Wednesday, August 1, 2007

 

சிஸ்டர் மேரி அலெக்ஸ்......எங்கள் தலைமையாசிரியர்


என் பள்ளிப்படிப்பு முழுக்க ஒரே பள்ளியிலேயே அமைந்தது, அப்பெல்லாம் நாலு வயசில் பேபிக்ளாசில் கொண்டுவிடுவார்கள். சரியாக ஐந்து வயதில் முதல் வகுப்புக்குச் செல்ல தோதாக. இப்பெல்லாம் இந்த நாலு வயசுக்குள்
ப்ளேஸ்கூல், எல்.கே.ஜி, யு. கே.ஜி என்று மூன்று வகுப்புகளைத்தாண்டி அதுக்கு ஒரு க்ராஜுவேஷனும் முடித்துக்கொண்டு
ஜம்மென்று முதல் வகுப்புக்குள் நுழைகிறார்கள்.

என்னோட பேபிக்ளாசிலிருந்து பள்ளியிறுதி வகுப்பு வரை ஒரே பள்ளி, ஒரே தலைமையாசிரியர்...அவர்தான் எங்கள் அன்புக்கும்
மரியாதைக்கும் உரிய Rev. Mother Marie Alex !! Former Headmistress of St. Ignacius convent , Palayamkottai, Tirunelveli.
ஆம்! பாளையங்கோட்டை! தென்னாட்டின் ஆக்ஸ்வர்ட் என்று பெயர் பெற்றது.

எவ்வளவு கண்டிப்போ அவ்வளவு கனிவும் உண்டு. ஒரு தலைமையாசிரியராக அவர் காட்டும் கண்டிப்பில் மாணவர்களுக்கு ஒரு பயம் உண்டு. அதே சமயம் உல்லாசப்பயணம் செல்லும்போது தனது கண்டிப்பையெல்லாம்
தளர்த்திக்கொண்டு ஒரு குழந்தையைப்போல் எங்களோடு உறவாடும் போது நிஜமாகவே உல்லாசமாக இருக்கும்.
"ஏ! பில்லே!" என்று மழலைத்தமிழில் எங்களை அழைப்பது வேடிக்கையாயிருக்கும். ஹுக்கும்!...நாம் பேசும் ஆங்கிலம்
மட்டும் எப்படியிருக்குமாம்! குழந்தைகள் பேசினால் அது மழலை,பெரியவர்கள் பேசினால் அதைக் 'கிழலை' என்று
சொல்லலாமா?ஹி..ஹி..!

எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பழகியவர். நாங்கள் சகோதரிகள் நால்வர் மற்றும் ஒரு சகோதரர் அங்குதான் படித்தோம்.
பெண்கள் பள்ளியாதலால் சிறுவர்கள் ஐந்தாம் வகுப்பு வரைதான் அங்கு படிக்கமுடியும்.

NCC-யில் சேர்ந்து பெஸ்ட் காடட் ஆக தேர்வாகி அதன் தொடச்சியாக
டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்புக்கும் தேர்வானேன். அப்பாவிடம் அனுமதிக்காக கேட்டபோது
"மதர் அலெக்ஸ் உன்னோடு வருவதானால் எங்கு வேண்டுமானாலும் போ!! இல்லையென்றால் வேண்டாம்." என்றார்.
அருமையான வாய்ப்பை இதனால் தவறவிட்டேன். அவர்கள் மீது அவ்வள்வு மதிப்பு அப்பாவுக்கு.

ஒரு தாய்க்கும் மேலாக என்னிடம் அன்பு காட்டியவர். சிஸ்டர்ஸ்ஸுக்கான சாப்பாட்டு அறை வழியாக ஒரு முறை
நான் சென்றபோது...'உஸ்!..உஸ்!..' என்று யாரோ அழைக்கும் குரல்! திரும்பிப்பார்த்தால்...மதர்! சினேகிதிகளோடு சென்றுகொண்டிருந்த என்னை மட்டும் கூப்பிட்டு ஒரு பெரிய துண்டு கேக்கை என் கையில் கொடுத்து, வாயில் திணிக்காத குறையாக 'தின்னு..தின்னு..!' என்று திணித்தார்கள். அன்பு! தங்கவேலு சொல்வது போல் அன்று கொஞ்சம் க்டூரமாயிருந்தது.

வகுப்புகள் நடக்கும் போது கண்காணிக்கவருவதே சுவாரஸ்யமாயிருக்கும். இடுப்பிலிருந்து பாதம் வரை தொங்கும்
ருத்ராட்ச சைசிலிருக்கும் wooden beads -சினால் ஆன
ஜெபமாலையை சுருட்டி கையில் கொத்தாகப்பிடித்துக்கொண்டு பூனை போல் நடந்து வருவார்கள். உஷாராக இல்லாதவர்கள் மாட்டிக்கொள்வார்கள். எங்கள் வகுப்பு மாடிப்படியை ஒட்டியிருக்கும். என்னதான் ஜெபமாலையை
சுருட்டிக்கொண்டாலும் மரப்படிகளில் ஏறி வரும் சத்தம் துல்லியமாகக்கேட்கும். எல்லோரும் உஷாராகி படிப்பது
போலவோ அல்லது எழுதுவது போலவோ பாவனை செய்வோம்...படம் எடுக்கும் ஆசிரியர் உட்பட!!!! நொந்து....போவார்கள்.

பட்டன் ஸிஸ்டம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆங்கில அறிவு வளரவேண்டுமென்பதற்காகவும் சரளமாக பேசப்பழக
வேண்டுமென்பதற்காகவும் அறிமுகபடுத்தப்பட்ட ஒரு ஸிஸ்டம்! பள்ளி நேரமுழுதும் மாணவிகள் ஆங்கிலத்திலேயே பேசவேண்டும் என்பது எழுதப்படாத கட்டளை. கோட் பட்டன் மாதிரி பெரிய பட்டன் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொன்று தினமும் க்ளாஸ் லீடரிடம் இருக்கும் முதலில் தமிழில் பேசும் மாணவி கையில் அது தரப்படும். அவள் கண்கொத்திப்பாம்பு மாதிரி கண்ககணித்து அடுத்து தமிழ் பேசும் மாணவியிடம் திணிப்பாள். இப்படியே மாலை மணியடிக்கும் வரை யார்யார் கைகளில் எல்லாம் பட்டன் பட்டதோ அவர்களெல்லாம் குறிப்பிட்ட தொகை ஃபைனாக கட்டவேண்டும். இப்படி ஃபைனாக கட்டிய பணத்திலேயே கட்டிடத்துக்கு கட்டிடம் flyover கட்டியது எங்கள் பள்ளியாகத்தானிருக்கும். அதே நேரம் எங்களுக்கும் spoken english-ம் வளர்ந்தது.

மதர் சுப்பீரியர் அவர்களுக்கு....அதென்ன?....ஹாங்!...FEAST! என்று ஒரு நாள் வரும். பள்ளியே திமிலோகப்படும். முன்தினமே எல்லோரையும் மதர் அழைத்து,' நீ மாலை கொண்டு வா. நீ பழங்கள் கொண்டு வா. நீ எலுமிச்சம்பழம் கொண்டு வா.' என்று உத்தரவுகள்
பறக்கும். சரி..எல்லாம் கொண்டுபோய் சுப்பீரியர் மதரை வாழ்த்திவிட்டு வரும்போது நமக்கு என்ன கிடைக்கும்? ஆரஞ்சு சுளை வடிவில் ஒரு
மிட்டாய்!! அன்று முழுதும் விடுமுறை ஆனால் பள்ளியிலிருக்கவேண்டும். ஆரஞ்சு மிட்டாயை எலுமிச்சம்பழத்துக்குள் புதைத்து மிட்டாயின்
இனிப்பும் பழத்தின் புளிப்புமாக உறிஞ்சிக்கொண்டே பள்ளியை உல்லாசமாக வலம் வருவோம். திரும்பிப்பார்த்தால் எட்டாத தூரத்திலிருக்கும்
அந்த நிகழ்வுகள்....மனதில் இன்னும் அருகிலிருக்கும் நினைவுகள்!!!!

க்ளாசில் பேசினால் kneel down போட்டிருக்கிறோம், வீட்டுப்பாடம் செய்யாமல் போனால் புல் புடுங்கியிருகிறோம்.
ஸ்கூலுக்குப்போய் என்ன புடுங்கினாய்..? என்று கேட்டால் இதையே சொல்வோம்!!!!!!!!!!!

மதர் அலெக்ஸ் என்றால் பொதுவாக எல்லோருக்கும் பயம். எனக்கு மட்டும் அது இல்லை. மதரோடு சரிக்குசமமாக
பேசுவேன், கிண்டல் செய்வேன், கடலை போடுவேன். என் ப்ளாக்கில் 'about me-யில்' சொல்லியிருபது மதர் அலெக்ஸ் என்னைப்பற்றி கடைசி வருடம் பள்ளி magazine-னில் எழுதியது. குறிப்பாக பத்து பேரை தேர்வு செய்து அவரவரைப் பற்றி குறள் போல் இரண்டு வரிகள் நறுக்குதெரித்தாற்போல் எழுதியிருந்தார்கள். அதில் நானும் ஒருவள் என்று பெருமையாக இருந்தது!

'மாரல் க்ளாஸ்' என்று எடுப்பார்கள், அவரது ஆங்கிலமும் அறிவுரைகளும்....இன்று நான் ஓரளவுக்கு கால் ஊன்றி நிற்கிறேனென்றால் அவர்கள்தான் காரண்ம்! என்றென்றும் மறக்கமுடியாதது. அவர்களது ஆங்கில இலக்கண வகுப்பும் குறிப்பிடத்தகுந்தது. கை வலிக்கும் வரை எழுதிய பயிற்சிகள் பின்னாளில் பெரிதும் கை கொடுத்தது.

பெங்களூரு...இப்போது இப்படித்தானே சொல்லவேண்டும்? எக்ஸ்கர்ஷன் போயிருந்தபோது. ஏர்போர்ட் விசிட் போயிருந்தோம். விமானங்கள் take off....landing-என்று மாறிமாறி போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந்தன. என் கைகளில் ஸ்டில் காமிரா-ஐசோலெட் ஒன்றும் 8mm மூவிகாமிரா ஒன்றும் இருந்தன. மாணவிகள் கைகளில் என்ன இருக்கப்போகிறது என்று விட்டுவிட்டார்கள். நானென்ன செய்தேன்? நாலைந்து மாணவிகளை என்னைச்சுற்றி நிற்கவைத்துக்கொண்டு.....நைசாக மூவிக்காமிராவில் டேக் ஆப், லாண்டிங் எல்லாம் அழகாக சுட்டுக்கொண்டிருந்தேன். யார் கண் பட்டதோ..? அதிகாரி ஒருவர்
கண்களில் பட்டுவிட்டேன். டபக்கென்று என் கைகளிலிருந்து பிடுங்கிக்கொண்டு போயே.....விட்டார். ஐயையோ!! என் அண்ணாச்சிக்கு என்ன பதில் சொல்வது? எனக்கு புகைப்படக்கலையை கற்றுத்தந்தவர். என் ஆர்வத்தைப்பார்த்து ஒன்பதாவது படிக்கும் என்னிடம் தன் புத்தம்புது மூவிகாமிராவைத் தந்து உபயோகிக்கும் விதமும் சொல்லிக்கொடுத்து அனுப்பியிருந்தார், ஆசையோடு! பதறிவிட்டேன் வியர்த்து விட்டேன். மதர் என்னை தட்டிக் கொடுத்துவிட்டு ஏர்போர்ட் ஆபீஸுக்குள்
சென்று பேசும் விதமாகப் பேசி கைகளில் காமிராவோடு வெளியே வந்தார்.ஓடிப்போய் கைகளில் வாங்கிக்கொண்டேன்.
மதரை நன்றியோடு பார்த்து அழுதுகொண்டே சிரித்தேன்...சிரித்துக்கொண்டே அழுதேன். காமிராவை திறந்து பார்த்தபோது உள்ளே பிலிம்
ஸ்பூல் இல்லை...உருவிக்கொண்டுதான் கொடுத்திருக்கிறார்கள்!! நல்லவேளை முதலுக்கு மோசமில்லை.

இப்படியாக 11th முடிக்கும் வரை எங்களுக்கு தலைமையாசிரியராக இருந்தவர் நாங்கள் பரீட்சைகள் எழுதி முடித்ததும் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.

திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு சென்னையில் செட்டிலானதும், ஒரு நாள் என் தங்கை மூலமாக அவளும்
அவள் சிநேகிதிகளும் மதர் அலெக்ஸைப் பார்க்கப்போவதாக சொன்னாள். எங்கே என்ற போது, சென்னையில்
ஜெமினி அருகே உள்ள லிட்டில் ப்ஃளவர் கான்வெண்ட்டில் ஓய்வு பெற்றபிறகு தங்கியுள்ளதாக சொன்னாள். உடனே புறப்பட்டேன் அவர்களோடு. அன்று மதருக்குப் பிறந்தநாளாம்!...டிசம்பர் 10. கேக், பூங்கொத்து வாங்கிக்கொண்டு போனோம்.

எங்களைப் பார்த்ததும் எவ்வள்வு சந்தோஷம்!!!! ஒவ்வொருவரையும் 'இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுத்து' கொஞ்சிக்குலாவி கொண்டாடினார்கள். சந்தோஷமாக இருந்தது. பழைய கதைகளெல்லாம் பேசி, கலாய்த்து ஒரே உற்சாகமாயிருந்தது.
'யூ..நாட்டி நானானி!' என்று நான் செய்த சேட்டைகள் பற்றிச் சொல்லி....காமிராக்கதை சொல்லிச் சொல்லிச் சிரித்து
சந்தோஷமாக அன்றைய நாள் கழிந்தது.

பிறகு வருடாவருடம் டிசம்பர் 10-ம் தேதி மதரைப் பார்க்கப்போவதை வழக்கமாக்கிக்கொண்டோம்.
மதரோட 80-தாவது பிறந்த நாளை கான்வெண்டில் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். பழைய மாணவிகள் பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கடைசியாகப் பார்த்தபோது சுமார் 90 வயது இருக்கும். ஞாபகசக்தி குறைந்து அக்காவை என் பெயர் சொல்லியும்
தங்கையை சின்னக்கா பேர் சொல்லியும் என்னிடம் வந்து 'நானானி எங்கே இருக்கிறாள்' என்றபோது மனதைப் பிசைந்த்து.
ஆனால் உடலளவில் அந்த வயதுக்கு நல்ல ஆரோக்கியத்தோடு, நன்றாக மாடி ஏறி இறங்கி உற்சாகமாக இருக்கிறார்கள்.இதே ஆரோக்கியத்தோடு மீதி நாட்களும் வாழ அவர் தொழும் ஏசுபிரானைப் பிரார்த்திக்கிறேன்!!!
.

Labels:


Comments:
நனானி.. இவங்க பெல்ஜியம் சிஸ்டர்ஸ் தானே?
 
இல்லை டெல்ஃபைன்!
இவங்க மங்களூர்காரங்க. மத்த இம்போர்டட் மதர்ஸ்தான் பெல்ஜியம்-காரங்க.
 
நல்ல நினைவுகள் ஒரு பொக்கிஷம் நானானி.

எங்கள் மதர் ரெடெம்ப்டா மேரி நினைவுக்கு வந்துவிட்டார்கள்.

அந்த காமிரா இன்னும் இருக்கா.சூப்பர் கேர்ளாக இருந்திருப்பீர்கள் போலிருக்கே. ரொம்ப நன்றாக இருந்ததுப்பா.
ரியல் ஸ்வீட் லேடீஸ்.
 
ஆம்!பொக்கிஷம்தான் வல்லி!
உங்கள் மதர் பற்றியும் பதியுங்களேன்.எல்லோரும் தெரிந்துகொள்ளலாம்.
அந்தக் காமிரா இப்போது அண்ணன் வீட்டில் உள்ளது. ஜூம்,டெலிபோட்டோ,வைடாங்கிள் என்று மூன்று லென்ஸ்கள் கொண்டது.
வேண்டியதை திருப்பிக்கொண்டு சுடவேண்டியதுதான்.இப்போதுபோல் உடனே பார்க்கமுடியாது. மும்பை கோடாக் கம்பெனிக்கு அனுப்பி டெவலப் செய்துவரவேண்டும்.
ரொம்ப தாங்ஸ்ப்பா!!
இப்படி 'ப்பா' சேர்த்து பேசுவதுகூட
கான்வெண்ட் ஸ்டைலுதான்.
 
நான் 5ம் வகுப்பு வரை படிக்கும்போது மதர் சுப்பீரியர், ரெவ்.மதர் ஜார்ஜினா.

அவர்கள் பெல்ஜியத்திலிருந்து வந்தவர் என்று தெரியும். டெல்பைன் கேட்டது இவர்களைப் பற்றியோ?
சகாதேவன்.
 
சகாதேவன்!
மதர் ஜார்ஜினா சுப்பீரீயர் மதர் இல்லை. அவர்கள் வேறு...பெயர்
நினைவில்லை.
மதர் ஜார்ஜினா..ஆபிஸ்ரூமில் போய்
fஈஸ் கட்டுவோமே? ஆபிஸ் இன்சார்ஜ்
ஞாபகம் வருதா?
 
சகாதேவன்!
மதர் ஜார்ஜினா சுப்பீரீயர் மதர் இல்லை. அவர்கள் வேறு...பெயர்
நினைவில்லை.
மதர் ஜார்ஜினா..ஆபிஸ்ரூமில் போய்
fஈஸ் கட்டுவோமே? ஆபிஸ் இன்சார்ஜ்
ஞாபகம் வருதா?
 
சகாதேவன்!
மதர் ஜார்ஜினா சுப்பீரீயர் மதர் இல்லை. அவர்கள் வேறு...பெயர்
நினைவில்லை.
மதர் ஜார்ஜினா..ஆபிஸ்ரூமில் போய்
fஈஸ் கட்டுவோமே? ஆபிஸ் இன்சார்ஜ்
ஞாபகம் வருதா?
 
அருமையான பதிவு!

இதில் ஒரு அழகு என்னவென்றால், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும், இன்னும் அதே கண்டிப்பு, அதே பட்டன் ஸிஸ்டம், அதே சுப்பீரியர் ஃபீஸ்ட், அதே கம்பீரம்......

சுகமான நினைவுகள்.
RL
 
ungal schoolhead NUN patri romba nun-naavey ezhuthiteenga .padikkavum nun-naa irunthuchchu,unga thalaimai aasiriyar meethu ungalakku irukkum payappadaatha bakthiyum nun-naa solliyiruntheenga.neengalum unga cameravum nun-naa irukkanum.anbudan
nunivaal
 
ஆமா..ஆர்.எல்.!
வாழ்கையை ரிவைண்ட் பண்ண முடிந்தால் நான் அந்த காலத்திலிருக்கவே விரும்புவேன்.
எல்லோருக்கும் அப்படித்தானே?
 
ஹாய்! நுனிவால்!
பொருத்தமான பெயர்!
எல்லாத்தையும் ரொம்ப 'நன்னா சொல்லிட்டேள் போங்கோ!'
டேங்ஸ்!
 
Nalla nigalvugal.
 
Nanani sunamiyaha elzudhik kondu irukirirgal.
premasankaran
 
வருக!பிரேமா சங்கரன்!
என் ப்ளாக்கை எட்டிப்பாக்க இத்தனை நாளாச்சா?
நான் சுனாமியில்லை அது பேராபத்து!!
நான் மெல்ல வந்து காலை வருடிச்செல்லும் சாதாரண அலைகள்!
அது என்றும் சமத்து!!
நன்றிப்பா!!
அடிக்கடி வாங்க!
 
You said it Naanani.!!
intha "ppaa'' poodaRathum oru sukam. enakku maRanthathai ninaivu paduththi vittirkaL.
 
நீங்கள்தான் எனக்கு ஞாபகப்படுத்தினீர்கள் வல்லி!
ஆங்கிலத்தில் கட்டாயமாக பேசவேண்டிய சமயங்களில்,'கம்'பா!,கோ'ப்பா' என்றெல்லாம் பேசி பட்டனை வாங்கிய நினைவுகள்...நினைத்தால்
சிரிப்புத்தான் வருகுதப்பா!
 
வருடங்கள் கடந்தும்
வருடும் நினைவுகளுடன்
தொடரும் இந்த மாதிரி அபூர்வமான ஆசிரியர்-மாணவர் பிணைப்பு,
இனி வரும் தலைமுறைகளுக்குக் கிடைக்குமா என்பது நெருடலே!
 
உண்மைதான், ராமலக்ஷ்மி!
இன்றைய் தலைமுறைக்கு இந்த அருமை தெரியாது...புரியாது.
 
உங்க வலைக்கு முதல் தடவை வரேம்ப்பா. தலைமை ஆசிரியை கட்டுரை அருமைப்பா. நம்ப வலைக்கும் வந்து போங்கப்பா.சரியாப்பா?
 
என்ன நானானி,
ஒரு வாரமாச்சு, அடுத்த போஸ்டுக்காக தினம் காத்திருக்கிறோம். சீக்கிரம்.
சகாதேவன்
 
அன்பின் நானானி

மலரும் நினைவுகளாக - பள்ளி வாழ்க்கையினை விவரித்த விதம் அருமை. 12 ஆண்டுகள் ஒரே பள்ளியில் படித்து - ஒரே தலைமை ஆசிரியரின் கீழ் படித்து - அத்தலைமை ஆசிரியையை இன்றும் சென்று பார்ப்பது - அடாடா கொடுத்து வைத்திருக்க வேண்டும் இதற்கெல்லாம்.

மழலை - கிழலை - ஹா ஹா ஹா

அக்காலத்திலேயே சிறந்த மாணவியாக, என்சிசியில் தேர்வாகி - டில்லி செல்லும் வாய்ப்பினை அப்பாவின் தேவையான கண்டிப்பினால் தவற விட்டீர்களே ! - நாடு ஒரு சிறந்த வீராங்கனையினைப் பெறத் தவறி விட்டது.

பன்னு பன்னு - திண்ணு திண்ணு - சிரிப்பாய் வருகிறது - தங்கள் நிலையினை நினைக்கும் போது - அன்புத்தொல்லை

கண்காணிப்பினி போது காட்டிக்கொடுக்கும் உட்ட்டன்பீன்ஸ் - ப(பா)டம் எடுக்கும் ஆசிரியர் உட்பட பாவனை செய்வது - அடடா

பட்டன் சிஸ்டம் -பீஸ்ட் - பள்ளியில் புடுங்குனது - மதருடனேயே கடல போட்டது - காமிரா திரும்பப் பெற்றது - மதரைச் சென்று பார்ப்பது - ரியலி யூ ஆர் நாட்டி நானானிதான்.

"விட்டி டு டாக் வித்" - மதரிம் தீர்க்க தரிசனம் மெய் சிலிர்க்க வைக்கிறது

மனம் மகிழ்வாக இருக்கிறது நானானி - திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்

"ஆசிரியப் பணி அறப்பணி
அதற்கே உனை அர்ப்பணி "

இவ்வாக்கின் படி அருந்தொண்டாற்றிய ரெவெரண்ட் மதர் மேரி அலெக்ஸிற்கு எனது பணிவான வணக்கங்களும் - மரியாதையும் உரித்தாகுக
 
I think, that you are not right. I am assured. Let's discuss.
 
You are not right. I am assured. Let's discuss it.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]