Saturday, June 30, 2007

 

சீனியர் சிட்டிசனுக்கானது

ஒரு வயதுக்குமேல் தவிர்க்கவேண்டியவை என்கிற பட்டியலில், புளி, காரம்,தேங்காய்
உப்பு(இது குறைக்கவேண்டியது),எண்ணை இவையெல்லாம் வந்துவிடும்.
இவை கட்டாயமாக்கப்படுவத்ற்கு முன் நாமே தவிர்த்துவிட்டால்...?
நல்லதுதானே?

அப்படி தவிர்க்கப்பட்ட, குறைக்கப்பட்ட ஒரு குறிப்புத்தானிது!!! என்று
குறிப்பிட விரும்புகிறேன்.

ஏதாவது ஒரு கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து அரிந்தது. பசலைகீரை நன்றாக
இருக்கும். வெங்காயம், தக்காளி பொடியாக அரிந்தது. இஞ்சிபூண்டு நசுக்கியது
கடாய் அல்லது மண்பாத்திரம் அடுப்பில் வைத்து சிறிது எண்ணை விட்டு
காய்ந்த்தும் வெங்காயம்,தக்காளி இஞ்சிபூண்டு வதக்கி பின் அரிந்த கீரையும்
போட்டு சிறிது சுண்ணாம்பு சேர்த்து வதக்கி அளவாக நீர்விட்டு வேகவிடவும்
கீரை வெந்ததும் அளவாக உப்பு சேர்த்து இரண்டு தே.கரண்டி பொட்டுக்கடலை
மாவு அரைகப் பால் விட்டு கலக்கி கீரையில் ஊற்றி கலக்கி சிறிது கெட்டியானதும்
இறக்கவும். எந்தக் கெடுதலுமில்லாத இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும். சூடான சாதம், சப்பாத்திக்கு நன்றாக சேரும்.
சாப்பிட்டுப்பார்த்து பின்னோட்டமிடுங்களேன்!

சுண்ணாப்பு சேர்ப்பது அதன் சத்துக்காகவும் கீரையின் பச்சை நிறம் மாறாமலிருக்கவும்,

Labels:


Friday, June 29, 2007

 

அவசர...அவசர...அவசர சமையல் குறிப்புகள்

இந்த அவசர யுகத்தில் சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்யக்கூடிய

இரண்டு குறிப்புகள் இங்கே தர ஆஆஆசைப்படுகிறேன். சீக்கிரம்...வாங்க.

சமையலறையை புதிதாக எட்டிப்பார்ப்பவர்களுக்கும் கடோத்கஜன்

போன்று சுயசமையல் செய்பவர்களுக்கும் ஏற்றது.

முட்டை குழம்பு: நான்கு பேருக்கு. நாலு
பல்லாரி வெங்காயம் பொடியாக நறுக்கவும். நாலைந்து தக்காளி, அதையும்
பொடியாக நறுக்கவும் அல்லது அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும்
இஞ்சி பூண்டு நசுக்கிக் கொள்ளவும். நாலு பச்சை மிளகாய் சாப்பிக்கொள்ளவும். கடாய் அல்லது குழம்புப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி தேவையான அளவு
எண்ணை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,
இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும். அதோடு கையில் கிடைத்த பொடிகள் எல்லாம் போடவும்.....பயப்படவேண்டாம்,,, மிளகாய்தூள் காரத்துக்கு ஏற்ப.
மஞ்சள்தூள் ஒரு கரண்டி, தனியாதூள் ஐந்து தே.கரண்டி, ஜீராத்தூள் ஒரு
தே.கரண்டி, விரும்பினால் கரம் மசாலாத்தூள் ஒரு தே.கரண்டி, தேவையயன
உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் மூன்று கப் தண்ணீர் சேர்த்து
கொதிக்கவிடவும். வேகவைத்த காரட், காலிப்பூ, மஷ்ரூம் இவையும் சேர்க்கலாம். இறுதியாக நான்கு முட்டைகளையும் ஒன்றன்பின்
ஒன்றாக மெதுவாக உடைத்து நான்கு பக்கங்களிலும் ஊற்றவும். கலக்காமல்
அப்படியே வேகவிடவும். கொத்தமல்லி, புதினா தூவி ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து பாத்திரத்தை மூடி அடுப்பை அணைக்கவும். முட்டைகள் உடையாமல் கலக்கி பரிமாறவும்.
குழப்பு நீர்த்து இருந்தால் பொட்டுக்கடலை மாவு கரைத்து ஊற்றலாம்.
தேங்காய் பாலும் விடலாம். சூடான சாதத்தோடு சந்தோஷமாக சேரும்.
என்ன இப்படி மூச்சு விடாமல், SPB மாதிரி சொல்லிவிடீகள்? என்கிறீர்களா?
பின்ன அவசர சமையல் குறிப்பு அல்வா?

Labels:


Tuesday, June 26, 2007

 

எட்டுக்கு எட்டி எட்டினேன்...ஆஹா! அந்தப்பழம் இனித்தது!

வல்லியம்மா முதலாவதாக என்னை எட்டிட அழைத்தமைக்கு நன்றி!
ஆனால் எட்டாவதாக பதிகிறோமே என்று ஒரு குறுகுறுப்பு.


எட்டு போட்டு காட்டாமலேயே லைசென்ஸ் வாங்கியவள். யோசித்து யோசித்து எட்டிவிட்டேன் எட்டு. ஒவ்வொருவர் வாழ்கையிலும் மறக்கமுடியாத எத்தனையோ எட்டுகள் உண்டு. நல்லவைகளும் அல்லாதவைகளும் கலந்ததுதானே வாழ்கை!! தத்துவம்...?

ஒரு பெண்ணுக்கு தாயின் அருகாமை தேவையான 15-வது வயதில்


அவர்களை இழந்தது....அதற்காக அழக்கூடத்தெரியாமல் மிரளமிரள விழித்தது


மறக்க முடியாதது.

படிப்பில் சுமார்தான். ஆனால் பள்ளியிறுதித்தேர்வில் எதிர்பாராத க்ளைமாக்ஸ்!!! கணக்குப் பரீட்சை! கணக்குகள் போடப்போட விடைகள்


அல்வாத்துண்டுகள் மாதிரி (மண் வாசனை ஹி..ஹி..) சரியாக சரியாக வந்து விழுந்தன. அப்போதே தெரிந்து விட்டது...நூற்றுக்கு நூறு!

பள்ளியிலும் காலேஜிலும் எல்லா விழாக்களிலும் என்னோட வீணை


ப்ரோக்ராம்தான் முதலில் இருக்கும். அதோடு உல்லாசப்பயணங்களிலும்


காமிராவும் கையுமாக அலைவேன். காலேஜை விட்டு வெளிவரும்போது


ஜூனியர்ஸ் கொடுக்கும் பார்ட்டியில் சீனியர்ஸுக்கு பேர் வைத்து அழைத்து


சிறு பரிசு கொடுப்பார்கள். அதில் எனக்கு 'sound of music' என்று வைப்பதா?


இல்லை, 'college photographer', என்று வைப்பதா என்று குழம்பினார்கள்!!!

வீணையை தொடுவதற்கே புண்ணியம் செய்திருக்கவேண்டுமென்


பார்கள். நான் கொஞ்சம் தடவுவதற்கும் பாக்கியம் செய்திருக்கிறேன்.


திருமணத்துக்கு பிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து


எங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் நடந்த ஆராதனை விழாவில் நானும்


வாசிக்க வேண்டும் என்று அண்ணியின் ஆசை. கைவிட்டுப்போச்சே முடியுமா


சபையில் அல்லவா வாசிக்கவேண்டும் என்று தயக்கம். அங்கு வாசிப்பவர்களைப் போய் பார்..உன்னால் முடியும் என்றார்கள். பார்த்தேன்.


நம்பிக்கை வந்தது. நான்கு நாள் சாதகம். ஐந்தாவது நாள் தியாகப்ரம்மத்தை வணங்கி மேடையேறினேன். நான் வாசித்த,'சக்கனிராஜ..., நின்னுவினா..' இரண்டுக்கும் சபையில் எழுந்த கைத்தாளமும் இறுதியில் தட்னாங்க பாருங்க! மெய்சிலிர்த்துப்போனேன்.


தன்யளானேன்!

எங்கள் வாழ்கையோடு கலந்துவிட்ட ஒரு ஜீவனில்லாத ஜீவன். எங்கள்


குடும்பத்தில் நடக்கும் நல்லது அல்லது எல்லாவற்றிலும் அதற்கு பங்கு உண்டு. என் தந்தை அதில் கம்பீரமாக ஏறி அமர்ந்து போவதே ஓர் அழகு!


புரியவில்லையா? எங்கள் எல்லோரது அன்புக்குப் பாத்திரமான தந்தையின்


கார் தான் அது 1947 மாடல் செவர்லெட். பச்சை கலரில் சிங்குச்சா...என்று


கப்பல் போல் மிதக்கும். 79 வயதில் தந்தை காலமாகும் வரை பழுதில்லாமல்


உழைத்து இறுதியில் தந்தையில் உடலை மருத்துவமனையிலிருந்து வீடு


கொண்டு வந்து சேர்த்து தானும் தன் ஓட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொண்டது. இது பற்றி தனி பதிவே போட இருக்கிறேன். எங்கள்


குடும்பத்தின் மறக்கமுடியாத ஓர் உறுப்பினர்.

இரண்டாவதாகப் பிறந்த மகன் அவனுக்கு இரண்டரை வயதாகும்


போது பாண்டிபஜார் பிளாட்பாரத்தில் வளையல் வாங்கிக்கொண்டிருக்கும்


போது நழுவி தளர் நடை போட்டு சிறிது தூரம் சிறிது நேரம் காணாமல்


போய்விட்டான். பதறி ஆளுக்கொரு திசையில் தேடினோம். நான் சென்ற


திசையில் எதிரில் ஒரு நல்ல உள்ளத்தின் கைகளில் மகன்! பதறி வரும்


என்னைப் பார்த்து,'இவன் உங்கள் குழந்தையா?' என்று கேட்க, நான் பதில்


சொல்லவேண்டிய அவசியமின்றி என்னிடம் தாவி வந்தான் குழந்தை.


உடலும் மனமும் அதிர வாரியணைத்த அந்த கணம்!!! அம்மம்மா! மற்க்கமுடியுமா? அந்த நல்லவருக்கு நன்றி!

என் மகள் முதன்முறையாக அமெரிக்கா சென்ற போது அவளை


வழியனுப்பிவிட்டுத் திரும்பும்போது....சும்மா விளையாட்டாக நாமும் இது


போல் ஏர்போர்டில் ட்ராலியை தள்ளிக்கொண்டு போகமுடியுமா? என்று


நினைத்துக்கொண்டே வீடுபோய் சேர்ந்தேன். நம்பமாட்டீர்கள்!! சரியாக


இரண்டு மாதம் கழித்து ஏர்போர்ட்டில் ட்ராலியை தள்ளிக்கொண்டு கலிபோர்னியாவிலிருக்கும் மகள் வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். காரணம் என்


மகன். எங்களை வற்புறுத்தி அனுப்பிவைத்தான். இல்லாவிட்டால் நாங்கள் எங்கே கிளம்ப..? அது மட்டுமா? அக்காவுக்கு போன் செய்து,'அம்மா வரா..


ஆயா வேலைகல்ல! நல்ல ரெஸ்ட் கொடுத்து ஊரெல்லாம் சுற்றிக்காண்பி!'


என்று உத்தரவு வேற! ரெண்டாவது முறை ஆயா வேலைக்கும் போனேன்!


இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்ற பாக்கியசாலிதானே..?

நான் ஈன்ற போது பெரிதுவந்தேன். அதையும் விட பெரீ......தும் உவந்தேன்


மகள் ஈன்றபோது. ஒரு ஜனனத்தின் தரிசனம் கண்டேன்!!


பேரனைக் கைகளில் வாங்கிய போது இமயத்தின் உச்சியிலிருந்தேன்!!!

எட்டு போட்டுவிட்டேன். கொஞ்சம் பெரிய எட்டோ? அதாவது காபிடல்


எட்டோ? எதுவாகினும் சரி! இனி நான் அழைக்கவேண்டியவர்கள் யயர் யார்?

எனக்கு எத்தனை பேரைத்தெரியும்? தெரிந்த சிலபேர் எட்டிவிட்டடர்கள்.

ஓஓஓகே! நான் பின்னோட்டமிட்டவர்களும் எனக்கு இட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களில்......1) அரவிந்தன்

2) ஜெஸிலா

3) மங்கை

4) டுபுக்கு

5) பாலபாரதி

6) பொன்ஸ்

7) குட்டிபிசாசு

8) கடோத்கஜன்


உங்கள் எட்டு பேரையும் அன்போடு எட்டிட குங்குமம் நீட்டி அழைக்கிறேன்.
ஏற்கனவே பதிந்திருந்தால்....க்ரெடிட் கார்ட் பேமெண்ட் ரிமைண்ட்ர் போல்
ஜஸ்ட் இக்னோர் இட்!


விளையாட்டின் விதிகள்:

1) ஆடுபவர் தன்னைப்பற்றிய எட்டு தகவல்களை எழுதவேண்டும்.
அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2) தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்கவேண்டும்.
அவர்களுக்கு இந்த அழைப்பைபற்றி அறியத் தர வேண்டும்.

3) தொடர்பவர்கள் இதேபோல் எட்டு தகவல்களையும் விதிகளையும் எழுதி
வேறு எட்டு பேரை அழைக்கவேண்டும்.

நன்றி!!!!Labels:


Wednesday, June 20, 2007

 

வா வாத்யாரே வூட்டாண்டே- நீ வராவிட்டால் நான் விடமாட்டேன்

'ஏம்மா! எம்மா நேரமா கூவிக்கினேகீரேன். தொடப்பம் எத்து கொடும்மா..நா பெருக்கிபோட்டு அடுத்த வூடு போகத்தாவல...?'
முனியம்மா எதற்கு இப்படி தாவுகிறாள்...கத்துகிறாள் என்று எண்ணியபடியே,'என்ன முனியம்மா! நீ என்ன
ரயிலா குயிலா கூவுவதற்கு? தொடப்பமா? அப்படியென்றால்?'என்று கேட்டாள் பட்டம்மாள்.
சிங்காரச் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கும் டீச்சர்!
'யம்மா உனோட படா பேஜாராப்போச்சு.....எத்தினி தபா யே பேரு மினிம்மா..மினிம்மான்னு சொல்லிக்கீறன்..வூடு கூட்டி பெருக்கிறதில அத்தான்.'
'ஓ! வாரியலா..?' என்றபடியே பெருக்குமாறை எடுத்துக்கொடுத்தாள்
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்த இந்த ஒரு வாரமாக முனியம்மாவோடு ஒரே மொழிப்போர்தான். நெல்லைத்தமிழுக்கும் சென்னைத்தமிழுக்கும்
கடும் போட்டி.
தமிழாசிரியரான பட்டம்மாள் சுத்தத் தமிழிலேயே பேசவேண்டும். என்ற கொள்கை உடையவள்.முக்கியமாக வகுப்பில் தன் மாணவர்கள் நல்லதமிழில்தான் பேச வேண்டும்
அப்போதுதான் தமிழறிவு வளரும் என்பதில் பிடிவாதமாக இருப்பவள்.அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறாள். ஆனால் இந்த முனியம்மாவிடம்தான் படாத பாடு படுகிறாள்
பட்டம்மாள்! இவள் பேசும் செந்தமிழும் சரி நெல்லைத்தமிழும் சரி அவளுக்குப்புரியவில்லை. அவள் பேசும் சிங்காரச் சென்னைத் தமிலும் இவளுக்குப் பிரிலை.
ஒரு நாள்...போர்களத்தின்..உச்சக்கட்டம்..குளியலறை வழுக்குகிறது ப்ளிச்சிங் பெளடர் போட்டு கழுவு என்று தெரியாமல் சொல்லிவிட்டாள். அவ்வளவு தான்...
'இன்னாம்மா பாத்ரூம்பு இம்மா கலீஜா போட்டு வெச்சிருகே.. அப்பப்போ கழுவத்தாவல?
கலீஜா? அப்படி எதைப் போட்டு வைத்தோம்?...குளியலறையை எட்டிப் பார்த்தாள்.
முனியம்மாவைப் பார்த்து 'கலீஜ் எங்கே? என்றாள் அப்பாவியாக! கலீஜ் என்றால் ஒரே அழுக்கும் குப்பையுமாக என்று அர்த்தம் என்று முனியம்மாவின் விளக்கத்திலிருந்து புரிந்து கொண்டாள்.
'இத்தெல்லாம் என்னாலே ஆவறதில்ல...நா போய் ஏ வூட்டுக்காரர இட்டாரேன்,
அவரு க்ரீட்டா செய்வார்.' என்றவாறு வூட்டுக்காரர இட்டாரப் போய்விட்டாள்.
'இட்டார..?' புரியவில்லை பட்டம்மாளுக்கு. 'இட்டார் பெரியோர்..இடாதார்...'என்பதுபோல்
முனியம்மாவும் ஏதாவது வெண்பா இயற்றுகிறாளா....? தமிழாசிரியை அல்லவா! நினைப்பு அப்படி போச்சு. பக்கத்துவீட்டு மீனாவிடம் அர்த்தம்
கேட்டாள். 'இட்டார என்றால்...கூட்டிவர என்று அர்த்தம்! ஓ! அவள் புருஷனை கூட்டிவரப்
போய்யிருக்கிறாளா?
வந்த முனியம்மாவின் கணவன் மாரி வெகு நேர்த்தியாக வேலையை முடித்தான்.
முனியம்மா பட்டம்மாவிடம் வந்து ,'எம்மா! அதுங்கிட்ட ஒரு ஐம்பது ரூபா கொடு. ஒரு
குவார்ட்டர் வாங்கி ஊத்திக்கினு வூட்டாண்ட போய் கம்முனு படுத்துக்கும். ஐம்பது ரூபா கொடு
என்று மட்டும் சொல்லியிருந்தால் கொடுத்திருப்பாள். ஆனால் மது அருந்த என்றதால்
கொடுக்க மறுத்து விட்டாள். மாரி..காளியானான்,'டாய்! மினிம்மா! மருவாதையா செஞ்ச
வேலைக்கு கூலியை வாங்கி குடு! இல்லேனா தாராந்துபூடுவே..ஆக்காங்!என்று மில்லி
அடிக்காமலே துள்ளி ஆடவாரம்பித்தான். பயந்து போன பட்டம்மாள் ஐம்பது ரூபாயை
முனியம்மாவிடம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்து மூச்சு வாங்கினாள்
இதே தலைவலியோடு பள்ளிக்குச் சென்றாள். வகுப்பில் நுழைந்ததும் வழக்கம்
போல் மாண்வர்கள்,' காலை வணக்கம்! அம்மா! நேற்று நீங்கள் சொன்ன கட்டுரையை
எழுதிவிட்டோம். படித்துவிட்டு மதிப்பெண்கள் போடுங்கள்!'என்றார்கள்.
'ஆமா! நானே ஒரே கலீஜா கீறேன். இத்தெல்லாம் ஆவறதில்லை. எங்கீட்டே ஏன்
இட்டாரீங்க? மருவாதையா அல்லாரும் ஒரு குவார்ட்டர் வாங்கி ஊத்திக்கினு வூட்டாண்ட
போய் கம்முனு படுங்க! இல்லினா தாராந்துபூடுவீங்க!' என்றாள் தன்னை மறந்து. அன்று
அவள் கற்றுக்கொண்ட பாடங்களை மாணவர்களிடம் ஒப்பித்தாள்.
மாணவர்கள் இதற்கு என்ன மதிப்பெண்கள் போடுவதென்று திகைத்து நின்றார்கள்!!!

Labels:


Saturday, June 16, 2007

 

ரயில் சட்னி!

வகை வகையான் சட்னிகளுக்குள் இது எங்கள் செல்லச் சட்னி!

சட்டுனு புரியலையா?

வட இந்தியாவில் நீண்ட பிரயாணங்களுக்காக சுக்கா சப்பாத்தி செய்து

அடுக்கி எடுத்துப்போவார்களே......அது போல் குறுகிய பிரயாணத்துக்காக

எங்கள் இல்லத்தில் தயார் செய்யப்படும் ஒரு சட்னி!

அநேகமாக எங்கள் பிரயாணமெல்லாம் திருநெல்வேலி-சென்னை அல்லது உல்டா! மாலையில் புறப்படும் ரயில் மறுநாள் காலை சென்னை

அல்லது திருநெல்வேலி சென்றடையும். அந்த ஓரிரவு சாப்பாட்டுக்குத்தான்

இந்தப்பாடு!

வயிற்றுக்கு ஒரு கேடும் செய்யாத ஓர் உணவு நம்ம இட்லிதாங்க.

தாமிரபரணித் தண்ணிரில் ஊற வைத்த அரிசி உளுத்தம் பருப்பில் அரைபட்ட

அந்த மல்லிப்பூ போன்ற இட்லி.....அதிலும் தட்டையான் இட்லித்தட்டில்

துணி போட்டு ஊற்றி எடுத்து சுடச்சுட தட்டில் விழும் போது எத்தனை

உள்ளே போச்சுன்னு கணக்கே தெரியாது. அதிலும் இட்லிப்போடி, தேங்காய்

சட்னி, மேலே கொஞ்சம் சீனி தூவிய கெட்டித்தயிர்...இவ்வளவும்

இருந்தால் போதும்....ம்ம்ம்...ம்ம்ம்ம்...உலகத்தையே எழுதிக்கொடுத்து விடலாம்.

ஹாங்? எப்படி?.....யார் வீட்டு சொத்து?

சரி..சரி..பாதை மாறுகிறேனோ? நாம்ப நம்ம ரயில் சட்னிக்கு வருவோம்.

ரயிலை துருவிப்போட்டு அரைக்கும் சட்னியெல்லாம் இல்லைங்க..

பயப்படாதீங்க!

தாளிதம்-கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, (விருப்பப்பட்டால் பொட்டுக்கடலை, வேர்கடலை சேத்துக்கலாம்), காரத்துக்கு தேவையான அளவு காய்ந்த மிளகாய், உப்பு, காயம், புளி,கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்து துருவிய தேங்காயையும் அதோடு சேர்த்து மிதமாக வறுத்து மிக்ஸியில் குறைவாக தண்ணீர் விட்டு அரைக்கவேண்டும்

எங்கூ____ரில் அம்மியில்தான் அரைப்பாக ,அதன் சுவையே....தனி.

தேங்காயையும் வறுத்து அரைப்பதால் நீண்டநேரம் கெடாமலிருக்கும்.

பிரயாணத்துக்கும் ஏற்றது. அநேகமாக ரயில் பயணம்தான்.

இட்லியின் இரு பக்கமும் ஜோதிகா மாதிரி நல்லெண்ணெய் ஊ__ற்றி

சாரி!..தடவி சட்னியை அதில் சாண்ட்விச் மாதிரி பரப்பி ரெண்டு ரெண்டு

இட்லிகளாக தேவையான.....ஆங்!....எத்தனை என்று சொன்னால்...கண்ணு படப்

போகுதுங்க! ...சாண்ட்விச் களாக வாழையிலையில் சுற்றி பேப்பர் பாக் செய்து

கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு ரயிலேறினால் இரவு 8-30 க்கு பிரித்து

மேய்ந்துவிட்டு, பாட்டிலிலுள்ள தாமிரபரணித் தண்ணீரையும் குடித்துவிட்டுப்

படுத்தால் சுகமாக தூக்கம் வரும்.

அண்ணி பாக் செய்யும் போதே... அப்படியே....எனக்கு மறுநாள் காலைக்கும் சேர்த்து இட்லியும் சட்னியும் தனித்தனியாக ஒரு பார்சல் லவட்டீடு வந்துடுவேன். அத்தோடு மட்டுமல்ல கூட ரெண்டு மூன்று பாட்டிலில் தாமிரபரணி ஆற்றுத்தண்ணீரும் என்னோடு ஓடி வரும்.

இப்போதெல்லாம் அலுமினீய பாக் தான். தண்ணீரும் தாமிரச்சுவை

இழந்து சப்பென்றிருக்கும். யாரைத்தான் நோவதோ?

ஒரு முறை எங்களுக்கு ரயிலில் டிக்கெட் கிடைக்காததால் ஆம்னி

பஸ்ஸில் கிளம்புகிறோம். இட்லி-சட்னி பாக்கிங் மும்முரமாக நடந்து

கொண்டிருக்கிறது. அங்கு வந்த அண்ணனின் ஐந்து வயது பேரன் விக்ரம்," அம்மம்மா!

அவங்கதான் ரயிலில் போகவில்லையே? பின் ஏன் ரயில் சட்னி செய்தீர்கள்?"

என்றான் சட்டென்று.

அந்த அருமையான உடனடி நகைச்சுவையை ரசித்து சிரிக்கக்கூட

இயலாமல் பிரமித்து நின்றோம்!!

பஸ்ஸில் போகிறார்களே.... பஸ் சட்னிதானே கொண்டுபோகவேண்டும்?

இந்தக்காலக் குழந்தைகள் எத்துணை தெளிவாக சிந்திக்கிறார்கள்!!!!!!

நாம் தான் ரொம்பத்....தெளி.....வாக குழம்பிக்கொண்டிருக்கிறோம்!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]