Saturday, January 26, 2008

 

ஐந்து நட்சத்திர ஹோட்டலும் நாங்களும்

சின்னச்சின்ன ஹோட்டல்களிலும் ரெஸ்டொரண்ட்களிலும் கிடைக்கும் சுவையான வகைவகையான உணவுகள் பைவ்ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்குமா? எனக்கு அனுபவமில்லை. காரணம் அதிகம் போனதில்லை.

என் மகனின் பிறந்தநாள் மற்றும் மகளின் முதல் கல்யாணநாள் என்று சிலமுறைதான் போயிருக்கிறோம். அப்போதும் அவர்களே விரும்பியதை ஆர்டர் செய்வார்கள்...அதுவே எங்களுக்கும் போதும் என்று நானும் ரங்கமணியும் சொல்லிவிடுவோம். நான் பின்னே வழக்கம்போல் மெனுக்கார்டை மேய்ந்துகொண்டிருப்பேன். புரியாத மொழியில் பதார்த்தங்கள் பேர்கள் இருந்தாலும் ப்ராக்கெட்டில் இன்கிரீடியண்ட்ஸ் என்னவெல்லாம் என்று போட்டிருப்பார்கள்.

அந்த காம்பினேஷன்களை மட்டும் மனதில் குறித்துக்கொள்வேன்.

அந்த வருடம் எங்களின் திருமணநாளின் போது மகளும் மருமகனும் வெளிநாட்டில் இருந்தார்கள். மகன் மும்பையிலிருந்தான். நான்கு நாட்கள் முன்பு மும்பையிலிருந்து போன்! மகன்தான் பேசினான். 'அம்மா! நாங்கள் அங்கு இல்லை என்று அனிவர்சரி கொண்டாமல் இருக்கவேண்டாம். இன்றே கடைக்குப்போய் உங்களுக்கு நல்ல பட்டுப்புடவையும் அப்பாவுக்கு நல்ல பேண்ட் ஷ்ர்ட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.'நல்ல' என்றால் அவன் அகராதியில் விலையுயர்ந்த என்று அர்த்தம். அடுத்து அவன் சொன்னது, மதியம் லஞ்சுக்கு ஏதாவது 5-ஸ்டார் ஹோட்டலுக்கு போய்வாருங்கள்!!வேண்டாமென்றாலும் கேட்கவில்லை.

பட்டுப்புடவை மேனியா எல்லாம் பறந்து போய் வெகு காலமாயிற்று. லேசான காட்டன் புடவைகள் மனதுக்கும் உடலுக்கும் இதம் சுகம். எதாவது விசேஷம் என்றால் கூட இப்பெல்லாம் சிறிய ஜரிகை இழையிட்ட பட்டுப்புடவைகள்தான் பிடிக்குது.

சிலபேர் பார்த்திருக்கிறீர்களா? முழம் ஜரிகையிட்ட பட்டுப்புடவையும் பட்டைபட்டையாக நகைகளூமாக ஆட்டோவில் வந்து இறங்குவார்கள். அவர்கள் சமூக மதிப்புக்கு அது தேவை.

சிலர் நல்ல கஞ்சி போட்ட காட்டன் புடவையும் கழுத்தில் உருளுவதே தெரியாமல் மெல்லிய செயினும் கைகளில் ஒற்றை வளையலுமாக பென்ஸ் காரிலிருந்து இறங்குவார்கள். அந்த காரே அவர்களின் சமூக மதிப்பை சொல்லிவிடும்.

ஏன்? இளையராஜா கூட ஆரம்பத்தில் புல்சூட்டில் தான் கச்சேரிக்கு வருவார். இப்போது...எளிமையான காட்டன் வேஷ்டி குர்தா. இனி ஆடையலங்காரத்தில் தன்னை வெளிப்படுத்தத் தேவையில்லை. இது உதாரணத்துக்கு சொன்னதுதான். இதில் நீ எந்த ரகம் என்கிறீர்களா? நான் எதிலுமில்லை நடுத்தர ரகம். ஒரு காலகட்டத்துக்கு மேல் இதெல்லாம் சலித்துவிடும் என்பது என் கருத்து. மற்றபடி யாரையும் சுட்டிக்காட்டுவது என் நோக்கமில்லை.

நானானி!!!எங்கோ போகிறாய். ரூட்டை மாத்து. ஓகேஓகே...

சரியென்று என் மகனின் ஆசைக்காக அவன் விரும்பியபடி துணிமணிகள் வாங்கி அணிந்து கொண்டு கோவிலுக்குப் போய்விட்டு அடையார் பார்க் ஹோட்டலுக்குச் சென்றோம். முன்னேபின்னே நாங்கள் தனியாக சென்றிருந்தால்...விஷ்க்கென்று தேவையான ரெஸ்டொரண்ட்க்குள் நுழைந்திருப்போம். பிள்ளைகளோடு வந்திருந்தால் அவர்கள் பின்னாலேயே பூனைக்குட்டி மாதிரி போயிருப்போம். இது புது அனுபவம். திக்குதெரியாத ஹோட்டலில் நாங்கள் தேடித்தேடி அலைந்ததை கண்ட ரிசப்ஷனில் இருந்த ஒருவர் ஓடோடி வந்து, கோவிலுக்குப் போய்வந்து நெற்றியில் விபூதியும் குங்குமமுமாக பக்திப்பழமாக நின்ற எங்களை
மரியாதையோடு "இதுங்களுக்கு இதுதான் சரி" என்று வெஜிடேரியன் ரெஸ்டோரண்ட்க்கு வழிகாட்டினார். நாங்கள் இருவருமே சிக்கன் பிரியர்கள். நான் அளவோடு சாப்பிடுவேன், ரங்கமணி வூடு கட்டி அடிப்பார்.

சரி ரெஸ்டோரண்ட்டுக்குள் நுழைந்தாயிற்று....வாரநாள் என்பதால் பதியம் ஒரு மணிக்கு கூட்டமே இல்லை. எங்களூக்கான மேஜையை காட்டி உட்கார வசதி செய்து கொடுத்தார் ஸ்டூவர்ட். 'sir! any spcial occation?' என்றார் எங்கள் கோலத்தைப் பார்த்து. "yes! today is our wedding anniversary!' என்றோம். 'happy anniversary! sir!' என்றபடியே சிறு கேக் ஒன்றை தட்டில் வைத்து மேஜையில் வைத்தார். தண்ணீர் மெனுகார்ட் எல்லாம் வந்தன. வழக்கம் போல் மெனுகார்டை எடுத்து படிக்கவாரம்பித்தேன். தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. எதை எடுப்பது எதை விடுப்பது என்றும் புரியவில்லை.

நாங்கள் முழிக்கும் பேமுழியைப்பார்த்து உதவிக்கு வந்தார். 'madam! you can take southindian thali that'll suit you well' என்றார். நெற்றியில் எழுதி ஒட்டியிருந்ததோ?
தனித்தனியாக எதைஎதையோ ஆர்டர் செய்வதற்கு இது மேல் என்று 'ஓஓகே' என்றோம்.
அழகான தட்டுகளில் அழகான கிண்ணங்களில் தாலி வந்தது. பாத்திரங்களின் அழகு பதார்தங்களின் சுவையில் இல்லை.

சங்கீதாவிலோ கோமளாஸிலோ ஏன் சரவணபவனிலோ கூட இதைவிட ருசியாயிருந்திருக்கும்.


வேறுவழியில்லை. வீணாக்கக்கூடாது என்று சாப்பிட்டு முடித்தோம். ஐஸ்கிரீம், பழங்கள் வந்தன. அவைதான் பிடித்திருந்தன. எல்லாம் முடிந்து பில் வந்தது க்ரெடிட்கார்டை கொடுத்து எவ்வள்வு என்றுகூட பார்க்காமல் கையெழுத்துப்போட்டு கொடுத்தார். ''thank you sir! haver a nice day!' என்று வழியனுப்பி வைத்தார். 'really we had a nice day!' என்றபடி தப்பிதோம் பிழைத்தோம் என்று காரிலேறி வீடு வந்து சேர்ந்தோம். வழியில்தான் பில் எவ்வளவு என்று பார்த்தோம். ரூ.1700/ ஆகியிருந்தது!!

ரெண்டு தென்னிந்திய உணவுக்கா...?என்றார் ரங்கமணி. உணவுக்கில்லை..பறிமாறப்பட்ட பாத்திரங்களுக்கு....அவன் சொன்ன வாழ்த்துக்கு...வைத்த கேக்குக்கு...ஆடம்பரமான சூழ்நிலைக்கு என்றேன் நான். மேற்சொன்ன ஹோட்டல்களில் 200 ரூபாய்க்கு ருசியான ஸ்பெஷல் மீல்ஸ் குளம் கட்டி கும்மியடிக்கலாமே என்றார் ரங்கமணி.

சிரித்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தோம். உடனே ஆசையாய் எங்களை அனுப்பிய மகனுக்கு போன் செய்து எங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தோம். கூடவே, ஐயா! நீ சொன்னதுக்காகத்தான் போனோம் என்று நாங்கள் முழித்த முழி எல்லாம் விலா வாரியாக சொல்லி விலா நோக சிரித்தோம்

அவன் சொன்னான், அம்மா! அங்கு வருபவர்களில் முக்கால் வாசி பேர்கள் இப்படித்தான். நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும்...தெரியாதமாதிரி காட்டிக்கொள்ளாமல் ஜம்பமாக ஸ்டூவர்டை அழைத்து 'இதில் எது எங்களுக்கு சரியாயிருக்கும்? என்று கம்பீரமாக கேட்டிருக்க வேண்டும் என்றான். 'இதை நீ ஷொல்லவேயில்லையே?' என்றேன் வழியும் அசடை துடைத்தபடி.

எப்படியோ அவன் ஆசைப்படி புத்தாடையணிந்து பைவ்ஸ்டார் ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டு ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக்கொண்டு வெகு சிறப்பாக திருமணநாளைக்கொண்டாடினோம்.

உங்களில் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட அனுபவம் கிடைத்திருக்கிறது? நான் தயங்காமல் வெக்கப்படாமல் சொல்லிவிட்டேன். யாராவது சொல்கிறீர்களா?

Labels:


Comments:
( Belated ) Happy Anniversary !
- Susi.
 
:))
 
இனிய மணநாள் வாழ்த்துகள். நாங்கள் இது மாதிரி வேளைகளில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் ஏதெனும் ஒன்துக்கு - ப்ஃபே இருக்கும் இடமாக - நான் வெஜிட்டேரியன் உட்பட = தேர்ந்தெடுத்துச் செல்வோம். மெனு கார்டெல்லாம் கிடையாது. ஒவ்வொரு ஐட்டம் முன்பும் அது என்ன என்று போர்டு இருக்கும். பாதி புரியும் - பாதி புரியாது. பழங்கள், ஐஸ்கிரீம், ஜூஸ், சாலட், வத்தல், வடாம், ப்லெயின் ரைஸ், சாம்பார், ரசம், பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், கோபி, இன்னும் பலப்பல இருக்கும். எடுத்துக் கொண்டு வந்தூ சாப்பிடுவோம். வாயில் வைக்க விளங்க வில்லை எனில் - அப்படியே வீட்டு விட்டு அடுத்த ஐட்டம் போய் விடுவோம். வெக்கப் பட மாட்டோம். பிடித்ததை தேவைக்கு அதிகமாகவே சாபிடிவோம். டிப்ஸ் தலைக்கு 10/- ( மாக்ஸிமம் உண்டு) வைத்து விடுவோம். ம்ம்ம்ம் - பில் யார் கொடுப்பது - நாங்கள் தான் - கையெழுத்து தானே - கிரெடிட் கார்டு பில் வரும் போது பார்த்துக் கொள்வோம்.
 
திருமண நாள் வாழ்த்துகள் நானானி.
அடையார் பார்க்கில் ச்பெஷல் தோசை எல்லாம் தக்ஷினில் கிடைக்குமே.

என்ன இருந்தாலும் சரவணபவன் மாதிரி வராது:))
 
திருமண நாள் வாழ்த்துகள்..

உங்கள் அனுபவங்கள் பெரும்பாலும்..நமக்கும் இப்படி நடந்துள்ளதே..நினைக்கவைக்கும் ரகமாக உள்ளது..
 
நானானி, சில சினிமா பார்ட்டிகளின் புண்ணியத்தில் வாரம் ஒரு நாளோ/ மாதம் இரண்டு நாளோ... அடையார் பார்க் (பாருக்குதான்) போவது உண்டு.

ஒரு நாள் தெரியாத்தனமாக ஒவர் போதையில் ரெஸ்டாரெண்டுக்குள் போய் விட்டேன். உள்ளே சில அரசியல் வி.ஐ.பி.கள்.

போனதுமே மெனு கார்டை நீட்டினார்கள். அதை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, ஒரு செட்டிநாடு சிக்கன். ரெண்டு ரொட்டிக்கு ஆர்டர் கொடுத்தேன்.

வெள்ளித்தட்டில் கொண்டு வந்தார்கள்.

எனக்கெதுக்குடா வெள்ளித்தட்டு? என்று யோசித்து யோசித்துப் பார்த்ததில் எல்லாருக்குமே அதே தட்டு.

சிக்கன் நல்லாத்தான் இருந்தது. பில்லைப் பார்த்ததும்தான் போதை புசுக்!
கார்ட்டை தேய்த்துவிட்டு முடிவெடுத்தேன். நமக்கு சரவணபவனோ, சங்கீதாவோதாண்டா சரிபட்டு வரும்.

மயிலாப்பூரில் இருந்து அந்த வழியை கடக்கும் பொதெல்லாம் அந்த பில் வந்த இன்னும் டென்ஷன் ஏற்றிக்கொண்டிருக்கிறது.
 
ஸாரி, சொல்ல மறறந்துட்டேன். திருமண நாள் வாழ்த்துகள்.
 
திருமணநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
 
திருமண நாள் வாழ்த்துக்கள்.அடுத்த முறை நட்சத்திர ஓட்டலுக்கு போகும்போது கவனிக்க சில தகவல்கள்.சீனா சொன்னது போல் பஃபே போனால் வேண்டியது எடுத்து சாப்பிடலாம்.ஆனால் குளிர் ரூமுக்குள்ள பழசுகள் ஏதாவது மிஞ்சியிருந்தாலும் அழகுபடுத்தி நம்ம வயித்துல தள்ளி விட்டுருவாங்க.அடுத்து அல கார்ட் மெனுன்னா ஒரு சூப்,ஒரு மெயின் கோர்ஸ்,ஒரு சாலட் அடுத்து ஒரு இனிப்பு,டீ அல்லது காபின்னு முடிச்சுகிடலாம்.இந்தியன் ரெஸ்டாரண்ட்ன்னா ஒரு மசாலா தோசை.காபி அல்லது ஒரு நான்(வெள்ளச் சப்பாதிங்க)ஒரு தந்துரி சிக்கன் அல்லது சிக்கன் மசாலா. இல்ல சும்மா பந்தாவுக்குப் போயிட்டு வரலாம்னா இருக்கவே இருக்கும் காபி ஷாப்ன்னு பேரோட ஒரு டீக்கடை வச்சிருப்பாங்க.ஒரு பிளாக் பாரஸ்ட் கேக்,ஒரு காபி சொன்னா ஒரு சொம்புல காப்பியும்,இன்னொன்னுல பாலும் வரும்.சொம்புக் காபி ஒரு ஆளுக்கு ஆர்டர் செய்தால் போதும் இருவருக்கும் பரிமாற.மற்ற படி வயிறு நிறையனும்னா சரவண பவன் மாதிரி இடம் இல்லைன்னா நேரா எங்க ஊரு கோயம்பத்தூருக்கு வண்டிய கட்ட வேண்டியதுதான்.
 
அட! இது நான்கு வருடங்களுக்கு முன் நடந்ததுங்க. திருமணநாள் எல்லோருக்கும் வருஷாவருஷாம் வர்ரதுதானே!
வாழ்த்து சொன்ன, அனானி, சீனா, வல்லி, பாசமலர், ஆடுமாடு, துளசி, நட்டு எல்லோருக்கும் ந்ன் சார்பாகவும் ரங்கமணி சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
கொத்ஸ்! உங்கள் ஸ்மைலிக்கும் நன்றி!
ஹி..ஹி..!
 
சீனா! முன்பெல்லாம் ப்ஃபேயில் சாலடும் பழங்களும் தான் என்னோட பெவரைட். ஆனால் சாலட் காய்கள் சரியாக சுத்தம் செய்யப் பட்டிருக்காது என்று பத்திரிக்கையில் படித்தவுடன் சாலட் வீட்டிலேயே சாப்பிடுவது என்று முடிவெடுத்தேன்.
 
வல்லி சொல்வது முக்காலும் உண்மை.
 
பாசமலர் உங்களுக்கும் நடந்துள்ளதா?
பேஷ்!பேஷ்!
 
ஆடுமாடு!அந்த வெள்ளித்தட்டு கிண்ணங்கள்தான் நன்றாக இருந்தன.
 
நட்டு! காபி ஷாப்பும் ஒரு நாள் போகவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். நானும் என் சசோதரியும்.
 
http://pitchaipathiram.blogspot.com/2004/12/blog-post_08.html
 
நானானி,

திருமண நாள் வாழ்த்துக்கள் !!!

வெகு இயல்பான, நடைமுறையில் உள்ளவற்றை, துல்லியமாய் எழுதிய அருமையான பதிவு. எனக்குப் பிடித்த உங்களின் அனுபவ வரிகள் : உங்களின் entry-யும், பின் உங்கள் மகனின் behaviour பாடமும். சூப்பர்.

//பிள்ளைகளோடு வந்திருந்தால் அவர்கள் பின்னாலேயே பூனைக்குட்டி மாதிரி போயிருப்போம். இது புது அனுபவம். திக்குதெரியாத ஹோட்டலில் நாங்கள் தேடித்தேடி அலைந்ததை கண்ட ரிசப்ஷனில் இருந்த ஒருவர் ஓடோடி வந்து, கோவிலுக்குப் போய்வந்து நெற்றியில் விபூதியும் குங்குமமுமாக பக்திப்பழமாக நின்ற எங்களை
மரியாதையோடு "இதுங்களுக்கு இதுதான் சரி" //

//ஸ்டூவர்டை அழைத்து 'இதில் எது எங்களுக்கு சரியாயிருக்கும்? என்று கம்பீரமாக கேட்டிருக்க வேண்டும் என்றான். //
 
வாழ்த்துக்கு நன்றி! சதங்கா!
உங்கள் பின்னோட்டத்துக்கும் சேர்த்துத்தான்.
 
சுரேஷ்! உங்கள் பதிவை சென்று பார்த்தேன். தேவையில்லாமல் தானே வரவழைத்துக்கொண்ட பசியின் கொடுமையை அருமையாக் விளக்கியிருந்தீர்கள். சிங்கிள் டீயும் பன்னும் எவ்வளவு ருசியாயிருந்திருக்கும்!!
 
திருமண நல்வாழ்த்துக்கள்!

தாய் தந்தையருடன் இருக்க முடியாவிட்டாலும், தன் சார்பில் என்ஜாய் செய்ய சொன்னாரே.. அதை பாராட்டனுமின்னு தோணுது.
 
நல்லா சொன்னீங்கா..சீனா சார் சொன்னதே தான் .. நாங்க வருசத்துக்கு ரெண்டு தடவையாவது போவது தான்.. ஆனா பஃபேக்கு சேபர் சைடா போயிடறது தான் பெஸ்ட்.ஆகா என்ன வெள்ள மனசு உங்களுக்கு அப்படியே எழுதிட்டீங்க...
இந்த உடை விசயம் நான் கூட அப்படியே நினைப்பேன் நமக்குள்ள எத்தனை பொருத்தம்..
 
வாழ்த்துக்கு நன்றி! காட்டாறு!
உங்கள் பாராட்டையும் அவனுக்குத் தெரிவிக்கிறேன்.
 
வாங்க..வாங்க..முத்துலெட்சுமி!
எனக்கும் ப்ஃபே தான் இஷ்டம். அன்றென்னவோ போதாத காலம்..ரெஸ்டொரண்ட்டில் போய் உட்கார்ந்துவிட்டோம். மற்றபடி அதுவும் ஒரு அனுபவம்தானே?
ஆஹா! என்ன பொருத்தம் நமக்குள் இந்த உடைப்பொருத்தம்!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]