Monday, October 15, 2007

 

நானொரு பொறுக்கி

ஆமாங்க, பொறுக்கிதான்.....அதுவும் crab apple பொறுக்கி.

கலிபோர்னியாவிலிருந்தபோது எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் சுற்றிலும் நிறைய பழமரங்கள் குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு பூத்து காய்த்து கனிந்து கவருவாரின்றி பூமிமாதாவிடமே தஞ்சமென்று பொத்..பொத்தென்று வீழ்ந்து கிடக்கும். என்ன கொடுமை சரவணன் இது. கலிபோர்னியா ஆரஞ்சுக்கு பேர் பெற்றது. ஆப்பிளும் ஆரஞ்சும் ஒவ்வொன்றும் நம் ஊரைவிட ஒன்றரை மடங்கு பெரிதாயிருக்கும். பார்க்கப்பார்க்க வயிற்றெரிச்சலாயிருக்கும். இங்கு நாம் 15ரூ 20ரூ
என்று வாங்குவது,இப்படி வீணாவது. கேட்டால் அவையெல்லாம் அழகுக்காக வளர்ப்பவையாம்.

நம்ப ஊரில் அண்ணா யூனிவர்சிட்டி, தியசாபிகல் சொசைடி போன்ற இடங்கள் எல்லாம் சோலையாயிருக்கும், ஆனால் அவற்றில் ஒன்று கூட வாயில் போடக்கூடிய வஸ்துக்கள்,பூ,காய், கனி எதுவும் தராது. அவை தரக்கூடியதெல்லாம் நிழல்..நிழல்..நிழல்தான்.

சன்னிவேலில் எங்கள் அப்பார்ட்மெண்ட்டிலிருந்து கார் பார்கிங் போகும் வழியில் ஓரிடத்தில் ஒரு மரத்தடியில் சிறு சிறு
பழங்கள் மரத்திலிருந்து உதிர்ந்து சிதறிக்கிடந்தன. ஒன்றை எடுத்து கடித்துப்பார்த்தேன். அதற்குள் இதைப்பார்த்துவிட்ட
என் மகள்,'அம்மா! அம்மா! அது என்ன பழமோ வேண்டாம். ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்னாவது என்று
கூவினாள். இங்கிருந்தால் நாம் சொல்வதை பிள்ளைகள் கேட்கும். ஆனால் அங்கு நாம்தான் 'கீழ்படிதலுள்ள அன்னையாயிருக்கவேண்டும்'. இதுவும் என்ன கொடுமை சரவணன்? ஸோ.. பேசாமல் வந்துவிடேன்.


ஆனால் மனதுக்குள் ஒரு நண்டு பிறாண்டிக்கொண்டேயிருந்தது. காரணம் கடித்த அந்த மினி ஆப்பிள் போன்றிருந்த அந்தப் பழம்!! அதன் ருசி!! ஆப்பிளும் நெல்லிக்காயும் கலந்த ஒரு ருசி. ஆஹா! இதில் தொக்கு செய்தால் எப்படி இருக்கும்?
புலம்ப ஆரம்பித்தேன். என் புலம்பலும் அலம்பலும் தாங்காமல் அனுமதி கொடுத்தாள். சரி..சரி.. சாயங்காலம் ஐந்தரை மணிக்கு மேல் போய் 'பொறுக்கலாம்' அப்போதுதான் ஆள் நடமாட்டம் இருக்காது என்றாள். என்னடாயிது? நம் ஊரில் பச்சை
மரத்தையே பட்டப்பகலில் நம் கண் முன்னே கூசாமல் வெட்டி சாய்ப்பார்கள். இங்கு கீழே விழுந்து வீணாகும் பழத்தைப் பொறுக்க இந்தப்பாடா?

மாலையில், நெல்லிக்காய் சைஸில் ஆப்பிள் போலிருந்த....அந்தப்பழத்தை crab apple -ஆம் அதன் பெயர், பொறுக்கவாரம்பித்தோம். சின்ன safeway cover நிறைய பொறுக்கி திருப்தியோடு வீடு திரும்பினேன். பிறாண்டலும் நின்றது.

மினி ஆப்பிள் போன்றிருந்த பழங்களை கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்தேன். ஆறு கப் தேறியது
அடுப்பில் எண்ணை காய வைத்து கடுகு தாளித்து பெருங்காயம் சேர்த்து, அரைத்த விழுதை கலந்து கொதிக்க வைத்தேன்.
கொதிக்கும் போது மஞ்சள்பொடி, மிளகாய்பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு தீயில் வத்த விட்டேன். அப்பபோ கிண்டி
விடவேண்டும். சிறிதுசிறிதாக எண்ணையும் விடவேண்டும். நன்றாக வற்றி எண்ணை வெளிவந்தவுடன் அடுப்பிலிருந்து
இறக்கிவிடலாம் நன்றாக ஆறியவுடன் சிறிது எலுமிச்சை சாறும் ஊறுகாய் மசாலா(கடுகு,வெந்தயம் வறுத்து பொடித்தது)
சேர்த்து கலந்து சுத்தமான பாட்டிலில் மாற்றி fridge-ல் வைத்து உபயோகிக்கலாம். இதுவும் 'சுவாதி நட்சத்திரம்' மாதிரிதான்
எதோடும் உறவாடும்.

இரவு இட்லிக்கு தொட்டுக்குள்ள க்ராப் ஆப்பிள் தொக்கு வைத்தேன்,,,made of what என்று சொல்லாமலே. என்னோட தங்கமணியும் மகளோட தங்கமணியும் அடிபிடியென்று அரை பாட்டிலை காலி.....செய்தார்கள். இது என்ன தொக்கு என்றபோது.....'இது....பொறுக்கின தொக்கு' என்றோம் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கள்ளச்சிரிப்பு சிரித்தபடி!!!


Labels:


Comments:
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,பொறுக்கி சாப்பிடுற அளவுக்கு ஆப்பிள் உங்க வீட்டு முன்னாடி கொட்டிக் கிடக்கிற இடத்தில இருக்க்கீங்க?
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....காதுல புகை....
 
pretty to talk with,witty to walk with...யாரு நீங்கதானா?
 
ஹாய்,

//'இது....பொறுக்கின தொக்கு'//

இதுக்கே இவ்வளவு ருசின்னா அதையே வாங்கிட்டு வந்து பண்ணா ..ஆஹா நாக்கு ஊறுதே...
 
இருந்தபோது என்று எழுதியிருக்கிறேனே
படிக்கவில்லையா? காது புகை இப்போது அடங்கியிருக்கும்தானே?
 
நாந்தேன்! என் மதிப்பிற்குறிய தலைமையாசிரியர் SSLC முடித்தபோது சொன்னது. இதுக்கும் காதுல புகையா?
 
ஹாய்! சுமதி!
கட்டாயம் செய்து பாருங்கள். வாங்கியே செய்து பாருங்கள். குக்கிங் ஆப்பிளிலும் செய்யலாம்.
வருகைக்கு சந்தோஷம்!
 
//
நானொரு பொறுக்கி
//
தகவலுக்கு நன்றி
 
//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,பொறுக்கி சாப்பிடுற அளவுக்கு ஆப்பிள் உங்க வீட்டு முன்னாடி கொட்டிக் கிடக்கிற இடத்தில இருக்க்கீங்க?
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....காதுல புகை....

//
ரிப்பீட்டேய்
 
மங்களூர் சிவா!
உண்மையை ஒத்துக்கொள்ளவும் ஒரு தைரியம் வேண்டுமே!

அறிவனுக்குக் கொடுத்த பதிலே உங்களுக்கும் ரிப்பீட்டு.
 
மங்களுர் சிவா!
நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்வேன்...இல்லையில்லை
பொறுக்கிக்கொள்வேன்
 
ஒளவையாரும் நீங்களும் ஒண்ணுதாங்கோ.அவரும் முருகன் உலுக்கின மரத்திலேருந்து விழுந்த நாவல் பழத்தைப் பொறுக்கி னார் ...அம்மையாரும் சான்னிவேல்யில் கிராப் ஆப்பிளைப் பொறுக்கி யிருக்கீங்கோ ,உங்க பொண்ணு கேக்கலியே பழம் சுடுதாம்மான்னு?உங்க வீட்டுலே இன்மே இந்த பாட்டுதான் கேட்கும்."பொறுக்கி வச்சுருக்கேன்...வதக்கி வச்சிருக்கேன்..."
 
அப்புறம் பாருங்க, நானானி, உங்களுக்கோ அல்லது மகளுக்கோ ரங்கமணிதான், தங்கமணி நீங்க 2 பேரும்தான். அது இன்னும் புரியலையா? :p என்ன ரொம்ப சைலண்ட்டா இருக்கீங்க? கமெண்டே பப்ளிஷ் பண்ணலை? :P
 
எப்படியோ எங்களுக்குப் புதிசா ஒரு ஊறுகாய் கிடைத்தது.

நண்டு ஆப்பிள் உங்களைப் பிறாண்டி எங்களுக்கு நல்லது செய்து விட்டது.:))
 
ஏன் என்னோட கமெண்டைப் போடலைனு புரியலையே? இது வரைக்கும் மூன்று கமெண்டு போட்டிருக்கேன். ஒண்ணு கூட இல்லை? :((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
 
அருமை! அருமை ரோகிணி!
இதே சம்பவத்தை சேர்த்திருக்கலாமே என்று பப்ளிஷ் செய்தவுடன்தான் நினைவுவந்தது..ஹையோ..ஹையோ..
என்றிருந்தது. அந்த குறையை அழகாக
நிறைவு செய்துவிட்டீர்கள். ரொம்ப நன்றி!
 
கீதாம்மா....!
சாரி..சாரி..நவராத்திரி வேலைகளிலும் வலை செய்த சில பிரச்சனைகளாலும்
பதில் போடமுடியவில்லை.
 
கீதா! அதென்ன ரங்கமணி,தங்கமணி..?
ப்ரியலையே.விளக்கம் தேவை.
 
வல்லிம்மா!
இனி க்ராப் ஆப்பிள் மரத்தடியில் ரோகிணி சொன்னாமாதிரி நிறைய ஒளவையார் ஊதி ஊதி பொறுக்கிக்கொண்டிருப்பார்கள். ஹைனா?
 
கீதா!
கமெண்ட்ஸ் பார்ப்பது எத்துணை சுவாரஸ்யமான விஷயம். அதைப்போய்
மிஸ் பண்ணுவேனா?
 
வீணாய்ப் போகும் பழங்களைப் பொறுக்கி அதை தொக்காக மாற்றி குடும்பத்தையே ஏமாற்றுகிறீர்களா - நன்று - சுவை அதிகம் எப்போதும் கள்ளத்தனமாக செய்ததில்
 
சீனா!
பிள்ளையாரையே திருடிக்கொண்டு போய் வைத்தால் நல்லது என்பார்கள்.
க்ராப் ஆப்பிள் ஜுஜூப்பி...
பொறுக்கி செய்ததோ..வாங்கி செய்ததோ..கை மணம் என்று ஒன்று
இருக்கில்லையா? அஹ்ஹஹ்ஹா...!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]