Thursday, April 26, 2007

 

கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு?


கும்மாளம் தான் போட்டுக்கிட்டு. அதுவும் கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு பாத்திரத்தில் அள்ளிக்கிட்டு, பாபநாசம், மணிமுத்தாறு என்று பிக்னிக் போனால்.. கும்மாளம்தானே?

பாபநாசத்தில் தெள்ளிய அருவியாய் வீழ்ந்து ஆறாகப் பெருகியோடும் தாமிரபரணியில்
ஆனந்தவிலாஸ் படித்துறையில் நடுவில் பாறைதெரியும் பகுதியில் போய் அமர்ந்துகொண்டு
அப்பாறையை நன்றாக, ஓடும் நீரில் அலம்பிவிட்டு கூட்டாஞ்சோற்றை அதி வைத்து சாப்பிட்டால்....ஆஹா!! அதுவல்லவோ ஆனந்தம்! இடையில் ரெண்டு முங்கு முங்கி விட்டு
வந்து மீண்டும் தொடரலாம்.

வத்தல், வடகம், அப்பளம், தயிர்ப்பச்சடி ஆகியவை இதற்குப் பொருத்தமான 'பக்கவாத்தியங்கள்!'

படத்தில்.. என் தந்தையைப் பார்த்துத்தான் நாங்களும் 'மண்சோறு' மாதிரி 'பாறைசோறு'
சாப்பிடக்கற்றுக்கொண்டோம்!!
இனி செய்முறைan>

தேவையானவை:
அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
கத்தரிக்காய் - 150 கிராம்
வாழைக்காய் - 2
முருங்கைக்காய் - 1
காரட் - 150 கிராம்
பீன்ஸ் - 150 கிராம்
கொத்தவரைக்காய் - 100 கிராம்
அவரைக்காய் - 100 கிராம்
சிகப்பு பூசணி - சிறுபத்தை
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
புளிப்புக்கு பாதி மாங்காய்,
கிடைக்காவிட்டால் புளி கரைசல் - 1 கப்
முளைக்கீரை - சிறு கட்டு அரிந்தது
முருங்கைக்கீரை - ரெண்டு கொத்து உருவியது
முட்டைக்கோஸ் - 150 கிராம் அரிந்தது
மஞ்சள் பொடி - 2-3 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

அரைக்க:
தேங்காய் சிறியது - 1
ஜீரகம் - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
பச்சைமிள்காய் - 6-7
சாம்பார்வெங்காயம் - 5-6
இவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும்

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு வடகம் , கறிவேப்பிலை

கொத்தமல்லி சிறு கட்டு

காய்கறிகளை அவியலுக்கு நறுக்குவதுபோல் விரல் கனத்துக்கு நறுக்கிக்கொள்ளவும்
அடிகனமான பாத்திரத்தில் அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் து.பருப்பைப்
போட்டு வேகவிடவும். முக்கால்பதம் வெந்ததும் -மாங்காய் தவிர- மற்ற காய்களைபோடவும்
அதுவும் அரைவேக்காட்டில் அரிசியை களைந்து சேர்க்கவும்-தண்ணீர் தேவையான அளவு இருக்கவேண்டும்-.

சாதம் முக்கால் பதம் ஆனதும் சாம்பார்வெங்காயம், மாங்காய், உப்பு, மஞ்வள் தூள் சேர்க்கவும்.
சிறிது கழித்து தேங்காய் அரைத்த விழுது சேர்த்து மெதுவாக கலக்கவும்.
அடுத்து அரிந்து வைத்துள்ள கீரை, முட்டைகோஸ், முருங்கைக்கீரை தூவி எல்லாம் சேர்த்து
கிண்டி பதமாக...மணமாக வரும்போது தீயை குறைத்துவிட்டு மற்றொரு அடுப்பில் கடாய்
வைத்து நல்லெண்ணை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு,வடகம், கறிவேப்பிலை தாளித்து
சாதத்தி கொட்டி கொத்தமல்லி தூவி பாத்திரத்தை மூடி அடுப்பை அணைத்து விடவும்.

சாப்பிடும் நேரத்தில் நன்றாகக் கிளறி சூடாகப்பரிமாறவும்,,, மேற்சொன்ன 'பக்கவாத்தியங்களோடு''
கூட்டாஞ்சோறு.. சூடாகவும்...பின் இரவு ஆறிய பிறகும் சாப்பிட ருசியாக இருக்கும்.

எங்க பக்கத்தில் விருந்தினர் வந்தால் கூட்டாஞ்சோறு அல்லது சொதி தான் ஸ்பெஷல் மெனு!

சைவ விருந்து கொடுத்தாச்சு ! கோழி அடுத்த பதிவில் கூவும்.

Labels:


Comments:
//அதுவல்லவோ ஆனந்தம்! இடையில் ரெண்டு முங்கு முங்கி விட்டு
வந்து மீண்டும் தொடரலாம்//

இப்படியெல்லாம் ஆசையை கிளப்பி விடரீயளே...முங்கி முங்கி சாப்ட்டா பசியும் ஜாஸ்தியாகும்... அருமை
 
என்னாங்க, சிக்கன்னு சொல்லிப்புட்டு, வெஜ்-ஜப் போட்டு ஏமாத்திறீங்களே..

சரி, இந்த ரெசிப்பீ-ய, உங்க பெயரோட சேர்த்து, என் ப்ளாக்-லேயும் போட்டுகிடட்டா?

காப்பிரைட் கேட்டு கேஸ் போட்டுடக் கூடாதில்ல..அதான்..
 
முத்ல் வருகைக்கு நன்றி! மங்கை!
ஆசையை கிளப்பத்தானே எழுதினேன்.
பக்கத்திலுள்ள ஆற்றில் முங்கித்தான் பாருங்களேன்!
 
அஹ்ஹஹஹ்ஹஹா!
வெஜ்-ஜும் நாந்வெஜ்-ஜும் சேர்த்துபோட்டால்..வெஜ்-காரர்கள் எட்டியே பார்க்கமாட்டார்களில்லையா?
அதுதான்!
தாராளமா..போட்டுக்கிங்க!
 
எங்க மாமியார் நீங்க சொன்னமாதிரி தான் செய்வாங்க..ஆனா பாருங்க நமக்கு எல்லாமே கொஞ்சம் ஈஸியா இருக்கணும்...சாதம் பருப்பை வேகவச்சு எடுத்து
தனியா காயை தேங்காயை அரைத்ததையெல்லாம் போட்டு குழம்புமாதிரி செய்து சாதம் பருப்பை போட்டு கலந்து திருப்பி ஒரு சீட்டி குக்கரில் வைத்து இறக்கிறுவேன்..கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும் கூட்டாஞ்சோறு மாதிரியே தான் இருக்கும் டேஸ்ட்..தேவையான பொருள் எல்லாம் அதே தான்..அடிகன்மான பாத்திரம் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் கலக்கறது ன்னு கஷ்டப்பட சோம்பேறித்தனம். ஒரிஜனல் கூட்டாஞ்சோறு அத்தை வந்தா செய்வாங்க நான் ஈஸி கூட்டாஞ்சோறு.. :)
 
வாங்க முத்துலட்சுமி!
உங்களை என் பதிவுக்கு இழுத்த கூ.சோறுக்கு நன்றி!
அவசர கூட்டாஞ்சோற்றை நான் நீங்கள் சொன்ன மாதிரியும் செய்வேன். ஆனால் கஷ்டப்பட்டால்தான் சுவை கிடைக்கும்.
சரிதானே?
 
நானானி,
கூட்டாஞ்சோத்தை விடத் தாமிரபரணிக் காட்சிகள் அற்புதம்.

இங்கே காஸ் பத்திக் கவலை இல்லாததால் நேரேயே சமைக்கலாம்.

நாங்க இதையே கதம்ப சாதம்னு சாப்பிடுவோம்.
நல்ல வேளை முதல்ல சைவம் பண்ணிட்டிங்க.
:-)
கோழி எனக்கு வேணாம்.
 
வல்லி!
கோழி உங்களுக்கு வேண்டாமென்று எனக்குத்தெரியும்.அதனால்தான் தனியாகப்போட்டேன்.ஆற்றங்கரைக் காட்சிகள் எங்கள் மலரும்(வாடாத) நினைவுகள்!
 
என்னோட பேவரிட் உணவு. எங்க வீட்டு ரங்கமணியும், முத்துலெட்சுமி மேடம் சொல்லியிருக்கிறமாதிரி, 'அவசர அடி' ரங்கா தான்.. :))
 
சிவா!
உங்கள் ரங்கமணியையும் இது போல்
சமைக்கச் சொல்லுங்களேன்!
 
கூட்டாஞ்சோறுன்னு சொன்னதும் நாங்க சின்ன வயசுல, ஒவ்வொரு பசங்க அவங்கவங்க வீட்டிலிருந்து ஒவ்வொரு பொருள் கொண்டு வந்து போட்டு செப்புசாமானில் கூட்டாஞ்சோறு ஆக்குவோம். அதுமாதிரி இதுன்னு நினச்சேன். //நடுவில் பாறைதெரியும் பகுதியில் போய் அமர்ந்துகொண்டு
அப்பாறையை நன்றாக, ஓடும் நீரில் அலம்பிவிட்டு கூட்டாஞ்சோற்றை அதி வைத்து சாப்பிட்டால்....ஆஹா!! // வாய்யூறுது.
 
மாமி சூப்பர்!!! இன்னைக்கு தான் உங்க எல்லா பதிவையும் படிச்சேன் .. அனுராதா ரமணன் கதை மாதிரி கல கல கல னு ஒரே ஜாலியா இருக்கு.... வாழ்த்துக்கள்....
 
ஜெஸிலா!
அந்த கூட்டாஞ்சோறு சின்ன வயதில்
நாங்களும் ஆக்கியிருக்கிறோம்!அந்த சுவையே தனி.
 
என் அம்மாவும் ஒரு கூட்டாஞ்சோறு
specialist. என் கல்லூரி காலத்தில் அவரது கூட்டாஞ்சோறுக்கு பெரிய ரசிகையர் பட்டாளமே இருந்தது. Tiffin carrier-ல் நான் கூட்டாஞ்சோறு கொண்டு செல்லும் நாட்களில் என் தோழியர் எவரும் lunch box எடுத்து வருவதில்லை. கல்லூரியின் கடைசி வருடம் திருப்பரப்பு அருவிக்கு சுற்றுலா சென்றிருந்த போது, அதிகாலை 2 மணிக்கே எழுந்து மணக்க மணக்கக் கூட்டாஞ்சோறு பொங்கிப் பெரிய தூக்குச் சட்டி நிறைய கொடுத்து அனுப்பினார். அருவிக் கரையோரம் அமர்ந்து வகுப்பிலுள்ள அனைவரும் ஒரு பிடி பிடித்தது மறக்க முடியாதது. என் தோழியர் அனைவரும் திருமணத்துக்கு முன் என் அம்மாவிடம் வந்து இதன் செய்முறையைக் கற்றுச் சென்றனர்.

இன்றும் விருந்தினர் வந்தால் நான் கூட்டாஞ்சோறு செய்வேன். வந்தவர் பாராட்ட, அம்மாவுக்கு phone செய்து சொல்வேன். முதல் கேள்வி வரும் "என்னென்ன சேர்த்தாய்?". "அது வந்தும்மா..இன்று கீரை மட்டும் கிடைக்கவில்லைம்மா.." என்றால் "அப்போ அது கூட்டாஞ்சோறே இல்லை" என dose விடுவார். காய்கறிகள் ஒன்றிரெண்டு இல்லாமல் போனாலும் கீரை வகைகள்(முருங்கை கீரை-optional, ஏனெனில் city-ல் எல்லா சமயங்களிலும் கிடைக்காது), தாளிப்பதற்கு வடகம் இருந்தேயாக வேண்டும்.

அக்கறையுடன் நீங்கள் எழுதியுள்ள செய்முறையைப் பின்பற்றி பலரும் பயன் பெறட்டும்.

-ராமலக்ஷ்மி
 
ராமலஷ்மி!
உங்கள் அம்மா விட்ட டோஸ் சரிதான்!
ஒன்று குறைந்தாலும் சுவைக்காது.
நான் முந்தின நாளே ஒன்றுவிடாமல்
வாங்கி சேர்த்த பிறகுதான்,அடுப்பில்
பாத்திரத்தையே ஏற்றுவேன்.
அடுத்தமுறை டோஸ் வாங்காமலிருக்க
வாழ்த்துக்கள்! ஹி..ஹி..!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]