Wednesday, December 19, 2007

 

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம்!!


மழலை பேசும் குழந்தைகளோடு உறவாடுவதும் உரையாடுவதும் எனக்குப் பிடித்தமானதொன்று.
அண்ணன் குழந்தைகள், சகோதரிகள் குழந்தைகள், பிற குழந்தைகள் என்றும்,இன்று அவர்களின் குழந்தைகள் என்றும் மழலைகள் சூழ இருப்பதையே மிகவும் விரும்புவேன்.
கள்ளமில்லா அவர்கள் அன்பிலும் சிரிப்பிலும் என்னையே மறந்து விடுவேன்.

குழந்தைகளைக் கவர்வதில் என்னுடைய 'வழியே தனி வழி'. வாரியனைத்து மொச்மொச்சென்று முத்தமிட்டு கொஞ்சுவதில் குழந்தைகள் சில சமயம் மிரண்டுவிடும். அதில் எனக்கு உடன்பாடுமில்லை.
தள்ளி நின்று சிறிது நேரம் அவர்களின் விருப்பம், பேசும் முறை முதலியவற்றை கவனித்து
பிறகு அதே மழலையில் அவர்களின் விருப்பமே என் விருப்பம் என்று நம்பவைத்து அவர்களின் அலைவரிசையில் என்னையும் இணைத்துக்கொள்வேன். கொஞ்ச நேரத்தில் அக்குழந்தை என் மடியில் வந்து அமர்ந்து கொண்டு மழலையில் மிழற்றும் பாருங்கள்...!!!
உள்ளமும் உச்சியும் குளிர்ந்தேபோகும்.

படிக்கும் காலத்தில் பெரும்பாலான நேரத்தை என் அண்ணாச்சி வீட்டில் கழித்துவிட்டு இரவுதான் வீடு திரும்புவேன். அதுவரை சின்ன அண்ணன் குழந்தைகள் என் படுக்கையை சுற்றி உட்கார்ந்து காத்திருக்கும். என்னிடம் கதை கேட்க ஆவலாக. அவர்களை சுற்றி அமரவைத்துக்கொண்டு கதையை ஆரம்பிப்பேன். 'ஒரு ஊரிலே..' என்றோ அல்லது 'ஒரு புலி...ஒரு சிங்கம்...ஒரு கரடி..' என்றோ அந்த நேரத்தில் தோன்றுவதை கோத்து கதை சொல்வேன். அவர்களும் ஆ..! என்று கேட்பார்கள். குறுக்கே கேள்வியெல்லாம் கேட்கமாட்டார்கள். கதை முடிந்ததும் திருப்தியாக தூங்கப்போவார்கள். இது நான் அத்தையாக கதை சொன்ன காலம். அன்று கதை கேட்ட குழந்தைகளின் குழந்தைகள் எல்லாம் இன்று என் செல்லங்கள். இதில் கதை கேட்ட ஒருத்தியின் குழந்தைக்கு ஆச்சியாக கதை சொன்னபோது....சிங்கமும் சுண்டெலியும் கதையை ஒரு மாற்றத்துக்காக புலியும் சுண்டெலியும் என்று ஆரம்பித்ததுதான் தாமதம் பாய்ந்தானே என் மேல் புலி போல்!!!
'ஆச்சி!!!யூ ஆர் ராங்! அது சிங்கமும் சுண்டெலியும்!' என்றெனக்கு வைத்தான் ஆப்பு!
யப்பா...இப்போதுள்ள குழந்தைகளிடம் எந்த ரீலும் சுத்தமுடியாது.

'ஐய! உனக்கு ஒன்னுமே தெரியலை!'
அவன் தன் தாத்தாவிடம் புராணக்கதைகள் எல்லாம் கேட்டு என்னிடம் வந்து மழலையில்
அழகாக சொல்வான். 'இசை மழலை' என்று ராம்ஜி அவர்கள் இப்போதுதான் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறார். நான் அப்போதே 'கதா காலட்ஷேப மழலை' கேட்கும் பேறு பெற்றேன். ராமர் கதையை ஆங்கிலமும் தமிழும் கலந்த மழலையில் சொல்லும்போது லவ குசர்களில் ஒருவன் வந்து சொல்வதுபோலிருக்கும். "ஆதோ! கீர்த்தனாரம்பத்திலே...." மட்டும்தான் இருக்காது.

இராமாயணக் கதை சொன்னவனுக்கு என்ன தருவது என்று யோசித்தபோது...நம்மால் சிவதனுசு எல்லாம் கொடுக்கமுடியுமா? toy shop-ல் ஒரு வில்லும் அம்பும் வாங்கி பரிசளித்தேன். இராமனைப்போல் வில்லை ஒரு தோளில் மாட்டிக்கொண்டு அம்பை கையில் வைத்துக்கொண்டு ராமனைப் போல் போஸ் கொடுத்தான். உடனே க்ளிக்கினோம்.

இரவு வீடு திரும்பி வீட்டிலுள்ள இராமர் படத்தை பார்த்துவிட்டு மறுநாள் அம்மாவிடம் எனக்கு டயல் பண்ணச்சொல்லிக்கேட்டு போனில் என்னிடம்,'ஆச்சி! நாம ராங்கா போஸ் கொடுத்திட்டோம்!'
என்று என்னையும் சேர்த்துக்கொண்டான்.'என்னடா?'என்றால் வலது தோளில் வில்லை மாட்டிக்கொண்டு இடது கையால் அபயம் முத்திரையை காட்டிவிட்டானாம். அட! ராமா..!!

இன்னொரு பேரன், பெங்களூருக்கு அவன் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ஷெல்ப் நிறைய வாங்கி வைத்திருக்கும் போர்டு கேம்ஸ் எல்லாம் அவனோடு விளையாட வேண்டும். நான் வாங்கிப்போவதையும் சேர்த்து. ஒன்றையும் முழுதாக விளையாடமாட்டோம். அம்மம்மா! நெக்ஸ்ட்...நெக்ஸ்ட் என்று எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டுத்தான் ஓய்வோம்.அடுத்தவன் ஒரு பந்தா பார்ட்டி! வீட்டுக்கு வருபவர்கள் யாரோடும் பேசமாட்டான்..என்னைத் தவிர. குழந்தையாயிருக்கும்போதே பார்க்கப் போகும்போதெல்ல்லாம் காட்பரீஸ் நட்டீஸ் வாங்கிப்போவேன். அந்த சாக்லெட்டுக்கே 'அம்மம்மா சாக்கா!' என்று என் பேரே வைத்துவிட்டான் குழந்தை!! ஊருக்குப் போகும்போதெல்லாம் அவனுக்கு சின்னச்சின்ன பரிசுகள் வாங்கிச்செல்வேன். நான் கொடுக்கும் வரை வாய்திறந்து கேட்க மாட்டான். ஆனால் பெட்டியை திறக்கும் போது சுற்றிச்சுற்றி வருவான். கொடுத்ததும் சந்தோஷமாக வாங்க்கிகொள்வான். அதைப்பார்ப்பதில் எனக்கும் சந்தோஷம்!!நான் வந்ததும் எனக்கு சொல்ல நிறைய விஷயங்கள் வைத்திருப்பான். நாங்கள் சுவாரஸ்யமாக உரையாடிக்கொண்டிருப்போம். 'அதற்குள் உங்களிடம் சொல்லிட்டானா?' என்று அவன் தாய் வியந்து போவாள்! சரியான கார் பைத்தியம். லேட்டஸ்ட் கார்கள் வரை விவரங்கள் விரல் நுனியில் வைத்திருப்பான். ஐந்தாறு வயதில் அவனை அழைத்துக்கொண்டு சென்னையிலுள்ள Toy shop-க்கு போனேன் அவன் தந்தை அவனிடம் அங்கெல்லாம் ரொம்ப காஸ்ட்லியாக இருக்கும் அம்மம்மாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லியனுப்பினான். அவன் கடைக்கு வந்து, 'அம்மம்மா! இது காஸ்ட்லியா...இது காஸ்ட்லியா...?' என்று ஒவ்வொன்றாக காட்டிக்காட்டிக் கேட்டது ரொம்ப காஸ்ட்லி!!!!அவனுக்காக அவன் தந்தை சன்னி மொபட் சக்கரங்கள் ,மோட்டர் இவைகளை வைத்து ஒரு மினி அல்லது பேபி பைக் தயார் செய்து கார் டிக்கியில் வைத்து க்ரௌண்ட்டுக்குக்கொண்டுபோய் அங்கு அவன் ஓட்டி மகிழ்வதை பார்த்து மகிழ்ந்தேன்.

அடுத்த சுட்டி, அவன் அப்பா வாங்கிய புது காரின் சாவியை என்னிடம் கொடுத்து 'ஆச்சி காரை எடுத்திட்டு போகப்போறா' என்றதும் ஆச்சியாவது கார் ஓட்டுவதாவது என்று மெத்தனமாக பார்த்துக்கொண்டிருந்தான். நான் கார் கதவைத் திறந்து சாவிபோட்டு ஸ்டார்ட் செய்து கேட் வரை ரிவர்ஸில் உருட்டியதும் அலறிவிட்டான்..'ஹையோ! கொண்டு போறா..'என்று. அது முதல் நான் வாசலில் வருவது தெரிந்ததும், 'அம்மா..! கார் சாவியை ஒளித்து வை. ஆச்சி வாறா..'என்று கூவுவான். எங்களுக்குள் நடக்கும் உரையாடலே கார் சாவியை ஒளித்து வைத்து விட்டால் நீ எப்படி வண்டியை எடுப்பாய்? 'என்னா குட்டி செய்வே?'என்ற ரீதியில்தான்..நடக்கும்.சிகாகோவிலிருந்து செயிண்ட் லூயிஸ் போய் அங்கு மருமகள்(அண்ணன் மகள்) வீட்டில் ஒரு மாதம் தங்கினேன்.அவளின் சின்ன குட்டி இந்தியாவிலிருந்து போகும் போது 'அது அங்க இக்கு' என்று பேசிக்கொண்டு போனவன்...ஒரே வருடம் கழித்து நான் போன போது அருமையான இலக்கண சுத்தமாக ஆங்கிலம் பேசி அசத்தினான். நாம் எது கேட்டாலும்,'பிகாஷ்..(because)' என்று ஆரம்பிக்கும் அழகே அழகு!! அவனோடு அடித்த லூட்டி மறக்க முடியாது. திரும்ப சிகாகோ வந்து எங்கள் வீசாவை மேலும் இரண்டு மாதம் நீடித்த போது மறுபடி ஒரு பத்து நாட்கள் செயிண்ட் லூயிஸ் போக ஆசைப்பட்டேன். அனுப்ப மனமில்லாத சிகாகோ சகோதரியை, 'நாம் எப்போதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்போம். ஆனால் அந்த மழலை இன்னும் இரண்டு வருடங்களில் மாறிவிடும்.மழலயின்பத்தில் திளைக்கவே போக ஆசைப்படுகிறேன்.' என்று அவளை சமாதானப்படுத்திவிட்டு புறப்பட்டேன்.திரும்ப வருகிறேன் என்றதும் மருமகள் காரில் வந்து எங்களை அழைத்துச்சென்றாள்.ஐந்து மணி நேரப் பிரயாணம். சுட்டிகள் என் மேல் பொழிந்த அன்பையும் ஆச்சி என் பக்கத்தில்தான் ஒக்கார வேண்டும் அவர்கள் இசலிக்கொண்டதையும் பார்த்த சகோதரிக்கு நான் ஏன் ஆசைப்பட்டேன் என்பது புரிந்திருக்கும்.

பீச்சில் யாரோ வார்த்த அச்சுக்களை நச்சு நச்சு என்று மிதித்து கலைக்கும் குதூகலம்!

விருமாண்டி ஸ்டைலில் ஒரு ஜல்லிக்கட்டு!


நிஜமான ஒரு விருமாண்டி ஜல்லிக்கட்டு!இனி என் பேரன். கையாலும் ஊம்..ஊம்..என்றும் தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறான்.
அவன் மழலையைக் கேட்க ஆவலாயிருக்கிறேன்.

ஏதாவது ஒரு வழியில் குழந்தைகள் மனதில் ஏறி அமர்ந்து கொள்வேன். என்னைப்பார்க்கும் போதெல்லாம் நான் ஏறி அமர்ந்த வழி அவர்களுக்கும் ஞாபகம் வரும்.அப்போது அவர்களின் சிரிப்பும் சிநேகப்பார்வையும்தான் நான் அடையும் மகிழ்ச்சி!!!

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே...என்று சும்மாவா சொன்னார்கள்?
இது போல் குழந்தைகளோடு நான் கழித்த சுவாரஸ்யமான விஷயங்கள், நான் கடந்து வந்த வழியெங்கும் தெளித்துக் கிடக்கின்றன. படங்களோடு அவற்றையெல்லாம் மற்றொரு பதிவில்
பகிர்ந்து கொள்கிறேன், உங்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில்! சர்தானே!

Labels:


Comments:
//இது போல் குழந்தைகளோடு நான் கழித்த சுவாரஸ்யமான விஷயங்கள், நான் கடந்து வந்த வழியெங்கும் தெளித்துக் கிடக்கின்றன. படங்களோடு அவற்றையெல்லாம் மற்றொரு பதிவில்
பகிர்ந்து கொள்கிறேன், உங்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில்! சர்தானே!//


ஆட்சேபனை உண்டா என்ன - புகுந்து விளையாடுங்கள் - சுட்டி கொடுங்கள் - தவறாது வருகிறேன் - அனுபவிக்க - ரசிக்க - மகிழ

எனக்கும் இரு பெயர்த்திகளூம், ஒரு பெயரனும் அயல் நாட்டில் இருக்கின்றனர். அவர்கள் அடிக்கும் கூத்துகளூம் பேசும் தமிழ் கலந்த ஆங்கில மழலைகளும் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நமக்கு இன்பம் இது தானே!!

எனது துணைவியாரை அவர்கள் அம்மம்மா என்று தான் அழைப்பார்கள். ( தாயின் தாய்) - அம்மம்மா சாக்கோ வும் அந்த ரகம் தானா !!

அமுதூட்டும் போது இளைய பேத்தி ஒன் ஈட்டிங், த்ரீ ஜம்பிங் என்று ஒரு வாய் உண்டு, மூண்று தடவை சோபாவில் ஏறி தரையில் குதிப்பாள்.

மழலைச் சொல் கேளாதவர் பாவம் செய்தவர்.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
 
சீனா அவர்களே! நீங்களும் என்னோட அலைவரிசையில்தான் இருக்கிறீர்கள் போலும். எங்காவது வீடுகளுக்கு விசிட் போனால் பெரியவர்களை விட குழந்தைகளோடு நான் கழிக்கும் நேரமே அதிகம்.சில குழந்தைகள் என்னை 'ஆச்சி என்பார்கள் சிலர் 'அம்மம்மா' என்பார்கள். அம்மாவின் அம்மாவாக இல்லாவிட்டாலும். ஆச்சியைவிட இது லல்லாலே? என் பேரனுக்கும் நான் அம்மம்மாதான்!
 
ஆச்சி எங்கப்பா அடிக்கடி சொல்வாரு "பாட்டி பேத்தி,பேரன் கெமிஸ்ட்ரி முன்னாடி அம்மா அப்பா கூட நிக்க முடியறதில்லை"ன்னு

உண்மைதானே ஆச்சி?
 
ஆயிரம் விழுக்காடு உண்மைதான் நிலா!
உங்களைக்காட்டிக் காட்டியே எத்தனை குழந்தைகளை கவுத்திருக்கிறேன் தெரியுமா?
நிலா..நிலா..அடிக்கடி ஓடி வா!
 
மூச்சிவிடாம முழுசும் வாசிச்சிட்டேன்ல... ரொம்ப அழகா எழுதியிருக்கீங்கம்மா.. குழந்தைகள் என்றாலே நமக்கு இன்பம் கொடுப்பவர்கள் தானே. காணமுடியும் தெய்வம் தானே.

நெறையா எழுதுங்க!
 
ரொம்ப நல்லாருக்கு ... சுவாரசியமாவும் இருக்கு.

என் பொண்ணு ஆச்சி வந்தா எங்களை விட்டுட்டு அங்க போய் தூங்க போயிடுவா கோயிலில் எந்தசிலை பாத்தாலும் இந்த சாமிய பாத்துக்கோங்க ஆச்சி இன்னைக்கு ராத்திரி இந்த சாமி கதைசொல்லனும்ன்னு பேசி வச்சிக்குவா.. என் பையனுக்கு தாத்தா தான் வேணுமாம்.. :)
 
********* இது பிரசுரிக்க அல்ல உங்கள் பார்வைக்கு மட்டும்..******** வலைச்சரம் எழுதறீங்களா?

**************

எனக்கு மடலிடுங்களேன்.. muthuletchumi@gmail.com
 
நன்றி! முத்துலெட்சுமி!
என் பேரன் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்ததும் என்னென்ன லூட்டி அடிக்கப்போகிறானோ? மழலையில் கரைவது பேரின்பம்தான்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]