Monday, July 30, 2007

 

புளிமிளகாய்... பிழி மிளகாய்..!.ரெண்டு வகை!!

சன்னிவேலில் இருக்கும்போது ஒரு நாள் புளிமிளகாய் செய்திருந்தேன். எப்போதும் ஒரு நாலைந்து நாட்களுக்கு வருமாறு நிறைய
செய்வேன். அன்று சாப்பிடவந்திருந்த உறவினன், அவனும் ஒரு காராசாமி....கார ஆசாமி! சப்புகொட்டி இட்லியோடு ஊற்றிஊற்றி சாப்பிட்டுவிட்டு, 'GLAD' டப்பாவில் ரொம்ப க்ளடாக டுகோ பண்ணிக்கொண்டு 'டாட்டா!' காட்டிவிட்டுப் போய்விட்டான். அதிலிருந்து என்ன
செய்தாலும் அவ்னுக்கும் ஒரு டப்பா தனியாக எடுத்து வைக்கவாரம்பித்தேன்.

10-12 பச்சை மிளகாய்....சின்ன எலுமிச்சையளவு புளியை கரைத்த கரைசல் --2 கப், 5-6 சின்னவெங்காயம், பெருங்காயம் கொஞ்சம்,
உப்பு, மஞ்சள்பொடி, கடுகு.உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்க.


மிளகாயை காம்போடு வால்பக்கம் கொஞ்சம் கீறிக்கொள்ளவும், வெங்காயத்தை ரெண்டாக நறுக்கிக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய்
ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உ.பருப்பு காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும். ரெண்டும் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். கொஞ்சம் வத்தியதும் கொத்தமல்லி தூவி
சூடான இட்டிலியோடு பரிமாறலாம். விரும்பினால் இதில் சிறிது வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். இதை சாப்பிடும் முறை....மிளகாயோடு ஊற்றி பின் அந்த மிளகாயை இட்லிமேல் பிழிந்துவிட்டு பின் அதை தனியே வைத்துவிட்டு தின்னலாம்.

இன்னொருமுறை, மிளகாயையும் வெங்காயத்தையும் தனியே வதக்கி மிக்ஸியில் அரைத்துக்கொண்டு, தாளித்து புளிக்கரைசலோடு
அரைத்தவிழுதோடு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கலாம். இதில் என்ன சௌகரியமென்றால் மிளகாயை.....பாவம்!....பிழியத்தேவையில்லை.

இதும் கார ஆசாமிகளுக்கு மற்றும் ஜுனியர் சிடிசன்களுக்கு. மேலும் எச்சிஊறுபவர்களுக்கும் தான்!!!!!

Labels:


Friday, July 27, 2007

 

கா.........ர இட்லிப்பொடி!ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!!

முத்துலெட்சுமி சொன்னாங்க 'தின்னே தீப்பாங்க திருநெல்வேலிக்காரங்க' ன்னு. ஒரு சிறு திருத்தம் 'உக்காந்து' என்று முதலில்
போட்டுக்கோணும். அதாவது வேலை வெட்டி செய்யாமல். எப்டி? ஸேம் ஸைடு கோல் போட்டுக்கிட்டேனா?

இது ஒரளவு உண்மைதான். பணக்கார அப்பா, பிள்ளைகளை செல்லமாக வளர்த்து விட்டுப் போய்விடுவார். அவர்கள் தலையெடுத்ததும்
ஒரு வேலையும் தெரியாமல், செய்தாலும் உருப்படியாக செய்யாமலும் தந்தை பாடுபட்டு சேர்த்த செல்வத்தை உட்கார்ந்து தின்றே
அழிப்பார்கள். பல குடும்பங்கள் இப்படி இடம் தெரியாமல் போயிருக்கின்றன.

இருந்தாலும் நாங்க மட்டும் வாய்க்கு ஒணக்கையாய் தின்னா போதுமா? அதனால்தான் நாம் தின்ன பேறு பிறரும் பெறவேண்டுமென
நா சப்புகொட்டும் சில இங்கே.

கா...........ர மிளகாய் பொடி. இட்லி, தோசைக்கு மேட்ச் ஆகும்.
ரெண்டு ஸ்பூன் மிளகு
150 கிராம் காய்ந்த மிளகாய்
மிளகாய்க்கு சமமாக கறிவேப்பிலை
7 அல்லது 8 உரித்த பூண்டு

கடாயில் தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகை போட்டு பொறிந்ததும், சிவப்புமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து மிதமாக
வறுக்கவும்.. பின் பூண்டு தவிர மற்றதை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். இறுதியில் பூண்டு, உப்பு சேர்த்து ரெண்டு சுற்று சுற்றி
வாசம் போகாமல் பாட்டிலில் போட்டு நன்றாக மூடி வைக்கவும்.

இந்தப்பொடி காரப்பிரியர்களுக்கு மட்டும். மற்றவர்கள் ருசித்துவிட்டு கண்களிலும் மூக்கிலும் நீர் வழிய நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு
வந்தால் நான் பொறுப்பல்ல. இட்லி,தோசைக்கு நன்றாக இருக்கும். கண்டிப்பாக எண்ணெய் அல்லது நெய் விட்டுக்கொள்ளவேண்டும்.
நெய்க்கு காரம் கொஞ்சம் மட்டுப்படும். பொடித்தவுடன் சாப்பிட்டால் வாசம் நல்லாருக்கும்.

Labels:


 

கறுப்புதான் எனக்குப் பிடித்த தோசை!!!!

தோசையம்மா தோசை அரிசிமாவும் "முழு" உளுந்தமாவும் கலந்து சுட்ட தோசை!! அதென்ன நடுவில் அரைகுறையாக ஒரு 'முழு'
வந்து விழுந்திருக்கிறதே?

சாதா தோசையில் வெள்ளை உளுந்து சேர்த்து அரைப்பார்கள். இது உளுந்தின் கறுப்பு நிறத் தோலோடு சேர்த்து அரைக்கும் தோசை.
புழுங்கல் அரிசி மூன்று கப்-- கறுப்பு உளுந்து ஒரு கப் என ஊறவைத்து அரைத்து(விரும்பினால் வெந்தயம் சேர்க்கலாம்) புளிக்கவைத்து
மறுநாள் தோசை வார்த்தால் மணம் அக்கம்பகமெல்லாம் நம் வீடு நோக்கி இழுக்கும்!!


எனக்கு இந்த தோசையோடு சாமரம் வீசவேண்டிய சேடிகள் யாரெல்லாம் தெரியுமா? வட்டவட்ட கறுப்பு தோசை... மேலே வெங்காயச்சட்னி, தேங்காய்,காய்ந்தமிளகாய்,பூண்டு சேர்த்தரைத்த சிகப்பு சட்னி.....கறுப்புதோசை-சிகப்பு சட்னி!! எந்த கட்சியிலும்
சேராத காம்பினேஷன்!!....பக்கத்தில் கட்டித்தயிர் மேலே சர்க்கரை தூவி! இது போக ஒரு கார மிளகாய்ப்பொடி!!

சாப்பிடுவது என்னவோ ரெண்டு தோசைதான் ஆனாலும் என் தட்டு எனும் கொலுமண்டபத்தில் இத்தனை பேரும் வீற்றிருக்கவேண்டும். இல்லையெனில் மகாராணியார் எழுந்து போய்விடுவார், ஒரு காலத்தில். ஹி...ஹி...


தோசையின் நிறம் சிறிது கறுப்பாக இருப்பதால் நாங்கள் செல்லமாக இடட பெயர் 'கறுப்பு தோசை'. மெத்மெத்தென்று ஊற்றி ஜோதிகா
மாதிரி சுற்றி எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்தால் சூப்பர் தோசை!

இந்த தோசை மாவில் ஒன்றிரண்டாக பொடித்த சீரகம். மிளகு கலந்து வார்த்தெடுத்தால் பெருமாள்கோயில் பிரசாதமான 'வங்கார'
தோசைதான்!!

சமீபகாலங்களில் 'தோசா மேளா' என்று சில ரெஸ்டொரண்டுகளில் ஐம்பது வகைதோசை! அறுபதுவகை தோசை! என்று கூவிகூவி
பரிமாறினார்கள். இத்தனை வகைகளா! என்று நுழைந்தால்....ப்பூ!!!!!!!!! தோசையில் பொடி தூவினால் 'பொடி தோசை', காரட் தூவினால்
'காரட் தோசை', வெங்காயம் தூவினால் ;வெங்காய தோசை', தக்காளி தூவினால் 'தக்காளி தோசை', இப்படி கீரை, துருவிய கோஸ்,
முந்திரிப்பருப்பு, பீட்ரூட், இப்படியே இருக்கிற காய், கீரை வகை பருப்பு வகை என்று தூவிதூவி விற்றால் ஐம்பது என்ன...நூறு வகை தோசைகள் சுடலாம். கொஞ்சநாள் பரபரப்பாக இருந்தது. ஒரு நாள் லொடக்கென்று படுத்துவிட்டது. ஏன் சொல்கிறேனென்றால் இத்தனை
வகை தோசைகளில் என்னருமை கறுப்பு தோசை இல்லவேயில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!


மேலே சொன்ன வெங்காயச்சட்னி, தேங்காய்சட்னி, கா.....ரமிளகாய்பொடி பற்றிய விபரங்கள் அடுத்து வரும் பதிவில்.

Labels:


Sunday, July 22, 2007

 

ஸ்டார் ஹோட்டல்களில் கூட கிடைக்காத 'டிஷ்'

பழங்கறி , சுண்டக்கீரை....தண்ணி சாதம்! ருசித்தவர் நாவில் நீரூறும்!!!!

இதைத்தான் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரைவீரன் படத்தில் தேவாமிர்தம் என்றார்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் மெனுவிலும் இருக்காது. மூன்று நட்சத்திர ஹோட்டல் மெனுவிலும் இருக்காது. ஏன்? சரவண
பவன், வசந்தபவன், சங்கீதா ஹோட்டல்கள் மெனுவிலும் கிடையாது. கையெந்திபவனில் கேட்டுப்பாருங்கள் ?ஊஹூம்!!
பின் எங்கே கிடைக்கும்? அன்போடு அம்மா உருட்டிப்போடும் தயிர்சாதத்தில் கிடைக்கும்.

ஆம்! திருநெல்வேலி சமையலில் இதற்கு முக்கியமான இடம் உண்டு. அதுவும் பொங்கலுக்கு மறுநாள் முன்தினம் பொங்கிய சாதத்தில் கட்டித்தயிர் ஊற்றிப்பிசைந்து இந்தக் கறிகள் எல்லாம் கூட வர எதாவது ஆற்றங்கரைக்குப் போய்
சாப்பிட்டால்.......அம்மம்மா!....சொர்க்கம்....அங்கே கிடைக்கும் தேவ அமுதம்!!!

உறுப்பினர்கள் அதிகமாக இருக்கும் குடும்பங்களில் அவியல் ,கடைந்த கீரை, வத்தல்குழம்பு செய்து மதியம் சாப்பிட்டுவிட்டு ,மீதியிருக்கும் அவியலிலும் கீரையிலும் தனித்தனியாக வத்தல்குழம்பு ஊற்றி மண்சட்டியில் சுண்ட
வைப்பார்கள். சுண்டும் மணம் நாவை சுண்டியிழுக்கும்.

இரவு மீந்த சாதத்தில் கட்டித்தயிர் ஊற்றிப் பிசைந்த தயிர்சாதத்து தொட்டுக்கொள்ள பழங்கறிக்கும் சுண்டக்கீரைக்கும்
ஈடு வேறு ஏதாவது உண்டா சொல்லுங்கள் பார்க்கலாம்? அதிலும் சீசனில்

மாம்பழமும் சேர்ந்து கொண்டால் ஷொல்லவே வேண்டாம்.

அதிலும் வெயில் காலத்துக்கு ஏற்ற இன்னொன்று....மண்பானையில் வடித்த புழுங்கலரிசி சாதம்..வடித்த அந்த கஞ்சியை
இரவு பானையில் மீதியுள்ள சாதத்தில் விட்டு, காலையில் ஒரு கிண்ணத்தில் அந்த சாதமும் கஞ்சித்தண்ணியும் விட்டு உப்பும் இட்டு ஒரு தட்டில் பழங்கறி,சுண்டகீரை வைத்து அள்ளி உண்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு குளிர்ச்சி பரவும் பாருங்கள்! அதுதான் சூப்பர் ப்ரேக்ஃபஸ்ட்! ப்ரெடாம்லெட், கெலாக்ஸ், பான்கேக், பேகல் எல்லாம் கிட்ட நிக்கமுடியாமல் காததூரம் ஓடிவிடும். இன்னும் இதோடு ஈராய்ங்கம்!.....அதாங்க சின்ன வெங்காயம் கடித்துக்கொண்டால்
ஜலதோஷத்துக்கே தோஷம் வந்து விலகி விடும்.


அந்த கஞ்சித்தண்ணியை வெறுமே உப்புப்போட்டு பருகினாலும் குளிர்ச்சியே! இதைத்தான் 'தேவாமிர்தம்' என்றார்களோ?

என் பிள்ளைகளுக்கு அவியலும் கீரையும் புதிதாக சாப்பிடப்பிடிக்காது. எனவே பழங்கறியும் சுண்டக்கீரையும் செய்வதற்காகவே அவியலும் கீரையும் செய்து 'புதுப் பழங்கறி, சுண்டக்கீரை' செய்வேன். தயிசாதத்தோடு உருட்டிப்போட்டால் கூட நாலு கவழம் உள்ளே போகும். என் மகன் மும்பையில் விமானம் ஏறு முன், 'அம்மா! தயிர் சாதம் பழங்கறி வேண்டும்.' என்று மொபையிலில் சொல்லிவிடுவான். அவன் வருமுன் ரெடியாயிருக்கும். இரவு பதினொருமணிக்கு உருட்டிப்போடப்போட அவனுக்கு வயிறும் எனக்கு மனமும் நிறையும்!

இவ்வளவும் சொல்லும் போது என் அம்மா பௌர்ணமி இரவில் எங்கள் எல்லோருக்கும் ஒரு பெரிய பாத்திரத்தில் கட்டித்தயிர் விட்டு சாதம் பிசைந்து பழங்கறி சுண்டக்கீரையோடு உருட்டி உருட்டி போட்டெதெல்லாம் மனக்கண்ணில்
ரிவைண்டாகி ஓஓஓஓஓடியது!!!!!

Labels:


Friday, July 20, 2007

 

முந்திரி.....உன் பிந்திரி!

சென்ற மாதம் ஒரு மினி திருக்கோயில்கள் உலா வந்தோம். மதுரையிலிருந்து என் நாத்தனார் குடுப்பத்தோடு கிளம்பினோம். முதலில் பிள்ளையார்பட்டி, பிறகு சுவாமிமலை.....இதோடு அறுபடை வீடுகளும் பாத்தாச்சு, அப்புரம்
திருமணஞ்சேரி. ஆமா! இத்தெய்வங்களெல்லாம் அழைத்தார்கள். தவறாமல் சென்று தரிசித்தோம்.

அப்படி தரிசனம் முடிந்து வரும் வழியில்

புதுக்கோட்டையிலிருந்து தஞ்சை செல்லும் வழியெங்கும் ஒரே முந்திரிக்காடு. சாலையோரத்தில் சின்னச்சின்ன பந்தல்கள்.
அதனடியில் பெண்கள் என்னவோ செய்துகொண்டிருந்தார்கள். ஆவல்மிக நாங்கள் சென்ற டாக்ஸி டிரைவரிடம் கேட்டேன்.
'முந்திரிப்பருப்பு வறுத்து விக்கிறாங்கம்மா!' என்றார். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஒரு பந்தலருகில் சென்று
பார்த்தேன். ஓடு பிரிக்காத முந்திரிக்கொட்டையை இரும்புக்கடாயில் போட்டு அடுப்பில் வறுத்துக்கொண்டிருந்தார்கள்
.இருபெண்கள். மற்றுமிருவர் வறுத்த கொட்டையை சிறு கல் கொண்டு உடைத்து பருப்பை தனியாக எடுத்து பாக் செய்து கொண்டிருந்தார்கள் . பக்கத்தில் ஒரு பெஞ்சில் அரைகிலோ பாக்கெட் பாக்கெட்டாக வறுத்த முந்திரிப்பருப்பு. அங்கேயே டேஸ்ட் பார்க்க நாலைந்து கொடுத்தார்கள். மொறு மொறுவென்று நன்றாக இருந்தது. அத்துடன் கடுகு சைசில் க்ரான்னூல்சாக
கிடைக்கும் முந்திரியும் பாக்கெட்டில் இருந்தது. அது எதற்கு என்றேன். மசாலாக்களில் அரைப்பதற்கு....ஓட்டல்காரர்கள் வாங்கிச்செல்வார்கள்.என்றார்கள். வீட்டு மசாலா என்ன பாவம் பண்ணியது? முழுமுந்திரி இரண்டு கிலோவும் மசாலாவுக்காக தூள் முந்திரி ஒரு கிலோவும் வாங்கிக் கொண்டோம். அவர்களுக்கு ஒரே சந்தோஷம்!

அப்பெண்கள் கொட்டையை உடைக்கும் விதம் பார்த்து எனக்கும் உடைக்கும் ஆசை வந்தது. 'நானும் உடைக்கவா..?'
என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஐயையோ!!! அம்மா! உங்களால் முடியாது. எங்கள் கைகளைப்பாருங்கள்!' என்று
கைகளை விரித்துக்காட்டினார்கள். கடவுளே!!!! உள்ளங்கைகளெல்லாம் வெந்து புண்ணாகி காய்த்து கருகருவென்றிருந்தன.
கொட்டையை வறுத்து உடைக்கும்போது வெளிவரும் ஒருவகைப் பால் பட்டு கைகள் புண்ணாகிவிடுமாம்!! பாவம்!!
நாம் நெய்யில் வறுத்து பாயசம், மற்ற இனிப்புகளில் சேர்த்தோ அல்லது அப்டியேவோ மொசுக்கும் முந்திரிப்பருப்புக்கு
பிந்திரி உள்ள சிரமங்கள்தான் எத்தனை?
என் காமிரா காரில் வைத்துவிட்டு அங்கு போனதால் படமெடுக்க முடியவில்லை...ரொம்ப வருத்தம் எனக்கு. இனி கழுத்தில் மாட்டிக்கொண்டே செல்வது என்று முடிவெடுத்தேன்.

Labels:


Saturday, July 14, 2007

 

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்--ரன்னரப்--விக்னேஷ்!!

வெற்றி மேடை சின்னதுபோல....அதனால்தான் ஒருவரை மட்டும் ஏற்றிவிட்டார்கள். சூப்பர் சிங்கர் கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்த்துக்கள்!!
வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள இருவரையும் நன்றாக தயார்
படுத்தியிருக்கிறார்கள். இருவர் முகமும் அதை தெளிவாக சொல்லின.
விக்னேஷ் ஏமாற்றத்தை விழுங்கிய விதம் அவனது மனோதைரியத்தைக்
காட்டியது. ஜெயித்தவனை பாராட்டியதும் அருமை. விக்னேஷுக்கும்எதிர்காலத்தில் இதுபோல் இளம் கலைஞர்களை கண்டெடுக்க இதுபோல்
போட்டிகள் அவசியம்.
இதற்கு வினாயகர் சுழி போட்டவர் அபஸ்வரம் ராம்ஜி அவர்கள்!

Labels:


Sunday, July 8, 2007

 

மங்கல மங்கையர் குங்குமம் - மீள்பதிவு


Image and video hosting by TinyPic


குங்குமச் சிமிழை நீட்டியதும் மோதிரவிரலை நுழைத்து அள்ளிஇட்டுக்கொள்கிறோமே.....அதைச் செய்வது எப்படி?

நினைவு தெரிந்து கடையில் குங்குமம் வாங்கியதில்லை. HOME MADE-தான்.

அப்பாவே செய்வார்.

சிறுவயது முதலே குங்குமம்தான் இட்டுக்கொள்ளவேண்டும் என்பது எங்கள்
தந்தையின் ஆசை! குங்குமம் காலியாகிவிட்டால்,'அப்பா! ' என்று போய் நிற்போம். அவரும் அவரது கோ-டவுனிலிருந்து.....பெரீரீ...ய ஹார்லிக்ஸ்
பாட்டிலிலிருந்து நிரப்பிக் கொடுப்பார்.


எங்கள் வீட்டுக் குங்குமம் மிகவும் பிரசித்தி! அப்படிப்பட்ட குங்குமம் செய்யும்
முறையை..பின்னாளில்... திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பிறகு அப்பாவிடம் போய்,'எனக்கு கற்றுக்கொடுங்கள்.' என்றேன். 'வந்தாயா! வா!'
என்று அதன் அருமை தெரிந்து வந்த மகளுக்கு ஆவலோடு கற்பித்தார்.


தேவையானவை:

1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் --ஒரு கிலோ
2) எலுமிச்சம் பழச்சாறு---------------------------------1 1/2 லிட்டர்
3)வெங்காரம்-------------170 கிராம்
4)சீனாக்காரம்------------65-70 கிராம்
5)நல்லெண்ணை--------100 கிராம்
6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர்----------வாசனைக்கு தேவையான சில துளிகள்


கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதனுடன் கலக்கவும் .

அத்துடன் வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும்


நன்றாகக் கலந்ததும் மெல்லிய வெள்ளைத்துணியால் மூடி தனியே வைக்கவும். தினமும் காலையும் மாலையும் நன்றாகக் கிளறிவிடவும்.

கிளறுவதற்கு மரக்கரண்டியையே உபயோகிக்கவும்
சாறு முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல் கிளறிக்கொண்டே
இருக்கவேண்டும். சாறு ஏற ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு மாறியிருக்கும்.


பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நிழலில் காயவைக்கவேண்டும்.
இப்போது கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும் நேரமும் நிறைய
பொறுமையும் பிடிக்கும் வேலையிது!


நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள இரும்பு உரல், உலக்கை
கொண்டு கைப்பிடி கைப்பிடி அளவாகப் போட்டு இடிக்கவேண்டும். சுமாராக
இடிபட்டதும் அதே பாத்திரத்தின் வாயை மெல்லிய வெள்ளைத்துணியால்
கட்டி பொடி செய்ததை அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்' செய்ய
வேண்டும். மேலிருக்கும் கப்பியை உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.


this process goes on & on till you get little கப்பி.
fine powder -ஆக கிடைத்த மஞ்சள் பொடியை....இனிமேல் 'குங்குமம்' என்றே
அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி
கிளறவும். நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை தேவை.


இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ அத்தர், ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக் கேட்பவர்க்கும்
கொடுக்கலாம்.


எல்லோரும் மஞ்சள் குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
பழைய பாட்டொன்றொடு முடிக்கிறேன்.

"கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு புடவை கட்டி
நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை பின்னிவிட்டு

உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு புகழ்ந்ததையா
நற்றிடும் பழமை அதை நாடுவதே நல்லதையா!"

Labels:


 

உங்கள் வோட்டு யாருக்கு? கிருஷ்ண்மூர்த்திக்கா...?விக்னேஷுக்கா...??

சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டி அமர்களமாக நடந்து முடிந்து, முடிவின் எல்லையை தொட்டு நிற்கிறது. அம்மம்மா.......!!!!!குழந்தைகள் எல்லோரும்
என்னமா...பாடிவிட்டார்கள்!!
ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்து, போகப்போக சூடுபிடிக்கப்பிடிக்க
சுவாரஸ்யம் கூடவாரம்பித்தது.
ஒவ்வொரு பாடலுக்கும் பாடியவர்கள் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையோ சந்தித்து பயிற்சி எடுத்து, ஆசி பெற்று தங்களை
மெறுகேற்றிக் கொண்டவிதம் பராட்டப் படவேண்டியது. இளம் தலைமுறையினர் பழமையை மறக்காமல் பங்கேற்றது மிகச் சிறப்பு.
எல்லாவற்றையும் விட பெற்றோர் முகத்தில் பொங்கி வழிந்த சந்தோஷத்தைப் பார்க்கவேண்டுமே!!! எதிர்பார்ப்பும்..தவிப்பும்...வேண்டுதலும்..
சந்தோஷமும்...பூரிப்பும்...துள்ளிகுதிப்பதுமாக மாறிமாறி அவர்கள் காட்டிய
பாவங்கள்!!!! ஈன்ற பொழுதில் பெரிதுவுந்த நேரமது
ஆரம்பத்திலேயே என்னைக்கவர்ந்தவர்கள்...கிருஷ்ணமூர்த்தியும் விக்னேஷும்தான். அவர்களது வெற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாக
தெரிந்த்து எனக்கு.
அது போலவே அவ்விருவரும்தான் இறுதிச்சுற்றில் வந்து நின்றார்கள்.
எனக்கே உற்சாகமாயிருந்த்து!! அவர்கள் பெற்றோருக்கு எப்படியிருந்திருக்கும்?
இப்போது உங்கள் வோட்டு யாருக்கு? அவர்களுக்காக வோட்டு சேகரிக்க
வந்திருக்கிறேன். என்வோட்டு.....? இருவருக்கும்தான்!!
இருவருக்கும் உள்ள ஒற்றுமை. நல்ல மெருகேறிய குரல்வளம்...,கடுமையான உழைப்பு...உற்சாகம்...சிறப்பாகப்பாடி அனைவரையும் கவர்ந்தவிதம் எல்லாம் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியும்
விக்னேஷும் தான் சூப்பர் சிங்கர் போட்டியில் முதலிடத்தைப் பெறவேண்டும்
என்பதே என் நியாயமான ஆஆஆசை!!!!என்ன? சரிதானே!

Labels:


Saturday, July 7, 2007

 

அரிதிலும் அரிது இப்படிகிடைப்பதரிது.......

என்ன அரிது? எப்படிக்கிடைப்பதரிது?

இப்படிக்கிடைப்பதரிது. இன்று என்ன நாள்...?

07-07-07

இந்த அரிய நாளில் உலகத்திலுள்ள அனைவருக்கும்

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!!!!!!

Labels:


Friday, July 6, 2007

 

திருப்பதி தரிசனம்...FIRST COME THIRD BASIS!!!!


திருப்பதி ஏழுமலை வெங்கடேசா!!! உன் தரிசனம் கிடைப்பது ரொம்ப லேசா!!!!!
எந்த கோயில் தரிசனமமும் என்னைப் பொறுத்தவரை அழைப்பில்லாமல் போனால் சுவைக்காது. ஆமாம்...!..யார் அழைப்பதாம்?
வேறு யார் சாமிதான்!!

கோயில் தரிசனத்துக்கு அது உள்ளுரோ வெளியூரோ சட்டென்று கிளம்பிவிடமாட்டோம். அதுவும் விசேஷ நாட்களில்...சுத்தம்!
அந்த நாட்களில் போவதென்பது ரங்கமணிக்கு கொஞ்சம் அலர்ஜி!! 'ரொம்ப கூட்டமாயிருக்குமே? இன்னொரு நாள் போவோமே!'
ஓ!! போவோமே! நமக்காக கூட்டமில்லாத விசேஷ நாளன்று போலாமே! ஆனால் ஆண்டவன் அழைப்பு...இல்லையில்லை கட்டளை
வந்தால் ஓஓஓடி விடுவோம். அப்படி நாங்கள் போன கோயில்கள் நிறை.....ய! ஆறு முறை திருவண்ணாமலை கிரிவலம் உட்பட.

அப்படி பெருமாளுக்கு அபிஷேகத்துக்கு பணம் கட்டி நாலு வருஷம் கழித்து குறிப்பிட்ட நாளில் வரும்படி அழைப்பு...சாரி.. கட்டளை வந்தது. பணம் கட்டியது அண்ணன். ஆனால் அண்ணன் குடும்பத்தோடு எங்களையும்
வரும்படி அண்ணன் மூலம் கட்டளையிட்டார் ஏழுமலையான். நெல்லையிலிருந்து அண்ணன் குடும்பமும் சென்னையிலிருந்து
ரங்கமணி, நான், என் மகள் மூவரும் கிளம்பினோம். (மகன் வெளியூரிலிருந்தான்)

ஏழு மலைதாண்டி ஏழு கடல்தாண்டி ஏழுமலையானின் திருப்பதி சென்றடைந்தோம். மதியம் சாப்பிட்டுவிடு கோயிலைச் சுற்றியுள்ள
கடைகளில் ஸ்ர்ஃபினோம். கோயில்கடைகளில் மேய்ந்து சின்னச்சின்ன நினைவுப் பொருட்கள் வாங்குவது மிகவும் பிடித்தமானதொன்று.
மறுநாள் தான் அபிஷேகமென்பதால் நன்றாக சுற்றிவிட்டு சீக்கிரமே இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பினோம்.

படுக்குமுன் பேசிக்கொண்டோம்....'காலையில் ஒரு மணிக்கே எழுந்து குளித்து ரெடியாகி சீக்கிரமே கோயிலுக்குப் போய்விட்டால்..
சுவாமிக்கு வெகு அருகில் அதாவது முதலாவதாக அமர்ந்து அபிஷேகம் பார்க்கலாம்.' எல்லோருக்கும் ஓஓஓகே!

நானும் அண்ணியும் பன்னிரெண்டு மணிக்கே எழுந்து குளித்து தயாராகி, மற்றவர்களையும் எழுப்பி ரெடியயகச் சொல்லி
அன்னா இன்னா என்று பட்டுப்புடவை சரசரக்க ஈரக்கூந்தல் மினுமினுக்க கோயில் வாசலை நோக்கி ஓடினோம். தரிசனத்துக்குச்செல்லும்
பாதை வெறிச்சோடிக் கிடந்தது......ஐ...யா! ஜாலி! நாமதான் முதலில் வந்திருக்கிறோம்! சந்தோஷமாக ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொண்டோம்!

காலியாகக் கிடந்த தரிசனப் பாதை வழியே உற்சாகமாக ஓடினோம்...ஓடினோம்...ஓடினோம் பாதையின் எல்லை வரை ஓடினோம்.
இடையில் ஓரிடத்தில் உட்கார வைக்கப் பட்டோம்....காரணம், சுப்ரபாதம் முடிந்துதான் அபிஷேகமாம்! சரி.. கொஞ்சம் ரெஸ்ட்.

இறுதியில் கோயில் பிரகாரத்தை வந்தடைந்தோம். அப்பாடா..! நாம் தான் முதலில்..!.சிறிது மூச்சு வாங்கினோம்.

என் மகள் என்னைப் பார்த்து, 'அம்மா!! அக்கட சூடு.' எங்கே..எங்கே..'கொஞ்சம் அப்பிலே சூடு!' என்றாள் குறும்பு கொப்பளிக்க. சூடிக்கொடுத்ததை சூடிக்கொண்டவனின் அபிஷேகம் காண எங்களுக்கு முன் இரண்டு குடும்பத்தினர் அங்கிருந்தனர்!! ஒஹ்ஹோ!!!!
அப்படியானால் அவர்கள் எப்போதே ரெடியாகி இங்கு வந்திருக்கவேண்டும்? ஏடு கொண்டலவாடா......! கண்ணைக் கட்டுதே..!!

எங்களுக்குப் பின்னால் இன்னும் மூன்று குடும்பத்தினர் வந்தனர் எல்லோரும் பிரகாரத்தில் ஒன்றாகக் கலந்து நின்றோம்.
ப்ஃஸ்ட் கம் ப்ஃஸ்ட் பேஸிஸாவது ஒன்றாவது.? கோயில் பொறுப்பாளர் ஒருவர் ஒரு லிஸ்ட்டொடு வந்து ஒவ்வொரு குடும்பத்தினர்
பேராக வாசிக்க வாசிக்க ஒவ்வொருவராக கோயிலினுள் செல்லவாரம்பித்தனர். அண்ணன் பேர் மூன்றாவதாக வாசிக்கப்பட்டது.

சன்னதிக்கு அருகிலாவது இடம் கிடைக்குமா..? கொஞ்சம் சுருதி குறைய சன்னதி நோக்கி நடக்கவாரம்பித்தோம். . .பெருமாள் குறுஞ்சிரிப்போடு.....'அடியார்கள் படியாய் கிடந்து பணி செய்ய விரும்பிய..' படியருகே எங்களுக்கான இடத்தை படியளந்திருந்தார்.
இறங்கிய சுருதி சும்மா... ஏழரைக் கட்டைக்கு ஏறியது! இந்த இடம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா...?
இதுவே எதேஷ்டம் என்று மகிழ்வோடு படியருகே அமர்ந்தோம்.

அபிஷேக தரிசனம், அற்புதமாயிருந்தது. கண்குளிரக் கண்டோம். நெஞ்சம் மகிழ்ச்சியில் நிறைய, கைகள் பிரசாதங்களால் நிறைய
அறைக்குத் திரும்பினோம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். 'எப்படி...? எப்படி....? முதலில் போனால் முதலில் பார்க்கலாமா ..?
யார் சொன்னது? நமக்கான இடத்தை அவனல்லவோ தீர்மானிக்கிறான்?!

பன்னிரெண்டு மணிக்கு எழுந்து எல்லோரையும் கிளப்பி ஒன்றரை மணிக்கு கோயிலை அடைந்து முதலில் போனால் அருகில்
பார்க்கலாம் என்று அடித்துப்பிடித்து ஓடிய எங்கள் அறியாமையை எண்ணி குலுங்க குலுங்க சிரித்தோம்....சிரித்தோம்...சிரித்து கொண்டேயிருந்தோம். இன்றும் அதை நினைத்தால்.....அதே குறையாத சுருதியோடு சிரிப்பு வரும். எல்லாம் ஏழுமலையானின்
குறும்பு விளையாடல்!!!!!!

Labels:


Tuesday, July 3, 2007

 

நயாகரா....என் நெஞ்சினிலே...! - மீள் பதிவு

>
குற்றால அருவியையும் பாத்திருக்கேன்..பாபநாச அருவியையும் பாத்திருக்கேன்...மணிமுத்தாறு அருவியையும் பாத்திருக்கேன்..திற்பரப்பு அருவியையும் பாத்திருக்கேன்...ஒக்கனேக்கல் அருவியையும் ஜோக் அருவியையும் பார்த்திருக்கேன் என்வீட்டில் நானே செஞ்ச fountain falls-ம் பார்த்தேயிருக்கேன்...பாத்தாலும் பாத்தேன் நயாகரா....நான் வொன்னப் போலப் பாக்கல...கேட்டாலும் கேட்டேன் உன் ஓசை போல
கேக்கல.

சென்ற முறை அமெரிக்க விஜயத்தின் போது ஒரு ஐந்தாறு மாகாணங்கள் + கனடா வரை சுற்றியிருப்போம். அதில் நிறைய சுற்றியது, ரங்கமணியின்
சகோதரர் குடும்பத்தோடுதான். நயாகரா, சுதந்திரதேவி சிலை, ஹவுஸ் ஆன் தி ராக், மில் வாக்கி மியூசியம் முக்கியமான்வை.
நயாகரா போவது முடிவாகியதும் முதல்வேலையாக எங்கள் இருவருக்கும் கனடியன் விசா வாங்கிவிட்டார்கள். குறிப்பிட்ட நாளில்
அதிகாலை விமானம் பிடித்து எருமைமாட்டில்.....மன்னிக்கவும் baffello-வில் இறங்கினோம். முன் ஏற்பாட்டின் படி வாடகைக் கார்
சகோதரர் பேர் , பார்க்கிங் லாட் எண் முதலியவை போர்டில் குறிப்பிடபட்டிருந்தன. கவுண்டரில் சாவி வாங்கிக்கொண்டு காரை அடைந்தோம். புத்தம்புது போர்ட் கார்!

நேரே கனடியன் பார்டரை அடைந்து விசா ஸ்டாம்பிங் செய்து வாங்கிக்கொண்டு அருவிக்கரையை......ஐயய்யோ!! கரையிலெல்லாம்
இல்லை.. அருவியின் உச்சியிலிருந்து விழும் அழகைப் பார்க்கலாம். வெறும் வார்த்தையில் சொல்லிவிட்டேன்! கோயிலுக்குப்போய்விட்டு
சுவாமி தரிசனம் திவ்வியமாயிருந்தது என்போமே... அதைப்போல் ஒரு 'ப்ரம்மாண்ட தரிசனம்.....திவ்யம்!!!

படகு சவாரியில் அருவியின் அடிவாரம் வரை அழைத்துப்போகிறார்கள்.அருகே செல்லச்செல்ல.... முருகா..! தேவர்கள் பூமாரி தான்
பொழிவார்கள். எங்களுக்கு நீர்மாரி பொழிந்தார்கள்!!!! அப்பப்பா!!...என்ன சுகம் என்ன சுகம்!!!

அன்று முழுதும் கனடியன் பக்கத்தை முழுசாக அளந்தோம். பார்க்கப் பார்க்க பரவசம்! ஓரோர் இடத்தில் அமர்ந்து கொண்டு நானும்
என் சகோதரியும்....ஓர்ப்படி?...யும் அருவியின் அழகையும் அதன் பேரோசையையும் கண்கொட்டாமல் காதும் மூடாமல் ரசித்துக்கொண்டேயிருந்தோம் எங்களை மறந்து. ரங்கமணிகள் வந்து ,'என்ன? அடுத்த இடம் போக வேண்டாமா..?' என்றதும்தான்
நகர்வோம் மனமில்லாமல்.

என் காமிரா கவரை படமெடுக்கும் சுவாரஸ்யத்தில் ஓரிடத்தில் மறந்து வைத்துவிட்டு நகர்ந்துவிட்டேன். திடீரென்று நினைவு
வந்ததும் ஓடினோம். அமெரிக்காவில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்கும் யாரும் தொடமாட்டார்கள் என்று கேள்விப்
பட்டிருக்கேன். அந்த நம்பிக்கையில் போனோம். ஆனால் அது கனடா! அங்கு அப்படி கேள்விப்படவில்லை. எனவே கவர் அங்கு இல்லை!
பலவகையான மக்கள் கூடுமிடம் அல்லவா? கவர் தொலைந்த வருத்தமிருந்தாலும் நயகராவின் பேரழகு அதை மறக்கடித்தது!!!

கொண்டுபோயிருந்த சாப்பாடு வகைகளை அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து கா....லி செய்துவிட்டு behind the falls பார்க்கச்சென்றோம்
வார்த்தையி சொல்லவொண்ணா திகிலடிக்கும் காட்சி!! போகும் வழியிலெல்லாம் அருவியில் சாகசம் செய்தவர்கள்....அதில் உயிரிழந்தவர்கள் பற்றி சுவற்றில் விவரித்திருந்தார்கள். படிக்கப்படிக்க உடம்பெல்லாம் சிலிர்த்தது!! சாகசம் செய்யபோனவர்கள் எல்லாம் அநியாயமாக உயிரை
விட்டிருக்கிறார்கள்.....ஆனால் தவறி விழுந்த சிறுவனொருவன் உயிரோடு
மீட்கப்பட்டிருக்கிறான்!!!! விதியின் சேட்டையைப் பாருங்கள்!!!!

இரவு அருவியின் மேல் ஒளிக்காட்சி! வண்ணவண்ண கோலங்களில் மிளிர்ந்தது நயகரா!! கண்கள் கொள்ளுமட்டும்
அள்ளிஅள்ளி விழுங்கி விட்டு புக் செய்திருந்த விடுதிக்குத்திரும்பினோம்.

நானும் என் ஓர்ப்படியும் ஒரே மாதிரி வேறு வேறு கலரில் புடவைகள் எடுத்திருந்தோம். ஆனால் என்று ஒன்றாக உடுத்துவது என்று
பேசிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையில் அவரவர் அறைகளிலிருந்து ரெடியாகி வெளிவந்தோம். இருவரும் அதே புடவைகளைத்தான் உடுத்தியிருந்தோம். 'ஆஹா! என்ன ஒற்றுமை!' என்று ரங்கமணிகள் கலாய்த்தார்கள்.
>அன்று கனடாவிலிருந்து அமெரிக்கப்பக்கம் அருவி பார்க்கச்சென்றோம். காலை உணவை அங்குள்ள பார்க் பக்கம் போய் சாப்பிட்டோம்
காரை பார்க் செய்த இடத்தில் எங்கள் காரைத்தவிர வேறு காரேயில்லை. ஆனால் வேறொருவகையான பார்க்கிங் அங்கு இருந்தது!
ஆம்...! மீதியிடத்திலெல்லாம் கடல் புறாக்கள் கூட்டம்கூட்டமாக பார்க் செய்திருந்தன. அமைதியாக அமர்ந்திருந்த அவைகளை நாங்கள்
அவற்றின் குறுக்கே ஓடி ஓடி கலைத்து சிறிதுநேரம் குழந்தைகளாக மாறி விளையாடினோம்!!! மறக்கமுடியாத நிகழ்வு!
புறாக்களை தொந்திரவு செய்ததற்கு பரிகாரமாக மீதியிருந்த 'கடலை, மற்ற கொறிக்ஸ் எல்லாத்தையும் நொறுக்கி அவைகளுக்கு
வாரியிறைத்தோம். பறந்து பறந்து அவை கொத்தித்தின்ற அழகே அழகு...!!!!!
அதன் பிறகு அவள் என்னை கூட்டிச்சென்ற இடம்தான் என்னைப்பொறுத்தவரை முக்கியமானது. 'நிறைய பேருக்கு இது தெரியாது
அடிக்கடி வருவதால் தனக்குத்தெரியும்' என்று அழைத்துச்சென்ற இடம்! நயாகரா......அருவியல்ல... ஆற்றின் கரையோரம்!!!!!
ரொம்ப நெருங்கிவிடாதபடி சிறு சிறு பாறைகள் தடுப்பு போல் அமைந்திருந்தயிடத்தில் அப்பாறைகளில் அமர்ந்து கொண்டு ஆற்று
நீரை அள்ளிஅள்ளிப் பருகினோம். கால்களை நனைத்தோம்...புனிதநீராக தலையில் தெளித்துக்கொண்டோம். இரண்டடி தள்ளி ஆறு
கூர்மையான கத்தி போல் ஓடுகிறது. கையை விட்டால் துண்டாக நறுக்கிவிடும்....காரணம் சில அடி தூரத்தில் ஆறு..அருவியாக
இறங்குகிறது!!!!

காணக்கிடைக்காத காட்சிகளெல்லாம் காணவைத்த ரங்கமணியின் சகோதரர் குடும்பத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!!!

கடைசியில் பார்த்தால் இவ்வளவு காட்சிகளையும் நான் என் காமிராக் கண்கொண்டு தான் பார்த்திருக்கிறேன்!!
என் மகன் சொன்னமாதிரி....அடித்து முழக்கியிருக்கித்தானிருக்கிறேன்!!!!!!!!!!!!!!

Labels:


 

இப்பமே...இப்பமே...!

'அம்மா!..எனக்கு இப்பமே வேணும்!' பிடித்தாள் அடம்,பிரியா. என்ன வேணுமாம் அவளுக்கு? செடியிலிருந்து அப்பவே பறித்த பிஞ்சுவெண்டைக்காய்...நறுக்..நறுக் கென்று கடித்து சாப்பிட. அம்மா வேலைக்
காரனை தோட்டத்துக்கு அனுப்பி பறித்துவரச்சொன்னாள். சுமார் அரைக்கிலோ
வெண்டைக்காயும் நறுக்..நறுக்கென்று மென்று தின்றாள். கணக்கு நன்றாக
வருமாமே......யார் கண்டது?
அடம் பிரியா..ஆமாம்! பிரியாவுக்கு 'அடம் பிரியா' என்று அவள் அண்ணன்மார்
பிரியமாக வைத்த பெயர்தான் 'அடம் பிரியா!'
இரண்டு நாள் கழிந்திருக்கும். 'அம்மா.......ஆ..ஆ!' ஆரம்பிச்சுட்டாயா...ஆரம்பிச்சுட்டாயா...என்றவாறே அம்மா அருகில் வந்தாள்.
ஹோம்வொர்க் செய்கையிலேயே உள்ளே பல்பு எரிந்திருக்கிறது. 'எனக்கு
காட்பெரீஸ் சாக்லெட் வேணும்...இப்பமே!' கேட்ட நேரம் இரவு ஒன்பது மணி!
'கடையெல்லாம் பூட்டியிருப்பார்களே..பிரியா! காலையில் வாங்கிக்கொள்ளலாம். கண்ணுல்ல?' எட்டு வயது குந்தாணியை...ஆமாம்
அம்மாவுக்கு கோபம் வந்தால் அப்படித்தான் திட்டுவாள், இடுப்பில் தூக்கி
வைக்காத குறையாக கொஞ்சினாள். ' ஹுஹூம்..இப்பமே வேணும்...' அழவாரம்பித்தாள். 'அம்மா! அடத்துக்கு இடம் கொடுக்காதே!' அவள் அண்ணன்
அடுத்த அறையிலிருந்து கூவினான். நோ யூஸ்! பணத்தை கொடுத்து
வேலைக்காரனை ஏதாவது மெடிக்கல் ஸ்டோர் திறந்திருக்கும் அங்கே போய்
வாங்கிவரச்சொன்னாள். 'அம்மா...! நாலு ஃபைவ் ஸ்டார்!'....... ஹுக்கும்! இதுகொண்ணும் கொறச்சலில்லை.

பிரியா பள்ளியிறுதித்தேர்வு எழுதி முடித்தாள். ரிசல்ட் வந்தது.....கணக்கில்
நூற்றுக்கு நூறு! துள்ளிக்குதித்தாள். 'ரொம்பத்தான் குதிக்காதே! நீ மொசுக்குன
வெண்டைக்காய்க்கு இது கூட வாங்கலேனா எப்படி...?' இது அண்ணனோட
பின்னோட்டம். அம்மாவுக்கு சந்தோஷம்! 'உனக்கு என்னடா வேணும் செல்லம்!' அதானே! சும்மாவே ஆடும்...நீ வேப்பிலை வேற அடி!' அண்ணனின்
முணுமுணுப்பு. 'அம்மா! அம்மா! என் friend சிங்கப்பூரிலிருந்து ஒரு வாட்ச்
வாங்கியிருக்கிறாள். எனக்கும் அதுமாதிரி வேணும்.' நேரம் பார்த்து அடித்தாள்.
அவளிடம் இன்னொரு செட்டும் இருக்குதாம்.உனக்கு வேணுமா என்று கேட்டாள்.
சிங்கப்பூர் வாட்சா? ரொம்ப விலை இருக்குமே! 'அம்மா.......அதில் டிரெஸுக்கு
மாட்சாக ஸ்ட்ராப் கலர்கலராக இருக்கும் மாத்திமாத்தி போட்டுக்கலாம்.அம்மா..,ப்ளீ.........ஸ்!' கொஞ்சினாள்.
'சரி...சரி வாங்கிக்கோ.' 'என் செல்ல அம்மா! நாளைக்கே அவளிடம் சொல்லி
வாங்கிக்கிறேன்!' ' ஏன் இப்ப மட்டும்....இப்பமே!!! இல்லையோ? அண்ணன்
கலாய்த்தான்.
இப்படியே பிரியாவின் ஆசைகளெல்லாம் 'இப்பமே..இப்பமே..என்று
நிறைவேறிக்கொண்டிருந்தது.

ஆயிற்று! ஒரு நல்ல நாளில் பிரியாவுக்கும் ராமுவுக்கும் திருமணம் நடந்தேறியது. புதுக்குடித்தனம் போட்டாச்சு. ஒரு மாதம் கழிந்திருக்கும்.
ஒரு சண்டே மதியம் ,'ராம்! ஈவ்னிங் பீச்சுக்குப் போவோமா? ஆசையாயிருக்கு.'
சாரிம்மா! உனக்கு இன்னிக்கு சண்டே, ஆனா எனக்கு இன்னிக்கு ரெஸ்டே!
ரொம்ப டயர்டா இருக்கு இன்னொருநாள் போலாம்டா செல்லம்!'
இன்னொருநாள் புதுப்படத்துக்கு ரெண்டு டிக்கெட் ஓஸியில் கிடைத்தது.
காலையில் ராமிடம் அதைக்காட்டி ,'போலாங்க! சாங்காலாம் சீக்ரமா வாங்க!'
'ஓகே....'என்று டாட்டா காட்டிவிட்டு ஆபீஸ் போய்விட்டான்.
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரெடியாகி காத்திருந்தாள்.
மணி அஞ்சாச்சு...ஆறாச்சு...ஏழும் ஆச்சு. ஏழரை மணிக்கு வந்துசேர்ந்தான்.
இவள் அலங்கரித்து நிற்பதைப் பார்த்ததும்தான் சினிமா ப்ரோக்ராமே..ராமுக்கு
வந்தது. 'வேலை மும்முரத்தில் மறந்துட்டேண்டா! இன்னொரு லீவு நாளில்
போவோம்டா ப்ளீஸ்! சிரிடா!' வெறென்ன செய்வது இப்படி குழைபவனிடம்?
சிரித்தாள் சோகையாக. வாழ்கை என்பது 'இப்பமே' என்பதில் இல்லை...எப்பவும் சிரித்து சந்தோஷமாக இருப்பதில்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட சிரிப்பு அது!!!!

அடம் பிரியா கொஞ்சம் திரும்பிப்பார்த்தாள்.....அவளது அடமும் 'இப்பமே' யும்
பறந்தே........போச்சு...எப்பமே!!!!!!!!!!!!!!!!!!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]