Friday, April 27, 2007

 

வறுத்த கோழி மிளகு போட்டு!

PEPPER CHICKEN-மிளகு போட்டு வறுத்த கோழி!


சிக்கனை வாங்கும் போதே மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி வாங்கிக்கொள்ளவும்.
boneless-ஆக இருந்தாலும் நனறாக இருக்கும். leg-pieces-மட்டும் 5-6 என்று பாகெட்டுகளில்
கிடைக்கும். அதுவும் மதி!

சோம்பு- 3 மேஜைக்கரண்டி
மிளகு - 6 மேஜைக்கரண்டி
அடுப்பில் கடாய் வைத்துக் காய்ந்ததும் மிளகு, சோம்பு இரண்டையும் ட்ரையாக வறுத்துக்கொண்டு மிக்ஸியில் பொடி செய்து பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும்

சிக்கனை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு 1-வெங்காயம், 1-தக்காளி,
1-ஸ்பூன் ஜீரகம், இஞ்சி-1துண்டு, பூண்டு-3 பல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து
தண்ணீர் விடாமல் குக்கரில் ஒரு சீட்டிக்கு வேகவிடவும்.

ஆறியதும் திறந்து சிக்கன் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் வடிந்திருக்கும் chicken essence-ஸில் சிறிது நீர் சேர்த்து சூடு பண்ணி உப்பு
மிளகு தூவி அருந்தினால்...super chicken soup!!!!அவ்வளவு சத்தும் அதில் தான்
இறங்கியிருக்கும்.

சூப் குடித்து தெம்பாகியாச்சா? இனி ஒரு பெரிய கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றிக்
காய்ந்ததும், சிக்கன் அளவைப்பொறுத்து , வறுத்து பொடித்து வைத்திருக்கும் சோம்பு மிளகுப்
பொடி,தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை போட்டு அவை பொறிந்ததும் வேகவைத்த
சிக்கன் துண்டுகளைப் போட்டு புரட்டிக்கொண்டேயிருக்கவும். தேவையானால் நெய்,,மிளகுப்
பொடி சேர்த்துகொள்ளலாம். பொடி சிக்கன் மேல் கோட் ஆகும் வரை புரட்டவும்.

நன்றாக சிவக்க வறுபட்டதும் பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி, பொறித்த வெங்காயம்,
எலுமிச்சை துண்டுகள், கொத்தமல்லி தூவி பறிமாறலாம். ஆனால் டேபிளுக்கு கொண்டு
போகும் வழியிலேயே கா...லி யாகிவிடும்.

இறுதியாக... முக்கியமான இரண்டு வாக்கியங்கள் சேர்க்காவிட்டால் முத்தாய்ப்பாக இருக்காது.

"இதைப் பெரியவர்களும் குழந்தைகளும் விரும்பிச்சாப்பிடுவார்கள்!"
பாவம் நடுத்தரவயதுக்காரர்கள்!!!!
"சுருளக்கிண்டி ஆறவைத்து பாட்டிலில் போட்டு ப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை
கெடாது!"
அப்போ..? சாப்பிடவேண்டாமா?

Labels:


Thursday, April 26, 2007

 

கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு?


கும்மாளம் தான் போட்டுக்கிட்டு. அதுவும் கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு பாத்திரத்தில் அள்ளிக்கிட்டு, பாபநாசம், மணிமுத்தாறு என்று பிக்னிக் போனால்.. கும்மாளம்தானே?

பாபநாசத்தில் தெள்ளிய அருவியாய் வீழ்ந்து ஆறாகப் பெருகியோடும் தாமிரபரணியில்
ஆனந்தவிலாஸ் படித்துறையில் நடுவில் பாறைதெரியும் பகுதியில் போய் அமர்ந்துகொண்டு
அப்பாறையை நன்றாக, ஓடும் நீரில் அலம்பிவிட்டு கூட்டாஞ்சோற்றை அதி வைத்து சாப்பிட்டால்....ஆஹா!! அதுவல்லவோ ஆனந்தம்! இடையில் ரெண்டு முங்கு முங்கி விட்டு
வந்து மீண்டும் தொடரலாம்.

வத்தல், வடகம், அப்பளம், தயிர்ப்பச்சடி ஆகியவை இதற்குப் பொருத்தமான 'பக்கவாத்தியங்கள்!'

படத்தில்.. என் தந்தையைப் பார்த்துத்தான் நாங்களும் 'மண்சோறு' மாதிரி 'பாறைசோறு'
சாப்பிடக்கற்றுக்கொண்டோம்!!
இனி செய்முறைan>

தேவையானவை:
அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
கத்தரிக்காய் - 150 கிராம்
வாழைக்காய் - 2
முருங்கைக்காய் - 1
காரட் - 150 கிராம்
பீன்ஸ் - 150 கிராம்
கொத்தவரைக்காய் - 100 கிராம்
அவரைக்காய் - 100 கிராம்
சிகப்பு பூசணி - சிறுபத்தை
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
புளிப்புக்கு பாதி மாங்காய்,
கிடைக்காவிட்டால் புளி கரைசல் - 1 கப்
முளைக்கீரை - சிறு கட்டு அரிந்தது
முருங்கைக்கீரை - ரெண்டு கொத்து உருவியது
முட்டைக்கோஸ் - 150 கிராம் அரிந்தது
மஞ்சள் பொடி - 2-3 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

அரைக்க:
தேங்காய் சிறியது - 1
ஜீரகம் - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
பச்சைமிள்காய் - 6-7
சாம்பார்வெங்காயம் - 5-6
இவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும்

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு வடகம் , கறிவேப்பிலை

கொத்தமல்லி சிறு கட்டு

காய்கறிகளை அவியலுக்கு நறுக்குவதுபோல் விரல் கனத்துக்கு நறுக்கிக்கொள்ளவும்
அடிகனமான பாத்திரத்தில் அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் து.பருப்பைப்
போட்டு வேகவிடவும். முக்கால்பதம் வெந்ததும் -மாங்காய் தவிர- மற்ற காய்களைபோடவும்
அதுவும் அரைவேக்காட்டில் அரிசியை களைந்து சேர்க்கவும்-தண்ணீர் தேவையான அளவு இருக்கவேண்டும்-.

சாதம் முக்கால் பதம் ஆனதும் சாம்பார்வெங்காயம், மாங்காய், உப்பு, மஞ்வள் தூள் சேர்க்கவும்.
சிறிது கழித்து தேங்காய் அரைத்த விழுது சேர்த்து மெதுவாக கலக்கவும்.
அடுத்து அரிந்து வைத்துள்ள கீரை, முட்டைகோஸ், முருங்கைக்கீரை தூவி எல்லாம் சேர்த்து
கிண்டி பதமாக...மணமாக வரும்போது தீயை குறைத்துவிட்டு மற்றொரு அடுப்பில் கடாய்
வைத்து நல்லெண்ணை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு,வடகம், கறிவேப்பிலை தாளித்து
சாதத்தி கொட்டி கொத்தமல்லி தூவி பாத்திரத்தை மூடி அடுப்பை அணைத்து விடவும்.

சாப்பிடும் நேரத்தில் நன்றாகக் கிளறி சூடாகப்பரிமாறவும்,,, மேற்சொன்ன 'பக்கவாத்தியங்களோடு''
கூட்டாஞ்சோறு.. சூடாகவும்...பின் இரவு ஆறிய பிறகும் சாப்பிட ருசியாக இருக்கும்.

எங்க பக்கத்தில் விருந்தினர் வந்தால் கூட்டாஞ்சோறு அல்லது சொதி தான் ஸ்பெஷல் மெனு!

சைவ விருந்து கொடுத்தாச்சு ! கோழி அடுத்த பதிவில் கூவும்.

Labels:


Friday, April 20, 2007

 

என் சமையலறையில்...நான் யார்?

உப்பா...சர்க்கரையா......கடுகா...உளுத்தம்பருப்பா...இல்லை எல்லாமேதானா..?
திருமணத்துக்குமுன் சமையலறையே எட்டிப்பார்க்காத நான் அண்ணி
உதவியோடு play school போவது போல் basic language (உம். சாம்பார், வத்தல்குழம்பு கூட்டு, பொரியல்) மட்டும் கற்றுக்கொண்டு களம் புகுந்தேன்..
புகுந்தவீட்டுக்குள்ளும்தான்.
வெந்தயத்துக்கும் சீரகத்துக்கும் வித்தியாசம் தெரியாது. செய்முறைகள்
எழுதி வைக்கப்பிடிக்காது. கண் பார்ப்பதை கை செய்யவேண்டும். ஆகவே
சின்னச்சின்ன பாகெட்டுகளில் தனியா, க.பருப்பு, உ.பருப்பு, சீரகம், காய்ந்த
மிளகாய் என்று mini-proportion-ல் போட்டு ஸ்ட்ராப்பில் செய்து 'சாம்பார்'
என்று எழுது வைத்துக்கொள்வேன். இதே போல் வத்தல்குழம்பு, ரசம்
முதலியவற்றுக்கும் பாக்கெட்டுகள் தயார் செய்து கொண்டேன். தேவைப்படும்
போது தேவையான பாக்கெட்டைப்பார்த்து தெரிந்து கொள்ளலாமில்லையா?
எப்படி..?ஐடியா..?

தனிக்குடித்தனம் வந்தாச்சு. சமையலில் அறை குறை அறிவோடு தண்ணீரில் தள்ளிவிட்டார்கள்!!! கையை காலை உதைத்து நீந்தி கரையேறியது சுவாரசியமான நிஜம்!

முதல் நாள் சாம்பார், கூட்டு, பொரியல் என்று அட்டகாசமாக சமைத்து
ரங்கமணிக்காக காத்திருந்தேன். வந்தார்...உண்டார்...சென்றார். ஒரு பின்னோட்டமுமில்லை. நான் சாப்பிட்டபோது சாம்பார் ஒரே.....புளிப்பு!
ஏன் சொல்லவில்லை என்றதற்கு 'நீயே இப்போதுதான் கற்றுக்கொள்கிறாய்
எல்லாம் போகப்போக சரியாகிவிடும்.' என்றார். என்ன ஒரு பொறுமை!
போனால் சரி.

அடுத்தநாள் புது குக்கரைப்பிரித்து அதிலுள்ள செய்முறைகளைப் படித்து
புது சாதம் செய்ய-first opening- செய்தேன். அளவாக த்ண்ணீர் ஊற்றி, அரிசி களைந்து பாத்திரத்திலும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வெயிட்டையும் போட்டேன். மூன்று விசிலுக்குப்பிறகு அடுப்பையும் அணைத்தேன். வெந்த சாதத்தை உடனே எடுக்க அவசரம்! மூடியை என் பலம் முழு...க்கப்பிரயோகித்துத் திறந்தேன்!

டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!! பாம்ப்ளாஸ்ட்..!! மூடி ஒரு பக்கம் தெறித்து விழுந்தது. வானத்தில் ஓரிரு நட்சத்திரங்களைத்தான் பார்த்திருப்பீர்கள்.
வானம் முழுதும் நட்சத்திரங்களாகப் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்தேன்
அன்று!! அடுப்படி சிம்னியை அண்ணாந்து பார்த்தேன்...கரி படிந்த சிம்னி முழுதும் சோற்றுப்பருக்கைகள் அப்பியிருந்தன!! மீதி நட்சத்திரங்கள் தரையெங்கும் சிதறியிருந்தன. அன்றும் ரங்கமணி மெளன்மாக வெளியேறினார் பாவம்.

இப்படியாகத்தானே......முட்டி மோதி இப்போது ஓரளவு 'தில்லாலங்கடி'
ஆகியிருக்கிறேன்.

சுத்த சைவப்பிள்ளையாகிய.....அதுவும் திருநெல்வேலி சைவப்பிள்ளையாகிய நான் எப்படி அசைவப்பிள்ளையாகினேன்? எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்? ரங்கமணி தாராளமன சிக்கனப்.... சாரி
சிக்கன் பிரியர்(கல்லூரி ஹாஸ்டல் வாசம் காரணம்). இது தெரிந்த பக்கத்து
வீட்டு சகோதரி சிக்கன் செய்யும் போதெல்லாம் இங்கேயும் வரும். ரங்கமணிக்காக. அவரே வாங்கி...அவரே சாப்பிட்டு....அவரே பாத்திரத்தையும்
கழுவி வைத்துவிடுவார்! அந்நாளில் நான் அவ்வளவு மடி!...ஹி..ஹி!

பின்னாளில் இரண்டாவது மகன் பிறந்து அவனுக்கு நாலைந்து வயதாகும்
போது கீழ்வீட்டுத் தோழி அவனை தூக்கி வைத்துக்கொண்டு சிக்கனை ஊட்டி
விட...என்னவென்று தெரியாமலே குழந்தை விரும்பி சாப்பிட.. அவனுக்காகவே அசைவக் களத்திலும் புகுந்து புறப்பட்டேன். முதலில் வேலைக்காரி வாங்கி வந்து அவளே சுத்தம் செய்து தர...நான் கை படாமல்
சமைக்கத் தெரிந்துகொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலும்
தில்லாலங்கடி ஆனது புரட்சிகரமான நிஜம்! ஆம்! எங்கள் குடும்பத்தில்
நான் ஒருவள் தான் அசைவம் சமைப்பவள். தில்லாலங்கடி என்றால்
என் பொண்ணு பாஷையில் expert- என்று அர்த்தம்!

என் அக்கா, தங்கை, அண்ணன், நாத்தனார்..பிள்ளைகள் எல்லோரும் சிக்கன்
விரும்பிகள். chicken get-to-gether ஏற்பாடு செய்து அனைவரையும் அழைத்தேன்.
மொத்தம் பன்னிரெண்டு பேர்.

பெரிய்...ய குண்டான் நிறைய சிக்கன்குழம்பு(கிரேவி), புலாவ், தயிர்சாதம், சிப்ஸ்! சிம்பிள்-கிராண்ட் மெனு! வந்த பிள்ளைகள் முகத்தில்தான் என்ன ஒரு
பிரகாசம்!..சந்தோஷம்..! குண்டான் காலி! தயிர்சாதம் சீந்துவாரில்லை.

'சித்தி! பெரியம்மா! அத்தை!' என்று பலவாறு அழைத்து ,'ஹோட்டலில் நாங்கள் கிள்ளி கிள்ளித்தான் வாங்கி சாப்பிடுவோம். இங்கு அள்ளி அள்ளிப்
போட்டு சாப்பிட்டோம்!' என்ற போது மனம் நிறைந்தது!! இதைவிட வேறென்ன
வேண்டும்?

அடிக்கடி இது போன்ற விருந்துகள் நடக்கும். முக்கியமாக என் மகன் பிறந்த
நாளன்று கண்டிப்பாக இருக்கும். பிள்ளைகளும் ஓடோடி வருவார்கள்.
இன்று...காக்கை கூட்டில் கல்லெறிந்தது போல்.... எல்லோரும் வேலை நிமித்தம் வெவ்வேறு ஊர்களில்!!! விருந்துகளும் குறைந்துவிட்டது.

இவ்வளவு அளந்துவிட்டு recipes ஏதும் தராவிட்டால் என்னை கொத்துபரோட்டா போட்டுவிடமாட்டீர்களா? பொறுமை! அடுத்த பதிவில்
சைவம் ஒன்று அசைவம் ஒன்று ஓகேவா?

Labels:


Monday, April 9, 2007

 

வியர்டு...அப்டின்னா?ஐய....இது கூடத் தெரியாதா? எது செய்தாலும் எடக்கு மடக்காக செய்வது..அப்டித்தானே? அப்போ அடிச்சு மொழக்கிடுவோம் !!
தயிர்சாதம்+ரசம் எனக்கும் பிடிக்கும்.இன்னும் சில காம்பினேஷன்கள் சொல்லவா? வெல்லப்பாயாசம் மேலே கொஞ்சம் சாதம்....வாழைப்பழம் தொட்டுக்க சட்னி, இட்லிப்பொடி. விசேஷங்க்களுக்கு சரணபவன் சாப்பாடு வரும். அதில் பழப்பச்சடி வைப்பார்கள் தயிர்சாதத்துக்கு சூப்பராயிருக்கும். அதையே ஐஸ்கிரீமோடு கலந்தடிப்பேன். என்னைப்பார்த்து எல்லோரும் கலந்தடிப்பார்கள்
18-வயதுக்கு கீழே இருந்தகாலத்தில் கார் ஓட்ட பைத்தியமாயிருப்பேன்(இப்போதும் அப்படிதான்.சமீபத்தி லேக் தாகு போனபோது அங்கு ஸ்னோ மொபைல் ஓட்டி எல்லோரையும்-அமெரிக்க இன்ஸ்டரக்டர் உட்பட் அசத்தினேன்)
வெளியூர்களுக்கு செல்லும் போது, என் அண்ணாச்சி ஊர் தாண்டியவுடன்
எனக்கு ஸ்டீயரிங்கை கொடுப்பார்கள். நான் ஓட்டும்போது சிறுவூர்களைத்தாண்டும் போது சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டு சிறுவர்கள், "ஏ.. ஏ,,பொம்பளை ஓட்றா டோய்!" என்று பின்னாலேயே சிறிது
தூரம் ஓடிவருவார்கள். அந்த பின்னோட்டம் கேட்க மிகவும் பிடிக்கும்.
ஒரு சின்ன ரிப்பன்(இப்போது ஏது!) வாங்கிகொண்டு அதுக்கு மேட்சாக
புடவை, ஜாக்கெட் என சகல ரதகஜ துரகபதாதிகள் எல்லாம் தேடித்தேடி வாங்குவேன். குஷ்பு ஜாக்கெட் மாதிரி (ஜன்னலெல்லாம் கிடையாதுங்க) எங்கள்
டெய்லரை பாடாய்படுத்தி தைத்துக்கொள்வேன். பின்னாளில் என் மகள்,"நீ இப்படியெல்லாம் செய்வாயாமே? பெரியம்மா சொன்னார்கள்." நானே சொல்லியிருந்தால் என்னாவது?
ஜிமிக்கியை எல்லோரும் காதில் தான் அணிவார்கள். அதையே நானும்
செய்தால் என் இம்மேஜ் என்னாவது? அதை செயினில் மாட்டி டாலராக போட்டுக்கொள்வேன். மாட்டலை வாட்ச் ஸ்ட்ராப்பாக ஆக்கிக்கொள்வேன்.
பரிசுப்பொருட்கள் கொடுப்பது அதையும் அழகாக கிஃப்ட்ராப் செய்வது பிடிக்கும். உள்ளிருக்கும் பொருள் எதானாலும் சுற்றிக்கொடுக்கும் விதம் பற்றி
பெரிய எதிர்பார்பிருக்கும்.
துக்க வீடுகளுக்குப் போகும் போது அங்கு ஃரீஸர் பெட்டியில் படுத்திருக்கும் உடலைப் பார்க்கையில் நாமும் (எல்லோரும்தான்) ஒரு நாள் இப்படித்தானே
படுக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்....நினைப்பதுமட்டுமல்ல
அது போல் கற்பனையும் செய்துகொள்வேன்...கால் பெருவிரல் கட்டி..மூக்கில்
பஞ்சு வைத்து.....என்ன பயந்துவிட்டீர்களா?...கொஞ்சம் பயங்கர வியர்டு இல்ல? கற்பனைக்கென்ன காசா பணமா.......!

சங்கீதம்! ஒரு அற்புதம்,ஆனந்தம். ஒரு சாகரம்! அதில் அலை ஓரம் காலை
மட்டும் நனைத்தவள். நல்லகுரல் வளத்தோடு பாடவேண்டும் என்று ஆசை!
கொஞ்சம் சபைக்கூச்சம்! விளைவு, வீட்டில் யாரும் இல்லாதபோது ஷெல்ஃப்
கதவைத் திறந்து வைத்துக்கொண்டு தலையை உள்ளே வைத்துக்கொண்டு
வாய்விட்டுப் பாடுவேன்! என் குரல் எனக்கே கேட்கும்!!!
அடுத்த ஜன்மத்தில் ஒரு எம்.எஸ்.எம்மாவாகவோ, பி.சுசீலாவாகவோ பிறக்க
வேண்டும் என்று ஆஆஆசை!!! ஆசைக்கும் என்ன காசா பணமா...! ஹி..ஹி

இறுதியாக...
டெலிபோன் ஒலித்தால் அது உறவுக்காரர்களாயிருந்தால்,"ஹலோ! யார் பேசுவது?" "நான் தான் பேசுகிறேன்" என்று என் குரல் மூலம் கண்டுபிடிக்கவேண்டும் ஒரு திமிர்! நிறைய பின்னோட்டங்கள் "நான், நான்"
என்று போட்டு நான் "நானானி" ஆனது கூட இப்படித்தான்!
ரொம்ப வியர்டி விட்டேனோ? டயர்டாகியிருப்பீர்கள்! இத்தோடு விடுகிறேன்
பிழைத்துப்போங்கள்!!!!!!!!!!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]