Saturday, January 26, 2008

 

ப்பா!!!! இவரைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருக்கிறீர்கள்?


சான்ப்ரான்ஸிஸ்கோ டவுன் டவுன் போயிருந்தபோது,fisherman groove அருகே நாங்கள் நின்றிருந்த இடத்துக்கு எதிரே ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் வெட்டியெடுத்த பசுஞ்செடிகளால் தன்னை மறைத்துக் கொண்டு அங்கு அவருக்கு எதிரே வருவோரையெல்லாம் அருகில் வந்தவுடன் "ப்பா!!" என்று நாம் குழந்தைகளை செல்லமாக பயங்காட்டுவது போல் பயமுருத்தி விளையாடிக்கொண்டிருந்தார். மக்கள் பயந்து..பயந்து விலகியோடியது பார்க்க வேடிக்கையாயிருந்தது. ஒரு கூட்டமும் அதை ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

நான் விடுவேனா? சாலையைக்கடந்து அந்த வழியே போய் படு உஷாராக அவரை கடக்கும் போது எனக்கும் அந்த "ப்பா" கிடைத்தது. நான் அசால்டாக "ஒ! fஒ!!". என்றவாறு கடந்து சென்று அவரை 'பொம்பி' ஆக்கினேன்.

யாரெல்லாம் பயந்திருக்கிறீர்கள்?

Labels:


 

ஐந்து நட்சத்திர ஹோட்டலும் நாங்களும்

சின்னச்சின்ன ஹோட்டல்களிலும் ரெஸ்டொரண்ட்களிலும் கிடைக்கும் சுவையான வகைவகையான உணவுகள் பைவ்ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்குமா? எனக்கு அனுபவமில்லை. காரணம் அதிகம் போனதில்லை.

என் மகனின் பிறந்தநாள் மற்றும் மகளின் முதல் கல்யாணநாள் என்று சிலமுறைதான் போயிருக்கிறோம். அப்போதும் அவர்களே விரும்பியதை ஆர்டர் செய்வார்கள்...அதுவே எங்களுக்கும் போதும் என்று நானும் ரங்கமணியும் சொல்லிவிடுவோம். நான் பின்னே வழக்கம்போல் மெனுக்கார்டை மேய்ந்துகொண்டிருப்பேன். புரியாத மொழியில் பதார்த்தங்கள் பேர்கள் இருந்தாலும் ப்ராக்கெட்டில் இன்கிரீடியண்ட்ஸ் என்னவெல்லாம் என்று போட்டிருப்பார்கள்.

அந்த காம்பினேஷன்களை மட்டும் மனதில் குறித்துக்கொள்வேன்.

அந்த வருடம் எங்களின் திருமணநாளின் போது மகளும் மருமகனும் வெளிநாட்டில் இருந்தார்கள். மகன் மும்பையிலிருந்தான். நான்கு நாட்கள் முன்பு மும்பையிலிருந்து போன்! மகன்தான் பேசினான். 'அம்மா! நாங்கள் அங்கு இல்லை என்று அனிவர்சரி கொண்டாமல் இருக்கவேண்டாம். இன்றே கடைக்குப்போய் உங்களுக்கு நல்ல பட்டுப்புடவையும் அப்பாவுக்கு நல்ல பேண்ட் ஷ்ர்ட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.'நல்ல' என்றால் அவன் அகராதியில் விலையுயர்ந்த என்று அர்த்தம். அடுத்து அவன் சொன்னது, மதியம் லஞ்சுக்கு ஏதாவது 5-ஸ்டார் ஹோட்டலுக்கு போய்வாருங்கள்!!வேண்டாமென்றாலும் கேட்கவில்லை.

பட்டுப்புடவை மேனியா எல்லாம் பறந்து போய் வெகு காலமாயிற்று. லேசான காட்டன் புடவைகள் மனதுக்கும் உடலுக்கும் இதம் சுகம். எதாவது விசேஷம் என்றால் கூட இப்பெல்லாம் சிறிய ஜரிகை இழையிட்ட பட்டுப்புடவைகள்தான் பிடிக்குது.

சிலபேர் பார்த்திருக்கிறீர்களா? முழம் ஜரிகையிட்ட பட்டுப்புடவையும் பட்டைபட்டையாக நகைகளூமாக ஆட்டோவில் வந்து இறங்குவார்கள். அவர்கள் சமூக மதிப்புக்கு அது தேவை.

சிலர் நல்ல கஞ்சி போட்ட காட்டன் புடவையும் கழுத்தில் உருளுவதே தெரியாமல் மெல்லிய செயினும் கைகளில் ஒற்றை வளையலுமாக பென்ஸ் காரிலிருந்து இறங்குவார்கள். அந்த காரே அவர்களின் சமூக மதிப்பை சொல்லிவிடும்.

ஏன்? இளையராஜா கூட ஆரம்பத்தில் புல்சூட்டில் தான் கச்சேரிக்கு வருவார். இப்போது...எளிமையான காட்டன் வேஷ்டி குர்தா. இனி ஆடையலங்காரத்தில் தன்னை வெளிப்படுத்தத் தேவையில்லை. இது உதாரணத்துக்கு சொன்னதுதான். இதில் நீ எந்த ரகம் என்கிறீர்களா? நான் எதிலுமில்லை நடுத்தர ரகம். ஒரு காலகட்டத்துக்கு மேல் இதெல்லாம் சலித்துவிடும் என்பது என் கருத்து. மற்றபடி யாரையும் சுட்டிக்காட்டுவது என் நோக்கமில்லை.

நானானி!!!எங்கோ போகிறாய். ரூட்டை மாத்து. ஓகேஓகே...

சரியென்று என் மகனின் ஆசைக்காக அவன் விரும்பியபடி துணிமணிகள் வாங்கி அணிந்து கொண்டு கோவிலுக்குப் போய்விட்டு அடையார் பார்க் ஹோட்டலுக்குச் சென்றோம். முன்னேபின்னே நாங்கள் தனியாக சென்றிருந்தால்...விஷ்க்கென்று தேவையான ரெஸ்டொரண்ட்க்குள் நுழைந்திருப்போம். பிள்ளைகளோடு வந்திருந்தால் அவர்கள் பின்னாலேயே பூனைக்குட்டி மாதிரி போயிருப்போம். இது புது அனுபவம். திக்குதெரியாத ஹோட்டலில் நாங்கள் தேடித்தேடி அலைந்ததை கண்ட ரிசப்ஷனில் இருந்த ஒருவர் ஓடோடி வந்து, கோவிலுக்குப் போய்வந்து நெற்றியில் விபூதியும் குங்குமமுமாக பக்திப்பழமாக நின்ற எங்களை
மரியாதையோடு "இதுங்களுக்கு இதுதான் சரி" என்று வெஜிடேரியன் ரெஸ்டோரண்ட்க்கு வழிகாட்டினார். நாங்கள் இருவருமே சிக்கன் பிரியர்கள். நான் அளவோடு சாப்பிடுவேன், ரங்கமணி வூடு கட்டி அடிப்பார்.

சரி ரெஸ்டோரண்ட்டுக்குள் நுழைந்தாயிற்று....வாரநாள் என்பதால் பதியம் ஒரு மணிக்கு கூட்டமே இல்லை. எங்களூக்கான மேஜையை காட்டி உட்கார வசதி செய்து கொடுத்தார் ஸ்டூவர்ட். 'sir! any spcial occation?' என்றார் எங்கள் கோலத்தைப் பார்த்து. "yes! today is our wedding anniversary!' என்றோம். 'happy anniversary! sir!' என்றபடியே சிறு கேக் ஒன்றை தட்டில் வைத்து மேஜையில் வைத்தார். தண்ணீர் மெனுகார்ட் எல்லாம் வந்தன. வழக்கம் போல் மெனுகார்டை எடுத்து படிக்கவாரம்பித்தேன். தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. எதை எடுப்பது எதை விடுப்பது என்றும் புரியவில்லை.

நாங்கள் முழிக்கும் பேமுழியைப்பார்த்து உதவிக்கு வந்தார். 'madam! you can take southindian thali that'll suit you well' என்றார். நெற்றியில் எழுதி ஒட்டியிருந்ததோ?
தனித்தனியாக எதைஎதையோ ஆர்டர் செய்வதற்கு இது மேல் என்று 'ஓஓகே' என்றோம்.
அழகான தட்டுகளில் அழகான கிண்ணங்களில் தாலி வந்தது. பாத்திரங்களின் அழகு பதார்தங்களின் சுவையில் இல்லை.

சங்கீதாவிலோ கோமளாஸிலோ ஏன் சரவணபவனிலோ கூட இதைவிட ருசியாயிருந்திருக்கும்.


வேறுவழியில்லை. வீணாக்கக்கூடாது என்று சாப்பிட்டு முடித்தோம். ஐஸ்கிரீம், பழங்கள் வந்தன. அவைதான் பிடித்திருந்தன. எல்லாம் முடிந்து பில் வந்தது க்ரெடிட்கார்டை கொடுத்து எவ்வள்வு என்றுகூட பார்க்காமல் கையெழுத்துப்போட்டு கொடுத்தார். ''thank you sir! haver a nice day!' என்று வழியனுப்பி வைத்தார். 'really we had a nice day!' என்றபடி தப்பிதோம் பிழைத்தோம் என்று காரிலேறி வீடு வந்து சேர்ந்தோம். வழியில்தான் பில் எவ்வளவு என்று பார்த்தோம். ரூ.1700/ ஆகியிருந்தது!!

ரெண்டு தென்னிந்திய உணவுக்கா...?என்றார் ரங்கமணி. உணவுக்கில்லை..பறிமாறப்பட்ட பாத்திரங்களுக்கு....அவன் சொன்ன வாழ்த்துக்கு...வைத்த கேக்குக்கு...ஆடம்பரமான சூழ்நிலைக்கு என்றேன் நான். மேற்சொன்ன ஹோட்டல்களில் 200 ரூபாய்க்கு ருசியான ஸ்பெஷல் மீல்ஸ் குளம் கட்டி கும்மியடிக்கலாமே என்றார் ரங்கமணி.

சிரித்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தோம். உடனே ஆசையாய் எங்களை அனுப்பிய மகனுக்கு போன் செய்து எங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தோம். கூடவே, ஐயா! நீ சொன்னதுக்காகத்தான் போனோம் என்று நாங்கள் முழித்த முழி எல்லாம் விலா வாரியாக சொல்லி விலா நோக சிரித்தோம்

அவன் சொன்னான், அம்மா! அங்கு வருபவர்களில் முக்கால் வாசி பேர்கள் இப்படித்தான். நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும்...தெரியாதமாதிரி காட்டிக்கொள்ளாமல் ஜம்பமாக ஸ்டூவர்டை அழைத்து 'இதில் எது எங்களுக்கு சரியாயிருக்கும்? என்று கம்பீரமாக கேட்டிருக்க வேண்டும் என்றான். 'இதை நீ ஷொல்லவேயில்லையே?' என்றேன் வழியும் அசடை துடைத்தபடி.

எப்படியோ அவன் ஆசைப்படி புத்தாடையணிந்து பைவ்ஸ்டார் ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டு ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக்கொண்டு வெகு சிறப்பாக திருமணநாளைக்கொண்டாடினோம்.

உங்களில் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட அனுபவம் கிடைத்திருக்கிறது? நான் தயங்காமல் வெக்கப்படாமல் சொல்லிவிட்டேன். யாராவது சொல்கிறீர்களா?

Labels:


Thursday, January 24, 2008

 

ஏனெனக்கு மட்டும் இப்டி நடக்குது?

எனக்கு மட்டும்தான் இப்படி நடக்குதா..? இல்லை எல்லோருக்குமே இப்படித்தான் நடக்குதா?
இது ஒரு வகையான 'என்ன கொடுமை இது? சரவணன்?'

அவசரமாக எங்காவது போக ஆட்டோ பிடிப்பேன். ஆட்டோ சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று பெட்ரோல் பங்கில் போய் நிற்கும். நம்ப கிட்டையே ஐம்பது ரூபா வாங்கி ஆட்டொவின் தாகத்தை தணிப்பார். என்னான்னால் 'அம்மா...போணிம்மா!' என்பார். நம் அவசரம் புரியாமல்.

சரி ஆட்டோ வேண்டாம் டாக்ஸி பிடிக்கலாம் என்று போன் செய்து வரவழைத்தால்...அதுவும் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று பெட்ரோல் பங்கில்தான் போய் ப்ரேக் அடித்து நிற்கும்.என்னாப்பா என்றால்,'காலையிலிருந்து வண்டி ஷெட்டில்தான் நின்னுது. இதுதான் முதல் சவாரி.' என்பார் நம்மிடமே பெட்ரோலுக்கு ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டே.

பெட்ரோல் போட்டுவிட்டே வந்திருக்கலாமே என்றால்...பக்கத்தில்தான் உங்க வீடு பங் தள்ளியிருக்கிறது அதனால் வழியில் போட்டுவிட்டே போகலாமென்று வந்துட்டேன்.' என்பார் சாவகசமாக. நொந்துடுவேன்.

புதுப்புது வகையான உணவு வகைகளை சாப்பிட்டுப்பார்ப்பதில் விருப்பம் உண்டு. காரணம் வீட்டில் வந்து செய்துபார்க்கலாமே என்றுதான். அடிக்கடி ஹோட்டல்கள், ரெஸ்டொரண்ட்கள் போய் அமர்ந்து சாவகாசமாக மெனு கார்டை வாசித்து நமக்கு தெரியாத, இதுவரை ருசிக்காத ஐட்டமாக தேர்ந்தெடுத்து சர்வரோ அல்லது ஸ்டூவர்டோ அழைத்து குறிப்பிட்ட உணவு வகையை சொல்லி கொண்டுவரச் சொன்னால்....'சாரி! மேடம்!
அது இல்லை' என்றோ அல்லது 'காலியாகிவிட்டது' என்றோ சொல்வார்.. சர்வர் சுந்தரம் மாதிரி!! அப்போது நம் மூஞ்சியில் மூணாம் பேஸ்து அடிச்சிருக்கும்!!

ஜவுளிக்கடைகளிலும் இதே கதைதான்! புடவைகளையெல்லாம் இழுத்துப் போட்டு விட்டு, 'இந்த கலரில் இந்த பார்டர் வைத்து இருக்குதா? சின்ன பார்டர் வைத்து இருக்குதா? வித்தியாசமான காம்பினேஷனில் கிடைக்குமா?...நமக்கு கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி! என்று கடைக்காரரை குடைந்தெடுத்தால் அவர், 'முந்தா நேத்துதான் நீங்கள் கேட்ட மாதிரி மூன்று புடவைகள் வந்தன,
ரெண்டு போயிடுச்சு. ஒன்றுதான் இருக்கு.' என்பார். அவர் நமக்கு மேல் லொள்ளர்!!!!!

இப்படி எங்கு போனாலும் எனக்கேன் இப்படி நடக்குது? 'என்ன கொடுமையிது முருகா..குமரா..சரவணா?

உங்களுக்கெல்லாம் எப்படி? ஷொல்லுங்களேன்!!!!!!!!!!

Labels:


Wednesday, January 23, 2008

 

வலைவீசம்மா..வலைவீசு ஓவர் ஸ்பீடுக்கு வலைவீசு..


தூரத்தில் தெரிவது ஏதோ பெயர் பலகையோ அல்லது ஏதேனும் அறிவிப்புப் பலகையோ இல்லை. பின் என்னது?
80-100 என்று சாதரணமாக செல்லும் அமெரிக்க சாலைகளிலும் வேகக்கட்டுப்பாடு உண்டு. கொஞ்சம் ஓவர் ஸ்பீடானால் போலீஸ் கார்கள் சர்சர் என்று பாய்ந்து வந்து மடக்கிவிடும்.
அதற்கும் மேல் ஓஓஓஓஓஓஓவர் ஸ்பீடானால் என்ன செய்வது?

அத்ற்குத்தான் இந்த அமைப்பு.

இந்த மாதிரியான ஆர்ச் நடுவில் பலமான வலை சுருட்டிவைக்கப்பட்டிருக்கும். அதி வேகமாக வரும் கார்களை சென்ஸார்கள் மூலம் மோப்பம் பிடித்து இந்த ஆர்ச்சை தாண்டும் போது வலை விரிந்து கார் அதில் திமிங்கிலம் போல் மாட்டிக்கொள்ளும். மேலே ஒரு அடி கூட நகர முடியாது.
உர்..உர்..உர் என்று உறுமிக்கொண்டிருக்கவேண்டியதுதான்!!!!
வலையில் மாட்டும் காட்சியைக் காண, படம் பிடிக்க மிகவும் ஆவலாயிருந்தேன். ஆனால் கிடைக்கவில்லை. குறைந்த மட்டும் ஆர்ச்சைமட்டுமாவது புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று எடுத்தது.

Labels:


Tuesday, January 22, 2008

 

வெற்றிலை போட வாங்க!!

இப்போல்லாம் இந்த மாதிரி அழைப்பெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை. கல்யாணமா? விருந்தா? சாப்பாடு முடிந்ததும் வெளியே வரும் போதே தட்டில் பீடாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆளுக்கொன்று (நான் ரெண்டு) எடுத்துக்கொண்டு கொதப்பிக்கொண்டே 'டாட்டா..பைபை..'சொல்லிக்கொண்டே தாம்பூலக் கவர் வாங்கிக்கொண்டு வெளியே வந்து விடுவோம். அத்தோடு சரி!

எங்கள் வீட்டில் கல்யாணங்கள் கூட வீட்டிலேயே நடக்கும். பந்தி முடிந்து ஹாலில் வந்து அமர்ந்துகொண்டு வெற்றிலை போடும் சுவாரஸ்யமிருக்கே...அட அட அட!

ஹால், மற்ற அறைகளிலும் ஜமக்காளங்கள் விரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஜமக்காளத்தின் நடுவிலும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு நிறைந்த தாம்பாளங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

அதுவும் கருவலநல்லூர் வெற்றிலையும் ரசிகலால் பாக்கும் வாசனைச் சுண்ணாம்பும் என்ன ஒரு அற்புதமான காம்பினேஷன்!!!அது என்ன கருவலநல்லூர்?

திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோயிலுக்கு சிறிது தூரத்தில் அமைந்ததுதான் "கரிவலம்வந்தநல்லூர்"

அங்கு காட்டில் ஒரு சிவலிங்கம்! தினமும் யானை ஒன்று அந்த சிவலிங்கத்தை சுற்றி சுற்றி வலம் வந்து வழிபடுவதைக் கண்ட ஊரார் சிவலிங்கத்துக்கு ஆலயம் எழுப்பி வழிபடவாரம்பித்தனர்.

யானை வலம் வந்து வழிபட்டதால் ஊரின் பேரே 'கரிவலம்வந்தநல்லூர்!' என்று வழங்கப்பட்டது.
வெற்றிலையை குதப்பி குதப்பி ஊரின் பேர் 'கருவநல்லூர்' என்று சொதப்பிவிடது.

தமிழில் பெயர்...தமிழில் பெயர்..தேடிக்கொண்டிருக்கிறோம். அக்காலத்தில் இடப்பட்ட அழகிய தமிழ் பெயர்களெல்லாம் எப்படியெல்லாம் உருமாரி கருமாரி சிதைந்து சின்னாபின்னமாகியிருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

இந்த ஊர் வெற்றிலைக்குப் பெயர் பெற்றது. முற்றிய வெற்றிலையும் சரி, கொழுந்து..தளிர் வெற்றிலையும் சரி பிஞ்சு வெண்டக்கா மாதிரி ஒடியும்.

வீட்டில் ஒரு கட்டு வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு வாசலிலும் ஒரு கட்டு பூஜையறையிலும் இருக்கும்.
வாசலில் அப்பாவோடு சமமாக அமர்ந்து வெற்றிலை போடுபவர்கள், கையில் எடுத்துக்கொண்டு ஓடுபவர்கள் அப்பா அலுவலகம் சென்ற பின் சாவகாசமாக போடுபவர்கள் என்று பலவகையான பேர் இந்த வெற்றிலைக்காகவே வருவார்கள். சொல்ல மறந்தேனே அப்பாவுக்கு இப்பழக்கம் கிடையாது.

நான் அக்காலத்தில் இந்த வெற்றிலைக்கு அடிக்ட்...அடிமை என்பதை இப்படியும் சொல்லலாமல்லவா?

விசேஷ நாட்களில்...அக்காக்கள் வந்திருப்பாக...மதனிமார்கள் வந்திருப்பாக...அத்தைகள் வந்திருப்பாக...சித்திகள் வந்திருப்பாக...மற்றுமுள்ள உறவினரெல்லாம் வந்திருப்பாக...!

யாரும் சாப்பாடு முடிந்து கிளம்பிவிடமாட்டார்கள், வெற்றிலை செஷன் முடிக்காமல். அவரவர்க்கு தோதான சிறுசிறு குழுக்களாக ஜமக்காளங்களில் வட்டமாக அமர்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டு ஈர வெற்றிலையை அப்படி ரெண்டு எடுத்து தொடையில் தடவி காம்பு கிள்ளி சுண்ணாம்பையும் ரெண்டு இழுப்பு இழுத்து ரசிகலால் பாக்கு சிறிது வைத்து மடக்கி வாயில் அடக்கினால்....கிக் ஏறுமே!

சில பேர் வெற்றிலைக் காம்பை சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று மேலிருந்து நுனிவரை கிழித்து இலையை ரெண்டு பாகமாக்கி மடித்துப் போடுவார்கள். அது தனி...கலை.

ரெண்டு வெற்றிலையோடு முடியாது. சுண்ணாம்பு தடவி மடக்கி போய்க் கொண்டேயிருக்கும்.
இதற்குள் அடுத்த ஜமக்காளத்திலிருந்து அழைப்பு வரும்..'ஏட்டி! இங்கன வாயேன்!' என்று.

இங்கே ஒரு ஷார்ட் ப்ரேக் விட்டுவிட்டு அடுத்த ஜமக்காளத்தில் தொடரும். இப்படி சாப்பிட்ட விருந்தின் அளவை விட ஒரு படி மேலேயே போய்க்கொண்டிருக்கும். ஒரு அண்ணன், 'என்னடி இது? ஆடு தளை மேய்ஞ்சாமாதிரி!' என்று சொல்லிலக் கொண்டே
போவார். இன்னொரு அண்ணன், 'பாத்து! காக்கா கொத்திரப்போகுது!' என்பார். கழுத்து வரை இருக்குமாம், வாயைத்திறந்தால் காக்கா வந்து கொத்திவிடுமாம்.

எங்கள் தாத்தா, மாமா எல்லாம் வெற்றிலை போடுவதைப் பார்ப்பதே...சுதா ரகுநாதன் கச்சேரி பார்ப்பதைப்போல் அழகாகயிருக்கும். மெத்தைமேல் ரெண்டு தலையணை போட்டு அதில் சாய்ந்து கொண்டு வெற்றிலைச் செல்லத்தை செல்லமாய் திறந்து வெற்றிலையைத் துடைத்து சுண்ணாம்பு தடவி பாக்கு வெட்டியால் கொட்டைப்பாக்கை வெட்டி வைத்து மடக்கி வாயில் அடக்குவதே ஓர் அழகு!

வெற்றிலை எப்படியெல்லாம் உறவுகளை கட்டிப்போட்டிருந்தது!!
திருமணத்துக்குப் பிறகு ஊருக்குப்போகும் போதெல்லாம் கொஞ்சம் வெற்றிலை எடுத்து வருவேன். இங்கு வந்ததும் சிறிது வாடியிருக்கும். அந்த வாட வெத்தல..வதங்கன வெத்தலையும்
அம்புட்டு ருசியாயிருக்கும்.

இரண்டாவது மகன் பிறந்த உடன் ஒரு முறை ஊருக்குச் சென்ற போது, அண்ணன் மகன், 'அத்தை! ஜர்தா பீடா போடுகிறீர்களா? வாங்கிவரவா?' என்றான். தூக்குத்தூக்கி படத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அழகாக மடித்துக்கொடுக்கும் பீடாவாக்கும் என்று,என்ன ஏது என்று தெரியாமல் வாங்கி வரச் சொன்னேன்.

அரைநொடியில் ஓடிப்போய் வாங்கி வந்தான். வாயில் போட்டு மென்று ஒரு துளி சாறு தான் உள்ளேயிரங்கியிருக்கும்.........கீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று தலை சுற்றியது. சம்திங் ராங் உள்ளே மணியடிக்க ஓடிப்போய் வாஷ் பேசினில் துப்பி, உள்ளேயிரங்கிய துளிச் சாற்றையும் வெளியே தள்ளி, வாயை நன்றாக கழுவிய பின்தான் ஆசுவாசமாகியது. 'என்னத்தைடா கொடுத்தே?' என்றபோது 'உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன்' என்றான் சாவகாசமாக!!!!!!

இப்போதெல்லாம் கருவநல்லூர் வெற்றிலையுமில்லை, ரிப்பேரான பற்களால் பாக்கு போடவும் முடியவில்லை. இனிப்பு பீடா என்றால் போடுவேன்.

வேண்டியமட்டும் வெற்றிலையை இளவயதில் மேய்ஞ்சாச்சு...இப்போது பழைய நினைவுகளை அசை போடத்தான் முடியும். கண்கள் மூடி சுகமாக அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Labels: , ,


 

ஊருக்கெல்லாம் உறவுக்கெல்லாம் பொங்கல் வாழ்த்து!!


சிறிய மண்பானை...போஸ்டர்கலர் கொண்டு பெயிண்ட் செய்து..அதன் மேல் கொஞ்சம் பஞ்சு..பால் பொங்குதாம்!! இருபக்கமும் கரும்பு போல் பெயிண்ட் செய்த ஸ்ட்ரா அதன் மேல் பச்சை நிற க்ரேப் பேப்பர் வெட்டி கரும்பு தோகையாய் சொருகி பொங்கல் அன்று உறவினர்கள்,நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லவும் பெறவும் எங்கள் ரதத்தை அலங்கரித்துக்கொண்டு போவோம் ஊர்கோலம்!!!

உங்கள் எல்லோர் இல்லங்களுக்கும் நான் இப்படி வந்து வாழ்த்தியதாய் கொள்ள வேண்டுகிறேன்.

Labels:


 

தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்.....!


தைத்திருநாள் அன்று நாம் அதிகாலையில் கண்விழித்ததும் காணவேண்டிய மங்கலப் பொருட்கள்.விளக்குசுவாமி படம், பிள்ளையார்,பூ, மற்றும்....

வெள்ளிக்காசு, தங்கக்காசு, மற்றும்....

மஞ்சள் கொத்து, பழங்கள், காய்கறிகள், மற்றும்...

கரும்பு, வெற்றிலைப்பாக்கு, தேங்காய்,வாழைப்பழம், நன்றி தெரிவிக்க சூரியபகவான் சூழ... FLAT வாசம் ஆரம்பித்த பிறகு நான் வழக்கமாய் கொண்டாடும்....போக்கிரிப்...ஹூஹும் நிப்போ பொங்கல்...

மைக்ரோவேவ் சர்க்கரைப்பொங்கல்!!!நெய்..முழங்கை வழிவார அள்ளி உண்ண எல்லோரும் வாருங்கள்!!! பொங்கலோ பொங்கல்!!!!!!

மிகவும் தா........மதமான இப்பதிவுக்கு என் உடல் நிலையும் கணினியின் உடல் நிலையுமே காரணம். சபதம் எடுத்தவுடனே தடங்கலைப்பாருங்கள். படங்களையும் டவுன்லோட் செய்து பதிவும் எழுதி பத்திரப்படுத்திவிட்டு(SAVE)பொங்கலுக்கு மறுநாள் வெளியிடலாம் என்று ஊருக்கு..வேறெங்கே திருநெல்வேலிக்குத்தான்..சென்றுவிட்டேன். வந்து என்னாலும் முடியவில்லை..கணினியாலும் முடியவில்லை. நான் சொன்னபடி 'விடமாட்டேனே!!' தாமதமானாலும் நண்பர்கள் பார்வைக்கு வைத்தேயாகவேண்டும் என்று பதிந்து விட்டேன்.

Labels:


Sunday, January 6, 2008

 

புத்தாண்டின் சபதம்..அது பொல்லாத சபதம்

கீதாம்மா என்னை புது வருட சபதம் எடுத்துக்கொண்டு பதிவிட அழைத்திருக்கிறார்கள். அழைப்பு எதானாலும் மறுக்கக்கூடாதல்லவா?

ஆகவே எடுத்த ஒர் உடனடி சபதத்தை ஒலிம்பிக் டார்ச் போல கையிலேந்திக் கொண்டு ஓடோடி வந்தேன். உஸ்..உஸ்..ஒன்றுமில்லை மூச்சு வாங்குகிறது.

வாழ்கையில் இது வரை சபதமெல்லாம் எடுத்ததில்லீங்க. ஏன்னா..அது ரொம்பப் பொல்லாததுங்க. திடீர்ன்னு நம்பள கவுத்துடும். 'எடுத்த சபதம் முடிப்பேன்!' என்று அண்ணாமலை ஸ்டைலில் நம்பளாலெல்லாம் முடிக்க முடியாதுங்க. காரணம் குடும்பம், நேரம்காலம், சூழ்நிலை, ஒத்துழைப்பு இதெல்லாம்தாங்க.

நிறைய சபதங்கள் எடுத்து பாதியிலேயே முறிந்திருக்கிறது. ஆகவே சபதமே எடுக்கக் கூடாது என்றுதான் இதுவரை சபதமெடுத்திருந்தேன். இப்போ கீதாம்மா அழைத்துவிட்டார்களே! அழைத்தவர் குரலுக்கு கண்ணன் மட்டும்தான் வரவேண்டுமா? இந்த நானானியும் வந்துட்டாள்!!

யாருக்கும் தொந்தரவு இல்லாமல், யாரையும் தொந்தரவு செய்யாமல் என்னால் எடுக்கக் கூடிய சபதம்..'ப்ளாக்கில் எழுதுவதை நிறுத்தக் கூடாது. தொடந்து எழுதி எல்லோரையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடவேண்டும்.' இதுதான் என் புத்தாண்டு சபதம்!!!

இது முறியாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நான் வணங்கும் அந்த ஆதிபாராசக்தியின் பொறுப்பு! ஆமாம்!! சரியான கைகளில் பொறுப்பை கொடுத்த நிம்மதியில் என் எழுத்தை தொடர்வேன்.

என் சபதம் ஓகேயா? கீதாம்மா?

இனி நான் சபதமிட நான் அழைக்கும் நால்வர்:

மைஃரெண்ட்
முத்துலெட்சுமி
ரசிகன்
சீனா

Labels:


Tuesday, January 1, 2008

 

இரண்டாயிரத்து எட்டாமாண்டே..வரும்போது. கொண்டு வா!!
WISH YOU A VERY HAPPY NEW YEAR

இருள் விலகி ஒளீ பரவி வசந்தம் வீசி- எங்கும்
மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி
நல்லன எல்லாம் சூழ அல்லன எல்லாம் வீழ
மங்கல வார்த்தைகள் காதினில் ஒலிக்க
சங்கடங்கள் எல்லாம் காததூரம் ஓட
இல்லங்கள் தோறும் இன்பங்கள் நிறைய
பொல்லாத துயரங்கள் ஒவ்வொன்றாய் குறைய
எதிர் வரும் இரண்டாயிரத்து எட்டாமாண்டே
இவையனைத்தையும் கைகளில் கொண்டே வா!
வரும் போது .

புவியெங்கும் பரவிக்கிடக்கும் ப்ளாக் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் குட்டீஸ்களுக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Labels:


 

வல்லமை தாராயோ....!
என்னால் மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும்
மாற்ற முடிந்தவைகளை மாற்றும் தைரியத்தையும் தெம்பையும்
இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளும் அறிவையும்

எனக்கு தந்தருள் இறைவா!!!!!!!!!!!!

வரும் புது வருடத்துக்கான பிரார்த்தனையாக எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக!!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]