Saturday, May 19, 2007

 

மங்கல மங்கையர் குங்குமம்


Image and video hosting by TinyPic


குங்குமச் சிமிழை நீட்டியதும் மோதிரவிரலை நுழைத்து அள்ளிஇட்டுக்கொள்கிறோமே.....அதைச் செய்வது எப்படி?

நினைவு தெரிந்து கடையில் குங்குமம் வாங்கியதில்லை. HOME MADE-தான்.

அப்பாவே செய்வார்.

சிறுவயது முதலே குங்குமம்தான் இட்டுக்கொள்ளவேண்டும் என்பது எங்கள்
தந்தையின் ஆசை! குங்குமம் காலியாகிவிட்டால்,'அப்பா! ' என்று போய் நிற்போம். அவரும் அவரது கோ-டவுனிலிருந்து.....பெரீரீ...ய ஹார்லிக்ஸ்
பாட்டிலிலிருந்து நிரப்பிக் கொடுப்பார்.


எங்கள் வீட்டுக் குங்குமம் மிகவும் பிரசித்தி! அப்படிப்பட்ட குங்குமம் செய்யும்
முறையை..பின்னாளில்... திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பிறகு அப்பாவிடம் போய்,'எனக்கு கற்றுக்கொடுங்கள்.' என்றேன். 'வந்தாயா! வா!'
என்று அதன் அருமை தெரிந்து வந்த மகளுக்கு ஆவலோடு கற்பித்தார்.


தேவையானவை:

1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் --ஒரு கிலோ
2) எலுமிச்சம் பழச்சாறு---------------------------------1 1/2 லிட்டர்
3)வெங்காரம்-------------170 கிராம்
4)சீனாக்காரம்------------65-70 கிராம்
5)நல்லெண்ணை--------100 கிராம்
6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர்----------வாசனைக்கு தேவையான சில துளிகள்


கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதனுடன் கலக்கவும் .

அத்துடன் வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும்


நன்றாகக் கலந்ததும் மெல்லிய வெள்ளைத்துணியால் மூடி தனியே வைக்கவும். தினமும் காலையும் மாலையும் நன்றாகக் கிளறிவிடவும்.

கிளறுவதற்கு மரக்கரண்டியையே உபயோகிக்கவும்
சாறு முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல் கிளறிக்கொண்டே
இருக்கவேண்டும். சாறு ஏற ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு மாறியிருக்கும்.


பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நிழலில் காயவைக்கவேண்டும்.
இப்போது கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும் நேரமும் நிறைய
பொறுமையும் பிடிக்கும் வேலையிது!


நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள இரும்பு உரல், உலக்கை
கொண்டு கைப்பிடி கைப்பிடி அளவாகப் போட்டு இடிக்கவேண்டும். சுமாராக
இடிபட்டதும் அதே பாத்திரத்தின் வாயை மெல்லிய வெள்ளைத்துணியால்
கட்டி பொடி செய்ததை அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்' செய்ய
வேண்டும். மேலிருக்கும் கப்பியை உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.


this process goes on & on till you get little கப்பி.
fine powder -ஆக கிடைத்த மஞ்சள் பொடியை....இனிமேல் 'குங்குமம்' என்றே
அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி
கிளறவும். நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை தேவை.


இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ அத்தர், ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக் கேட்பவர்க்கும்
கொடுக்கலாம்.


எல்லோரும் மஞ்சள் குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
பழைய பாட்டொன்றொடு முடிக்கிறேன்.

"கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு புடவை கட்டி
நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை பின்னிவிட்டு

உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு புகழ்ந்ததையா
நற்றிடும் பழமை அதை நாடுவதே நல்லதையா!"

Labels:


 

பெட்டகத்தை திற்ந்து விடையை அள்ளித் தருக-2

சென்ற பதிவில் கேட்ட கேள்விகளுக்கு..ஒரே ஒரு கேள்விக்குத் தவிர மற்றவற்றுக்கு பதிலில்லை.
இதோ புதிய கேள்விகள்!!

1) M.G.R., சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் எது?

2) சிவாஜியுடன் அதிகப் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை யார்?

3) ஜெமினிகணேசன் கிறிஸ்தவ பாதிரியாராக 'தோன்றிய' படம் எது?

4) 'மாமன்மார் மூவர் தம்பி, நல்ல வாழ்வளிக்க வருவார்' - என்ற பாடல் வரியில் வரும் மாமன் மூவர் பெயர்கள் என்ன?

5) பாலச்சந்தர் டைரக் ஷனில் சிவாஜி நடித்த இரண்டு படங்கள் எவை?

6) ஒளவையார் பிள்ளையாரிடம், 'நான் உனக்கு நான்கு தருவேன்..நீ எனக்கு
மூன்று தா!' எனக்கேட்ட நான்கும் மூன்றும் என்ன என்ன என்ன என்ன?

Labels:


Saturday, May 5, 2007

 

குகைக்குள் ஓர் உல்லாச நடைப் பயணம்

என் அமெரிக்க பயணத்தில் சுற்றிப்பார்த்த இடங்களில் மிகவும் மெய்சிலிர்க்கவைத்த இயற்கையின் அற்புதங்களில் ஒன்றுதான்... மிசோரி மாநிலத்தில் stanton என்னுமிடத்தில்
இயற்கையாகவே அமைந்த,.....சுயம்பு என்று சொல்லலாமா?
MERAMEC CAVERNS!


நாங்கள் தங்கியிருந்த strawberry glen-னிலிருந்து 3-4 மணிநேரப் பயணம். அங்கெல்லாம்
தூரத்தை நேரத்தைத்தான் கணக்கிட்டு சொல்கிறார்கள். 4-மணி நேரம், 10-மணிநேரப்பயணம்
என்று. நாம் 50-கி.மீ, 400-கி.மீ என்கிறோம்.ஸ்டீரிங்கை அப்படி ஜென்டிலாகப்
பிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.அப்பப்போ லேசாக இடதோ வலதோ திருப்பிக்கொண்டால்
போதும். ஆனால் செம ஸ்பீடு!
மதியம் சாப்பாடு..இட்லி, ரயில் சட்னி(இது பற்றி பிறகு சொல்கிறேன்), எலுமிச்சை சாதம்,
த்யிர்சாதம்,வகை வகையான சிப்ஸ் மற்றும் இடையில் கொறிக்கத்தேவையான 'கொறிக்ஸ்'
எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு சரியாக 12-மணிக்குப் போய் சேர்ந்தோம்.எல்லோருக்கும்
பசி! துள்ளியோடும் மிஸோரி ஆற்றங்கரையில் உள்ளது குகை.வெளியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டையால் ஆன டைனிங் டேபிள்,பெஞ்சு-நாடுமுழுதும்
பிக்னிக் ஸ்பாட்கள் இதே ஸ்டைலில்தான்!-ஒன்றில் அமர்ந்து கொண்டுவந்தவற்றை காலி
செய்தோம்.
குகையினுள் டூர் செல்வத்ற்கு டிக்கெட் வாங்குமிடத்தில் சொன்னார்கள்...மெல்லிய இருட்டில் நிற்காமல்
ஒரு மணிநேர டூர்...முடியுமா? என்றார்கள். முதலில் சிறிது தயங்கினேன். உள்ளிருந்த
adventurous பூதம் சிலிர்த்தேழுந்து, 'சென்று பார்!' என்றது

1935-ல்தான் இது பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல்
முக்கியமான பிக்னிக் ஸ்பாட்டாக திகழ்திறது.ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கு ஒரு குழுவாக ஒரு கைட் தலைமையில் டூர் கிளம்புகிறது. எங்கள் கைட் முதலிலேயே
'செய்-செய்யாதே'- எல்லாம் தெளிவாக சொல்லிவிட்டார். குழுவோடு சேர்ந்துதான் செல்லவேண்டும்...மெய்மறந்து எங்காவது நின்றுவிட்டால்..மந்தையிலிருந்து பிரிந்த
ஆடு மாதிரி முழிக்கவேண்டியதுதான்! முன்னேயும் போகத்தெரியாது,பின்னேயும்
போகமுடியாது.

குகையின் வாசலுக்கு வந்தாச்சு..கோடைகேற்ற மிதமான குளிர்! குகையோடு சம்பந்தப்ப்ட்ட
ஒரு முக்கியமான நபரைப் பற்றி கைட் எங்களுக்கு விவரித்தார். 'JESSI JAMES!'( THE CAVERNS ALSO KNOWN AS JESSI JAMES HIDEOUT),அந்நாளின் பிரபல கொள்ளைக்காரன்!
தன் கூட்டத்தோடு 'அலிபாபாவும் நாற்பது திருடர்கள்' மாதிரி இங்குதான் த்ங்கியிருந்தானாம்.
நம் வீரப்பனுக்கு காடெல்லாம் அத்துப்படி..இவனுக்கு குகையின் ரகசிய வழிகளெல்லாம் அத்துப்படி!அவன் உபயோகித்த, கத்தி, கப்படா, துப்பாக்கி கோடரி போன்ற ஆயுதங்கள்
மற்றும் பாத்திர பண்டங்கள் எல்லாம் காட்சிக்கு வைத்திருக்கிதறார்கள் காத்திருக்கும்
நேரத்தில் அவற்றைப் பார்க்கலாம்.

சரி!..டூர் கிளம்பியாச்சு! ஊ..ஊ..சிக்கு..சிக்கு..என்று ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு உள்ளே செல்லவாரம்பித்தோம். சில இடங்களில் மெல்லிய வெளிச்சம்,
சில இடங்களில் கும்மிருட்டு. கைடின் டார்ச் வெளிச்சத்தில் முன்னேறினோம்.
குறிப்பிட்ட இடம் அதாவது ஸ்டேஷன் வந்ததும் ரயில் நின்றது. கைட் எங்கோ துளாவி
ஸ்விட்சைப் போட்டார்.பளீரென்ற வெளிச்சம்!!வாவ்...!உலக அழகி கிரீடத்தை தலையில் சூட்டினாற் போல அத்தனை பேர் முகத்திலும் ஆச்சரியம்!!அந்த அற்புதத்தைக் காண
கோடிக்கண்கள் வேண்டும்!!!


குகையின் உள்ளே மேலிருந்து சொட்டுச் சொட்டாக வழிந்து இறுகி தோரணம் தொங்குவது போல் கிறிஸ்டல்ஸ் உற்பத்தியாகி வண்ண வண்ணமாக ஜொலித்தது!!கண்கள் இமைப்பது
மறந்தன..பாளம்பாளமாக கண்கள் கொள்ளுமட்டும் அள்ளி விழுங்கின.

இவ்வாறு நாலைந்து இடங்களில் விதவிதமான கிறிஸ்டல் காட்சிகள்!!
சில இடங்களில் அதன் வழியாக நீர் வழிந்தோடியது பார்க்க பரவசம்! மெதுவாக தொட்டுப்பார்க்கப்போனேன்...கைடுக்கு கழுகுக்கண்கள்..'தொடவேண்டாம்! தொட்டால்
அவற்றின் வளர்ச்சி நின்றுவிடும்' என்றார். சுமார் 10,000 வருட வளர்ச்சியாம்!
அம்மாடியோவ்!!!

மற்றொரிடத்தில் இருட்டிலேயே சுமார் ஐம்பது படிகள் மேலேறினோம். ரங்கமணி
சுவாரசியத்தில் என்ஜினுக்கு அடுத்த போகியாக சென்றுவிட்டார். என் மகள் வந்து
என் கையைப் பிடித்துக்கொண்டாள். மூச்சுவாங்க ஏறினேன். சிரமத்தின் பலன்
அங்கு கண்டேன். எங்கு பார்த்தாலும் கிறிஸ்டல் உற்பத்திதான் அதன் அழகு!!


சில இடங்களில் முஸோரி ஆறு சலசலத்து ஓடுகிறது. இயற்கை ஏசி செய்த குகை,
சுத்தமான் குடிநீர்! கொள்ளையடித்து குகைக்குள் வந்து சமைத்து சாப்பிட்டு, தூங்கி
சுகபோக வாழ்கை வாழ்ந்திருக்கிறான் ஜெஸ்ஸி ஜேம்ஸ்! அவன் பிடிபட்டானா?
சுட்டுக்கொன்றார்களா? இயற்கை மரணமா என்பதெல்லாம் விளங்காத புதிராக உள்ளது

பிரமிப்பு மாறாமல் டூரின் இறுதிக் கட்டத்துக்கு வந்தோம். இருட்டில் தடவித் தடவி
தியேட்டர் காலரி இருக்கைகள் அமைந்த இடத்தில் போய் அமர்ந்தோம்(கால் வலிக்கு இதம்).
அந்த இடத்தின் பெயர், "THE GREAT CURTAIN" !!ஓஹோ!தியேட்டரி திரை விலகி காட்சி
தெரியும் போல...என்று காத்திருந்தோம். கைட் லைடைப் போட்டார் பாருங்கள்!!

எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி,
ஆதிபராசக்தியின் பிரம்மாண்டத்தை தரிசித்தேன். மயிர்க்கால்கள் குத்திட மெய்சிலிர்த்து
நின்றேன்!! திரையொன்றும்..விலகவில்லை...காட்சியே திரைதான்.
என்னா...த்த சொல்ல..வார்த்தைகளே இல்லை. தியேட்டரில் படம் போடுமுன்
திரை இறக்கியிருப்பார்களே அது போல் கிரிஸ்டல்கள் கலர்கலராக வழிந்து அற்புதமாகக்
காட்சியளித்தது!!அத்திரையின் மேல் இசையோடு ஒரு லைட் ஷோ காண்பித்தார்கள்.
அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது போல் அற்புதத்துக்கு மேலும் அற்புதம் சேர்த்தது!!
முடிவில் லைட் ஷோவின் நடுவில் இன்னொரு லைட் ஷோவாக அமெரிக்க தேசிய கொடி
பட்டொளி வீசிப்பறந்தது. ஒரே கைதட்டல்..அவ்ளோ தேசபக்தி.

இந்த THE GREAT CURTAIN இடத்தை முக்கியமான விழாக்களுக்கும் திருமணங்களுக்கும்
முன்பதிவு செய்து கொள்வார்களாம். திருமணம்..விழாக்கள்..கற்பனை செய்து பாருங்கள்!

டக்கென்று விளக்குகள் யாவும் அணைந்தன. கைட் டூரின் முடிவை அறிவித்தார். ஏதேனும்
கேட்கவேண்டுமென்றால் கேட்கலாம் என்றார். கண்கள் தான் அள்ளி அள்ளி விழுங்கினவே
தவிர வாயடைத்துப்போயிருதோம்!!பிரமிப்பிலிருந்து மீளாமலே வெளியே வந்தோம்.

வெளியே வந்தால்..கிரிஸ்டல் கிளியராக..கிரிஸ்டல்ஸ் பார்த்து வந்த பாதிப்பு..ஹா..ஹா!
முஸோரி ஆறு ஓடுகிறது.சுற்றுலாப் பயணிகள் அதில் நீந்திக்குளிக்கவும் வாட்டர் ஸ்கூட்டரில் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டுப் பாயவுமாக அனுபவிக்கிறார்கள். வாழ்கையை அனுபவிக்க
அமெரிக்கர்களைப் பார்த்துப் படிக்கவேண்டும்.

முதலில் தயங்கினோமே..போனது எவ்வளவு நல்லதாயிற்று!!அந்த கண் கொள்ளாக் காட்சிகள்
எல்லாம் காண கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன். என்னை அழைத்துப்போன அண்ணன்
மகள்,மருமகன் மற்றும் பயணத்தை சுவாரஸ்யமாககிய அவர்களின் ரெண்டு சுட்டிகளுக்கும்
என் நன்....வேண்டாம்..வேண்டாம்..என் அன்பு.

St.Louis சென்றால் meramec caverns செல்லத் தவறாதீர்கள்.இயற்கையின் அற்புதத்தை
அதன் உள்ளேயே சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

Labels:


Friday, May 4, 2007

 

,பெட்டகத்தைதிறந்து விடையை அள்ளித்தருக

புத்தம் புதிய படங்களிலிருந்து நிறைய பதிவர்கள் க்விஸ்கிறார்கள். ஆனால் நமக்கு தோது
'தங்கமான பழசு' தான்.

இங்கே சில புதிர்கள்...விடைகள் உங்கள் கையில்.

வாழ்கை படத்தில் வைஜயந்திமாலா பாடிய பாடல்களுக்கு அவரே பின்னணி பாடியுள்ளதாக
ரெக்கார்டுகளில் உள்ளது. ஆனால் உண்மையில் பாடியது வேறோருவர். அவர் யார்?

மாமியார் மெச்சிய மருமகள் படத்தில்'இலவு காத்த கிளி போல் எந்தன் ஆசை நிராசை
ஆச்சே...'என்ற இந்த பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? பாடியவர் யார்?

ஒருவர் இசையமைப்பில் மற்றொரு இசையமைப்பாளர் பாடுவது இப்போது சர்வசாதாரணம்.
ஆனால் அக்காலத்தில் மிகப் பிரபலமான இசையமைப்பாளரின் இசையில் மற்றொரு மிகப்
பிரபலமான இசையமைப்பாளர் பாடியுள்ளார். அதுவும் கதாநாயகனுக்காக அல்ல.
ஒரு குதிரைக்கு!!!! குதிரை பாடுவதுபோல் அமைந்த அந்த பாடலுக்கு பின்னணிப்
பாடியுள்ளார். அந்த பிரபல இசையமைப்பாளர்கள் யார் யார்? பாடலின் பல்லவி என்ன?

ஒளவையார் படத்தில்,'கன்னிப்பருவம் போதும்போதும்' என்று விநாயகரிடம் முதுமையை
வேண்டிய அந்த குமாரி ஒளவை...யார் (க்ளு கொடுத்துவிடேனோ?)
செய்யுளின் ஈற்றடியை முடிக்கமுடியாமல் திணறிய புலவரின் வெண்பாவை...
'நின்று தளரா வளர்தெங்கு தாளுண்டநீரைத்-
தலையாலே தான் தருதலால்!' என்று நிறைவு செய்த அந்த பால ஒளவை..யார்?

விடைகள்...நீங்களேதான் சொல்லுங்களேன்...!முடியவில்லை என்றால் பார்க்கலாம்.
நிறைய தில்லாலங்கடிகள் இருக்கிறார்கள்.

இத்தோடு விடமாட்டேன்! இன்னும் வரும்.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]