Monday, February 18, 2008

 

போர் அடிக்காத போர்டுகேம் - SCRABBLE !!


எங்கள் வீட்டில் அம்மா முதல் அண்ணன்கள், அக்காக்கள், தங்கச்சி, மதனிகள் எல்லோருக்கும் இண்டோர் கேம்ஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். தாயக்கட்டம், கேரம், சைனீஸ்செக்கர்ஸ் என்று உற்சாகமாக பொழுது போக்குவோம்.

கேரம் போர்டில் நடுவிரலை மட்டும் அழுத்தி அம்மா காய்களை பாக்கெட் செய்வது ஓர் அழகு!
தாயக்கட்டம் விளையாடும்போது ஒரே கூச்சலும் சிரிப்பும் அமர்க்களப்படும். அதன் பாஷையே தனி.தாயம் போடுவதில் ஆரம்பித்து வரிசையாக ஐந்து, ஆறு, சோணா, பன்னிரண்டு...இந்த பன்னிரண்டு போட்டால் உடனே மூன்று விழவேண்டும். இல்லாவிட்டால் போட்ட எல்லாமே கான்சல் ஆகிவிடும். இப்படி வரிசையாக போடுவதற்கு 'விருத்தம்' என்று பேர். யாருக்காவது இப்படி விருத்தம் விழவாரம்பித்துவிட்டால்....சினிமாவில் மயிர்கூச்செரியும் காட்சி வந்தால் எப்படி இருக்கையின் நுனிக்கு வந்துவிடுவார்களோ?...அது போல் மற்றவர்க்கெல்லாம் பரபர என்றிருக்கும். வாய்ப்பாடு சொல்வதுபோல்...தாயம், ஐந்து, ஈரரைந்து, மூவைந்து, ஆறு, மூவாறு, சோணா, இருச்சோணா, முச்சோணா, இருத்தாயம்....என்று எல்லோரும் சொல்லிக்கொண்டேயிருப்போம். இவ்வளவும் விழுந்து ஒரு இரண்டோ, நான்கோ அல்லது மூன்றோ விழுந்தால் பிழைத்தார். அல்லெங்கில் ஒரு பன்னிரெண்டு விழுந்து வைத்தால்....அடுத்தது மூன்று விழவேண்டும். விழுந்தால் அது 'ஜாக்பாட்' மாதிரி. அத்தனை எண்ணிக்கைக்கும் சப்ஜாடாக காய்களை நகர்த்திக்கொண்டே போகலாம். வழியில் அடுத்தவர் காய்கள் எத்தனை அடிபடுமோ...வெட்டுப்படுமோ? படு பரபரவென்றிருக்கும். அந்த மூன்று விழும்வரை எத்தனை பிரார்த்தனைகள்...வேண்டுதல்கள்!!!

மூன்று விழுந்தாலும் விழாவிட்டாலும் யாராவது ஒரு தரப்புக்கு கொண்டாட்டம்தான். அந்நேரம் எழும் சிரிப்பலைகள்!!வீடே அதிருமில்ல! அதிலும் சின்னண்ணன் சிரிப்பு இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.


பொதுவாக இந்த விளையாட்டு நாலுபேர் விளையாடக்கூடியது. ஆனால் நாங்கள் ஐந்துபேர் சேர்ந்தால் 'PENTAGON' போல் வரைந்து கொண்டும்...ஆறு பேர் சேர்ந்தால் 'HEXAGON' போலும்..எட்டு பேர் சேர்ந்தால் 'OCTAGAON' போலும் வரைந்துகொண்டு எங்கள் வீட்டு முற்றத்தில் பெர்மனெண்டாக கட்டியிருந்த 'மணவடை' இட்லிவடையெல்லாம் இல்லை..சரியாகச் சொல்வதானால் 'மணமேடை'யில் நடுவில் வரைந்து கொண்டு சுற்றிலும் அமர்ந்த்து கொண்டு விளையாடும் போது நாங்கள் போடும் கூச்சலில் அக்கம்பக்கமெல்லாம் எட்டிஎட்டிப் பார்ப்பார்கள்.

இது தவிர லெக்சிகன் என்றொரு சீட்டு விளையாட்டு. அதையும் விரும்பி விளையாடுவோம்.
சாதரண சீட்டு எண்களை 1,2,3 என்று சேர்ப்பது போல் அதில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளை சேர்க்கவேண்டும்.

இப்படி அப்போது வழக்கிலிருந்த விளையாட்டுகளை விளையாடி பொழுதுகளை சுவையாக கடத்திக் கொண்டிருந்த வேளையில்....1970-ல் ரங்கமணியின் தம்பி அமெரிக்காவிலிருந்து வரும் போது வழக்கம்போல் எல்லோருக்கும் பரிசுகள் வாங்கிவந்திருந்தார். அதில் அவர் அண்ணன் மகனுக்கு, பள்ளிமாணவன் அவனுக்கு கொடுத்தது......


SCRABBLE!!! அப்போது அது இந்தியாவில் அறிமுகமாயிருக்கவிலை. அது என்னவென்று கூட பார்க்காமல் அவன் தனது ஷெல்பில் வைத்துவிட்டான்.
நான் அதை வாங்கிப் பார்த்து...ஆஹா!!!என்ன அற்புதமான விளையாட்டு!!மனசு துள்ளிக்குதித்தது. இருந்தாலும் அடுத்தவர்க்கு கொடுத்த பரிசு என்று திருப்பிக்கொடுத்துவிட்டேன்.

பொதுவாக புகுந்தவீட்டில் யாருக்கும் இப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஆர்வமில்லை. என் நாத்தனார், கொழுந்தன் முதலியோரை அது என்னவென்று பார்த்து விளையாடலாமா? என்று கேட்டேன். ஹூஹும் மசியவில்லை. சரி என்று விட்டுவிட்டேன்.

என் மனசுக்குள்தான் ஒரு நண்டு எதெற்கெடுத்தாலும் ப்ராண்டுமே!!ப்ராண்டிக்கொண்டேயிருந்தது.

ஒரு பத்து நாள் நான் என் பிறந்தவீட்டுக்கு கிளம்பினேன். நண்டு 'கேள்..கேள்..'என்றது.
'நான் இதை கொண்டு போய்விட்டு கொண்டு வரலாமா?' என்று கேட்டேன். 'தாராளமா!' என்று பதில் வந்தது.

எப்போதுமில்லாத உற்சாகத்தோடு பிறந்தவீடு வந்து சேர்ந்தேன். வந்து போர்டைப் பிரித்ததுதான் தாமதம்!!!எல்லோரும் வந்து மொய்த்துக்கொண்டார்கள். அவ்வளவுதான்! முதல் நாள் பிரித்த போர்டு பத்து நாட்களும் மூடவேயில்லை. நாலு பேர்தான் விளையாடமுடியும் என்பதால் செட்செட்டாக சேர்ந்து கொள்வோம்.

யாராவது ஒருவர் எழுந்துவிட்டால் அடுத்தவர் அந்த 'ஆட்டையை' தொடர்வார். இப்படியாகத்தானே ஆட்டை 'நான் - ஸ்டாப்பாக' ஓடிக்கொண்டேயிருக்கும். double , tripple letter மற்றும் double word , tripple word என்று வைக்கும் போது உற்சாகமாயிருக்கும். அதிலும் 7-letter word வைக்கும் போது பாயிண்ட்கள் அள்ளிக்கொண்டு போகும். குறிப்பாக முதலில் ஆரம்பிப்பவர் 7-letter word வைத்துவிட்டு துள்ளிக் குதிப்பார். மற்றவர் முகங்களெல்லாம் எள்ளும்கொள்ளும் வெடிக்கும், காதிலிருந்து புகை கிளம்பும். ஆனாலும் சந்தோஷமாக இருக்கும்.

எங்கள் வீட்டிலிருந்து கிளம்ப ஸ்க்ராபில் போர்டுக்கு மனமேயில்லை. ரொம்ப நாள் என்னிடமே இருந்தது...அனுமதியோடுதான். பின்னர் 2-3 வருடங்கள் கழித்து இந்தியன் சந்தைக்குள்ளும் scrabble நுழைந்தது. கையோடு எங்கள் எல்லோர் இல்லங்களுக்குள்ளும் நுழைந்தது. ஆக யார் வீட்டுக்குப் போனாலும் உடனே ஸ்க்ராபில் போர்டு விரிந்துவிடும். பின்னர் ஆட்டம்தான் பாட்டம்தான் கொண்டாட்டம்தான். பின்னர் உரிய மரியாதையோடும் நன்றியோடும் உரியவரிடம் சேர்ப்பித்துவிட்டேன். என்னயிருந்தாலும் அந்த மரத்தாலான காய்களின் வழவழப்பு நமது பிளாஸ்டிக் காய்களிடம் இல்லை.

எங்கள் எல்லோரையும் சில வருடங்களேயானாலும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது 'SCRABBLE'.

Labels:


Comments:
நல்ல ஒரு விளையாட்டு..எப்போது சலிக்காது..நேரம் போவது தெரியாமல் விளையாடலாம்..
 
நானானி'
லெக்ஸிகனும் ஸ்க்ராபிளும் என்க்கும் ரொம்பப் பிடிக்கும்.
4த் ஃபார்ம் ரிசல்ட் ஸ்கூலில் பார்த்துவிட்டு வருகிறேன். என் அண்ணனும் அண்ணியும் லெக்ஸிகன் ஆடிக்கொண்டிருந்தார்கள். அண்ணி ஒரு 4 எழுத்து வார்த்தை வைத்து விட்டு 6 சீட்டு வைத்திருந்தார்கள். உங்களுக்கு முடிந்துவிட்டதே என்றேன். ஒரு
6 எழுத்து வார்த்தை சொன்னேன். அவர்களுக்கு ஆச்சரியம். இப்போதுதான் ஸ்கூல் போர்டில் பார்த்துவிட்டு வருகிறேன் என்றேன். என்ன வார்த்தை தெரியுமா?
DETAIN(ED)
ஸ்க்ராபிளில் என் அண்ணன் மகள்தான் சாம்பியன். அவளைவிட அதிகப் பாயிண்ட் எடுக்க இன்று வரை என்னால் முடிய வில்லை.
சகாதேவன்
 
இப்போ boggle அப்படின்னு ஒரு விளையாட்டு வந்திருக்குப் பாருங்க.
 
உண்மைதான்! பாசமலர்! எங்கள் 'பாசக்கார..குடும்பத்தை' ஒன்றாக இணைத்ததில் ஸ்க்ராபிளுக்கும் பெரு பங்குண்டு.
+//888888888888888***********************************************-----------------++++++++++++++++++3 ஒன்றுமில்லை!இதை அடிக்கும்போது அருகில் வந்த என் ஒரு வயதுப் பேரனின் விரல்விளையாடல்
 
அந்த 6-எழுத்து வார்த்தை உங்களுக்கானதா? சகா?
 
கட்டாயம் பார்க்கிறேன்! கொத்ஸ்!
ஆனால் விளையாடத்தான் பழைய செட்டப் இல்லை. sequence என்ற விளையாட்டும் நன்றாக இருக்கும்.
board-cum-cards சேர்ந்தது
 
எனக்கும் ஸ்கிராபிள் ரொம்பப் பிடிக்கும். லெக்ஸிகான் - மறந்தேபோச்சு!! அப்ப பிடிச்ச விளையாட்டா இருந்தது, இப்ப உங்க பதிவைப் படிச்சுதான் அது திடீர்னு நினைவு வந்தது!
 
ஆமாம்! சேதுக்கரசி!
ஒரே ஆர்வம் உள்ளவர்களோடு சேர்ந்து விளையாடுவதும் ஓர் உற்சாகம்தான். ஒருவேளை அதுவே அக்கால 'மனதை உற்சாகமாக வைத்திருப்பதற்கான' சாதனமோ?
இப்போது என்னோட ஒரே மெண்ட்டல் ரிலாக்சேஷன்...கணினியில் freecell விளையாடுவதுதான்!!
 
மீன் குஞ்சுக்கு அதற்குள் நீந்தக் கற்றுத் தருகிறீர்களா?ஒரு வயதுப் பேரன் சொல்ல வந்த விஷயத்தைப் புரிந்து கொண்டேன் ."இந்த 88888888ம் வருடத்தில் எல்லோரும் ஒற்றுமையாக ******** இதுபோல் வரிசையாக நின்று ------வாழ்க்கைஸாலையோ++++++++ரயில்வே டிராக்கோ சென்றால் சந்தோஷம் மகிழ்ச்சி ஆனந்தம் தான் என்கிறார் குட்டி பிளாகர்.wanRi thalaivaa.
 
இன்று இது போல் விளையாட்டுகளும் விளையாட நேரமும் ஆர்வமும் இல்லாமல் எல்லோருமே கணினித் தீவில் freeசெல்லில் அடைபட்டுக்கிடப்பதை என்னவென்று சொல்ல
 
கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் [60 65 ஆண்டில் ஒன்றாகப் படித்த] பள்ளித் தோழிகள் ஒன்றாக சேரும் நேரமெல்லாம் விளையாடும் விளையாட்டுகளில் BOGGLE ம் ஒன்று .அருமையான விளையாட்டு...கூட்டமாய் விளையாடினால் குதூகலத்துக்குக்குக் கேட்கவா வேண்டும்
 
சிறுமி குமரி பருவத்தில் கவலையே தெரியாமல் விளையாடுவோம் .இன்று கவலை தெரியாமல் இருக்க விளையாடுகிறோம் விளையாட்டு மாறவில்லை விளையாடுபவர்கள் மனோபாவம்தான் மாறியிருக்கிறது.மூளைக்கும் உடலுக்கும் வலு சேர்க்கும் விளையாட்டும்,சீண்டாமல் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் மனிதனின் ஆரோக்கியத்துக்கு நல்ல மருந்து என்றால் யார் கேட்கிறார்கள்
 
SCRABBLE - அருமையானது ஒரு போர்டு கேம். எனக்கும் மிகவும் பிடித்தமானது ஒரு விளையாட்டு. அந்த விளையாட்டில் ஆர்வமுள்ள இன்னொருவர் கிடைத்துவிட்டால் சற்றும் அலுக்காத ஒரு விளையாட்டு. Yahooவில் ஆன்லைனில் Scrabble விளையாடலாம் என்று யாரோ சொன்னார்கள். ஆனால் முயற்சித்து பார்த்ததில்லை. மூளைக்கு வேலை கொடுப்பதில் சதுரங்கத்திற்கு சற்றும் சளைக்காத் ஒரு விளையாட்டு இது. பழசை எல்லாம் நியாபகப் படுத்திவிட்டுட்டீங்க. இப்போ கூட ஆடறதுக்குத் தான் ஆளு யாருமில்லை :(
 
5-Pentagon
6 Hexagon
7 Heptagon
8 Octagon
10 Decagon
12 Dodecagon
என்று குவிந்து இருந்து விட்டு முதுமையில் 3-triangle என்று குடும்பம் குவிந்து விடுகிறது.freecellதான் எனக்கு பிடிச்ச ஆட்டம் [வெற்றியும் எனக்கே தோல்வியும் எனக்கே ] என்று ஆட்டம் மின்னெலி துணையோடு போகிறது என்ன கொடுமைடா சாமி.
 
nanani in the same year 1970 i got introduced to that game SCRABBLE through my paternal aunt and uncle and till date no one has bet me in my family in that game.....i started playing it from my age of 14 and even today i am playing it with the computer
 
கோமா!
அந்தக்காலத்தில் எங்க அண்ணாச்சி ஹிந்திப்படம் பார்க்க அழைத்துப்போவார்கள். போகும்போது சொல்வார்கள்...'ஹூம்! படம் பார்த்துவிட்டு வரும் போது அவரவர்க்கு புரிந்தமாதிரி படத்தின் கதையை சொல்லவேண்டும்.' என்பார்கள். பேரன் அனுப்பிய தகவலை உங்களுக்கு புரிந்த மாதிரி சொல்லிவிட்டீர்கள்!! மற்ற பதிவர்களுக்கு எப்படியெப்படி புரிகிறது என்று பார்ப்போம். பின்னோட்டத்தில் ஒரு பதிவே வந்துவிட்டது.
 
செல்லில் எப்படி ப்ரீயாக இருக்கமுடியும் கோமா! நாலு சுவத்துக்குள்ளா? ஹி..ஹி..
 
/மனோபாவம்தான் மாறியிருக்கிறது/
சரியாகச்சொன்னீர்கள்! கோமா!
 
//இப்போது ஆடுவதற்கு யாருமில்லை//
அதே நிலைதான் எனக்கும் கைப்புள்ள!
ஆனால் ஆடுவதற்கு ஆர்வம் உள்ளவர் யாரும் அருகிலில்லை.
 
ட்ரையாங்கிலா? சமயத்தில் இருகோடுகள்தான் மிஞ்சும் கோமா!
 
lucky! you are so lucky.
 
இன்னொரு பிடிச்ச கேம் நேத்து ஞாபகம் வந்தது... என் அபிமான எழுத்தாளர், மர்ம நாவல்களின் ராணி அகதா கிறிஸ்டி பத்தி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நேத்து மூணாவது முறையா பார்த்துட்டிருந்தபோது அதில் Cluedo game குறிப்பிட்டாங்க. அது எனக்கு மிகப் பிடித்த போர்ட் கேம்களில் முதன்மையானவற்றில் அதுவும் ஒண்ணு.

லண்டனில் Cluedo-ன்னு சொல்வாங்க போலிருக்கு, இந்தியாவிலும் அப்படித்தான் அழைத்தோம். அமெரிக்காவில் Clue அப்படின்றாங்க. First class detective game.

அந்த ஒரிஜினல் கேம் எல்லாம் எங்க வீட்ல கிடையாது, என் சகோதரர்களும் அத்தை பசங்க, பெரியப்பா பசங்களும் சேர்ந்து அந்த மாதிரியே வடிவமைச்சு அதுக்குள்ள clue அட்டைகளை அலுவலக டைப்ரைட்டரில் அவங்களே தட்டச்சு செஞ்சு தூள் கிளப்பி, அதை அப்படியே காப்பியடிச்ச "home edition" அது :-)
 
சேதுக்கரசி!
கேட்பதற்கே மிகவும் சுவையாயிருக்கிறதே!!நாமே தயாரித்து விளையாடுவது கூடுதல் சுவாரஸ்யமல்லவா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]