Monday, February 11, 2008

 

தெரிந்த பெயர்தான்!......ஆனால்!?


விளக்கமளிக்க சிறிது யோசனை செய்ய வேண்டியது இருக்கிறது!!!

எழுச்சி நினைவூட்ட ஓர் அறிமுக முயற்சி.

1) "ஆலயம்"- என்பதன்பொருள் என்ன?

2) எங்கும் நிறைந்த இறைவனுக்கு கோவில் எதற்கு?

3) இந்துமத கோவில்களின் சிறப்புகள் யாவை?

4) பூஜையின் அர்த்தம் என்ன?

5) பூஜை எத்தனை வகைப்படும்?

6) அபிஷேகப் பொருள்கள் எவை?

7) பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் என்னென்ன?

8) பூஜையில் கற்பூரம் காட்டப்படுவது ஏன்?

மேலெழுந்தவாரியாக நமக்கு தெரியும். அவற்றின் உள்ளார்ந்த விபரங்கள் தெரியுமா?
தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள விளக்கங்கள் இதோ...இதோ..!

1) ஆலயம் என்பதை ஆ + லயம் எனப் பிரிக்கலாம். 'ஆ' - என்பதற்கு 'ஆன்மா' என்று பொருள். 'லயம்' என்பதற்கு 'லயிப்பதற்கு அல்லது சேருவதற்கு' உரியது என்பது பொருள். எனவே ஆலயம் என்பதற்கு இறைவனது திருவடியில் ஆன்மா சேருவதற்கு உரிய இடம் என்பது பொருள்.

2) இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் ஆலயங்களில் விசேஷமாக நின்று அருள் செய்கிறார். அதனால்தான் அவரது அருள் பெற ஆலயம் செல்கிறோம்.

3) கோபுரம், கொடிமரம், பிரகாரங்கள் மற்றும் மண்டபங்கள் ஆகியவை சிறந்த தத்துவங்களை விளக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சசுத்தி, பூஜை, நைவேத்தியம், தீபாராதனை, உற்சவம் முதலியனவும் சிறந்த கருத்துக்களை வெளிக்காட்டுகின்றன. கோபுரம் ஸ்தூல லிங்கத்தை உணர்த்துகின்றது.

கொடிமரம், மனம் முதலிய கரணங்கள் யாவும் நின்று பிரபஞ்சமே தோன்றாது சிவதரிசனம் உண்டாகும் என்னும் உண்மையை தெரிவிக்கின்றது. பிரகாரங்கள் 5 வித கோசங்களைக் குறிக்கின்றன. 3 பிரகாரங்கள் 5 கோசங்களிலான ஸ்தூல சுட்சும காரணம் என்னும் மூவகை சரீரங்களை விளக்குகின்றன. பிரகாரங்களை சுற்றும் போது பஞ்ச கோசங்களையும் மூவகை சரீரங்களையும்கடந்து இறைவன் விளங்குகின்றான் என்பதை நினைப்பதற்காகும்.

கர்ப்பகிரகம் என்பது பிரதான மூர்த்தியை வைத்து வணங்கும் இடம். மண்டபங்கள் நிவிருத்தி, பிரதிஷ்டை, வித்தியை, சாந்தி, சாந்தியாதீதம் என்னும் கலைகளை உணர்த்துகின்றன.

4) பூஜை என்பதற்கு ஞானத்தை உண்டாக்க கூடிய சாதனம் என்பது பொருள்.

5) பூஜை ஆன்மார்த்த பூஜை, பராத்த பூஜை என இரண்டு வகைப்படும். ஆன்மார்த்தபூஜை ஒருவர் மட்டுமே உய்வதற்காகவும் பரார்த்த பூஜை பிறர் உய்வதற்காகவும் செய்யும் பூஜைகளாகும்.

6) வடித்தெடுத்த நீர், வாசனைத் திரவியங்கள் கலந்த நீர், இளநீர், பன்னீர், எண்ணெய், பால், பஞ்சாமிருதம், விபூதி, சந்தனம், களபம், புஷ்பம் முதலியன.

7) பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் பதினாறு ஆகும். ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை, பாத்தியம், ஆசமநியம்,அருக்கியம், புஷ்பதானம், தூபம், தீபம், நைய்வேத்தியம், பாநீயம், ஐபசமர்பனை, ஆராத்திரிகம் என்பன.

8) கற்பூரம் முற்றிலும் கரையப் பெற்று ஆகாயத்துடன் கலந்து விடுவது போல் ஆன்மாவானது சத்துவ குணத்தை அடைந்து ஞானமாகிய அக்னியுடன் சம்பந்தம் பெற்று மூவகைச் சரீரங்களும் எல்லாப் பற்றுக்களும் நீங்க பெற்று பரமுக்தி அடைதல் என்னும் பாவனையாகும்.

எட்டு..,இந்த பதிவில் மீதி எட்டு? அடுத்த பதிவில். நிச்சயமாக இவைகள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்தாம்.

நானென்றும் வாரியார் சுவாமிகள் போலவோ அல்லது திருமதி சிவானந்த விஜயலஷ்மி போலவோ மேடை போட்டு இவற்றையெல்லாம் பொழியவில்லை. திருநெல்வேலியில் ஒரு கெட்டு-கெதரில் எல்லோரும் தெரிந்துகொள்ள கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களின் பிரதி ஒன்று என் கைகளில் மாட்டியது...விடலாமா? உங்கள் பார்வைக்கும் தராமல் விடலாமா? சந்தோஷமாக லபக்கிக்கொண்டு வந்து உங்களுக்காக வழங்குகிறேன்!!!

Labels:


Comments:
இதிலே இவ்வளவு சாமாச்சாரம் இருக்கா?
 
//'ஆ' - என்பதற்கு 'ஆன்மா' என்று பொருள்.//
அதான் கீழே விழுந்தாலும், அடிப்பட்டாலும் ஆ என ஆன்மாவை அழைக்கிறோமா?

//இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் ஆலயங்களில் விசேஷமாக நின்று அருள் செய்கிறார். அதனால்தான் அவரது அருள் பெற ஆலயம் செல்கிறோம்.
//
இது மட்டும் தான் உதைக்கிறது. இது நாம் நமக்கே கொடுத்துக் கொண்ட ரீசனிங்க். இல்லையா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]