Tuesday, August 28, 2007

 

ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்!!!காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் போல் சகோதரர்களுக்கான தினம்தான் 'ரக்ஷாபந்தன்' தினம். ஆவணி பௌர்ணமிநாள் ராக்கி தினம். இவ்வருடம் 28-8-07 அன்று உலகெங்கும் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு நல்ல ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் தங்களின் பாதுகாப்புகாகவும் வேண்டி அவர்கள் மணிக்கட்டில் கட்டும் ஒரு கயிறுதான் ராக்கி! பளபளப்பாகவும் வண்ணவண்ணமாகவும் விதவிதமாகக் கிடைக்கும்.

ஆசைஆசையாக தட்டில் தீப மேந்தி நெற்றியில் திலகமிட்டு வாயில் இனிப்பு ஊட்டி ராக்கி கட்டி மகிழ்வார்கள். பதிலுக்கு சகோதரிகளுக்கு சின்னச்சின்ன அன்புப் பரிசுகள் கொடுத்து மகிழ்விப்பார்கள்.

இந்த இனிய நன்னாளில் வலைச்சகோதரர்கள் அனைவருக்கும் என் அன்பான ரக்ஷாபந்தன் தின வாழ்த்துக்கள்!!!

Labels:


Tuesday, August 14, 2007

 

இந்தியத் தாய்க்கு...சஷ்டியப்த்தபூர்த்தி!!!


இந்திய சுதந்திரத் தாய்க்கு இன்று 'சஷ்டியப்தபூர்த்தி' அதாவது அறுபதாம் கல்யாணம்!!!! இந்தியத் தந்தை....? ஒவ்வொரு இந்தியக்குடிமகனும்தான்.
இந்த அறுபது வருடங்களில் அவளை என்ன....பாடுபடுத்தியிருப்போம்? வன்முறை,கொலை,கொள்ளை, கலவரம், லஞ்சம், ஏமாற்று, வரதட்சிணை கொடுமை, கற்பழிப்பு, பொய், பித்தலாட்டம்....இத்யாதி...இத்யாதி...இதைத் தவிர வேறு என்ன சந்தோஷம் அவளுக்கு நாம் கொடுத்திருப்போம்?
ஆங்காங்கே குறிப்பிடத்தக்க ஒரு சில நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள்..இருக்கிறார்கள், ஒரு சில நல்லவைகளும்
நடந்திருக்கின்றன...நடக்கின்றன. அவர்களாலும் அவைகளாலும் தான் இந்தியத்தாய் உலக நாடுகள் முன் நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையுமாக கம்பீரமாக நிற்கிறாள். நிற்பாள்!!

இனிமேலாவது வரும் காலம் சுதந்திரத்தாய்க்கு ஒரு நிம்மதியான....அமைதியான....ஓய்வான நாட்களாக(அவளுக்கெங்கே ஓய்வு?)
கழிய நாமெல்லாம் இன்று உறுதியாக...உண்மையாக...மனதார...உறுதி எடுத்துக்கொள்வோம்!!! வந்தேமாதரம்!!!!
நம் மகா..ஆத்மாவுக்குப் பிடித்தமான பாடலான..."சாந்தி நிலவவேண்டும் எங்கும் சாந்தி நிலவவேண்டும்..ஆத்ம சக்தி ஓங்கவேண்டும்...
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்" என்று எங்கும் சாந்தி நிலவ.....

இனிமேல் இதெல்லாம் இப்படித்தான் இருக்கவேண்டும்.


வாழ்க சுதந்திரம்...வாழிய வாழியவே...எங்கள் சுதந்திரம் என்றென்றும் வாழியவே!!!!!!!!!!!!!!!

இந்தியர் அனைவருக்கும் இனிய அறுபதாவது சுதந்திரதின வாழ்த்துக்கள்!!!
சொந்த நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும் - தாயே!
அதை நீ அருளவேண்டும்- என்று அவ்ள் பாதங்களில் பொற்பூக்களும் வெள்ளிப்பூக்களும்
தூவி அவள் ஆசிகளை வேண்டிப் பெறுவோமாக!மிட்டாய்....? துளசிடீச்சர் ஜிலேபி கொடுக்கிறார்கள், அங்கு போய் வாங்கிக்கொள்ளலாம்!!
ஹாஹ்ஹஹ்ஹா....!!

Labels:


Friday, August 10, 2007

 

கிண்ணம் நிறைய அழுக்கு-அதில் நெழியும் வண்ணவண்ண புழுக்கள்.....சாப்பிடத்தான்!!

THANK GOD IT'S FRIDAY !!

அமெரிக்காவில் இது ஒரு பிரபலமான ரெஸ்டொடண்ட். பெயரிலேயே அதன் உற்சாகம் தெரியுதா?

வாரம் முழுதும் வேலைவேலை என்று மூழ்கி விட்டு கொஞ்சம் மூச்சு வாங்க வாரஇறுதியை எப்படி கழிக்கலாம் என்ற நினைவிலேயே
வெள்ளிக்கிழமையே வீக்கெண்ட் மூடுக்குப் போய்விடுவார்கள். அன்று அலுவலகம் செல்வது எல்லாம் ச்சும்மா! மதியமே வீடுநோக்கி
ஓடிவிடுவார்கள் மாலையில் போக்குவரத்து பார்க்கவே சுவாரஸ்யமாயிருக்கும். கார்கள் விஷ்க்விஷ்க் என்று பறக்கும்.

காரில் மொத்தகுடும்பமும்...அதன் தலையில் ஒரு சின்ன போட் கவுந்திருக்கும், இன்னொருகார் ட்ராலியில் ஒரு பெரிய போட்-கோத்து
இழுத்துக்கொண்டுபோகும். மற்றொரு காரில் எத்தனை உருப்படிகள் உள்ளதோ அத்தனை சைஸ்களில் சைக்கிள்கள் ட்ரங்கின் பின்னால்
க்ளாம்ப் மாட்டி உருளும். இன்னும் வாட்டர்-ஸ்கூட்டர் மோட்டர்பைக் எல்லாம் போகும். எப்படிஎப்படியெல்லாம் விடுமுறையை அனுபவிக்கப்போகிறார்கள் என்பது இதிலிருந்தே நமக்குப் புரிந்துவிடும். அதைப் பார்க்கும் போதே நமக்கும் அதே உற்சாகம் தொத்திக்கொள்ளும்.

செயிண்ட்லூயிஸில் தங்கியிருந்தபோது ரங்கமணியின் பிறந்தநாள் வந்தது. அண்ணன் மகளும் மருமகனும் எங்களை ஈட்டவுட்
என்று வெளியில் அழைத்துச்சென்றார்கள். முதலில் நாங்கள் சென்ற இடம் -க்ரிஸ்பிகிரீம்- டோநட்! கண்ணாடி தடுப்புக்கு உள்ளே
டோநட்டுகள் தயாராவதை, அது ஒவ்வொரு பகுதியாக கடந்து வெளிவருவதைப் பார்க்கலாம். பார்க்கவே சுவை...வடைமாவு போல் டௌ
தயாராகி டோநட்களாக பிழியப்பட்டு கொதிக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்டு....பின் மறுபக்கம் திருப்பி போடப்பட்டு பின் சாக்லெட்
சாஸில் மற்றும் சர்க்கரைப்பாகில் டிப் செய்யப்பட்டு அவ்வளவும் மெஷினில்.... அழகாக கன்வெயரில் வரும் போது நாவில் எச்சிஊறும். அது புரிந்தோ என்னவோ
ஆளுக்கொரு டொநட் டிஷ்யு பேப்பரால் கவ்வியெடுத்து சுடச்சுட கொடுத்தார் அங்குள்ள பொறுப்பாளர். அப்புரம் வாங்காமல் வரமுடியுமா? ஒரு டஜன் வாங்கிக்கொண்டு நாங்கள் சென்றவிடம்தான்...TGI FRIDAY!

யூஎஸில் பெரிதும் ரசித்த ஒரு விஷயம்....எந்த ரெஸ்டொரண்ட் குழந்தைகளோடு போனாலும் ஆர்டர் செய்யதவைகள் வரும்வரை
குழந்தைகள் பொறுமை இழக்காமலிருக்க அவர்கள் கவனத்தை சுவாரஸ்யமாக்க ஸ்டூவர்ட்ஸ் முதலில் பொம்மைகள் படம்போட்ட பேப்பரும் சில கரையான்களும் அல்லது சின்னச்சின்ன புதிர்கள்...பொம்மைகள் என உற்சாகப்படுத்திவிடுவார்கள்!!!

வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். முடிவில் ப்ரஷ் ஜூஸ் வந்தது. குழந்தைகளில் பெரியவன் தனக்கு 'cup of dirt' வேண்டுமென்றான். என்.....னது? அழுக்கா..? அதுவும் கப்பிலா..? ஐய....!

அழுக்கு வந்தது அதுவும் கலர்கலராக புழுக்கள் நெழிய...! கொஞ்சம் அறுவெறுப்பாகத்தான் இருந்தது. ஆனால் அவன் ரசித்து சாப்பிடவிதம் அழுக்கையெல்லாம் துவைத்து காயப்போட்டாற்போல் பளிசென்று இருந்தது. சின்னவன் அதையே உர்ர்ர்ர்ரென்று
பார்த்துக்கொண்டிருந்தான்.

பின்னர் அந்த டெசர்ட் பத்தி தெரிந்துகொண்டேன். சாக்லெட் சாஸும டார்க் ப்ரௌன் சாக்லெட் புட்டிங், கருப்பு கலரில் கிடைக்கும் ஒரியோ பிஸ்கட்டும் கலந்து களிமண் போல் தயாரித்து அதில் நெழியும் புழுக்களாக 'gummy worms candy'..அதாங்க..ஜுஜூப்ஸ்!

கலர்கலராக நம்மூரில் கிடைப்பதை விட கொஞ்சம் ஹார்டாக இருக்கும். கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்.


சாப்பிட்டு முடிந்தவுடன், மருமகன் எழுந்து போய் ஸ்டூவர்டுடன் ஏதோ பேசிவிட்டு வந்தான். என்னவென்றதுக்கு, இந்த ரெஸ்டொரண்டில் சாப்பிடவரும் வாடிக்கையாளர்களுக்கு பிறந்தநாள் என்றால் ஸ்டூவர்ட்ஸ் எல்லோரும் அவரை சூழ்ந்து நின்று
'ஹாப்பி ப்ர்த்டே டு யூ!' பாடி சின்ன கேக் கொண்டுவந்து வெட்டவைத்து மகிழ்விப்பார்களாம். ஆனால் இப்போது அப்பழக்கத்தை..
என்ன காரண்மோ?...விட்டுவிட்டார்களாம் என்றார். அதானே பாத்தேன்! இது நம்ம ராசியல்லோ!! அவசரமாக போணும் என்று ஆட்டோ பிடித்தால் அப்போதுதான் அவன் பெட்ரோல் பங்கில் கொண்டு நிறுத்துவான்..... ஆனால் அன்று எங்களுக்கு கொஞ்சோண்டு அதிர்ஷ்டம் இருந்தது போலும், சிறிது நேரத்தில் எங்களுக்கு பரிமாறியவர் வந்து ஒரு சிவப்பு மணிமாலை
ஒன்றை ரங்கமணி கழுத்தில் அணிவித்து ஒரு வாழ்த்து அட்டையும் கொடுத்து 'ஹாப்பி ப்ர்த்டே!' என்றும் வாழ்த்தினார். அட்டையில்..
'அடுத்தமுறை சாப்பிடவரும்போது $5 கழித்துக்கொள்வார்களாம்!' வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடினோம்.
நாமோ ரெண்டுநாளில் கிளம்புகிறோம்...எனவே ட்ஸ்கௌண்ட் அட்டையை மருமகனிடம் கொடுத்தோம். ஆனால் அவன், இங்கு
வந்து பிறந்தநாள் கொண்டாடிய ஞாபகமாக வைத்துக்கொள்ளுங்கள், என்று கொடுத்துவிட்டான். உண்மையிலேயே நல்ல நினைவு
வாழ்த்து அட்டை! அமெரிக்க விஜயத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானவை.....மறக்கமுடியாதவை!!!!!!!!!!!

Labels:


Tuesday, August 7, 2007

 

போட்டோ...போட்டா போட்டி!

ஒரு போட்டியின்னு வந்துவிட்டா.......தோகைமயில் தைதை யின்னு ஆடும்..
அது இங்கே டை கட்டுகிறதே!!

.......
இதுதான் சூப்பர் ஹேர் ஸ்டைலோ?

Labels:


Wednesday, August 1, 2007

 

சிஸ்டர் மேரி அலெக்ஸ்......எங்கள் தலைமையாசிரியர்


என் பள்ளிப்படிப்பு முழுக்க ஒரே பள்ளியிலேயே அமைந்தது, அப்பெல்லாம் நாலு வயசில் பேபிக்ளாசில் கொண்டுவிடுவார்கள். சரியாக ஐந்து வயதில் முதல் வகுப்புக்குச் செல்ல தோதாக. இப்பெல்லாம் இந்த நாலு வயசுக்குள்
ப்ளேஸ்கூல், எல்.கே.ஜி, யு. கே.ஜி என்று மூன்று வகுப்புகளைத்தாண்டி அதுக்கு ஒரு க்ராஜுவேஷனும் முடித்துக்கொண்டு
ஜம்மென்று முதல் வகுப்புக்குள் நுழைகிறார்கள்.

என்னோட பேபிக்ளாசிலிருந்து பள்ளியிறுதி வகுப்பு வரை ஒரே பள்ளி, ஒரே தலைமையாசிரியர்...அவர்தான் எங்கள் அன்புக்கும்
மரியாதைக்கும் உரிய Rev. Mother Marie Alex !! Former Headmistress of St. Ignacius convent , Palayamkottai, Tirunelveli.
ஆம்! பாளையங்கோட்டை! தென்னாட்டின் ஆக்ஸ்வர்ட் என்று பெயர் பெற்றது.

எவ்வளவு கண்டிப்போ அவ்வளவு கனிவும் உண்டு. ஒரு தலைமையாசிரியராக அவர் காட்டும் கண்டிப்பில் மாணவர்களுக்கு ஒரு பயம் உண்டு. அதே சமயம் உல்லாசப்பயணம் செல்லும்போது தனது கண்டிப்பையெல்லாம்
தளர்த்திக்கொண்டு ஒரு குழந்தையைப்போல் எங்களோடு உறவாடும் போது நிஜமாகவே உல்லாசமாக இருக்கும்.
"ஏ! பில்லே!" என்று மழலைத்தமிழில் எங்களை அழைப்பது வேடிக்கையாயிருக்கும். ஹுக்கும்!...நாம் பேசும் ஆங்கிலம்
மட்டும் எப்படியிருக்குமாம்! குழந்தைகள் பேசினால் அது மழலை,பெரியவர்கள் பேசினால் அதைக் 'கிழலை' என்று
சொல்லலாமா?ஹி..ஹி..!

எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பழகியவர். நாங்கள் சகோதரிகள் நால்வர் மற்றும் ஒரு சகோதரர் அங்குதான் படித்தோம்.
பெண்கள் பள்ளியாதலால் சிறுவர்கள் ஐந்தாம் வகுப்பு வரைதான் அங்கு படிக்கமுடியும்.

NCC-யில் சேர்ந்து பெஸ்ட் காடட் ஆக தேர்வாகி அதன் தொடச்சியாக
டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்புக்கும் தேர்வானேன். அப்பாவிடம் அனுமதிக்காக கேட்டபோது
"மதர் அலெக்ஸ் உன்னோடு வருவதானால் எங்கு வேண்டுமானாலும் போ!! இல்லையென்றால் வேண்டாம்." என்றார்.
அருமையான வாய்ப்பை இதனால் தவறவிட்டேன். அவர்கள் மீது அவ்வள்வு மதிப்பு அப்பாவுக்கு.

ஒரு தாய்க்கும் மேலாக என்னிடம் அன்பு காட்டியவர். சிஸ்டர்ஸ்ஸுக்கான சாப்பாட்டு அறை வழியாக ஒரு முறை
நான் சென்றபோது...'உஸ்!..உஸ்!..' என்று யாரோ அழைக்கும் குரல்! திரும்பிப்பார்த்தால்...மதர்! சினேகிதிகளோடு சென்றுகொண்டிருந்த என்னை மட்டும் கூப்பிட்டு ஒரு பெரிய துண்டு கேக்கை என் கையில் கொடுத்து, வாயில் திணிக்காத குறையாக 'தின்னு..தின்னு..!' என்று திணித்தார்கள். அன்பு! தங்கவேலு சொல்வது போல் அன்று கொஞ்சம் க்டூரமாயிருந்தது.

வகுப்புகள் நடக்கும் போது கண்காணிக்கவருவதே சுவாரஸ்யமாயிருக்கும். இடுப்பிலிருந்து பாதம் வரை தொங்கும்
ருத்ராட்ச சைசிலிருக்கும் wooden beads -சினால் ஆன
ஜெபமாலையை சுருட்டி கையில் கொத்தாகப்பிடித்துக்கொண்டு பூனை போல் நடந்து வருவார்கள். உஷாராக இல்லாதவர்கள் மாட்டிக்கொள்வார்கள். எங்கள் வகுப்பு மாடிப்படியை ஒட்டியிருக்கும். என்னதான் ஜெபமாலையை
சுருட்டிக்கொண்டாலும் மரப்படிகளில் ஏறி வரும் சத்தம் துல்லியமாகக்கேட்கும். எல்லோரும் உஷாராகி படிப்பது
போலவோ அல்லது எழுதுவது போலவோ பாவனை செய்வோம்...படம் எடுக்கும் ஆசிரியர் உட்பட!!!! நொந்து....போவார்கள்.

பட்டன் ஸிஸ்டம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆங்கில அறிவு வளரவேண்டுமென்பதற்காகவும் சரளமாக பேசப்பழக
வேண்டுமென்பதற்காகவும் அறிமுகபடுத்தப்பட்ட ஒரு ஸிஸ்டம்! பள்ளி நேரமுழுதும் மாணவிகள் ஆங்கிலத்திலேயே பேசவேண்டும் என்பது எழுதப்படாத கட்டளை. கோட் பட்டன் மாதிரி பெரிய பட்டன் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொன்று தினமும் க்ளாஸ் லீடரிடம் இருக்கும் முதலில் தமிழில் பேசும் மாணவி கையில் அது தரப்படும். அவள் கண்கொத்திப்பாம்பு மாதிரி கண்ககணித்து அடுத்து தமிழ் பேசும் மாணவியிடம் திணிப்பாள். இப்படியே மாலை மணியடிக்கும் வரை யார்யார் கைகளில் எல்லாம் பட்டன் பட்டதோ அவர்களெல்லாம் குறிப்பிட்ட தொகை ஃபைனாக கட்டவேண்டும். இப்படி ஃபைனாக கட்டிய பணத்திலேயே கட்டிடத்துக்கு கட்டிடம் flyover கட்டியது எங்கள் பள்ளியாகத்தானிருக்கும். அதே நேரம் எங்களுக்கும் spoken english-ம் வளர்ந்தது.

மதர் சுப்பீரியர் அவர்களுக்கு....அதென்ன?....ஹாங்!...FEAST! என்று ஒரு நாள் வரும். பள்ளியே திமிலோகப்படும். முன்தினமே எல்லோரையும் மதர் அழைத்து,' நீ மாலை கொண்டு வா. நீ பழங்கள் கொண்டு வா. நீ எலுமிச்சம்பழம் கொண்டு வா.' என்று உத்தரவுகள்
பறக்கும். சரி..எல்லாம் கொண்டுபோய் சுப்பீரியர் மதரை வாழ்த்திவிட்டு வரும்போது நமக்கு என்ன கிடைக்கும்? ஆரஞ்சு சுளை வடிவில் ஒரு
மிட்டாய்!! அன்று முழுதும் விடுமுறை ஆனால் பள்ளியிலிருக்கவேண்டும். ஆரஞ்சு மிட்டாயை எலுமிச்சம்பழத்துக்குள் புதைத்து மிட்டாயின்
இனிப்பும் பழத்தின் புளிப்புமாக உறிஞ்சிக்கொண்டே பள்ளியை உல்லாசமாக வலம் வருவோம். திரும்பிப்பார்த்தால் எட்டாத தூரத்திலிருக்கும்
அந்த நிகழ்வுகள்....மனதில் இன்னும் அருகிலிருக்கும் நினைவுகள்!!!!

க்ளாசில் பேசினால் kneel down போட்டிருக்கிறோம், வீட்டுப்பாடம் செய்யாமல் போனால் புல் புடுங்கியிருகிறோம்.
ஸ்கூலுக்குப்போய் என்ன புடுங்கினாய்..? என்று கேட்டால் இதையே சொல்வோம்!!!!!!!!!!!

மதர் அலெக்ஸ் என்றால் பொதுவாக எல்லோருக்கும் பயம். எனக்கு மட்டும் அது இல்லை. மதரோடு சரிக்குசமமாக
பேசுவேன், கிண்டல் செய்வேன், கடலை போடுவேன். என் ப்ளாக்கில் 'about me-யில்' சொல்லியிருபது மதர் அலெக்ஸ் என்னைப்பற்றி கடைசி வருடம் பள்ளி magazine-னில் எழுதியது. குறிப்பாக பத்து பேரை தேர்வு செய்து அவரவரைப் பற்றி குறள் போல் இரண்டு வரிகள் நறுக்குதெரித்தாற்போல் எழுதியிருந்தார்கள். அதில் நானும் ஒருவள் என்று பெருமையாக இருந்தது!

'மாரல் க்ளாஸ்' என்று எடுப்பார்கள், அவரது ஆங்கிலமும் அறிவுரைகளும்....இன்று நான் ஓரளவுக்கு கால் ஊன்றி நிற்கிறேனென்றால் அவர்கள்தான் காரண்ம்! என்றென்றும் மறக்கமுடியாதது. அவர்களது ஆங்கில இலக்கண வகுப்பும் குறிப்பிடத்தகுந்தது. கை வலிக்கும் வரை எழுதிய பயிற்சிகள் பின்னாளில் பெரிதும் கை கொடுத்தது.

பெங்களூரு...இப்போது இப்படித்தானே சொல்லவேண்டும்? எக்ஸ்கர்ஷன் போயிருந்தபோது. ஏர்போர்ட் விசிட் போயிருந்தோம். விமானங்கள் take off....landing-என்று மாறிமாறி போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந்தன. என் கைகளில் ஸ்டில் காமிரா-ஐசோலெட் ஒன்றும் 8mm மூவிகாமிரா ஒன்றும் இருந்தன. மாணவிகள் கைகளில் என்ன இருக்கப்போகிறது என்று விட்டுவிட்டார்கள். நானென்ன செய்தேன்? நாலைந்து மாணவிகளை என்னைச்சுற்றி நிற்கவைத்துக்கொண்டு.....நைசாக மூவிக்காமிராவில் டேக் ஆப், லாண்டிங் எல்லாம் அழகாக சுட்டுக்கொண்டிருந்தேன். யார் கண் பட்டதோ..? அதிகாரி ஒருவர்
கண்களில் பட்டுவிட்டேன். டபக்கென்று என் கைகளிலிருந்து பிடுங்கிக்கொண்டு போயே.....விட்டார். ஐயையோ!! என் அண்ணாச்சிக்கு என்ன பதில் சொல்வது? எனக்கு புகைப்படக்கலையை கற்றுத்தந்தவர். என் ஆர்வத்தைப்பார்த்து ஒன்பதாவது படிக்கும் என்னிடம் தன் புத்தம்புது மூவிகாமிராவைத் தந்து உபயோகிக்கும் விதமும் சொல்லிக்கொடுத்து அனுப்பியிருந்தார், ஆசையோடு! பதறிவிட்டேன் வியர்த்து விட்டேன். மதர் என்னை தட்டிக் கொடுத்துவிட்டு ஏர்போர்ட் ஆபீஸுக்குள்
சென்று பேசும் விதமாகப் பேசி கைகளில் காமிராவோடு வெளியே வந்தார்.ஓடிப்போய் கைகளில் வாங்கிக்கொண்டேன்.
மதரை நன்றியோடு பார்த்து அழுதுகொண்டே சிரித்தேன்...சிரித்துக்கொண்டே அழுதேன். காமிராவை திறந்து பார்த்தபோது உள்ளே பிலிம்
ஸ்பூல் இல்லை...உருவிக்கொண்டுதான் கொடுத்திருக்கிறார்கள்!! நல்லவேளை முதலுக்கு மோசமில்லை.

இப்படியாக 11th முடிக்கும் வரை எங்களுக்கு தலைமையாசிரியராக இருந்தவர் நாங்கள் பரீட்சைகள் எழுதி முடித்ததும் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.

திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு சென்னையில் செட்டிலானதும், ஒரு நாள் என் தங்கை மூலமாக அவளும்
அவள் சிநேகிதிகளும் மதர் அலெக்ஸைப் பார்க்கப்போவதாக சொன்னாள். எங்கே என்ற போது, சென்னையில்
ஜெமினி அருகே உள்ள லிட்டில் ப்ஃளவர் கான்வெண்ட்டில் ஓய்வு பெற்றபிறகு தங்கியுள்ளதாக சொன்னாள். உடனே புறப்பட்டேன் அவர்களோடு. அன்று மதருக்குப் பிறந்தநாளாம்!...டிசம்பர் 10. கேக், பூங்கொத்து வாங்கிக்கொண்டு போனோம்.

எங்களைப் பார்த்ததும் எவ்வள்வு சந்தோஷம்!!!! ஒவ்வொருவரையும் 'இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுத்து' கொஞ்சிக்குலாவி கொண்டாடினார்கள். சந்தோஷமாக இருந்தது. பழைய கதைகளெல்லாம் பேசி, கலாய்த்து ஒரே உற்சாகமாயிருந்தது.
'யூ..நாட்டி நானானி!' என்று நான் செய்த சேட்டைகள் பற்றிச் சொல்லி....காமிராக்கதை சொல்லிச் சொல்லிச் சிரித்து
சந்தோஷமாக அன்றைய நாள் கழிந்தது.

பிறகு வருடாவருடம் டிசம்பர் 10-ம் தேதி மதரைப் பார்க்கப்போவதை வழக்கமாக்கிக்கொண்டோம்.
மதரோட 80-தாவது பிறந்த நாளை கான்வெண்டில் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். பழைய மாணவிகள் பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கடைசியாகப் பார்த்தபோது சுமார் 90 வயது இருக்கும். ஞாபகசக்தி குறைந்து அக்காவை என் பெயர் சொல்லியும்
தங்கையை சின்னக்கா பேர் சொல்லியும் என்னிடம் வந்து 'நானானி எங்கே இருக்கிறாள்' என்றபோது மனதைப் பிசைந்த்து.
ஆனால் உடலளவில் அந்த வயதுக்கு நல்ல ஆரோக்கியத்தோடு, நன்றாக மாடி ஏறி இறங்கி உற்சாகமாக இருக்கிறார்கள்.இதே ஆரோக்கியத்தோடு மீதி நாட்களும் வாழ அவர் தொழும் ஏசுபிரானைப் பிரார்த்திக்கிறேன்!!!
.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]