Saturday, March 10, 2007

 

இருபத்தியெட்டாவது நட்சத்திரம்!

'கோ..கிலா.....!' காலையில் எழுந்ததிலிருந்தே....கோகிலா..கோகிலாதான்
நரசிம்மனுக்கு. ஆபீஸ் கிளம்பும்போதும் 'கோகிலாஆஆஆ....!'
'வந்தேன்' பூஜை வேலையை விட்டுவிட்டு.என்ன என்பதுபோல் பார்த்தேன்.
'அதை திருப்பி சொல்லு..'

'உத்திரட்டாதி'

'ஒகே!ஒகே! ஞாபகம் இருக்கு' என்றபடி காரிலேறி அலுவலகம் சென்றுவிட்டார்.
மதியம் ஒரு மணியிருக்கும்..போன் அலறியது. பாதி சாப்பாட்டில் ஓடிப்போய்
காது கொடுத்தேன்,'madam, sir wants to talk to you.' அவரோட செகரட்டரி குயில்
போல் கூவினாள்.
அவர் லைனில் வந்து 'கோகி... இன்னொரு வாட்டி சொல்லேன்'
அடடா...ஆபீஸிலும் இதே நினைவா...'உத்திரட்டாதி! என்று இருத்தி சொன்னேன்.
மாலையாயிற்று..வேலை முடிந்து வந்து காரிலிருந்து இறங்கியபடியே
டிரைவரிடம் ,'நாளை காலையில் 8-மணிக்கே வந்துவிடு,' என்றபடியே உள்ளே
வந்தவர் என்னைப்பார்த்து ,'கோகிலா! டிரைவரை சீக்கிரம் வரச்சொல்லிவிட்டேன்,' ரொம்ப ஞாபகமாக சொல்லிவிட்டாராம்! உடனேயே
'இன்னும் ஒரே ஒரு தரம் சொல்லிடேன்!..ப்ளீஸ்!' அதானே பார்த்தேன்!
'உத்திரட்டாதி...உத்திரட்டாதி..உத்திரட்டாதி.' நொந்தேன் நூலானேன்.
வேறொன்றுஇல்லை, அமெரிக்காவிலிருக்கும் எங்கள் மகனுக்கு பத்து
நாட்கள் முன் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதற்காக நாளை வெள்ளிக்கிழமை அங்கு குழந்தைக்கு பெயர் சூட்டு விழா. அங்கெல்லாம்
பிரசவத்துக்கு ஹாஸ்பெட்டலில் சேரும்போதே குழந்தையின் பெயரைச் சொல்லிவிடவேண்டுமாமே! அங்கு அதுதான் வழக்கமாம்! மருமகளின் பெற்றொர்
உதவிக்காக சென்றிருக்கிறார்கள்,இங்கு இதுதானே வழக்கம்! ஹி..ஹி..
என் கணவர் இங்கு சென்னையில் ஒரு MNC-யில் நல்ல பதவியில்
இருக்கிறார். எப்போதும் பிஸி..பிஸி..பிஸி. அவரது அன்றாட வேலைகளைக் கூட வீட்டில் நானும் ஆபீசில் செகரட்டரியும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும்.

இன்று காலையில் எழுந்தவுடன் அவரிடம் ,'என்னங்க! நாளைக்காலையில்
நாமிருவரும் வடபழனி கோயிலுக்குப் போய் பேரக்குழந்தை பேரில் ஓர்
அர்ச்சனை செய்துவிட்டு வருவோம்...என்ன?..ஓகேவா?' உள்ளுக்குள் சிறிது
பயம் எங்கே வேலையிருக்கிறது என்று சொல்லிவிடுவாரோ..என்று.
ஹப்பா...! உற்சாகம் பொங்கிவழிந்தது முகத்தில். துள்ளிக்குதித்துக்கொண்டு,
'அப்ப, நாந்தான் குழந்தையின் பெயரும் நட்சத்திரமும் சொல்வேன்! உனக்கு ஓகேவா?' என்றார் குழந்தையைப்போல்.

'பின்ன..? தாத்தாவா லட்ஷணமா நீங்கதான் சொல்லவேண்டும்'
ஒரே பெருமை! முகத்தில். அது என்னங்க...? பேரக்குழந்தை பிறந்து தாத்தாவாகிவிட்டால் அவர்கள் குணச்சித்திரதையே புரட்டிப்போட்டுவிடுகிற்து!? இவ்வளவு மகிழ்ச்சியாய் அவரைப்பார்த்ததில்லை.
குழந்தைக்கு அவரது அப்பா பெயராம்..அதனால் மறக்காதாம்! நட்சத்திரம்
மட்டும் அப்பப்ப மறக்கிற்து.
இரவு உணவு முடித்து சிறிது நேரம் வீணையிசை கேட்டுவிட்டுத் தூங்கப்போனேன்.

படுக்கையில் இவர் தூங்காமல் யோசனையிலிருந்தார். 'என்னவாச்சு?' என்றேன்
'உனக்காகத்தான் காத்திருந்தேன், தூங்குமுன் ஒருமுறை சொல்லிவிடேன்! ப்ளீஸ்ஸ்..!

சரி!..உ..த்..தி..ர..டா..தி!' தாங்காதடா சாமி', என்றவாறே தூங்கிப்போனேன்.

நடுஇரவில் திடீரென்று விழித்தேன்...பார்த்தால்... விட்டத்தை பார்த்தவாறு
கொட்டகொட்ட விழித்திருந்தார்!!! கெஞ்சும் பார்வை பார்த்தார். 'சரி..சரி..
உத்திரத்தையே பார்த்துக்கொண்டிருகிறீர்கள் அல்லவா? அதையே ஞாபகத்தில்
வைத்துக்கொள்ளுங்கள்..உத்திரட்டாதி!!!!!! இல்லையென்றால் நானே சொல்லிவிடுகிறேன் இப்போது நிம்மதியாகத்தூங்குங்கள்.'
என்றவாறே உறங்கிப்போனேன்.

காலையில் இருவரும் சீக்கிரம் தயாராகி டிரைவர் வந்ததும் உற்சாகமாகக்
கிளம்பினோம். டிரைவர் ,'நூரடி ரோடு வழியா அல்லது டிநகர் வழியா?' என்று கேட்டார். எப்படியாவது சீக்கிரம் போ!

கார் ராஜ்பவன் தாண்டி டிநகர் வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் வந்தது.
பாலம் ஏறி இறங்கவே இருபது நிமிடமாயிற்று. ஒரு வழியாக ஆற்காடு ரோடு கடந்து வடபழனி கோயிலை அடைந்தோம்.

காரிலிருந்து விறுவிறுவென்று கோயிலை நோக்கி நடக்கவாரம்பித்தார்.
'நில்லுங்க..நில்லுங்க..'என்று நிறுத்தி அர்ச்சனை பொருட்கள் வாங்ச்சொன்னேன். முன்னேப்பின்னே கோயிலுக்கு வந்திருந்தால்தானே!!
அவருக்கு கோயிலெல்லாம் அவரது அலுவலகம்தான்!!

காலணிகளை அதற்கான இடத்தில் விட்டுவிட்டு நேரே முழுமுதற்கடவுள்
வினாயகரை வணங்கி, பின் நேரே முருகன் சன்னதிக்குவந்தோம்.
நான் வழக்கமாக வரும் கோயில்களில் இதுவும் ஒன்று. என்னைபார்த்ததும் குருக்கள் ஓடோடி வந்தார்,'என்னம்மா செளக்கியமா? பேரன் பிறந்திருக்கிறானாமே! ரொம்ப சந்தோஷம்! அதிசயமாக சாரும் வந்திருக்கிறாரே? என்ன விசேஷம்?' என்றார். இவருக்கு ஒரே ஆச்சரியம்!
'உனக்கு இவ்வளவு வரவேற்பா..!'
குருக்கள் அர்ச்சனைத் தட்டைவாங்கியவாறே,' யார் பேருக்கு அர்ச்சனை? என்றார்.

நான் வாயைத்திறக்குமுன்னால், இவர், தன் தந்தை பேரைச்சொல்லிவிட்டு
'திருவட்டாதி..! என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாரே பார்க்கலாம்!!!!!

குருக்கள் ' திருதிரு'என்று விழித்தார். என்னடா? இது இருபத்தேழு நட்சத்திரங்கள் தானே? இது என்ன இருபத்தியெட்டாவது நட்சத்திரமா...? புதிதாகத் தோன்றிவிட்டதா என்று குழம்பிப்போனார். ஒருவாறு அவரைத் தெளியவைத்து பூஜையை முடித்துகொண்டு பிரகாரத்தில் வந்து மெளனமாக அமர்ந்தோம்.

ஒரு கணம்தான்! ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
போவோர் வருவோர் எங்களை வேடிக்கைப்பார்க்க, 'யார் பையன்' படத்தில் N.S. கிருஷ்ணனும் T.A. மதுரமும் போல் 'கொல்லென்று'
சிரிக்கவாரம்பித்தோம்.......!

(சர்வேசனுடைய கதைப்போட்டிக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன், மற்ற கதையை அங்க படிங்க.)

Labels:


Wednesday, March 7, 2007

 

வானொலி வர்த்தகஒலிபரப்பு

கேட்ட ஞாபகம் இல்லையோ..?
'இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு..உங்கள் அறிவிப்பாளர் மயில்வாகனன்...' என்று தன் அன்பான, இனிமையான குரலில் நேயர்களைக்
கட்டிப்போட்ட அந்த ஒலிபரப்பு இப்போது எங்கே? ஏன் இப்போது தென்தமிழ்நாட்டில் கேட்பதில்லை? டிவிக்களை நினைத்தும் பார்க்கமுடியாத ,All India Radio-வும் சொதப்பிக்கொண்டிருந்த காலத்தில் தன் சுவையான நிகழ்ச்சிகளால் அன்பு நேயர்களை கவர்ந்த அந்த ஒலிபரப்பு காற்றிலே கரைந்துவிட்டதா.......நமக்குத்தான் எட்டவில்லையா?
தமிழை கொத்துபரோட்டா போடும் தற்போதுள்ள FM மற்றும் மிளகாய் மசாலாக்கள் தமிழ் பேசவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் அங்கே
கற்றுக்கொள்ளவேண்டும்.

அறுபதுகளில்(என் வயதைச்சொல்லவில்லை-வருடங்களை) பள்ளியிலிருந்து
வந்தவுடன் காதுகளைப் பிய்த்து ரேடியோவில் சொருகிவிடுவேன்.
'இசையும் கதையும், அன்றும் இன்றும், ஜோடிமாற்றம், போன்ற பல சுவையான நிகழ்ச்சிகள்!!! அவைகளை மீண்டும் கேட்கமுடியுமா?

அன்று பேசிய தமிழ் காதில் தேன் பாய்ச்சியது
பாடல்கள் தெளிவாக நல்ல அர்த்த்துடன் உச்சரிக்கப்பட்டன
இசையும் நெஞ்சை வருடிச்சென்றது. இன்றோ?
தமிழ்...... தமிழ்தானே?!... நம்மைப் பிறாண்டுகிறது,
இசை தூக்கிவாரிப்போடுகிறது
என் உறவில் மகனொருவன் தன் புதுக்காரில் என்னை ride கூட்டிச்சென்றான்.
புது கார்....சுகமாகயிருந்த்து. திடீரென்று தன் காரில் மாட்டியிருந்த 'ரதகஜதுரக
பதாதி'களை ஆன் செய்தான். அவ்வளவுதான் அலறிவிட்டேன்! நிறுத்து நிறுத்து! என்று கீழே இறங்கிவிட்டேன். 'மவனே! என் முதுகில் மொத்மொத்தென்று மொத்தவேண்டுமென்று எத்தனை நாள் காத்திருந்தாய்?'
'இல்லை பெரியம்மா! இதையும்தான் கொஞ்சம் கேளுங்களேன்!'
வேண்டாமடா சாமி!....நீங்கள் எல்லாம் எங்கே சுற்றினலும் ஒரு நாள் என்
வட்டத்துக்குள் வந்துதான் ஆகவேண்டும்'-என்றேன்.
சொன்னாற்போல்...... இப்போது re-make...re-mix..என்ற பெயரில் பழசை நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
சுட்டு சுட்டு அலுத்துவிட்டதா?.......கற்பனை வற்றிவிட்டதா?

Labels:


 

மலர்களைப்போல் தங்கை......

படிக்கிற காலத்தில் பார்த்த ஹிந்திப்படங்களில் வரும் சகோதரபாசத்தைக்
காட்டும் ரக்ஷா பந்தன் காட்சிகளில் மனம் லயித்து நானும் அதுபோல் என்
அண்ணன்களுக்கு ராக்கி கட்டவேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவேன்.
ஆனால் ராக்கிகளை கண்டதில்லை(வெறும் ஜரிகை கயிறு போதும் என்று
பிறகு தானே தெரிந்தது! திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு
சென்னைக்கு மாற்றலாகி வந்து, ஆதம்பாக்கத்தில் குடியேறினோம்.
ஆவணிமாதத்தில் கடைகளில் அட்டைஅட்டையாக் தொங்கிக்கொண்டிருந்தது
என் கனவு 'ராக்கி'! ஆஹா! மனதில் குப்பென்று பூ பூத்தது! கண்டேன் ராக்கியை
என்று கூவிக்கொண்டே வாங்கிக்கொண்டு வீடு வந்து மூன்று அண்ணன்களுக்கும் தபாலில் அனுப்பினேன். பதிலில்லை! அவர்களுக்கும் இது போல் ஆசை இருந்திருக்கவேண்டும்-பூ பூத்திருக்கவேண்டும்,இல்லைபோலும்
ஒகே! டேக்கிட் ஈஸி பாலிசி. ஆனாலும் ஆசை விடவில்லை.
என் மகள் மூலம் நிறைவேற்றிக்கொண்டேன்....கொண்டிருக்கிறேன்!
அடுத்த வருடம் அவளை அவள் சகோதரனுக்கு கட்டவைத்து அழகு பார்த்தேன். மேலும் குடும்பத்திலுள்ள சகோதரர்கள் எல்லோருக்கும் கட்டவைத்து மகிழ்ந்தேன். வருடங்கள் ஓட...அதிர்ஷ்டவசமாக அவள்
திருமணத்துக்கு மறுநாள் 'ரக்ஷா பந்த்ன்!' சொந்தங்கள் கூடியிருக்க மணமேடையிலேயே ராக்கி கட்டியது ரம்மியமான காட்சி!
இதை ஏன் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறேனென்றால்
சகோதரபாசம்...சுகமானது. கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரி-இதுவே என் பாலிசி.
'இது என்ன புதுப் பழக்கம்?' என்ற பின்னோட்டங்களும் காதில் கேட்டது.
நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம்...சரிதானே?
இதுவே சில வருடங்களுக்கு முன்னே சகோதரர்கள் சகோதரிகளுக்கு
பச்சை கலரில் புடவை எடுத்துக்கொடுக்கவேண்டும்.....என்று வதந்தி ஒன்று
பரவியது. கடைகளிலெல்லாம் பச்சை புடவைகள் தோரணங்களாக தொங்கின். யார் கொழுத்திப்போட்டதோ? நாடு முழுக்க காட்டுத்தீபோல் பரவியது. பிள்ளையார் பால் குடிக்கிறார்...என்பது போல்.
சரியோ..தவறோ..சொந்தங்களை மேலும் இறுக்கிப்பிணைக்க இதெல்லாம்
தேவைதான்.

Labels:


Tuesday, March 6, 2007

 

ஊருக்கு ஊர்

திருநெல்வேலி அல்வா (கொடுப்பது அல்ல சாப்பிடுவது) என்பது உலகறிந்தது. ஏன் இருட்டுக்கடை அல்வா கூட வெளிச்சத்துக்கு
வந்து விட்டது. இனி அந்த ஊரைச்சுற்றியுள்ள ஊர்களின் பிரசித்தங்களை
பார்க்கலாமா? வேறொன்றுமில்லிங்க.....திங்கிற சமாச்சாரங்க...!
நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு தயாராகுங்க...சேரியா?
கோவில்பட்டி..தீப்பெட்டி தயாரிப்பு இங்கே.... அதை எப்படி திங்கிற்து
என்கிறீர்களா...? தீப்பெட்டியில்லாமல் எப்படிங்க அடுப்பு பற்றவைத்து
இவ்வளவு சமாச்சாரங்கள் செய்வதாம்! தீப்பெட்டிக்கு அடுத்து இங்கே
கடலைமிட்டாய் மிகவும் பிரபலம்..அதுவும் broken piceses என்று தனியாக
பாக்கெட் போட்டு விற்பார்கள், அள்ளிக்கொண்டுபோகும். இது தவிர
இனிப்பு சேவு என்று சாய்ந்த கோபுரம் போல் அடுக்கி வைத்திருப்பார்கள்.
வேண்டிய அளவு பிச்சுப்பிச்சு வாங்கிக்கொள்ளலாம்.
இங்கிருந்து சிறிது தூரத்தில் சாத்தூர்!! வெள்ளரிக்கா..பிஞ்சுவெள்ளரிக்கா
இத வாங்காம போனாக்கா நல்லாருக்கா...? கூடைகூடையாக கொண்டுவந்து
நீட்டுவார்கள். வேண்டாமென்று சொல்லாதீர்கள்.
அப்படிக்கா...வந்தாக்கா.. ரயிலில்தான், கடம்பூரில் போளி வாங்கிக்கிங்க.

"மார்கழித்திங்கள் மதிநிறைந்த..." ஓ! நீங்கள் திருவில்லிப்புத்தூர் வந்துவிட்டீர்களா? பால்கோவா வாங்க போதுவீர்! பாக்கெட் பாக்கெட்டாக
அள்ளுவீர்.
சங்கரன்கோவில்-கோமதி அம்மனை தரிசித்து விட்டு ......பார்சல்களில்
சுத்துப்பட்டு ஊர்களுக்கெல்லாம் செல்லும் மட்டன் பிரியாணி ஒரு பிடிபிடித்துவிட்டு....ஹும் மூச்சு வாங்குதா? விடமாட்டேனே!
அலைகடலோரத்தில் ஆட்சிசெய்யும் திருச்செந்தூர் செந்திலாண்டவனை
தரிசனம் செய்து இலை விபூதிப்பிரசாதம் (இப்போது இலையில் தருகிறார்களா? தெரியவில்லை)வாங்கிக்கொண்டு அப்படியே வந்தால் கோவில் வாசல்கடைகளில் புட்டுக்கருப்பட்டி பனையோலை
பாக்கெட்டுகளில் கிடைக்கும். வாயில்போட்டால் இனிக்கும்! அஹங் அப்டீஈஈஈஈஈஈஈஈஈங்களா!
'முத்துக்குளிக்க வாரியளா...?'அடடே! தூத்துக்குடி! அந்தக்காலத்தில் முத்துக்குளிக்க இருவராகப்போவார்களாம் அதுவும் மச்சானும் மச்சானுமாக.
ஒருவர் கயிற்றின் ஒரு முனையைப்பிடித்துக்கொண்டு படகிலிருக்க
மற்றவர் மறுமுனையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் மூழ்குவர்.
முத்துச்சிப்பிகளை சேகரித்தவுடன் கயிறை ஆட்டுவார் ,படகிலிருப்பவர்
கயிறை மேலே இழுப்பார். கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக.....முழ்கியிருப்பவர் தன் தங்கை புருஷனாக இருந்தால்,
அண்ணன் கவனமாகயிருப்பார் அல்லவா? உறவுகள் அப்போது அவ்வள்வு
இறுக்கமாக இருந்தன!!

சரி..சரி.. முத்துக்குளித்தது போதும். வெளியுலகுக்கு இன்னும் பிரபலமாகாத
ஒரு முத்தை நாம் குளிக்காமலே எடுப்போமா?
முத்துமுத்தாக அடுக்கிவைத்திருக்கும் தூத்துக்குடி 'மெக்ரூன்ஸ்!!'
விலைதான் கொஞ்சம் அதிகம் ஆனால் வாயில்போட்டால் நம் பர்ஸைப்போல் கரையும். எல்லாக்கடை மெக்ரூன்ஸ்ஸும் மெக்ரூன்ஸ் அல்ல தனலட்சுமி பேக்கரி மெக்ரூன்ஸ்ஸே மெக்ரூன்ஸ்.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
அப்பாடா! எனக்கே முத்துக்குளித்து மூச்சு வாங்கிவிட்டது. என்ன...?எல்லோரும் தலைதெறிக்க
எங்கே ஓடுகிறீர்கள் ? கோவில்பட்டிக்கா?...சாத்தூருக்கா?..கடம்பூருக்கா?..
திருவில்லிப்புத்தூருக்கா?..சங்கரன்கோவிலுக்கா?..திருச்செந்தூருக்கா?..அல்லது
தூத்துக்குடிக்கா?.. அப்படியே எனக்கும் ஒரு பார்சல்!!!!!!!!!!!

Labels:


Sunday, March 4, 2007

 

சொக்குமே மனம்..சுத்துமே ஜகம்...!

இன்றைக்கும் கேட்டால் மனதை சொக்கவைக்கும் பாடல்
எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள ஆசை
C.R.சுப்புராமன் இசையில் M.L.V. பாடியது மணமகள் படத்தில். பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே'.
சின்னஞ்சிறு பெண்ணாக நாட்டியப்பேரொளி.
நீங்களும் கேட்கணுமா? 'க்ளிக்' பண்ணுங்க

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]