Sunday, December 23, 2007

 

வாரயிறுதியில் மக்களின் சரணாலயம்
மார்கழி மாதம்..!விடியுமுன் குளித்து கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டவுடன், பூவரசு இலையைப் பறித்து அதில் சுடச்சுட தயிர்சாதம் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? சின்ன வயதில் எங்கள் ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் அதிகாலையில் இதற்காகவே ஓடுவோம். அந்த மகிழ்ச்சி இப்போது இல்லையே ஏன்?
சனி ஞாயறுகளில் காலை பத்து மணியளவில் சான்ப்ரான்ஸிஸ்கோவிலுள்ள லிவர்மோர் நோக்கி கார்கள் சர்சர்ரென்று பறக்கும். அவ்வளவும் இந்தியர்களின்..அதுவும் தென்னிந்தியர்களின் கார்களாகத்தானிருக்கும். காரணம்..? கோவில். சுவாமி தரிசனம் செய்யவா..? அதுவும்தான்.மற்றது சுவையான சாப்பாடு...இல்லையில்லை பிரசாதங்கள்!!


அங்கு கோவிலில் தரும் பிரசாதங்கள் தவிர பக்தர்கள் கொண்டுவரும் புளிசாதம்,தயிர்சாதம்,கேசரி,வெண்பொங்கல்,சர்க்கரைப்பொங்கல் போன்றவைகள் அழகாக அலுமினியம் பாஃயில் ட்ரேயில் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தபின் வெளியில் டேபிள்களில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். நாம் தரிசனம் முடித்து வெளிவந்து வரிசையாக வைக்கப்ப்ட்டிருக்கும் பிரசாதங்களை பஃபே சிஸ்டமாக பேப்பர் தட்டு, ஸ்பூன், கிண்ணம் என்று நாமே வேண்டியதை...வேண்டியதென்ன? எல்லாமேதான் வாரிப்போட்டுக்கொண்டு ஒரு கட்டு கட்டலாம்.

இதுக்காக...இதுக்காகவேதான் அந்தக் கூட்டம்! குடும்பம் குடும்பமாகவும் பிரம்மச்சாரிகளும்
பறந்து வந்து சரணடையும் ஆலயம்!!கோவில் பிரசாதமாக சாம்பார்சாதம் அல்லது புலாவ் ம்ற்றும் தயிர்சாதம் காலியாக காலியாக நிரப்பிக்கொண்டேயிருப்பார்கள். பக்தர்கள் கொண்டுவரும் விதவிதமான பிரசாதங்கள் ட்ரே ட்ரேயாக வந்து கொண்டேயிருக்கும். எவ்வளவு உல்லாசமான திவ்வியமான சிவாமி தரிசனம்!பல சுவைகளில் ஹோம்மேட் சாப்பாடுகளை உற்சாகமாக சுவைக்கலாம்!

நாங்கள் வேண்டுதலாக நூற்றியெட்டு மோதகம்-கொழுக்கட்டைகள் செய்து விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து பின் டேபிளில் கொண்டு வைத்ததுதான் தாமதம், 'ஹை! கொழுக்கட்டை!'என்று எல்லோரும் ஆசையாசையாக எல்லோருக்கும் கிடைக்கவேண்டுமென்று ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு எடுத்துக்கொண்டு விரும்பி சாப்பிட்டது கண்டு மகிழ்ந்தோம்.

விடுமுறை நாளில் ஹோட்டலுக்கு சென்றால் செலவுதான். மேலும் நமது சாப்பாடு அதுவும் பிரசாதம்.. வீடுகளில் செய்தது..என்னும் போது அது ஒரு அலாதி சுவைதானே!!

லிவர்மூரில்தான் இப்படி அருமையான சாப்பாடு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் சிகாகோநகரில் உள்ள கோவிலில் இப்படியில்லை. சுவாமிதரிசனம் முடிந்து கீழே வந்து பிரசாதங்களை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டுயுள்ளது.

Labels:


Comments:
கோவிலில் பிரசாதம் சாப்பிடுவதென்பது இன்பத்திலும் இன்பம். variety யாக சாப்பிடலாம். கொழுக்கட்டை எனக்கில்லையா ?
 
சீனா!
கோவில் பிரசாதம் என்று கிள்ளிக்கொடுத்தாலும் அதன் ருசியே தனிதான்.கொழுக்கட்டை உங்களுக்கில்லாததா. அடுத்தமுறை 108 கொழுக்கட்டை செய்யும் போது கட்டாயம் சொல்வேன்,தருவேன்.சேரியா?
 
கோபுர தரிசனம் கோடி புண்ணியம். நல்ல பதிவு.
 
உண்மைதான் மங்களூர் சிவா!
உள்ளேயும் சென்று பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள்.
நன்றி சிவா!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]