Friday, July 6, 2007

 

திருப்பதி தரிசனம்...FIRST COME THIRD BASIS!!!!


திருப்பதி ஏழுமலை வெங்கடேசா!!! உன் தரிசனம் கிடைப்பது ரொம்ப லேசா!!!!!
எந்த கோயில் தரிசனமமும் என்னைப் பொறுத்தவரை அழைப்பில்லாமல் போனால் சுவைக்காது. ஆமாம்...!..யார் அழைப்பதாம்?
வேறு யார் சாமிதான்!!

கோயில் தரிசனத்துக்கு அது உள்ளுரோ வெளியூரோ சட்டென்று கிளம்பிவிடமாட்டோம். அதுவும் விசேஷ நாட்களில்...சுத்தம்!
அந்த நாட்களில் போவதென்பது ரங்கமணிக்கு கொஞ்சம் அலர்ஜி!! 'ரொம்ப கூட்டமாயிருக்குமே? இன்னொரு நாள் போவோமே!'
ஓ!! போவோமே! நமக்காக கூட்டமில்லாத விசேஷ நாளன்று போலாமே! ஆனால் ஆண்டவன் அழைப்பு...இல்லையில்லை கட்டளை
வந்தால் ஓஓஓடி விடுவோம். அப்படி நாங்கள் போன கோயில்கள் நிறை.....ய! ஆறு முறை திருவண்ணாமலை கிரிவலம் உட்பட.

அப்படி பெருமாளுக்கு அபிஷேகத்துக்கு பணம் கட்டி நாலு வருஷம் கழித்து குறிப்பிட்ட நாளில் வரும்படி அழைப்பு...சாரி.. கட்டளை வந்தது. பணம் கட்டியது அண்ணன். ஆனால் அண்ணன் குடும்பத்தோடு எங்களையும்
வரும்படி அண்ணன் மூலம் கட்டளையிட்டார் ஏழுமலையான். நெல்லையிலிருந்து அண்ணன் குடும்பமும் சென்னையிலிருந்து
ரங்கமணி, நான், என் மகள் மூவரும் கிளம்பினோம். (மகன் வெளியூரிலிருந்தான்)

ஏழு மலைதாண்டி ஏழு கடல்தாண்டி ஏழுமலையானின் திருப்பதி சென்றடைந்தோம். மதியம் சாப்பிட்டுவிடு கோயிலைச் சுற்றியுள்ள
கடைகளில் ஸ்ர்ஃபினோம். கோயில்கடைகளில் மேய்ந்து சின்னச்சின்ன நினைவுப் பொருட்கள் வாங்குவது மிகவும் பிடித்தமானதொன்று.
மறுநாள் தான் அபிஷேகமென்பதால் நன்றாக சுற்றிவிட்டு சீக்கிரமே இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பினோம்.

படுக்குமுன் பேசிக்கொண்டோம்....'காலையில் ஒரு மணிக்கே எழுந்து குளித்து ரெடியாகி சீக்கிரமே கோயிலுக்குப் போய்விட்டால்..
சுவாமிக்கு வெகு அருகில் அதாவது முதலாவதாக அமர்ந்து அபிஷேகம் பார்க்கலாம்.' எல்லோருக்கும் ஓஓஓகே!

நானும் அண்ணியும் பன்னிரெண்டு மணிக்கே எழுந்து குளித்து தயாராகி, மற்றவர்களையும் எழுப்பி ரெடியயகச் சொல்லி
அன்னா இன்னா என்று பட்டுப்புடவை சரசரக்க ஈரக்கூந்தல் மினுமினுக்க கோயில் வாசலை நோக்கி ஓடினோம். தரிசனத்துக்குச்செல்லும்
பாதை வெறிச்சோடிக் கிடந்தது......ஐ...யா! ஜாலி! நாமதான் முதலில் வந்திருக்கிறோம்! சந்தோஷமாக ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொண்டோம்!

காலியாகக் கிடந்த தரிசனப் பாதை வழியே உற்சாகமாக ஓடினோம்...ஓடினோம்...ஓடினோம் பாதையின் எல்லை வரை ஓடினோம்.
இடையில் ஓரிடத்தில் உட்கார வைக்கப் பட்டோம்....காரணம், சுப்ரபாதம் முடிந்துதான் அபிஷேகமாம்! சரி.. கொஞ்சம் ரெஸ்ட்.

இறுதியில் கோயில் பிரகாரத்தை வந்தடைந்தோம். அப்பாடா..! நாம் தான் முதலில்..!.சிறிது மூச்சு வாங்கினோம்.

என் மகள் என்னைப் பார்த்து, 'அம்மா!! அக்கட சூடு.' எங்கே..எங்கே..'கொஞ்சம் அப்பிலே சூடு!' என்றாள் குறும்பு கொப்பளிக்க. சூடிக்கொடுத்ததை சூடிக்கொண்டவனின் அபிஷேகம் காண எங்களுக்கு முன் இரண்டு குடும்பத்தினர் அங்கிருந்தனர்!! ஒஹ்ஹோ!!!!
அப்படியானால் அவர்கள் எப்போதே ரெடியாகி இங்கு வந்திருக்கவேண்டும்? ஏடு கொண்டலவாடா......! கண்ணைக் கட்டுதே..!!

எங்களுக்குப் பின்னால் இன்னும் மூன்று குடும்பத்தினர் வந்தனர் எல்லோரும் பிரகாரத்தில் ஒன்றாகக் கலந்து நின்றோம்.
ப்ஃஸ்ட் கம் ப்ஃஸ்ட் பேஸிஸாவது ஒன்றாவது.? கோயில் பொறுப்பாளர் ஒருவர் ஒரு லிஸ்ட்டொடு வந்து ஒவ்வொரு குடும்பத்தினர்
பேராக வாசிக்க வாசிக்க ஒவ்வொருவராக கோயிலினுள் செல்லவாரம்பித்தனர். அண்ணன் பேர் மூன்றாவதாக வாசிக்கப்பட்டது.

சன்னதிக்கு அருகிலாவது இடம் கிடைக்குமா..? கொஞ்சம் சுருதி குறைய சன்னதி நோக்கி நடக்கவாரம்பித்தோம். . .பெருமாள் குறுஞ்சிரிப்போடு.....'அடியார்கள் படியாய் கிடந்து பணி செய்ய விரும்பிய..' படியருகே எங்களுக்கான இடத்தை படியளந்திருந்தார்.
இறங்கிய சுருதி சும்மா... ஏழரைக் கட்டைக்கு ஏறியது! இந்த இடம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா...?
இதுவே எதேஷ்டம் என்று மகிழ்வோடு படியருகே அமர்ந்தோம்.

அபிஷேக தரிசனம், அற்புதமாயிருந்தது. கண்குளிரக் கண்டோம். நெஞ்சம் மகிழ்ச்சியில் நிறைய, கைகள் பிரசாதங்களால் நிறைய
அறைக்குத் திரும்பினோம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். 'எப்படி...? எப்படி....? முதலில் போனால் முதலில் பார்க்கலாமா ..?
யார் சொன்னது? நமக்கான இடத்தை அவனல்லவோ தீர்மானிக்கிறான்?!

பன்னிரெண்டு மணிக்கு எழுந்து எல்லோரையும் கிளப்பி ஒன்றரை மணிக்கு கோயிலை அடைந்து முதலில் போனால் அருகில்
பார்க்கலாம் என்று அடித்துப்பிடித்து ஓடிய எங்கள் அறியாமையை எண்ணி குலுங்க குலுங்க சிரித்தோம்....சிரித்தோம்...சிரித்து கொண்டேயிருந்தோம். இன்றும் அதை நினைத்தால்.....அதே குறையாத சுருதியோடு சிரிப்பு வரும். எல்லாம் ஏழுமலையானின்
குறும்பு விளையாடல்!!!!!!

Labels:


Comments:
அதென்னங்க 4 வருஷம் கழிச்சு அழைப்பா?

நாங்க ஒரு சமயம் தோமால சேவைக்கும் சில வருஷங்கள் முன்பு அர்ச்சனா சேவைக்கும் போனோம்.
அப்பெல்லாம் லிஸ்ட் வச்சு பேரு ஒண்ணும் கூப்புடலை. அதிலும் அர்ச்சனை சமயம் நாங்க முன்னாலே வரிசையில்
காத்து இருந்தாலும், கதவைத்திறந்து உள்ளே போகலாமுன்னு சொன்னவுடன், மக்கள்ஸ் எங்களை அப்படியே
பிடிச்சுத்தள்ளி முன்னாலே போயிட்டாங்க. நாங்க முண்டியடிக்க மனசில்லாமல் பேசாம நின்னுக்கிட்டே இருந்து,
கடைசியா உள்ளே போனோம். எல்லாரும் தரையில் உக்கார்ந்தாச்சு. பெருமாளுக்கு நேராக் கடைசியில் நிக்கமட்டும்
இடம் இருந்தது. அந்த ஒரு மணிநேரமும் நின்னுக்கிட்டே பெருமாளை சேவிச்சோம். ரொம்ப நிம்மதியாவும்,
சந்தோஷமாவும் இருந்தது. உக்காரமட்டும் இடம் கிடைச்சிருந்தா அவதிப்பட்டுப் போயிருப்பேன். எனக்கு முழங்கால் வலி
இருக்கு. எவ்வளவு நேரம்வேணுமின்னாலும் நிக்க முடியும். தரையில் உக்கார்ந்திருக்கணுமுன்னா................

அதான் எம்பெருமானே பார்த்துக்கிட்டார்.

நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கணும்.
 
அபிஷேகம் பார்த்தீர்களா நானானி. கொடுத்து வைத்தவர்தான்.

இந்த ஏழுமலைக்காரர் எப்போ எப்படித் தரிசனம் கொடுப்பார்னு தெரியாது. திடீரீனு பட்டர் வாயில வந்து
கொஞ்சம் நில்லுனு சொல்லுவார்.

இல்லாட்ட அந்த ஜெருகண்டி ஆசாமிகள் கையில வந்து தள்ளியும் விடுவார்.......
எப்படியோ ஒரு தடவையே பார்த்தாலும் கண்வழி புகுந்து கருத்தினில் கலக்கி விடுவார். மிக மிக நன்றி.
 
"எல்லாம் அவன் செயல்"
என்பதை
எல்லாருக்கும்
எல்லா காலங்களிலும்
உணர்த்திக் கொண்டே
இருப்பவன்தான்-
எல்லாம் வல்ல அந்த
ஏழு மலையான்!
 
ஆமாம்!துளசிம்மா! 4 வருஷம் கழிச்சுத்தான் நாள் கிடைத்தது.எங்களையும் சேர்த்து ஒரு 5 குடும்பங்கள் இருந்தன. அவர்கள் வாசித்த கிரமப்படி அமர்ந்தோம். மக்கள்ஸ் எல்லாம் பிறகு வந்தார்களோ தெரியாது.எந்த இடிபாடுகளும் இல்லாமல் செளகரியமாகவும் திவ்யமாகவும் தரிசனம் செய்தோம்.
உங்களுடைய பிரச்சனை அறிந்து பெருமாள் நின்றசேவையாகவே தன்னை சேவிக்கச்செய்த கருணையே கருணை!!!!
நானும் கொஞ்சம் பெரிதாகவே பதிலிட்டேன்.
 
வல்லி!
சொன்னாமாதிரி எப்போ வா என்பார் என்றே தெரியாது.இப்படித்தான் திருப்பதி போய்வந்த கையோடு, அண்ணனும் ரங்கமணியும் சபரிமலை
போகணும் என்று பேசிக்கொண்டார்கள்.
அண்ணி என்னைப்பார்த்து நாமும் போவோமா? என்றார்கள்.ஓ! போவோமே என்றேன். இதெல்லாம்
நாம் திட்டம்போட்டு பேசியதில்லை.
அடுத்த மாதமே மாலை போட்டு, விரதமிருந்து..டிங்..டிங்..என்று
மலையேறி விட்டோம்.மூசுமூசென்று மலையேறிய அனுபவம் சிரமமான சுகம்....சுகமான சிரமம்!!!!
பெரிசாக திட்டம் போட்டால் நடப்பதில்லை. திடுமென்று எல்லாமே நடந்தேறிவிடும்.
என்ன? இன்று நீ...ளமான பதிலாகவே வருகிறது? இப்படி ஏதும் திட்டமிடவில்லை.
சுகமான சிரமத்துக்கு,சிரமமான சுகத்துக்கு மன்னிக்கோணும்.
 
ராமலக்ஷ்மி!
சரியாகச் சொன்னீர்கள்!
உணர்த்தினாலும் உணரவும் வேண்டுமே!
 
மூவருக்கும் தாமதமான் பதிலுக்கு பொறுத்தருளவேண்டும். பேரனோடு பிஸியாக இருந்துவிட்டேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]