Monday, December 31, 2007

 

நான் எப்போதும் நானாகவே இருப்பேன்.


யார் வேண்டாமென்றது? நீ எப்போதும் நீயாகத்தானிருக்க வேண்டும் என்கிறீர்களா? சர்தான்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இருபது வயதில் ஒரு சமயம் மனம் குழம்பியிருந்தபோது
என் தந்தை என்னிடம் கூறிய மந்திரம். அப்பன் சொன்ன மந்திரம். 'எப்போதும் போல் நீ நீயாகவே இரு!'

சுருங்கச் சொன்ன இம்மந்திரத்தினுள் எவ்ளோ அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன!!! அப்பொது மேலோட்டமாக புரிந்த எனக்கு வயது ஏற ஏற அதன் ஆழம் புரியவாரம்பித்தது.

நான் யார்..எப்படி இருப்பேன்? யார் என்ன செய்தாலும் சொன்னாலும் தோளில் தூசு மாதிரி தட்டிவிட்டுக்கொண்டு போய்கொண்டேயிருப்பேன். அண்ணன் தனிக்குடித்தனம் போனதும்..கோபித்துகொண்டு அல்ல வீட்டில் இடவசதி இல்லாததால் அங்கு பாதி நேரம் இங்கு பாதி நேரம் என்று இருப்பேன். அப்போது இங்கு நடப்பதை அங்கு சொல்ல மாட்டேன்..அங்கு நடப்பதை இங்கு சொல்லமாட்டேன். அதனால் இருவீடுகளுக்குமிடையே ஒரு பாலமாக இருந்தேன் என்று அப்பாவிடமே பாராட்டும் பெற்றிருக்கிறேன்.

ஆனால் சில குறும்புகள் மட்டும் செய்வேன்.பொங்கலுக்கு மறு நாள் ஆற்றங்கரைக்குப் போவது வழக்கம்..கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு. அப்போது அப்பாவிடம் போய், 'அண்ணாச்சி ஆத்துக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள்.' என்பேன். அப்பாவும்,'அவனே வரானா அப்ப போகலாம்.'என்பார்கள். அண்ணாச்சியிடம் போய்,'அப்பாவும் ஆத்துக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார்கள்.' என்பேன். அவரும்,'அப்பா வருகிறார்களா? அப்ப கட்டாயம் போலாம்.' என்பார்கள். காரணம் அம்மாவுக்குப் பிறகு அப்பா அவ்வளவு சுலபத்தில் எங்கும் வரமாட்டார்கள். ஆகவே இப்படி தில்லுமுல்லு செய்துதான் எல்லோரையும் கிளப்பி இரண்டு கார்களில் மணிமுத்தாறு, பாபநாசம் என்று போய்வருவோம்.

அதேபோல் திருமணமான உடன் யாரும் சொல்லாமல் நானே என் மனதுக்குள் எடுத்துக்கொண்ட உறுதி மொழி....எக்காரணம் கொண்டும் சகோதர சகோதரி உறவுக்குள் என்னால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பது. இன்று வரை அதைக் கடைப்பிடித்து வருகிறேன். புகுந்த வீட்டு உறவுகள் என் வீட்டிற்கு எந்த தயக்கமும் இல்லாமல் ஆசையோடு வருவார்கள். சிங்கள் பெட்ரூம் வீட்டில் நாங்கள் இருந்த காலத்தில்..செல்விருந்தும்..வருவிருந்துமாக ஜேஜே என்றிருந்த்தை இப்போது நினைத்தாலும் சந்தோஷ மலைப்பாக இருக்கிறது. தேனி போல் சுறுசுறுப்பாக இருந்த காலம்!!!இப்போது அப்படியில்லையா....என்ன..கொஞ்சம் சுறுசுறுப்பு குறைந்த தேனிதான்.

ஆனால் தேனியைப்போல ஒரு கோமாளி ஏமாளி யாரும் கிடையாது. ஓடியாடி பறந்து திரிந்து
சேகரித்ததை ஒரே நாளில் எவனோ நோவாமல் லாவிக்கொண்டு போகும் பரிதாபம்.

யாருக்கும் எந்த உதவி என்றாலும் ரங்கமணியும் நானும் முதலில் நிற்போம். உதவி பெற்றவர்கள் பின்னர் அதை கண்டுக்காமல் போகும்போது...ரங்கமணி,'நாம் எப்போதும் போல் நம்மால் முடிந்ததை மற்றவர்க்கு செய்வோம். அவரவர் மனசு போல் அவரவர்க்கு கிடைக்கும்.' என்பார்.

'அப்பா!!'நீங்கள் சொன்னது போல் இத்தனைக் காலமும் நான் நானாகவே இருந்திருக்கிறேனா?
உங்கள் ஆசியால் அப்படித்தான் இருந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

வெளிநாட்டுக் கடையொன்றில் நான் பார்த்த தேனி மெழுகுவர்த்தியும் அதோடு கிடைத்த ' bee yourself' 'bee happy' என்ற கிரிஸ்டலும் அப்பாவை ஞாபகப்படுத்தியதால் ஆசையோடு வாங்கினேன். அதற்காக ஒரு தட்டும் வாங்கி செட் பண்ணினேன். பெரிதாக்கிப் பார்த்தால் எழுத்துக்கள் தெளிவாகத்தெரியும்.

தேனிபோல் ஏமாளியாக இல்லாமல் சுறுசுறுப்பாகவும் நீ நீயாகவும் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதே என் புது வருட பொன்....ஹூஹும்..தேன்மொழி!!!!

எல்லோரும் சுறுசுறுப்பாக ஹாப்பியாக இருக்க என் வாழ்த்துக்கள்!!!!

Labels:


Sunday, December 30, 2007

 

இவையெல்லாம் என்ன..என்ன..என்னென்ன..?


இவையெல்லாம் என்ன தெரிகிறதா? மீன் தொட்டியில் நீந்தும் மீன்களா? அல்ல. சுவற்றில் ஊறும் பல்லிகளா? அல்லவே அல்ல.

காட்டு மிருகங்களின் கொம்புகளிலிருந்து செய்யப்பட்ட விதவிதமான கரண்டிகள்!!!
இப்ப தெரியுதா?

சிகாகோ மியூசியத்தில் சுட்டது.

Labels:


 

ஏ..ஆத்தா..ரோட்டோரமா...அட!!ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் தளம் எப்போது ரோட்டோரமா வந்தது?
பேந்துட்டீங்களா...?

ச்சும்மா..வருசம் முடியப்போகுதில்ல? அதான் ஒரு மொக்கைப்பதிவு.ஹி..ஹி..!

Labels:


Monday, December 24, 2007

 

ஏசுபிரான் அவதரித்த நன்னாள்உலக மக்கள் எல்லோரும் உய்ய கடவுளின் தூதராக, அன்னை மேரியின் தெய்வ பாலனாக ஏசுபிரான் இம்மண்ணில் பிறந்த இந்நன்னாளில் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மற்றும்

மேய்ப்பர் பிறந்த நாளில் வலைப்பதிவுகளை மேய்பவர்களுக்கும்

என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

மதபேதம் இல்லாது என் பூஜையில் வைத்து வழிபடும் அன்னைமேரியும் குழந்தை ஜீசஸும் குட்டி தேவதைகளும் உங்களுக்கு எல்லா நலன்களும் வழங்கட்டும்

Labels:


Sunday, December 23, 2007

 

வாரயிறுதியில் மக்களின் சரணாலயம்
மார்கழி மாதம்..!விடியுமுன் குளித்து கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டவுடன், பூவரசு இலையைப் பறித்து அதில் சுடச்சுட தயிர்சாதம் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? சின்ன வயதில் எங்கள் ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் அதிகாலையில் இதற்காகவே ஓடுவோம். அந்த மகிழ்ச்சி இப்போது இல்லையே ஏன்?
சனி ஞாயறுகளில் காலை பத்து மணியளவில் சான்ப்ரான்ஸிஸ்கோவிலுள்ள லிவர்மோர் நோக்கி கார்கள் சர்சர்ரென்று பறக்கும். அவ்வளவும் இந்தியர்களின்..அதுவும் தென்னிந்தியர்களின் கார்களாகத்தானிருக்கும். காரணம்..? கோவில். சுவாமி தரிசனம் செய்யவா..? அதுவும்தான்.மற்றது சுவையான சாப்பாடு...இல்லையில்லை பிரசாதங்கள்!!


அங்கு கோவிலில் தரும் பிரசாதங்கள் தவிர பக்தர்கள் கொண்டுவரும் புளிசாதம்,தயிர்சாதம்,கேசரி,வெண்பொங்கல்,சர்க்கரைப்பொங்கல் போன்றவைகள் அழகாக அலுமினியம் பாஃயில் ட்ரேயில் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தபின் வெளியில் டேபிள்களில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். நாம் தரிசனம் முடித்து வெளிவந்து வரிசையாக வைக்கப்ப்ட்டிருக்கும் பிரசாதங்களை பஃபே சிஸ்டமாக பேப்பர் தட்டு, ஸ்பூன், கிண்ணம் என்று நாமே வேண்டியதை...வேண்டியதென்ன? எல்லாமேதான் வாரிப்போட்டுக்கொண்டு ஒரு கட்டு கட்டலாம்.

இதுக்காக...இதுக்காகவேதான் அந்தக் கூட்டம்! குடும்பம் குடும்பமாகவும் பிரம்மச்சாரிகளும்
பறந்து வந்து சரணடையும் ஆலயம்!!கோவில் பிரசாதமாக சாம்பார்சாதம் அல்லது புலாவ் ம்ற்றும் தயிர்சாதம் காலியாக காலியாக நிரப்பிக்கொண்டேயிருப்பார்கள். பக்தர்கள் கொண்டுவரும் விதவிதமான பிரசாதங்கள் ட்ரே ட்ரேயாக வந்து கொண்டேயிருக்கும். எவ்வளவு உல்லாசமான திவ்வியமான சிவாமி தரிசனம்!பல சுவைகளில் ஹோம்மேட் சாப்பாடுகளை உற்சாகமாக சுவைக்கலாம்!

நாங்கள் வேண்டுதலாக நூற்றியெட்டு மோதகம்-கொழுக்கட்டைகள் செய்து விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து பின் டேபிளில் கொண்டு வைத்ததுதான் தாமதம், 'ஹை! கொழுக்கட்டை!'என்று எல்லோரும் ஆசையாசையாக எல்லோருக்கும் கிடைக்கவேண்டுமென்று ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு எடுத்துக்கொண்டு விரும்பி சாப்பிட்டது கண்டு மகிழ்ந்தோம்.

விடுமுறை நாளில் ஹோட்டலுக்கு சென்றால் செலவுதான். மேலும் நமது சாப்பாடு அதுவும் பிரசாதம்.. வீடுகளில் செய்தது..என்னும் போது அது ஒரு அலாதி சுவைதானே!!

லிவர்மூரில்தான் இப்படி அருமையான சாப்பாடு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் சிகாகோநகரில் உள்ள கோவிலில் இப்படியில்லை. சுவாமிதரிசனம் முடிந்து கீழே வந்து பிரசாதங்களை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டுயுள்ளது.

Labels:


Saturday, December 22, 2007

 

மோர் மிளகாய் இட்லிப்பொடி!!உள்ளம் கேட்குமே மோர்!!


இந்த கிச்சன் கில்லாடி..ஹா..ஹா..ஹி..ஹி..சொல்ல மறந்த ஒரு இட்லிப்பொடி, மோர்மிளகாய் இட்லிப்பொடி.

காரமாய் சாப்பிடும் ஓர் உறவினர் என் இல்லம் ஏகிய போது( செந்தமிழு...!?)அவருக்காக மனதில் உதித்தது இந்தப் பொடி.

மோர்மிளகாயை எண்ணெயில் நன்கு கருக பொரித்து எடுத்துக்கொண்டு அதோடு வெறும் கடாயில் வறுத்த கடலைப் பருப்பு,உளுத்தம்பருப்பு மற்றும் பொரித்த கறிவேப்பிலை எல்லாவற்றையும்
மிக்ஸியில் நன்றாக பொடிசெய்து கொண்டு இட்லி தோசையோடு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கலந்தடித்தால் அந்த உறவினர் போல் சொக்கியே.......போவீர்கள்!

Labels:


Wednesday, December 19, 2007

 

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம்!!


மழலை பேசும் குழந்தைகளோடு உறவாடுவதும் உரையாடுவதும் எனக்குப் பிடித்தமானதொன்று.
அண்ணன் குழந்தைகள், சகோதரிகள் குழந்தைகள், பிற குழந்தைகள் என்றும்,இன்று அவர்களின் குழந்தைகள் என்றும் மழலைகள் சூழ இருப்பதையே மிகவும் விரும்புவேன்.
கள்ளமில்லா அவர்கள் அன்பிலும் சிரிப்பிலும் என்னையே மறந்து விடுவேன்.

குழந்தைகளைக் கவர்வதில் என்னுடைய 'வழியே தனி வழி'. வாரியனைத்து மொச்மொச்சென்று முத்தமிட்டு கொஞ்சுவதில் குழந்தைகள் சில சமயம் மிரண்டுவிடும். அதில் எனக்கு உடன்பாடுமில்லை.
தள்ளி நின்று சிறிது நேரம் அவர்களின் விருப்பம், பேசும் முறை முதலியவற்றை கவனித்து
பிறகு அதே மழலையில் அவர்களின் விருப்பமே என் விருப்பம் என்று நம்பவைத்து அவர்களின் அலைவரிசையில் என்னையும் இணைத்துக்கொள்வேன். கொஞ்ச நேரத்தில் அக்குழந்தை என் மடியில் வந்து அமர்ந்து கொண்டு மழலையில் மிழற்றும் பாருங்கள்...!!!
உள்ளமும் உச்சியும் குளிர்ந்தேபோகும்.

படிக்கும் காலத்தில் பெரும்பாலான நேரத்தை என் அண்ணாச்சி வீட்டில் கழித்துவிட்டு இரவுதான் வீடு திரும்புவேன். அதுவரை சின்ன அண்ணன் குழந்தைகள் என் படுக்கையை சுற்றி உட்கார்ந்து காத்திருக்கும். என்னிடம் கதை கேட்க ஆவலாக. அவர்களை சுற்றி அமரவைத்துக்கொண்டு கதையை ஆரம்பிப்பேன். 'ஒரு ஊரிலே..' என்றோ அல்லது 'ஒரு புலி...ஒரு சிங்கம்...ஒரு கரடி..' என்றோ அந்த நேரத்தில் தோன்றுவதை கோத்து கதை சொல்வேன். அவர்களும் ஆ..! என்று கேட்பார்கள். குறுக்கே கேள்வியெல்லாம் கேட்கமாட்டார்கள். கதை முடிந்ததும் திருப்தியாக தூங்கப்போவார்கள். இது நான் அத்தையாக கதை சொன்ன காலம். அன்று கதை கேட்ட குழந்தைகளின் குழந்தைகள் எல்லாம் இன்று என் செல்லங்கள். இதில் கதை கேட்ட ஒருத்தியின் குழந்தைக்கு ஆச்சியாக கதை சொன்னபோது....சிங்கமும் சுண்டெலியும் கதையை ஒரு மாற்றத்துக்காக புலியும் சுண்டெலியும் என்று ஆரம்பித்ததுதான் தாமதம் பாய்ந்தானே என் மேல் புலி போல்!!!
'ஆச்சி!!!யூ ஆர் ராங்! அது சிங்கமும் சுண்டெலியும்!' என்றெனக்கு வைத்தான் ஆப்பு!
யப்பா...இப்போதுள்ள குழந்தைகளிடம் எந்த ரீலும் சுத்தமுடியாது.

'ஐய! உனக்கு ஒன்னுமே தெரியலை!'
அவன் தன் தாத்தாவிடம் புராணக்கதைகள் எல்லாம் கேட்டு என்னிடம் வந்து மழலையில்
அழகாக சொல்வான். 'இசை மழலை' என்று ராம்ஜி அவர்கள் இப்போதுதான் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறார். நான் அப்போதே 'கதா காலட்ஷேப மழலை' கேட்கும் பேறு பெற்றேன். ராமர் கதையை ஆங்கிலமும் தமிழும் கலந்த மழலையில் சொல்லும்போது லவ குசர்களில் ஒருவன் வந்து சொல்வதுபோலிருக்கும். "ஆதோ! கீர்த்தனாரம்பத்திலே...." மட்டும்தான் இருக்காது.

இராமாயணக் கதை சொன்னவனுக்கு என்ன தருவது என்று யோசித்தபோது...நம்மால் சிவதனுசு எல்லாம் கொடுக்கமுடியுமா? toy shop-ல் ஒரு வில்லும் அம்பும் வாங்கி பரிசளித்தேன். இராமனைப்போல் வில்லை ஒரு தோளில் மாட்டிக்கொண்டு அம்பை கையில் வைத்துக்கொண்டு ராமனைப் போல் போஸ் கொடுத்தான். உடனே க்ளிக்கினோம்.

இரவு வீடு திரும்பி வீட்டிலுள்ள இராமர் படத்தை பார்த்துவிட்டு மறுநாள் அம்மாவிடம் எனக்கு டயல் பண்ணச்சொல்லிக்கேட்டு போனில் என்னிடம்,'ஆச்சி! நாம ராங்கா போஸ் கொடுத்திட்டோம்!'
என்று என்னையும் சேர்த்துக்கொண்டான்.'என்னடா?'என்றால் வலது தோளில் வில்லை மாட்டிக்கொண்டு இடது கையால் அபயம் முத்திரையை காட்டிவிட்டானாம். அட! ராமா..!!

இன்னொரு பேரன், பெங்களூருக்கு அவன் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ஷெல்ப் நிறைய வாங்கி வைத்திருக்கும் போர்டு கேம்ஸ் எல்லாம் அவனோடு விளையாட வேண்டும். நான் வாங்கிப்போவதையும் சேர்த்து. ஒன்றையும் முழுதாக விளையாடமாட்டோம். அம்மம்மா! நெக்ஸ்ட்...நெக்ஸ்ட் என்று எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டுத்தான் ஓய்வோம்.அடுத்தவன் ஒரு பந்தா பார்ட்டி! வீட்டுக்கு வருபவர்கள் யாரோடும் பேசமாட்டான்..என்னைத் தவிர. குழந்தையாயிருக்கும்போதே பார்க்கப் போகும்போதெல்ல்லாம் காட்பரீஸ் நட்டீஸ் வாங்கிப்போவேன். அந்த சாக்லெட்டுக்கே 'அம்மம்மா சாக்கா!' என்று என் பேரே வைத்துவிட்டான் குழந்தை!! ஊருக்குப் போகும்போதெல்லாம் அவனுக்கு சின்னச்சின்ன பரிசுகள் வாங்கிச்செல்வேன். நான் கொடுக்கும் வரை வாய்திறந்து கேட்க மாட்டான். ஆனால் பெட்டியை திறக்கும் போது சுற்றிச்சுற்றி வருவான். கொடுத்ததும் சந்தோஷமாக வாங்க்கிகொள்வான். அதைப்பார்ப்பதில் எனக்கும் சந்தோஷம்!!நான் வந்ததும் எனக்கு சொல்ல நிறைய விஷயங்கள் வைத்திருப்பான். நாங்கள் சுவாரஸ்யமாக உரையாடிக்கொண்டிருப்போம். 'அதற்குள் உங்களிடம் சொல்லிட்டானா?' என்று அவன் தாய் வியந்து போவாள்! சரியான கார் பைத்தியம். லேட்டஸ்ட் கார்கள் வரை விவரங்கள் விரல் நுனியில் வைத்திருப்பான். ஐந்தாறு வயதில் அவனை அழைத்துக்கொண்டு சென்னையிலுள்ள Toy shop-க்கு போனேன் அவன் தந்தை அவனிடம் அங்கெல்லாம் ரொம்ப காஸ்ட்லியாக இருக்கும் அம்மம்மாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லியனுப்பினான். அவன் கடைக்கு வந்து, 'அம்மம்மா! இது காஸ்ட்லியா...இது காஸ்ட்லியா...?' என்று ஒவ்வொன்றாக காட்டிக்காட்டிக் கேட்டது ரொம்ப காஸ்ட்லி!!!!அவனுக்காக அவன் தந்தை சன்னி மொபட் சக்கரங்கள் ,மோட்டர் இவைகளை வைத்து ஒரு மினி அல்லது பேபி பைக் தயார் செய்து கார் டிக்கியில் வைத்து க்ரௌண்ட்டுக்குக்கொண்டுபோய் அங்கு அவன் ஓட்டி மகிழ்வதை பார்த்து மகிழ்ந்தேன்.

அடுத்த சுட்டி, அவன் அப்பா வாங்கிய புது காரின் சாவியை என்னிடம் கொடுத்து 'ஆச்சி காரை எடுத்திட்டு போகப்போறா' என்றதும் ஆச்சியாவது கார் ஓட்டுவதாவது என்று மெத்தனமாக பார்த்துக்கொண்டிருந்தான். நான் கார் கதவைத் திறந்து சாவிபோட்டு ஸ்டார்ட் செய்து கேட் வரை ரிவர்ஸில் உருட்டியதும் அலறிவிட்டான்..'ஹையோ! கொண்டு போறா..'என்று. அது முதல் நான் வாசலில் வருவது தெரிந்ததும், 'அம்மா..! கார் சாவியை ஒளித்து வை. ஆச்சி வாறா..'என்று கூவுவான். எங்களுக்குள் நடக்கும் உரையாடலே கார் சாவியை ஒளித்து வைத்து விட்டால் நீ எப்படி வண்டியை எடுப்பாய்? 'என்னா குட்டி செய்வே?'என்ற ரீதியில்தான்..நடக்கும்.சிகாகோவிலிருந்து செயிண்ட் லூயிஸ் போய் அங்கு மருமகள்(அண்ணன் மகள்) வீட்டில் ஒரு மாதம் தங்கினேன்.அவளின் சின்ன குட்டி இந்தியாவிலிருந்து போகும் போது 'அது அங்க இக்கு' என்று பேசிக்கொண்டு போனவன்...ஒரே வருடம் கழித்து நான் போன போது அருமையான இலக்கண சுத்தமாக ஆங்கிலம் பேசி அசத்தினான். நாம் எது கேட்டாலும்,'பிகாஷ்..(because)' என்று ஆரம்பிக்கும் அழகே அழகு!! அவனோடு அடித்த லூட்டி மறக்க முடியாது. திரும்ப சிகாகோ வந்து எங்கள் வீசாவை மேலும் இரண்டு மாதம் நீடித்த போது மறுபடி ஒரு பத்து நாட்கள் செயிண்ட் லூயிஸ் போக ஆசைப்பட்டேன். அனுப்ப மனமில்லாத சிகாகோ சகோதரியை, 'நாம் எப்போதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்போம். ஆனால் அந்த மழலை இன்னும் இரண்டு வருடங்களில் மாறிவிடும்.மழலயின்பத்தில் திளைக்கவே போக ஆசைப்படுகிறேன்.' என்று அவளை சமாதானப்படுத்திவிட்டு புறப்பட்டேன்.திரும்ப வருகிறேன் என்றதும் மருமகள் காரில் வந்து எங்களை அழைத்துச்சென்றாள்.ஐந்து மணி நேரப் பிரயாணம். சுட்டிகள் என் மேல் பொழிந்த அன்பையும் ஆச்சி என் பக்கத்தில்தான் ஒக்கார வேண்டும் அவர்கள் இசலிக்கொண்டதையும் பார்த்த சகோதரிக்கு நான் ஏன் ஆசைப்பட்டேன் என்பது புரிந்திருக்கும்.

பீச்சில் யாரோ வார்த்த அச்சுக்களை நச்சு நச்சு என்று மிதித்து கலைக்கும் குதூகலம்!

விருமாண்டி ஸ்டைலில் ஒரு ஜல்லிக்கட்டு!


நிஜமான ஒரு விருமாண்டி ஜல்லிக்கட்டு!இனி என் பேரன். கையாலும் ஊம்..ஊம்..என்றும் தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறான்.
அவன் மழலையைக் கேட்க ஆவலாயிருக்கிறேன்.

ஏதாவது ஒரு வழியில் குழந்தைகள் மனதில் ஏறி அமர்ந்து கொள்வேன். என்னைப்பார்க்கும் போதெல்லாம் நான் ஏறி அமர்ந்த வழி அவர்களுக்கும் ஞாபகம் வரும்.அப்போது அவர்களின் சிரிப்பும் சிநேகப்பார்வையும்தான் நான் அடையும் மகிழ்ச்சி!!!

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே...என்று சும்மாவா சொன்னார்கள்?
இது போல் குழந்தைகளோடு நான் கழித்த சுவாரஸ்யமான விஷயங்கள், நான் கடந்து வந்த வழியெங்கும் தெளித்துக் கிடக்கின்றன. படங்களோடு அவற்றையெல்லாம் மற்றொரு பதிவில்
பகிர்ந்து கொள்கிறேன், உங்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில்! சர்தானே!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]