டே கூட்டிக்கொண்டு போகிறது உலகம்.

சிகாகோவில் தங்கியிருந்தபோது பக்கத்துவீட்டுப் பின்புறத்தில் ஒரு நாய்குட்டி புல்தரையில் தாவித்தாவி விளையாடிக்கொண்டிருந்தது. குறிப்பிட்ட இடங்கள் வந்ததும் பதறி துள்ளி பின்னடைந்து ஓடியது. இதுபோல் புல்தரையின் பல பக்கங்களிலும் துள்ளித் தாவி பின்னோக்கியோடியது. அவ்விடங்களைத்தாண்டி அது போகவேயில்லை. கொஞ்சநேரம் இதையே வேடிக்கை பார்த்துவிட்டு, அதன் காரணம் கேட்டபோது லானின் எல்லையோரத்தில் எல்லாம் நாயை வளர்ப்பவர்கள் குறைந்த வாட்ஸ் அளவில் கண்ணுக்குத்தெரியாத மின்வேலி(invisible fencing) அமைத்திருக்கிறார்கள். அதனால்தான் அதைத் தாண்டிப் போக முடியவில்லை.

இப்போது பெண்களின் நிலையும் இதுதானோ? உரிமைகள் கொடுப்பதுபோல் கொடுத்து கண்ணுக்குத்தெரியாத மின்வேலியையும் அமைத்து விட்டார்களோ? தாண்டி வரத்தெரியாமலும் முடியாமலும் தவித்துக்கொண்டிருக்கிறார்களோ?

இதையெல்லாம் பூசி மெழுக 'உலக மகளிர் தினம்' கொண்டாடுகிறார்களோ?

உலகம் எப்போது 'உலக ஆண்கள் தினம்' கொண்டாடுவது? ஹூம்?

Labels:


Saturday, March 8, 2008

 

இது கொஞ்சம்...ரொம்ப டூ மச்சா இல்ல?

விளையாட்டுகள் பல விதம். இது டூமச் ரகம். இண்டோர் கேம்ஸ் எப்படியல்லாமோ விளையாடியிருப்போம். இப்படி விளையாடியிருக்கிறீர்களா?

விளையாட்டுப் பிள்ளைகளான நாங்கள்....முந்தின பதிவுகளிலேயே தெரிந்திருக்கும், பலவகை இண்டோர் கேம்ஸ்களை ஆர்வத்தோடு ஆடுவோம்.

அதில் ஒன்று....'க்ரூயிஸர்' இப்போது அதன் பெயர் 'பாட்டில்ஃபீல்ட்'. அப்போதெல்லாம் இதற்கென்று எந்த ஒரு சாதனமும் கிடையாது. பேப்பரில் சதுரங்கக் கட்டங்கள் மாதிரி 9க்கு9-என்று வரைந்துகொண்டு இடமிருந்து வலமாக, R S T U V W X Y Z என்றும் மேலிருந்து கீழாக, 1 2 3 4 5 6 7 8 9 என்றும் ஆளுக்கொன்றாக குறித்துக வத்துக்கொண்டு கொண்டு ஆடவாரம்பிப்போம்.

கடல் போர் தான் இந்த ஆட்டத்தின் கரு. இருவரும் ஒருவர்க்கு ஒருவர் தெரியாமல் தத்தமது கடற்படையை கட்டங்களுக்குள் அமைத்துக்கொள்ளவேண்டும்.

ஷிப்-----4 கட்டங்கள்
க்ரூயிஸர்-3 கட்டங்கள்
டெஸ்ட்ராயர்--2 கட்டங்கள்
சப்மெரின்-----1 கட்டம்

இவற்றை நம் விருப்பம் போல் படுக்கை வசமாகவோ அல்லது நிற்கும்வசமாகவோ அமைத்துக்கொள்ளலாம். இப்போது ஆட ரெடி.

ஒருவர் பேப்பரை ஒருவர் பார்க்காமல் அமர்ந்து கொண்டு குண்டு வீச ஆரம்பிக்க வேண்டும்.
அதாவது ஷாட்ஸ்!! ஒரு நேரம் 3 ஷாட்ஸ்தான் அனுமதி.

முதலில் ஆடுபவர், S6, S7, S8 என்று கொடுத்தால்...எதிராளி அதை தன் பேப்பரில் அந்தந்த கட்டங்களில் குறித்துக் கொள்ள வேண்டும். உடனே அதன் முடிவுகளைச் சொல்ல வேண்டும்.

அது கப்பல் அடி, கப்பல் அடி, கப்பல் அடியாகவும் இருக்கலாம். அல்லது க்ரூயிஸர் முங்கிடுச்சு-ஆகவும் இருக்கலாம் அல்லது டெஸ்ட்ராயர் அடி,அடியாகவும் இருக்கலாம் அல்லது சப்மெரின் முழ்கிடுச்சு என்றும் இருக்கலாம் அல்லது மூன்று ஷாட்ஸும் வாஷவுட்-ஆகவும் ஆகலாம்.

இது மாதிரியான முடிவுகளை சொல்ல ஷாட் வாங்கியவர் அதைத்தன் பேப்பரிலும் குறித்துக் கொண்டு, தன்னோட ஷாட்ஸ்களை மற்றவர்க்கு கொடுக்கவேண்டும். அவரும் அதை வாங்கிக்கொண்டு முடிவுகளைச் சொல்லவேண்டும்.

இப்படியாகத்தானே மாறிமாறி ஷாட்ஸ்கள் கொடுத்து வாங்கி யார் மற்றவர் கடற்படையை முற்றிலும் அழிக்கிறார்களோ அவர்தான் வின்னர்.

இதிலென்ன டூமச்? இருக்கிறது. என் திருமணத்துக்கு முன் நானும் என் தங்கையும் ஆர்வத்தோடு விளையாடும் ஆட்டம் இது.

திருமணத்துக்குப் பிறகு ஒரு முறை ஊருக்குப் போயிருந்தபோது நானும் அவளும் க்ரூயிஸர் ஆட ஆரம்பித்தோம். பாதி ஆட்டத்தில் நான் தூத்துக்குடி திரும்ப வேண்டியதாயிற்று. அப்போது அங்கு தானிருந்தேன். என்ன செய்வது? நாம் தொடருவோம் என்றபடி ஊர் வந்துசேர்ந்தேன்.

தந்தையார் டிரான்ஸ்போர்ட் பிசினஸிலிருந்தது எங்களுக்கு வசதியாய் போயிற்று. திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் ஒரு நாளைக்கு 2-3 பஸ்கள் ஷண்டிங் அடித்துக்கொண்டிருக்கும்.

காலை முதல் பஸ்ஸில் என்னோட ஷாட்ஸ்களை ஆபீஸ் பையன் கண்டக்டரிடம் சேர்ப்பித்துவிடுவான். அதே பஸ் திரும்பும்போது தங்கையிடமிருந்து இதே போல் அங்குள்ள ஆபீஸ் பாய் கண்டக்டரிடம் சேர்ப்பித்துவிடுவான். இப்படியே ஒருவரிடமிருந்து ஷாட்ஸுக்கான ரிசல்ட்டும் பதில் ஷாட்ஸும் ஷண்டிங் அடித்து ஆட்டம் முடிய 10 நாட்களாவது ஆகும்.

தொடங்கி பாதியில் ஊர்திரும்பிய ஆட்டம் ஒரு வாரத்தில் முடிந்தது. "ஹை! இது நல்லாருக்கே!"
என்று அடுத்த ஆட்டமும் ஆடுவோம். அப்பாவுக்கோ அண்ணன்மார்களுக்கோ இது தெரியாது.
ஏதோ அக்கா தங்கை பாச மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொள்வார்கள். அந்த மழையும் உண்டு.

அப்போதுள்ள மனநிலையில் அது டூமச்சாக தெரியவில்லை. வாழ்கை சுகமானது என்று எண்ணியிருந்த காலம்.

இபோது நினைத்துப் பார்த்தால் டூமச் இல்லை த்ரிமச்...ஃபோர்மச்............டென்மச்சாகத்தெரிகிறது.

Labels:


Friday, March 7, 2008

 

மார்ச் மாத-PiTக்கு இரண்டாவது பதிவு

என் இரண்டாவது பதிவு உங்கள் பார்வைக்கு.


Labels:


 

தொடர்விளையாட்டோ..பங்களிப்போ...நானும் வாரேன்!!

கண்மணியின் அழைப்பு...தொடர்விளையாட்டு...என்ன விளையாட்டு.
சின்னதில் பாடிய அர்த்தமுள்ள(!)பாடல்கள்.

எனக்கு ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே!!

குத்தடி குத்தடி சைலக்கா
குனிந்து குத்தடி சைலக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கு
பைய வேணா பாத்துக்கோ
பணத்த வாங்கிப் போட்டுக்கோ
சில்லறயை மாத்திக்கோ
சிலுக்கு சட்டை போட்டுக்கோ
ஜில்ஜில் ஆடிக்கோதோசையம்மா தோசை
அரிசிமாவும் உளுந்தமாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு ஒன்னு
அண்ணனுக்கு ரெண்டு
எனக்கு மட்டும் நாலு


காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு முட்டாயி
குண்டாங்குண்டாங் தலகாணி
குதிரை மேலே சவ்வாரி
ஏண்டியக்கா அழுகிறாய்
காஞ்சிபுரம் போகலாம்
ல்ட்டு மிட்டாய் வாங்கலாம்
பிட்டுபிட்டு தின்னலாம்
எங்க வீட்டு மாடியிலே
தாம்தூம் குதிக்கலாம்

டக்குடக்கு கடிகாரம்
தட்டு நிறைய பணியாரம்
குட்டிகுட்டி சுண்டெலிகள்
எட்டிஎட்டிப் பார்த்தனவே
டண்டண் என்றது கடிகாரம்
தாவி வந்தது கரும்பூனை
கண்டு மிரண்ட சுண்டெலிகள்
காற்றாய் பறந்து மறைந்தனவே
(hickary dickary dog..ன் மொழிபெயர்ப்பு மாதிரியில்ல?)

Labels:


 

பண்டாண்டா....எவண்டா அது?

மழலை மொழி படிக்கலாமா? அட்மிஷன் இலவசம்!!

ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தாள் அண்ணன் மகளும் அவளின் இரு சுட்டிப்பசங்களும்.
மதியம் உணவு முடித்து நாங்கள் பெட்ரூமில் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

திடீரென்று ஆரம்பித்தான் சின்னவன் ஷன்னு. "பண்டாண்டா...பண்டாண்டா..!"
'என்னதுடா பண்டாண்டா' என்று அவன் அம்மாவும் என் மகளும் கேட்டனர்.

இருவரும் மாறிமாறி கேட்க கேட்க அவனும் 'ஆத்தா வையும் காசு கொடு..ஆத்தா வையும் காசு கொடு..' என்பது போல் 'பண்டாண்டா..பண்டாண்டா..' என்றே சொல்லிக்கொண்டிருந்தான்.

நான் இருவரையும் கம்முன்னு இருக்கச் சொல்லிவிட்டு, அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, 'கண்ணா! பண்டாண்டா எங்கேயிருக்கு? காட்டு பார்க்கலாம்?' என்றேன்.

அவன் கையாலேயே வழிகாட்டி என்னை இட்டுச் சென்ற இடம்...சமையலறை. அவன் காட்டிய பண்டாண்டா....அங்கு பழக் கூடையில் நமட்டு சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்த.....
ஒரு சீப்பு...'வாழைப்பழம்!!' பனானாவாம்!!!!

'பிள்ளைகளா!! இங்கு வந்து பண்டாண்டா பாருங்கோ...' என்று கூவினேன். இருவரும் வந்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். மறக்க முடியாத...'பண்டாண்டா!'


இதே போல் எங்க வீட்டு குழந்தைகளின் மறக்க முடியாத மழலைச் சொற்கள் சில:

fee துட்டு தா-----கண்டக்டர், விசில் அடித்து டிக்கெட்டுக்கு காசு கேட்பவர்.
ஏவோட சாஞ்சக்கா----என்னோட சாய்வு நாற்காலி
பீ இந்தோ-----எவ்வளவு அழுக்கானாலும் கையில் இடுக்கிக்கொள்ளும் தலையணை.
பூ நந்னை-----சாஃட்டான தலையணை.
பண்டாண்டா----வாழைப்பழம்
ஆஞ்சுப்பி-----விரல் சூப்பும் போது கையில் இடுக்கிக்கொள்ளும் துணி.
சாக்கா------சாக்லேட்

இன்னும் நிறைய இருக்கு. ஆனால் மறந்துடுத்து.

இந்த 'ஆஞ்சுப்பி'க்குப் பின் ஒரு சுவாரஸ்யமான கதையே இருக்கு!
பண்டாண்டா ஷன்னுதான் ஆஞ்சுப்பிப் பையன்.


இதுதான் 'ஆஞ்சுப்பி!'

எப்போதும் ஆஞ்சூப்பியும் கையுமாக அலையும் மூன்றரை வயது குழந்தை. என் பேரன் பிறந்த
பதினைந்து நாளில் st.louis-லிருந்து SFO-க்கு தன் பெற்றோர் மற்றும் அண்ணன் சகிதம் பார்க்க வந்திருந்தான். குட்டிப்பாப்பாவைப் பார்த்ததும் என்ன நினைத்தானோ தன் அம்மாவைப் பார்த்து ,"amma! i want to gift somthing to the baby." என்றான். "good what are you going to gift?"

"MY AANCHUPPI! I DO'NT WANT ANYMORE!" என்றானே பார்க்கலாம். அது இல்லாமல் அவனை சமாளிக்கப்பட்ட பாடு அவளுக்குத்தானே தெரியும். எப்ப எங்கே கேட்டாலும் கொடுக்கத்தோதாக கைப்பையில் ஒரு பிட், பாண்ட் பாக்கெட்டில் ஒன்று, அப்பாவின் பாக்கெட்டிலும் ஒன்று, கார் டஷ்போர்டில் ஒன்று என்று ஸ்டோர் செய்திருந்தாள். ஆச்சரியத்துடன் கேட்டாள், 'really? are you sure?' 'yea! i mean it!' என்றான் தோரணையாக.

அவனுடைய விலை மதிப்பில்லாத ஆஞ்சூப்பியை குட்டிப்பாப்பாவின் கையில் திணித்து அதை உபயோகிக்கும் விதத்தையும் பாப்பாவுக்கு அவன் டெமோ செய்து காட்டியது கண்கொள்ளாக் காட்சி!!!!!

அந்த ஆஞ்சூப்பியை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

Labels:


Thursday, March 6, 2008

 

மார்ச் மாத PIT- போட்டிக்கான...என்னோட பிரமிப்பு...அல்ல..அல்ல..'பிரதிபலிப்பு' ப்படங்கள்.இவையிரண்டும் சிகாகோ டவுண்ட்டவுனிலுள்ள ' மில்லீனியம் பார்ர்கில்' கண்ணைக்கவரும் ஜெல்லிமீன் வடிவில் உள்ள ஒரு டூம்!! இதன் நட்டநடுவில் போய் அண்ணாந்து பார்த்தால் தெரியும் பிரதிபிம்பங்கள் அற்புதம்!!

வீட்டிலுள்ள வண்ணவண்ண மேஜைவிளக்கு.

இதுவும் சிகாகோவில் காண்டினி பார்க்கில் உள்ள 'ராபர்ட் ஆர். மெக்கார்மிக் மியூசியத்தில்' எடுத்தது.

கீழ் வரும் இரண்டும் சிகாகோ டவுண்ட்டவுனிலுள்ள 'மேரி பியர்' என்னுமிடத்தில், நம்மைக் கோமாளி போல் காட்டும் கண்ணாடிமுன் எடுத்தது.


முதல் மூன்று படங்களும் போட்டிக்கு...மற்றவை பார்வைக்கு.
இதில் படங்களிலுள்ள தேதி நேரம் இவற்றை மாற்றத் தேவையான மென்பொருள் இல்லாததால்(எனக்கும் தெரியாததால்)
அப்படியே தந்திருக்கிறேன். நடுவர்கள் விதிவிலக்கு தருவார்கள் என்று நம்புகிறேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பங்கெடுத்ததே திருப்தி!!!!!!!!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]