Wednesday, October 31, 2007

 

poincettia--போயின்செட்டா? இதுவரை பேர்தெரியாப்பிச்சை!இது மலரா? இல்லை இலையா? எதுவோ ஆனால் என் மனம் கவர்ந்தது.
பள்ளியில் படிக்கும் காலத்தில்...ஒரு நாள் அருகில் அமர்ந்திருந்த விடுதி மாணவியின் புத்தகத்தின் நடுவில் ஒரு வாழ்த்து அட்டையைப் பார்த்தேன். அந்தக்காலத்தில் வாழ்த்து அட்டை கலாச்சாரம் வெகுவாக பரவாத காலம். மிஞ்சிமிஞ்சிப்போனால் தீபாவளி,பொங்கல்,புத்தாண்டு வாழ்த்து அட்டைகள்தான் கடைகளில் கிடைக்கும். அதுவும் சிவகாசியில் அச்சடித்த காகிதத்தில்.
மக்கள்ஸும் போக்கிடமின்றி அவைகளையே வாங்குவார்கள்.

இப்பிடியாப்பட்ட நேரத்திலே புத்தகத்தின் நடுவில் நான் பார்த்தது...சுத்தமான வெளிநாட்டு சரக்கு. 'இது ஏது?' என்று அவளிடம் கேட்டேன். ஹாஸ்டல் மதரிடம் விலைக்குக் கிடைக்கும் என்றாள். எனக்குள் சந்தோஷ மணியடித்தது. இது வரை தெரியாமல் போயிற்றே!எப்போதடா பள்ளி மணியடிக்குமென்று
காத்திருந்தேன். ஆசிரியர் சொல்லியது எதுவும் காதில் ஏறவில்லை...எப்பொதுதான் ஏறியது?

டண்டண்..மணியடித்தது. விட்டேன் ஜூட் ஹாஸ்டலுக்கு. மதரிடம் ஏனனக்கு சொல்லவில்லை கொஞ்சம் பிராண்டினேன். அவர்கள் ஹாஸ்டல் மாணவிகளுக்கு மட்டும் விற்பதாக கூறினார். எனக்கும் வேண்டுமென்று பிடிவாதம் செய்ததாலும் தலைமையாசிரியரின் செல்லம் என்பதாலும் சம்மதித்து ஒரு டப்பா நிறைய வாழ்த்துஅட்டைகள் எடுத்து வந்து கொடுத்தார்.பரப்பி வைத்துப்பார்த்ததில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிறைய இருந்தன. அழகழகான
படங்களுடன். மனசுக்குள் பொங்கி வழிந்தது சந்தோஷம்! குடும்பத்தார்க்கு வாழ்த்து அனுப்புவதற்கு சிலவும் படம் அழகாக இருந்ததினால் சிலவுமாக கை நிறைய அள்ளிக்கொண்டேன். மதருக்கும் சந்தோஷம்! பெரிய கிராக்கி கிடைத்ததனால். அது முதற்கொண்டு புது கன்சைன்மெண்ட் வந்ததும் எனக்கு சொல்லியனுப்புவார்கள். கொத்தாக இப்படி யார் அள்ளுவார்கள்?இவையெல்லாம் புத்தம்புது அட்டைகள் என்றுதானே நினைக்கிறீர்கள்? அல்ல அல்ல கான்வெண்ட் மதர்களுக்கு பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த அட்டைகளின் நடுப்பக்கத்தை கிழித்துவிட்டு பொத்தாம்பொதுவாக 'season's greetings' என்று அச்சடித்து நடுவில் ஒட்டி விற்பனை செய்வார்கள். அதன் வருமானம் பள்ளிநிதிக்கு.நானும் பரவாயில்லை என்று அழகான படங்களுக்காகவே வாங்குவேன்.


அன்று ஆரம்பித்தது. குடும்பத்திலுள்ளோர் அனைவரது பிறந்தநாள், திருமணநாள் எல்லாம் குறித்துக்கொண்டு விடாமல் அனுப்பவாரம்பித்தேன். எல்லாம் கடைகளில் கிடைக்காத
அட்டைகள் என்பதால் பெறுபவருக்கும் சந்தோஷம் எனக்கும் சந்தோஷம்!!

இவ்வாறு பொறுக்கிய(நாந்தான் பொறுக்கியாயிற்றே!) அட்டைகளில் எனக்கு மிகவும் பிடித்தது..மெரூன் கலரில் இலையா? பூவா? என்று தெரியாத..பெயரும் தெரியாத பூவும் இலையுமான படங்கள்தாம். அவைகளை விரும்பி வாங்குவேன். ட்ராயிங் க்ளாசில் வரைவதற்கும்
அந்தப் படங்களையே வரைந்து வண்ணம் தீட்டுவேன். ட்ராயிங் மதரிடம் பாராட்டும் வாங்குவேன்.

இப்படியாகத்தானே பள்ளி நாட்களில் என் மனம் கவர்ந்து..என் மனஆழத்தில் படிந்துபோன அந்தப் பெயர் தெரியாத தாவரத்தை நேரில் பார்த்தபோது என் மனம் எப்படி பொங்கிப்பூரித்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்! ஆம்! சென்ற முறை கிறிஸ்மஸ் சமையம்
கலிபோர்னியாவிலிருதேன்.

ஷாப்பிங் மால்களுக்கு சென்ற போது வாசலிலேயே இந்தப் 'பேரில்லாப்பிச்சை..இல்லை பேர்தெரியாப்பிச்சை' அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்து. அசலும் நகலும் கலந்து...எது அசல் எது நகல் என்று
தெரியவில்லை. தொட்டுப்பார்த்தால்தான் ஜில்லென்று குளிர்ச்சியாக உள்ளது அசல் என்று புரிந்து கொள்ளலாம். பார்க்கப்பார்க்கப் பரவசம்!! ஒருவரை ஒருவர் கண்ணால் பார்க்காத 'காதல் கோட்டை' காதலர்கள் சந்தித்தபோது அவர்களுக்குண்டான பரவசத்தையும் சந்தோஷத்தையும் நானடைந்தேன். பிறருக்கு இது கொஞ்சம் ஒவராகத்தெரியலாம். ஆனால் நான் மட்டுமே உணர்ந்த அந்த மகிழ்ச்சியை சக பதிவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டதின் விளைவே இப்பதிவு.

ஆங்! சொல்லமறந்தேனே! அந்த தாவரத்தின் பெயர் 'POINCETTIA' வாம்! போயின்சிட்டா?

அப்போதே அதை வாங்க ஆசைப்பட்டேன். கூட வந்த மருமகள்,'அத்தை! இப்போது வேண்டாம். கிறிஸ்மஸ் முடிந்ததும் கம்மி விலையில் வாங்கலாம்.'என்றாள். நாம கொலுமுடிந்ததும் அடுத்தவருடத்துக்கு குறைந்தவிலையில் பொம்மைகள் வாங்குவோமே அதைப்போல.

கிறிஸ்மஸ் முடிந்ததும் அவளையும் கூட்டிக்கொண்டு 'வால்மார்ட், மைக்கேல்ஸ்' போனோம். ஆசை தீர அள்ளிக்கொண்டேன் முக்கியமாக என் கொலு அலங்காரத்துக்காக.
இந்த வருட கொலுவில் பார்த்திருக்கலாம். ஒரே போயிசிட்டாவாக இருந்திருக்குமே!!

Labels:


Saturday, October 27, 2007

 

இது என்னான்னு சொல்லிடுங்கோ...


என்ன...என்ன...இது என்ன..?

சொல்லுங்க பாப்போம்? இருங்க..இருங்க..நான் சொல்லி முடிக்கட்டும்.

'ப்பூ!...இது 'ஓம்' எனும் ப்ரணவம். விநாயகரின் வடிவம்.' சரி!

'ஆக்கும் கடவுள் ப்ரம்மாவுக்கு, இதற்கு பொருள் தெரியாத காரணத்தால், சொல்லச்சொல்ல இனிக்கும் பன்னிருகை வேலவனால் தலையில் குட்டப்பட்டு.....ஒரு கையால்தான்..சிறையில் அடைக்கப்படக் காரணமான ப்ரணவத்தின் உருவம்.' அதுவும் சரி!

'வேத வடிவான பரமசிவன், பிள்ளைப்பிராயத்திலே பெரிய பெயர் பெற்ற அழகன் முருகனிடம்''ப்ரணவத்துக்குப் பொருள் சொல்.' எனக் கேட்க, சொல்பவன் குரு கேட்பவன் சீடன். எனவே சீடனாக கைக் கட்டி வாய் பொத்திக் கேட்டால் சொல்வதாகச் சொல்ல, சுப்பன்..அப்பனுக்குப் பாடம் சொன்ன சப்ஜெக்ட்!' இதுவும் சரி!

'இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே!'

பின்ன? நான் சொல்லி முடிக்குமுன் பறந்தால்...?

நான் கேட்டது இந்த 'ஓம்' எனும் அமைப்பு எதைக்கொண்டு உருவாக்கப்பட்டது? அப்பாடா!
ஒரு வழியாக சொல்லி முடித்து விட்டேன்.

ஹூம்! இப்ப சொல்லுங்களேன் பாப்போம்..!

விடை அடுத்த பதிவில்.

Labels:


Thursday, October 25, 2007

 

கொலு...2007

கொலு....2007


இந்த வருடம் கொலு சிறப்பாக கொண்டாடியாச்சு! கொலுவுக்கு அழைத்து வந்தவர்களுக்கும்,
அழையாமல் வந்தவர்களுக்கும், அழைத்தும் வர இயலாமல் போனவர்களுக்கும், அழைக்க முடியாமல் போனவர்களுக்கும் என் மனமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்கள்!!!
இந்த வருட தீம் 'ZODIAC SIGHNS'
மீதமாகிப்போன பாசிப்பருப்பு சுண்டலை மறுநாள் பீன்ஸ் பொறியல், பீட்ரூட் பொறியல் ஆகியவற்றில் தூவி சூப்பராக சாப்பிட்டோமாக்கும்!ஹுக்கும்!
கொலு படங்கள் சில.
Labels:


Monday, October 15, 2007

 

நானொரு பொறுக்கி

ஆமாங்க, பொறுக்கிதான்.....அதுவும் crab apple பொறுக்கி.

கலிபோர்னியாவிலிருந்தபோது எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் சுற்றிலும் நிறைய பழமரங்கள் குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு பூத்து காய்த்து கனிந்து கவருவாரின்றி பூமிமாதாவிடமே தஞ்சமென்று பொத்..பொத்தென்று வீழ்ந்து கிடக்கும். என்ன கொடுமை சரவணன் இது. கலிபோர்னியா ஆரஞ்சுக்கு பேர் பெற்றது. ஆப்பிளும் ஆரஞ்சும் ஒவ்வொன்றும் நம் ஊரைவிட ஒன்றரை மடங்கு பெரிதாயிருக்கும். பார்க்கப்பார்க்க வயிற்றெரிச்சலாயிருக்கும். இங்கு நாம் 15ரூ 20ரூ
என்று வாங்குவது,இப்படி வீணாவது. கேட்டால் அவையெல்லாம் அழகுக்காக வளர்ப்பவையாம்.

நம்ப ஊரில் அண்ணா யூனிவர்சிட்டி, தியசாபிகல் சொசைடி போன்ற இடங்கள் எல்லாம் சோலையாயிருக்கும், ஆனால் அவற்றில் ஒன்று கூட வாயில் போடக்கூடிய வஸ்துக்கள்,பூ,காய், கனி எதுவும் தராது. அவை தரக்கூடியதெல்லாம் நிழல்..நிழல்..நிழல்தான்.

சன்னிவேலில் எங்கள் அப்பார்ட்மெண்ட்டிலிருந்து கார் பார்கிங் போகும் வழியில் ஓரிடத்தில் ஒரு மரத்தடியில் சிறு சிறு
பழங்கள் மரத்திலிருந்து உதிர்ந்து சிதறிக்கிடந்தன. ஒன்றை எடுத்து கடித்துப்பார்த்தேன். அதற்குள் இதைப்பார்த்துவிட்ட
என் மகள்,'அம்மா! அம்மா! அது என்ன பழமோ வேண்டாம். ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்னாவது என்று
கூவினாள். இங்கிருந்தால் நாம் சொல்வதை பிள்ளைகள் கேட்கும். ஆனால் அங்கு நாம்தான் 'கீழ்படிதலுள்ள அன்னையாயிருக்கவேண்டும்'. இதுவும் என்ன கொடுமை சரவணன்? ஸோ.. பேசாமல் வந்துவிடேன்.


ஆனால் மனதுக்குள் ஒரு நண்டு பிறாண்டிக்கொண்டேயிருந்தது. காரணம் கடித்த அந்த மினி ஆப்பிள் போன்றிருந்த அந்தப் பழம்!! அதன் ருசி!! ஆப்பிளும் நெல்லிக்காயும் கலந்த ஒரு ருசி. ஆஹா! இதில் தொக்கு செய்தால் எப்படி இருக்கும்?
புலம்ப ஆரம்பித்தேன். என் புலம்பலும் அலம்பலும் தாங்காமல் அனுமதி கொடுத்தாள். சரி..சரி.. சாயங்காலம் ஐந்தரை மணிக்கு மேல் போய் 'பொறுக்கலாம்' அப்போதுதான் ஆள் நடமாட்டம் இருக்காது என்றாள். என்னடாயிது? நம் ஊரில் பச்சை
மரத்தையே பட்டப்பகலில் நம் கண் முன்னே கூசாமல் வெட்டி சாய்ப்பார்கள். இங்கு கீழே விழுந்து வீணாகும் பழத்தைப் பொறுக்க இந்தப்பாடா?

மாலையில், நெல்லிக்காய் சைஸில் ஆப்பிள் போலிருந்த....அந்தப்பழத்தை crab apple -ஆம் அதன் பெயர், பொறுக்கவாரம்பித்தோம். சின்ன safeway cover நிறைய பொறுக்கி திருப்தியோடு வீடு திரும்பினேன். பிறாண்டலும் நின்றது.

மினி ஆப்பிள் போன்றிருந்த பழங்களை கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்தேன். ஆறு கப் தேறியது
அடுப்பில் எண்ணை காய வைத்து கடுகு தாளித்து பெருங்காயம் சேர்த்து, அரைத்த விழுதை கலந்து கொதிக்க வைத்தேன்.
கொதிக்கும் போது மஞ்சள்பொடி, மிளகாய்பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு தீயில் வத்த விட்டேன். அப்பபோ கிண்டி
விடவேண்டும். சிறிதுசிறிதாக எண்ணையும் விடவேண்டும். நன்றாக வற்றி எண்ணை வெளிவந்தவுடன் அடுப்பிலிருந்து
இறக்கிவிடலாம் நன்றாக ஆறியவுடன் சிறிது எலுமிச்சை சாறும் ஊறுகாய் மசாலா(கடுகு,வெந்தயம் வறுத்து பொடித்தது)
சேர்த்து கலந்து சுத்தமான பாட்டிலில் மாற்றி fridge-ல் வைத்து உபயோகிக்கலாம். இதுவும் 'சுவாதி நட்சத்திரம்' மாதிரிதான்
எதோடும் உறவாடும்.

இரவு இட்லிக்கு தொட்டுக்குள்ள க்ராப் ஆப்பிள் தொக்கு வைத்தேன்,,,made of what என்று சொல்லாமலே. என்னோட தங்கமணியும் மகளோட தங்கமணியும் அடிபிடியென்று அரை பாட்டிலை காலி.....செய்தார்கள். இது என்ன தொக்கு என்றபோது.....'இது....பொறுக்கின தொக்கு' என்றோம் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கள்ளச்சிரிப்பு சிரித்தபடி!!!


Labels:


Sunday, October 14, 2007

 

காய்கறி ஊறுகாய்..ஒஹோஹோஹோ..எச்சி ஊறுதே!!

காய்கறி ஊறுகாய்

எங்கள் வீட்டு ஸ்பெஷல் இந்த ஊறுகாய். அம்மா போடுவார்கள். நான் நேரடியாக் கற்றுக்கொள்ளாவிட்டாலும் வழிவழியாக வந்து
ஒரு வழியாக நானும் கற்றுக்கொண்டேன். எங்கள் வீட்டுக்கு வந்து இதை ருசி பார்த்தவர்கள் எல்லோரையும் அடிமையாக்கிவிட்டது
இந்த ஊறுகாய்!!!! பலர் இல்லங்களுக்கு 'TO GO' வாகப்போகும் பாக்கியம் பெற்றது.

சரி..சரி..ஒருமாரியா..போ! போதும் பில்டப் ங்குறீங்களா? ஓK..ஓK.. ரெஸிபிக்கு வாரேன்.

வேணுங்கிறது:

காரட்,பீன்ஸ், காலிப்பூ, டர்னிப், மஞ்சள்பூசணி, நெல்லிக்காய், மாங்காஇஞ்சி, சௌசௌ, பெரியபாவக்காய் தலா ஒரு கப்.
பச்சை,மஞ்சள்,சிவப்பு குடமிளகாய் தலா அரைக் கப்.
மாங்காய் அரைக்கப் கிடைக்கவில்லையென்றால் எலுமிச்சை சாறு அரைக் கப்
இஞ்சி அரைக் கப்
பூண்டு அரை கப்
பச்சைமிளகாய் கால் கப்
இந்த கப் அளவெல்லாம் பொடியாக ந்றுக்கிய பின்.
அம்மா ஸ்பெஷலாக இதில் பிஞ்சு முருங்கக்காய் , திரிதிரியாக...ஒடித்தால் ஒடியணும் , அதில் நாலைந்து சேர்ப்பார்கள்.
மஞ்சள் பொடி- 2 டீஸ்பூன்
மிளகாய்பொடி- 4-5 டீஸ்பூன் அவ்ரவர் காரத்துக்கேற்ப கூட்டவோ..குறைக்கவோ.....எடுக்கவோ கோர்க்கவோ மாதிரி செய்துகொள்ளலாம்.
இறுதியாக
கடுகு-4 டீஸ்பூன்
வெந்தயம்- 2 டீஸ்பூன் இரண்டையும் வறுத்து பொடித்துக்கொள்ளவும்
பொருங்காயம்- 3 டீஸ்பூ
நல்லெண்ணை- 500 மி
உப்பு- தேவைக்கேற்ப

இப்போ ரெடி பண்ணலாம்:

பொடியாக நறுக்கிய காய்கள் எல்லாவற்றையும் ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு குலுக்கி கலக்கவும். அத்தோடு மஞசள் பொடி,
மிளகாய்பொடி சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்கவும். மாங்காய் சேர்க்கவில்லையென்றால் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். உப்பு, பெருங்காயம். போடவும் எண்ணையை அடுப்பில் நன்றாக காயவைத்து ஆறவைத்து அதில் ஊற்றவும். இப்போது கடுகு,வெந்தயம் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும். ஊறுகாய் மேல் எண்ணை தளும்புமாறு ஊற்றவேண்டும். கடுகு,வெந்தயப்பொடிதான் ஊறுகாய்க்கான மசாலா. கடைசியாக சேர்ப்பதால் வெந்தயத்தின் கசப்பு மட்டுப்படும்.

மேலே எண்ணை இருக்குமாறு பார்த்துக்கொண்டால் ஒரு வாரம் வரை கெடாது. அதற்காக சோதித்துப்பார்க்கவேண்டாம். சாப்பிட்டு
கா....லி... செய்து விடுங்கள்

நட்சத்திரங்களில் சுவாதி, எல்லா நட்சத்திரங்களோடும் பொருந்துமாம்...மெய்யாலுமா? அதுபோல் இந்த ஊறுகாய், இட்லி, தோசை,
பூரி, சப்பாத்தி, முக்கியமாக தயிர்சாதம் எல்லாரோடும் அம்சமாக பொருந்தும்.

செய்து சாப்பிட்டுத்தான் பாருங்களேன்!! படம் போட ஆசை..ஆசைதான். ஆனால் அதற்கு காத்திருந்தால் ஊறுகாய் ஊசிவிடும்.
சோ...இப்போதைக்கு பதிவு மட்டும்தான்.

ஆஹா...இது என் ஐம்பதாவது பதிவு! வாவ்! பாட் டை தூக்கிக்காட்டுகிறேன். எல்லொரும்
ஜோரா ஒருதரம் கை தட்டுங்க....நன்றி..நன்றி!

Labels:


Thursday, October 11, 2007

 

தேவியர் மூவர் நவ ராத்திரிக்கு

செந்திருமாதும் கலைமாதும் சிவகாமியென்றோதும் மலைமாதும்
சொந்தமுடன் நவராத்திரி நாளன்று சேர்ந்திடுவார் ஒன்று கூடிடுவார்


பிள்ளைகளுக்கு விவரம் தெரிந்தவுடன்,'அம்மா! நாம்பளும் கொலு வைக்கலாம்மா...' என்று ஆசைப்பட்டார்கள். என் அம்மா வீட்டில் நவராத்திரி சமயம் ஒன்பது நாளும் கொண்டாட்டமாக இருக்கும். அம்மா இருந்தவரை பிரமாதமாக கொலு வைப்பார்கள். என் பெற்றொருக்கு நாங்கள் ஒன்பது பேர் அப்போது.....(மொத்தம் பத்து. ) ஒன்பது பேரும் ஒன்பது படிகளில் பொம்மைகள் போல் அம்ர்ந்து
கூத்தடித்தது எல்லாம் நவரசம் !!!! அம்மாவுக்குப் பிறகு முப்பெரும் தேவிகளான என் அண்ணிமார் மூவரோடு ஒன்று சேர்த்து கொலு
வைப்பதை விடாமல் நடத்தி வந்தோம் என் திருமணம் வரை. அந்தக்கதைகள் எல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொண்டே எங்கள் வீட்டில் ஒரு குட்டிக் கொலுவைக்கத் தயாரானோம்.முதலில் அவசியமான பொம்மைகள் மட்டும் வாங்கி மற்றும் அலங்காரப் பொருட்கள்....இத்தியாதி..இத்தியாதி எல்லாம் வாங்கி, சிங்கிள் பெட்ரூம் வீட்டில் ஹாலில் மூன்று படிகள் அமைத்து அடுக்கினோம். குழந்தைகள் இருவருக்கும் ரொம்ப சந்தோஷம்!! பார்க் வைக்கவேண்டும் என்று இருவரும் சேர்ந்து மணல் கொண்டுவந்து
பரப்பி தங்களுடைய டாய்ஸ் எல்லாம் இறக்கி.....அட்டையில் தியேட்டர் செய்து அப்போது வெளியான 'அக்னிநட்சத்திரம்' படத்தின் கட்டவுட்
வைத்து மிகவும் உற்சாகமாக செய்து முடித்ததர்கள்.


ஆரம்பித்தாயிற்று இனி வருடாவருடம் வைக்கவேண்டியதுதானே. பின்நாளில் அடையாரில் ரெண்டு பெட்ரூம் வீட்டுக்கு வந்ததும்....
'அரச்ச மாவ அரப்போமா..தொவச்ச துணிய தொவப்போமா..' என்பதுபோல் வைத்தபொமைகளையே தானே திருப்பி திருப்பி வைக்கிறோம்
ஏதாவது வித்தியாசம் காட்டவேண்டும் என்று கொலுபடிகளுக்கு மேற்புரம் back drop வித்தியாசமாக ஒவ்வொருவருடமும் வைக்கவாரம்பித்தேன். கொலுபார்க்க வருவதைவிட 'இந்த வருடம் என்ன back drop என்று பார்க்கவே விரும்பி
வருவார்கள்.

கொலுவுக்கு வரும் குட்டீஸ்களை பாட வைப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஒரு சின்னஞ்சிறுமி வந்தாள்....பார்த்தாள். பாடச்சொன்னேன். faஸினாள். 'நீ பாடினால்தான் இந்த ரூமை விட்டுப் போகமுடியும்' என்று கண்டிஷன் போட்டேன் செல்லமாக.
குழந்தை பயந்து எழுந்து நின்று திங்..திங் என்று குதித்துக்கொண்டு 'பாபா ப்ளக் ஷீப்..' என்று ரைம்ஸ் பாடி குங்குமம் வாங்கிக்கொண்டு
தன் பாட்டியோடு ஓடியேவிட்டது.இன்னொரு சிறுமி வந்தாள். அவளிடம் 'நீ பாடினால் எங்கள் வீட்டு மீனையும் பாடச்சொல்வேன்'
என்று கொலுவில் தொங்கவிட்டிருந்த மீனைக் காட்டினேன். US-லிருந்து பரிசாக வந்தது. 'எங்கே? பாடச்சொல்லுங்கள்!' என்றாள்,
'எங்கேடா பாடுபார்க்கலாம்?' என்ற தூக்குத்தூக்கி வசனம் மாதிரி. ஸ்விட்ச் ஆன் செய்தவுடன் மீன் ஆங்கிலப்பாடலொன்றைப்
பாடியது தன் தலையையும் வாலையும் ஆட்டிக்கொண்டே. அதை வியந்து பார்த்துவிட்டு அருமையான ஸ்லோகம் ஒன்றை அழகாகப்
பாடி அசத்தினாள்.


சிறுமிகளைச் சொல்லிவிட்டு எங்கள் ப்ளாட்டில் மூன்றாவது மாடியில் குடியிருந்த சிறுவன் ஒருவனை சொல்லாமல் விடலாமா? நான் கொலு வைத்தவுடன், தன் அம்மாவிடம் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவானாம். 'ஆன் டி, எப்போது அழைப்பார்கள்..நான் எப்போது போய் பாடுவது?' என்று.
கேட்கவே சந்தோஷமாகயிருக்கும்..நீ தினமும் வந்து பாடலாம் என்பேன். அழகாக வந்தமர்ந்து கொண்டு கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபுலோடு
வெட்கமாம்..ஆரம்பிப்பான். அவ்வளவுதான்...வண்டி பஸ்ட் கியர்..செகண்ட் கியர் என்று டாப் கியரில் ஜிவ்வென்று பறக்கும். அடுத்து இதைப்பாடவா...இதைப்பாடவா.. என்று ஒரு மினி கச்சேரியே நடத்திவிடுவான். ரொம்ப சந்தோஷத்தோடு குங்குமம் கொடுத்து வாழ்த்தியனுப்புவேன். இந்த வருடம் அவன் குடும்பம் பெங்களூருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டது. அங்கு யார் வீட்டு கொலுவுக்கு
கொடுத்து வைத்திருக்கிறதோ?


பின்நாளில் ப்ளாக்கில் எழுதுவேன் என்று தெரிந்திருந்தால் பக்காவாக படம் எடுத்து வைத்திருப்பேன். கிடைத்த வரை
அந்த நவ நாட்களிலே நான் வைத்த கொலுக்களின் படங்கள் சில உங்கள் பார்வைக்கு.

செந்திருமாதும் கலைமாதும் மலைமாதும் வருடத்தில் இந்த ஒன்பது நாடகள் மட்டுமல்லாது வருடம் பூராவும் நம் இல்லங்களில்
எழுந்தருளி எல்லோருக்கும் எல்லா நலன்களும் கலைகளும் அருளுமாறு முத்தேவியரையும் வேண்டி ,வாழ்த்தி ,பாடி (பாடத்தெரிந்தால் )
வணங்குவோம்.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]