Monday, December 31, 2007

 

நான் எப்போதும் நானாகவே இருப்பேன்.


யார் வேண்டாமென்றது? நீ எப்போதும் நீயாகத்தானிருக்க வேண்டும் என்கிறீர்களா? சர்தான்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இருபது வயதில் ஒரு சமயம் மனம் குழம்பியிருந்தபோது
என் தந்தை என்னிடம் கூறிய மந்திரம். அப்பன் சொன்ன மந்திரம். 'எப்போதும் போல் நீ நீயாகவே இரு!'

சுருங்கச் சொன்ன இம்மந்திரத்தினுள் எவ்ளோ அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன!!! அப்பொது மேலோட்டமாக புரிந்த எனக்கு வயது ஏற ஏற அதன் ஆழம் புரியவாரம்பித்தது.

நான் யார்..எப்படி இருப்பேன்? யார் என்ன செய்தாலும் சொன்னாலும் தோளில் தூசு மாதிரி தட்டிவிட்டுக்கொண்டு போய்கொண்டேயிருப்பேன். அண்ணன் தனிக்குடித்தனம் போனதும்..கோபித்துகொண்டு அல்ல வீட்டில் இடவசதி இல்லாததால் அங்கு பாதி நேரம் இங்கு பாதி நேரம் என்று இருப்பேன். அப்போது இங்கு நடப்பதை அங்கு சொல்ல மாட்டேன்..அங்கு நடப்பதை இங்கு சொல்லமாட்டேன். அதனால் இருவீடுகளுக்குமிடையே ஒரு பாலமாக இருந்தேன் என்று அப்பாவிடமே பாராட்டும் பெற்றிருக்கிறேன்.

ஆனால் சில குறும்புகள் மட்டும் செய்வேன்.பொங்கலுக்கு மறு நாள் ஆற்றங்கரைக்குப் போவது வழக்கம்..கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு. அப்போது அப்பாவிடம் போய், 'அண்ணாச்சி ஆத்துக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள்.' என்பேன். அப்பாவும்,'அவனே வரானா அப்ப போகலாம்.'என்பார்கள். அண்ணாச்சியிடம் போய்,'அப்பாவும் ஆத்துக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார்கள்.' என்பேன். அவரும்,'அப்பா வருகிறார்களா? அப்ப கட்டாயம் போலாம்.' என்பார்கள். காரணம் அம்மாவுக்குப் பிறகு அப்பா அவ்வளவு சுலபத்தில் எங்கும் வரமாட்டார்கள். ஆகவே இப்படி தில்லுமுல்லு செய்துதான் எல்லோரையும் கிளப்பி இரண்டு கார்களில் மணிமுத்தாறு, பாபநாசம் என்று போய்வருவோம்.

அதேபோல் திருமணமான உடன் யாரும் சொல்லாமல் நானே என் மனதுக்குள் எடுத்துக்கொண்ட உறுதி மொழி....எக்காரணம் கொண்டும் சகோதர சகோதரி உறவுக்குள் என்னால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பது. இன்று வரை அதைக் கடைப்பிடித்து வருகிறேன். புகுந்த வீட்டு உறவுகள் என் வீட்டிற்கு எந்த தயக்கமும் இல்லாமல் ஆசையோடு வருவார்கள். சிங்கள் பெட்ரூம் வீட்டில் நாங்கள் இருந்த காலத்தில்..செல்விருந்தும்..வருவிருந்துமாக ஜேஜே என்றிருந்த்தை இப்போது நினைத்தாலும் சந்தோஷ மலைப்பாக இருக்கிறது. தேனி போல் சுறுசுறுப்பாக இருந்த காலம்!!!இப்போது அப்படியில்லையா....என்ன..கொஞ்சம் சுறுசுறுப்பு குறைந்த தேனிதான்.

ஆனால் தேனியைப்போல ஒரு கோமாளி ஏமாளி யாரும் கிடையாது. ஓடியாடி பறந்து திரிந்து
சேகரித்ததை ஒரே நாளில் எவனோ நோவாமல் லாவிக்கொண்டு போகும் பரிதாபம்.

யாருக்கும் எந்த உதவி என்றாலும் ரங்கமணியும் நானும் முதலில் நிற்போம். உதவி பெற்றவர்கள் பின்னர் அதை கண்டுக்காமல் போகும்போது...ரங்கமணி,'நாம் எப்போதும் போல் நம்மால் முடிந்ததை மற்றவர்க்கு செய்வோம். அவரவர் மனசு போல் அவரவர்க்கு கிடைக்கும்.' என்பார்.

'அப்பா!!'நீங்கள் சொன்னது போல் இத்தனைக் காலமும் நான் நானாகவே இருந்திருக்கிறேனா?
உங்கள் ஆசியால் அப்படித்தான் இருந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

வெளிநாட்டுக் கடையொன்றில் நான் பார்த்த தேனி மெழுகுவர்த்தியும் அதோடு கிடைத்த ' bee yourself' 'bee happy' என்ற கிரிஸ்டலும் அப்பாவை ஞாபகப்படுத்தியதால் ஆசையோடு வாங்கினேன். அதற்காக ஒரு தட்டும் வாங்கி செட் பண்ணினேன். பெரிதாக்கிப் பார்த்தால் எழுத்துக்கள் தெளிவாகத்தெரியும்.

தேனிபோல் ஏமாளியாக இல்லாமல் சுறுசுறுப்பாகவும் நீ நீயாகவும் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதே என் புது வருட பொன்....ஹூஹும்..தேன்மொழி!!!!

எல்லோரும் சுறுசுறுப்பாக ஹாப்பியாக இருக்க என் வாழ்த்துக்கள்!!!!

Labels:


Sunday, December 30, 2007

 

இவையெல்லாம் என்ன..என்ன..என்னென்ன..?


இவையெல்லாம் என்ன தெரிகிறதா? மீன் தொட்டியில் நீந்தும் மீன்களா? அல்ல. சுவற்றில் ஊறும் பல்லிகளா? அல்லவே அல்ல.

காட்டு மிருகங்களின் கொம்புகளிலிருந்து செய்யப்பட்ட விதவிதமான கரண்டிகள்!!!
இப்ப தெரியுதா?

சிகாகோ மியூசியத்தில் சுட்டது.

Labels:


 

ஏ..ஆத்தா..ரோட்டோரமா...அட!!ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் தளம் எப்போது ரோட்டோரமா வந்தது?
பேந்துட்டீங்களா...?

ச்சும்மா..வருசம் முடியப்போகுதில்ல? அதான் ஒரு மொக்கைப்பதிவு.ஹி..ஹி..!

Labels:


Monday, December 24, 2007

 

ஏசுபிரான் அவதரித்த நன்னாள்உலக மக்கள் எல்லோரும் உய்ய கடவுளின் தூதராக, அன்னை மேரியின் தெய்வ பாலனாக ஏசுபிரான் இம்மண்ணில் பிறந்த இந்நன்னாளில் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மற்றும்

மேய்ப்பர் பிறந்த நாளில் வலைப்பதிவுகளை மேய்பவர்களுக்கும்

என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

மதபேதம் இல்லாது என் பூஜையில் வைத்து வழிபடும் அன்னைமேரியும் குழந்தை ஜீசஸும் குட்டி தேவதைகளும் உங்களுக்கு எல்லா நலன்களும் வழங்கட்டும்

Labels:


Sunday, December 23, 2007

 

வாரயிறுதியில் மக்களின் சரணாலயம்
மார்கழி மாதம்..!விடியுமுன் குளித்து கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டவுடன், பூவரசு இலையைப் பறித்து அதில் சுடச்சுட தயிர்சாதம் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? சின்ன வயதில் எங்கள் ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் அதிகாலையில் இதற்காகவே ஓடுவோம். அந்த மகிழ்ச்சி இப்போது இல்லையே ஏன்?
சனி ஞாயறுகளில் காலை பத்து மணியளவில் சான்ப்ரான்ஸிஸ்கோவிலுள்ள லிவர்மோர் நோக்கி கார்கள் சர்சர்ரென்று பறக்கும். அவ்வளவும் இந்தியர்களின்..அதுவும் தென்னிந்தியர்களின் கார்களாகத்தானிருக்கும். காரணம்..? கோவில். சுவாமி தரிசனம் செய்யவா..? அதுவும்தான்.மற்றது சுவையான சாப்பாடு...இல்லையில்லை பிரசாதங்கள்!!


அங்கு கோவிலில் தரும் பிரசாதங்கள் தவிர பக்தர்கள் கொண்டுவரும் புளிசாதம்,தயிர்சாதம்,கேசரி,வெண்பொங்கல்,சர்க்கரைப்பொங்கல் போன்றவைகள் அழகாக அலுமினியம் பாஃயில் ட்ரேயில் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தபின் வெளியில் டேபிள்களில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். நாம் தரிசனம் முடித்து வெளிவந்து வரிசையாக வைக்கப்ப்ட்டிருக்கும் பிரசாதங்களை பஃபே சிஸ்டமாக பேப்பர் தட்டு, ஸ்பூன், கிண்ணம் என்று நாமே வேண்டியதை...வேண்டியதென்ன? எல்லாமேதான் வாரிப்போட்டுக்கொண்டு ஒரு கட்டு கட்டலாம்.

இதுக்காக...இதுக்காகவேதான் அந்தக் கூட்டம்! குடும்பம் குடும்பமாகவும் பிரம்மச்சாரிகளும்
பறந்து வந்து சரணடையும் ஆலயம்!!கோவில் பிரசாதமாக சாம்பார்சாதம் அல்லது புலாவ் ம்ற்றும் தயிர்சாதம் காலியாக காலியாக நிரப்பிக்கொண்டேயிருப்பார்கள். பக்தர்கள் கொண்டுவரும் விதவிதமான பிரசாதங்கள் ட்ரே ட்ரேயாக வந்து கொண்டேயிருக்கும். எவ்வளவு உல்லாசமான திவ்வியமான சிவாமி தரிசனம்!பல சுவைகளில் ஹோம்மேட் சாப்பாடுகளை உற்சாகமாக சுவைக்கலாம்!

நாங்கள் வேண்டுதலாக நூற்றியெட்டு மோதகம்-கொழுக்கட்டைகள் செய்து விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து பின் டேபிளில் கொண்டு வைத்ததுதான் தாமதம், 'ஹை! கொழுக்கட்டை!'என்று எல்லோரும் ஆசையாசையாக எல்லோருக்கும் கிடைக்கவேண்டுமென்று ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு எடுத்துக்கொண்டு விரும்பி சாப்பிட்டது கண்டு மகிழ்ந்தோம்.

விடுமுறை நாளில் ஹோட்டலுக்கு சென்றால் செலவுதான். மேலும் நமது சாப்பாடு அதுவும் பிரசாதம்.. வீடுகளில் செய்தது..என்னும் போது அது ஒரு அலாதி சுவைதானே!!

லிவர்மூரில்தான் இப்படி அருமையான சாப்பாடு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் சிகாகோநகரில் உள்ள கோவிலில் இப்படியில்லை. சுவாமிதரிசனம் முடிந்து கீழே வந்து பிரசாதங்களை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டுயுள்ளது.

Labels:


Saturday, December 22, 2007

 

மோர் மிளகாய் இட்லிப்பொடி!!உள்ளம் கேட்குமே மோர்!!


இந்த கிச்சன் கில்லாடி..ஹா..ஹா..ஹி..ஹி..சொல்ல மறந்த ஒரு இட்லிப்பொடி, மோர்மிளகாய் இட்லிப்பொடி.

காரமாய் சாப்பிடும் ஓர் உறவினர் என் இல்லம் ஏகிய போது( செந்தமிழு...!?)அவருக்காக மனதில் உதித்தது இந்தப் பொடி.

மோர்மிளகாயை எண்ணெயில் நன்கு கருக பொரித்து எடுத்துக்கொண்டு அதோடு வெறும் கடாயில் வறுத்த கடலைப் பருப்பு,உளுத்தம்பருப்பு மற்றும் பொரித்த கறிவேப்பிலை எல்லாவற்றையும்
மிக்ஸியில் நன்றாக பொடிசெய்து கொண்டு இட்லி தோசையோடு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கலந்தடித்தால் அந்த உறவினர் போல் சொக்கியே.......போவீர்கள்!

Labels:


Wednesday, December 19, 2007

 

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம்!!


மழலை பேசும் குழந்தைகளோடு உறவாடுவதும் உரையாடுவதும் எனக்குப் பிடித்தமானதொன்று.
அண்ணன் குழந்தைகள், சகோதரிகள் குழந்தைகள், பிற குழந்தைகள் என்றும்,இன்று அவர்களின் குழந்தைகள் என்றும் மழலைகள் சூழ இருப்பதையே மிகவும் விரும்புவேன்.
கள்ளமில்லா அவர்கள் அன்பிலும் சிரிப்பிலும் என்னையே மறந்து விடுவேன்.

குழந்தைகளைக் கவர்வதில் என்னுடைய 'வழியே தனி வழி'. வாரியனைத்து மொச்மொச்சென்று முத்தமிட்டு கொஞ்சுவதில் குழந்தைகள் சில சமயம் மிரண்டுவிடும். அதில் எனக்கு உடன்பாடுமில்லை.
தள்ளி நின்று சிறிது நேரம் அவர்களின் விருப்பம், பேசும் முறை முதலியவற்றை கவனித்து
பிறகு அதே மழலையில் அவர்களின் விருப்பமே என் விருப்பம் என்று நம்பவைத்து அவர்களின் அலைவரிசையில் என்னையும் இணைத்துக்கொள்வேன். கொஞ்ச நேரத்தில் அக்குழந்தை என் மடியில் வந்து அமர்ந்து கொண்டு மழலையில் மிழற்றும் பாருங்கள்...!!!
உள்ளமும் உச்சியும் குளிர்ந்தேபோகும்.

படிக்கும் காலத்தில் பெரும்பாலான நேரத்தை என் அண்ணாச்சி வீட்டில் கழித்துவிட்டு இரவுதான் வீடு திரும்புவேன். அதுவரை சின்ன அண்ணன் குழந்தைகள் என் படுக்கையை சுற்றி உட்கார்ந்து காத்திருக்கும். என்னிடம் கதை கேட்க ஆவலாக. அவர்களை சுற்றி அமரவைத்துக்கொண்டு கதையை ஆரம்பிப்பேன். 'ஒரு ஊரிலே..' என்றோ அல்லது 'ஒரு புலி...ஒரு சிங்கம்...ஒரு கரடி..' என்றோ அந்த நேரத்தில் தோன்றுவதை கோத்து கதை சொல்வேன். அவர்களும் ஆ..! என்று கேட்பார்கள். குறுக்கே கேள்வியெல்லாம் கேட்கமாட்டார்கள். கதை முடிந்ததும் திருப்தியாக தூங்கப்போவார்கள். இது நான் அத்தையாக கதை சொன்ன காலம். அன்று கதை கேட்ட குழந்தைகளின் குழந்தைகள் எல்லாம் இன்று என் செல்லங்கள். இதில் கதை கேட்ட ஒருத்தியின் குழந்தைக்கு ஆச்சியாக கதை சொன்னபோது....சிங்கமும் சுண்டெலியும் கதையை ஒரு மாற்றத்துக்காக புலியும் சுண்டெலியும் என்று ஆரம்பித்ததுதான் தாமதம் பாய்ந்தானே என் மேல் புலி போல்!!!
'ஆச்சி!!!யூ ஆர் ராங்! அது சிங்கமும் சுண்டெலியும்!' என்றெனக்கு வைத்தான் ஆப்பு!
யப்பா...இப்போதுள்ள குழந்தைகளிடம் எந்த ரீலும் சுத்தமுடியாது.

'ஐய! உனக்கு ஒன்னுமே தெரியலை!'
அவன் தன் தாத்தாவிடம் புராணக்கதைகள் எல்லாம் கேட்டு என்னிடம் வந்து மழலையில்
அழகாக சொல்வான். 'இசை மழலை' என்று ராம்ஜி அவர்கள் இப்போதுதான் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறார். நான் அப்போதே 'கதா காலட்ஷேப மழலை' கேட்கும் பேறு பெற்றேன். ராமர் கதையை ஆங்கிலமும் தமிழும் கலந்த மழலையில் சொல்லும்போது லவ குசர்களில் ஒருவன் வந்து சொல்வதுபோலிருக்கும். "ஆதோ! கீர்த்தனாரம்பத்திலே...." மட்டும்தான் இருக்காது.

இராமாயணக் கதை சொன்னவனுக்கு என்ன தருவது என்று யோசித்தபோது...நம்மால் சிவதனுசு எல்லாம் கொடுக்கமுடியுமா? toy shop-ல் ஒரு வில்லும் அம்பும் வாங்கி பரிசளித்தேன். இராமனைப்போல் வில்லை ஒரு தோளில் மாட்டிக்கொண்டு அம்பை கையில் வைத்துக்கொண்டு ராமனைப் போல் போஸ் கொடுத்தான். உடனே க்ளிக்கினோம்.

இரவு வீடு திரும்பி வீட்டிலுள்ள இராமர் படத்தை பார்த்துவிட்டு மறுநாள் அம்மாவிடம் எனக்கு டயல் பண்ணச்சொல்லிக்கேட்டு போனில் என்னிடம்,'ஆச்சி! நாம ராங்கா போஸ் கொடுத்திட்டோம்!'
என்று என்னையும் சேர்த்துக்கொண்டான்.'என்னடா?'என்றால் வலது தோளில் வில்லை மாட்டிக்கொண்டு இடது கையால் அபயம் முத்திரையை காட்டிவிட்டானாம். அட! ராமா..!!

இன்னொரு பேரன், பெங்களூருக்கு அவன் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ஷெல்ப் நிறைய வாங்கி வைத்திருக்கும் போர்டு கேம்ஸ் எல்லாம் அவனோடு விளையாட வேண்டும். நான் வாங்கிப்போவதையும் சேர்த்து. ஒன்றையும் முழுதாக விளையாடமாட்டோம். அம்மம்மா! நெக்ஸ்ட்...நெக்ஸ்ட் என்று எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டுத்தான் ஓய்வோம்.அடுத்தவன் ஒரு பந்தா பார்ட்டி! வீட்டுக்கு வருபவர்கள் யாரோடும் பேசமாட்டான்..என்னைத் தவிர. குழந்தையாயிருக்கும்போதே பார்க்கப் போகும்போதெல்ல்லாம் காட்பரீஸ் நட்டீஸ் வாங்கிப்போவேன். அந்த சாக்லெட்டுக்கே 'அம்மம்மா சாக்கா!' என்று என் பேரே வைத்துவிட்டான் குழந்தை!! ஊருக்குப் போகும்போதெல்லாம் அவனுக்கு சின்னச்சின்ன பரிசுகள் வாங்கிச்செல்வேன். நான் கொடுக்கும் வரை வாய்திறந்து கேட்க மாட்டான். ஆனால் பெட்டியை திறக்கும் போது சுற்றிச்சுற்றி வருவான். கொடுத்ததும் சந்தோஷமாக வாங்க்கிகொள்வான். அதைப்பார்ப்பதில் எனக்கும் சந்தோஷம்!!நான் வந்ததும் எனக்கு சொல்ல நிறைய விஷயங்கள் வைத்திருப்பான். நாங்கள் சுவாரஸ்யமாக உரையாடிக்கொண்டிருப்போம். 'அதற்குள் உங்களிடம் சொல்லிட்டானா?' என்று அவன் தாய் வியந்து போவாள்! சரியான கார் பைத்தியம். லேட்டஸ்ட் கார்கள் வரை விவரங்கள் விரல் நுனியில் வைத்திருப்பான். ஐந்தாறு வயதில் அவனை அழைத்துக்கொண்டு சென்னையிலுள்ள Toy shop-க்கு போனேன் அவன் தந்தை அவனிடம் அங்கெல்லாம் ரொம்ப காஸ்ட்லியாக இருக்கும் அம்மம்மாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லியனுப்பினான். அவன் கடைக்கு வந்து, 'அம்மம்மா! இது காஸ்ட்லியா...இது காஸ்ட்லியா...?' என்று ஒவ்வொன்றாக காட்டிக்காட்டிக் கேட்டது ரொம்ப காஸ்ட்லி!!!!அவனுக்காக அவன் தந்தை சன்னி மொபட் சக்கரங்கள் ,மோட்டர் இவைகளை வைத்து ஒரு மினி அல்லது பேபி பைக் தயார் செய்து கார் டிக்கியில் வைத்து க்ரௌண்ட்டுக்குக்கொண்டுபோய் அங்கு அவன் ஓட்டி மகிழ்வதை பார்த்து மகிழ்ந்தேன்.

அடுத்த சுட்டி, அவன் அப்பா வாங்கிய புது காரின் சாவியை என்னிடம் கொடுத்து 'ஆச்சி காரை எடுத்திட்டு போகப்போறா' என்றதும் ஆச்சியாவது கார் ஓட்டுவதாவது என்று மெத்தனமாக பார்த்துக்கொண்டிருந்தான். நான் கார் கதவைத் திறந்து சாவிபோட்டு ஸ்டார்ட் செய்து கேட் வரை ரிவர்ஸில் உருட்டியதும் அலறிவிட்டான்..'ஹையோ! கொண்டு போறா..'என்று. அது முதல் நான் வாசலில் வருவது தெரிந்ததும், 'அம்மா..! கார் சாவியை ஒளித்து வை. ஆச்சி வாறா..'என்று கூவுவான். எங்களுக்குள் நடக்கும் உரையாடலே கார் சாவியை ஒளித்து வைத்து விட்டால் நீ எப்படி வண்டியை எடுப்பாய்? 'என்னா குட்டி செய்வே?'என்ற ரீதியில்தான்..நடக்கும்.சிகாகோவிலிருந்து செயிண்ட் லூயிஸ் போய் அங்கு மருமகள்(அண்ணன் மகள்) வீட்டில் ஒரு மாதம் தங்கினேன்.அவளின் சின்ன குட்டி இந்தியாவிலிருந்து போகும் போது 'அது அங்க இக்கு' என்று பேசிக்கொண்டு போனவன்...ஒரே வருடம் கழித்து நான் போன போது அருமையான இலக்கண சுத்தமாக ஆங்கிலம் பேசி அசத்தினான். நாம் எது கேட்டாலும்,'பிகாஷ்..(because)' என்று ஆரம்பிக்கும் அழகே அழகு!! அவனோடு அடித்த லூட்டி மறக்க முடியாது. திரும்ப சிகாகோ வந்து எங்கள் வீசாவை மேலும் இரண்டு மாதம் நீடித்த போது மறுபடி ஒரு பத்து நாட்கள் செயிண்ட் லூயிஸ் போக ஆசைப்பட்டேன். அனுப்ப மனமில்லாத சிகாகோ சகோதரியை, 'நாம் எப்போதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்போம். ஆனால் அந்த மழலை இன்னும் இரண்டு வருடங்களில் மாறிவிடும்.மழலயின்பத்தில் திளைக்கவே போக ஆசைப்படுகிறேன்.' என்று அவளை சமாதானப்படுத்திவிட்டு புறப்பட்டேன்.திரும்ப வருகிறேன் என்றதும் மருமகள் காரில் வந்து எங்களை அழைத்துச்சென்றாள்.ஐந்து மணி நேரப் பிரயாணம். சுட்டிகள் என் மேல் பொழிந்த அன்பையும் ஆச்சி என் பக்கத்தில்தான் ஒக்கார வேண்டும் அவர்கள் இசலிக்கொண்டதையும் பார்த்த சகோதரிக்கு நான் ஏன் ஆசைப்பட்டேன் என்பது புரிந்திருக்கும்.

பீச்சில் யாரோ வார்த்த அச்சுக்களை நச்சு நச்சு என்று மிதித்து கலைக்கும் குதூகலம்!

விருமாண்டி ஸ்டைலில் ஒரு ஜல்லிக்கட்டு!


நிஜமான ஒரு விருமாண்டி ஜல்லிக்கட்டு!இனி என் பேரன். கையாலும் ஊம்..ஊம்..என்றும் தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறான்.
அவன் மழலையைக் கேட்க ஆவலாயிருக்கிறேன்.

ஏதாவது ஒரு வழியில் குழந்தைகள் மனதில் ஏறி அமர்ந்து கொள்வேன். என்னைப்பார்க்கும் போதெல்லாம் நான் ஏறி அமர்ந்த வழி அவர்களுக்கும் ஞாபகம் வரும்.அப்போது அவர்களின் சிரிப்பும் சிநேகப்பார்வையும்தான் நான் அடையும் மகிழ்ச்சி!!!

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே...என்று சும்மாவா சொன்னார்கள்?
இது போல் குழந்தைகளோடு நான் கழித்த சுவாரஸ்யமான விஷயங்கள், நான் கடந்து வந்த வழியெங்கும் தெளித்துக் கிடக்கின்றன. படங்களோடு அவற்றையெல்லாம் மற்றொரு பதிவில்
பகிர்ந்து கொள்கிறேன், உங்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில்! சர்தானே!

Labels:


Thursday, November 29, 2007

 

நின்றாலும் நடந்தாலும் சாயத்தான் வேணும்!

விஸ்கான்சின் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுமார் ஐம்பது அடி சுற்றளவுக்கு நாம் வித்தியாசமான ஓர் அனுபவத்தை உணரலாம்.எதேச்சையாக 1948-ஆம் வருடம் இங்கு வந்தவர்கள் கண்டுபிடித்த அற்புதம் இது.
புவி ஈர்ப்பு விசையின் மாறுபாட்டால் நாம் இங்கு நேராக நிற்க முடியாது. அங்கு சென்ற போது அந்த அதிசயத்தை உணர்ந்து வியந்தே போனோம்.


கைடு எங்களுக்கு தெளிவாக எல்லாவற்றையும் விளக்கினார்.அங்கு 90 டிகிரி நேராக நிற்கமுடியாது குறைந்தது 35 டிகிரி சாய்வாகவே நிற்கமுடியும். ஆனால் விழுந்துவிட மாட்டோம்.
ஏணியின் மேல் ஒரு நாற்காலி போட்டு அமரச்சொன்னார். அப்போதும் நாற்காலியோடு சாய்வாகவே இருக்கமுடிந்தது.


குறிப்பிட்ட பாயிண்டை பார்த்துக் கொண்டே கீழிருந்து மேலே போகச்சொன்னார். ஒரு பக்கமாக இழுக்கும் விசையை எதிர்த்து போவது சிரமம்.இரும்புக் கம்பியில் கோத்த இரும்பு வளையம் கூட சாய்வாகவே தொங்கிய அதிசயத்தை என்னவென்று சொல்வது

விஸ்கான்சின் மாநிலம் முழுதும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டமான இடம்.

Labels:


 

காரோடுதான் நான் குளித்தேன், ஆனால் நனையவில்லை!!

கார் வாஷ் செய்யப்போகிறேன் என்றாள் சிகாகோ சகோதரி. எப்படி விட்டுவிட்டு வந்துவிடுவாயா? என்றேன். இல்லை நாமும் காருக்குள் இருக்கலாமென்றாள். விடுவேனா? 'நானும் வருவேன்.'என்று காம்கார்டரும் டிஜிடல் காமிராவும் கையுமாக அவளோடு கிளம்பிவிட்டேன்.
என்ன சுவாரஸ்யமான அனுபவம்!!!
காரை அங்குள்ள ட்ராக்கில் கொண்டு நிறுத்தினாள். அத்தோடு சரி! மீதி வேலைகளை இயந்திரங்களே பார்த்துக்கொண்டன.இரண்டு காமிராக்களிலும் அள்ளிக்கொண்டேன்.

ட்ராக்கில் கார் மெதுவாக நகர்ந்து மையத்தில் வந்து நின்றது. நாலாபக்கமிருந்தும் தண்ணீர் பாய்ந்தடித்தது.நீர் காண்ணாடியில் வழிந்தோடியது.பிறகு சோப்பு நீர் வழிய காரின் ஐந்து பக்கங்களிலும் ப்ரெஷ்கள் சுகமாக வண்டியை தேய்த்துக்கொடுத்தன.


பின்னர் சோப்புநீர் மறுபடி பீச்சியடிக்கும் நீரால் வழிந்தோடியது.


அடுத்து ட்ரையர் நீரையெல்லாம் உறிஞ்சியெடுத்தது


அப்பால தலை துவட்டுமிடத்துக்கு கார் வந்தது.இந்த இடத்தில் வண்டி மிக மெதுவாக நகர்ந்த்து.


ரோலர் மாட்டிய டவல் கொண்டு மேலும் கீழும் உருட்டி நன்றாக துவட்டியது.பளபள வென்று
புத்தம் புதியதுபோல் பென்ஸ் கார் வெளியே வந்தது. என்ன...சாம்பிராணி புகை போடாத குறைத்தான்!!

கார் குளிக்கும் போது நாங்கள் உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.அதுவும் வெட்கப்படவில்லை,நாங்களும் ஜாலியாக பேசிக்கொண்டும் படமெடுத்துக் கொண்டுமிருந்தோம்.
வித்தியாசமான அனுபவம்!!

Labels:


Wednesday, November 28, 2007

 

வத்தக்கொழம்புப்பொடி...செய்யலாமா?

செய்வோமா? குழம்புப்பொடி!
தேவையானவை:
விதைக் கொத்தமல்லி----250 கிராம்
துவரம்பருப்பு---------- 75 கிராம்
அரிசி-------------------75 கிராம்
ஜீரகம்-------------------75 கிராம்
மிளகு-------------------75 கிராம
வெந்தயம்----------------50 கிராம்
கொத்தமல்லியை தனியாக வெறும் கடாயில் வறுத்துக்கொண்டு, பிறகு மற்றவற்றையும் அதேபோல்
வறுத்துக்கொள்ளவேண்டும். லேசாக வாசனை வரும் வரை.
காய்ந்த மிளகாய்---விருப்பத்துக்கேற்ப---150 அல்லது 200 கிராம்
கறிவேப்பிலை மிளகாய்க்கு சமமாக.
இவை இரண்டையும் கடாயில் தேவையான எண்ணையூற்றி மொறுமொறுவென்று வறுக்க வேண்டும். சிறிது ஆறியதும் மெஷினில் கொடுத்து பவுடராக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த சூடு ஆறியதும் பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவையான போது உபயோகிக்கலாம்.

இதுவே வத்தக்கொழம்புப்பொடி.
பெரியவர்களும் குழந்தைகளும்....சாரி..சாரி.. பழக்கதோஷம்.
வாய்க்கு வொணக்கையாக, காரமாக சாப்பிடும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
எலுமிச்சையளவு புளி கரைத்துக்கொண்டு இந்தப்பொடி 4-5 கரண்டிகள் + மஞ்சள் பொடி 2 கரண்டிகள் + தேவையான உப்பு சேர்த்து கலக்கி அதோடு ஒன்றிரண்டாக அரைத்த சாம்பார் வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லியும் சேர்த்து பாத்திரத்தில் வெந்தயம் பொறித்து குழம்புக் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
இதற்கு பொறுத்தமான காய்கள்...பூண்டு, முருங்கக்காய்-கத்தரிக்காய், ஊறவைத்து வேகவைத்த
மொச்சை இன்னும் கைக்கு கிடைத்த காய்கள் எல்லாமும். குழம்பு விரும்பி ஏற்றுக்கொள்ளும்.

இதை நான் பூண்டு போட்டு கன்டென்ஸ்டாக செய்து வைத்துக்கொள்வேன். முடியாத நேரத்தில்
கை கொடுக்கும்.

Labels:


Tuesday, November 27, 2007

 

பச்சை சுண்டக்கா கொழம்பு!!என்ன..? சுண்டக்காய் என்றதும் முகம் சுண்டிப்போச்சு? அது உடம்புக்கு...பரவைமுனிம்மா பாஷையில்'மேலுக்கு நல்லது'. படத்தில் பார்ப்பது பச்சை பட்டாணியில்லை. அவ்வளவும் பச்சைசுண்டக்காய்!!!
சுண்டக்காயோடு கூட கத்திரிக்காய்,முருங்கக்காய் சேர்த்து கொழம்பு வைத்தால் மணம் ஊரைக்கூட்டும்.

பச்சை சுண்டக்காய் வாங்கி காம்பு கிள்ளிவிட்டு லேசாக அடித்து வாய் பிளந்தாற்போல் உடைக்கவேண்டும். பிறகு தண்ணீரில் அலசினால் உள்ளிருக்கும் விதைகள் ஓரளவு வெளியேறிவிடும். காயின் கசப்பும் சிறிது குறையும். கசப்பு கொஞ்சம் வேண்டும்.

கத்தரிக்காய்,முருங்கக்காய் இரண்டையும் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
மண் பானை அடுப்பிலேற்றி...ஆம் மண் பானைதான். அதில் சமைக்கும் ருசியும் மணமும் தனிதான்!

எண்ணை காயவைத்து காய்ந்ததும் அதில் சிறிது வெந்தயம் பொரித்து காய்களை கறிவேப்பிலையோடு சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் எலுமிச்சை அளவு புளி கரைத்து அதோடு வத்தல் கொழம்புப்பொடி நாலு அல்லது ஐந்து கரண்டி, மஞ்சள் பொடி இரண்டு கரண்டி சேர்த்து நன்கு கலக்கி
காகளோடு சேர்த்து வேக விடவும். கொதிக்கும்போது தேவையான உப்பு மற்றும் சாம்பார் வெங்காயம்,ஜீரகம்,கொத்தமல்லி,கறிவேப்பிலை இவெற்றை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொழம்பில் சேர்க்கவும்.

காய் நன்றாக வெந்து கொழம்பும் தேவையான அளவு கொதித்ததும் கடுகு உ.பருப்பு கறிவேப்பிலை தாளித்து பொடியாக அரிந்த வெந்தயக்கீரை தூவி இறக்கவும்.

சூடான சாதத்தில் நெய்யூற்றி அதில் இந்தக் கொழம்பையும் ஊற்றி கொழப்பி அடித்தால்...!
அதை நீங்கள்தான் செய்து பார்த்து சொல்ல வேண்டும்.

ஆங்! வத்தக்கொழம்புப்பொடி எப்படி செய்வது என்று சொல்லவில்லையே!?
அது அடுத்த பதிவில்தான்!

Labels:


Sunday, November 18, 2007

 

மரம் வளர்ப்போம்...அதைப் பாது'ம்'காப்போம்மரம் வளர்த்து அதைப் பாதுகாப்பது என்பது இப்படித்தான். பார்த்ததும் இந்த அக்கரை ஈங்கில்லையே என்று மனம் சங்கடப்பட்டது.
மரத்தைச் சுற்றி சுமார் இரண்டடி விட்டத்துக்கு வேர்கள் பரவ சுவாசிக்க இடம் விட்டு அதையும் இரும்பு சல்லடை கொண்டு மூடி மழை நீரோ விடும் நீரோ தாரளமாக உள்ளிறங்க வழி விட்டு
அருமையாக பாதுகாக்கும் மனம், இங்கேயா?......அட!போங்கய்யா! அடிமரத்துக்கு காலடி அளவு இடம் விட்டு மரத்தின் கழுத்தை நெருக்கி சுவாசிக்கவும் உண்ணவும் திக்கி திணறி வளரும்
நம் மரங்கள் என்ன பாவம் செய்தனவோ?

இது சிகாகோ நகரில் பிடித்தது. அந்நகர மேயர் ஒரு பெண். அவருக்கு தான் அழகாயிருப்பதைவிட தன் நகரம் அழகாயிருக்கவேண்டுமென்பதில் மிகுந்த அக்கரை காட்டுவாராம். அது அந்த நகரில் ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது. ஏன்...விமானநிலையதிலும் கூட அவர் படம் போட்டு அங்கு வரும் பயணிகளை 'அன்போடு வரவேற்கும்' பானர்களை பார்க்கமுடிந்தது. இங்கோ ஒரு முனிசிபல் கவுன்சிலருக்குக்கூட கட்டவுட்,வாழைமரம்,தோரணம்,கொடி என்று ஊரையே நாறடித்துவிடுவார்கள். கேட்பாரில்லை.

மரம் வளர்ப்ப்து மட்டுமல்ல அதை முறையாக பாதுகாக்கவும் செய்வோம்.

Labels:


 

ஆட்டுக்குட்டி..அந்த தங்கக்கட்டி...!ஆட்டுக்குட்டி அந்த தங்ககட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குதாண்டி ஆட்டுக்குட்டி
உங்க்குத்தாண்டி ஆட்டுக்குட்டி!!!!!!!!

பாண்டிச்சேரி போகும் வழியில் பார்த்தது. போனாப்போகுது ஆட்டுக்குட்டியே தின்னட்டுமென்று
போட்டோ மட்டும் எடுத்து வந்தது.

படத்தின்மேல் க்ளிக்கினால் அரைக்கிலோ வெல்லக்கட்டி ஒரு கிலோவாகத்தெரியும்

Labels:


Saturday, November 17, 2007

 

இது எனக்கு....அது உனக்கு சேரியா?


யூஎஸ்ஸிலெங்கு போனாலும் தண்ணீர் பாட்டிலோ கைக்குட்டையோ எடுத்து செல்ல தேவையேயில்லை. பெரியவர்களும் சிறியவர்களூம் நீரருந்துமாறு உள்ள இந்த அமைப்பு வசதியாக உள்ளது.மக்களின் தேவையறிந்து எங்கே போனாலும் சுத்தமான கழிவறைகள் அதாவது REST ROOMS தாரளமாக உபயோகிக்க பேப்பர் நப்கின்கள்...என்று எங்கே போவதானாலும் கை வீசிக்கொண்டே போகலாம். வியர்வையும் இல்லை..சோ..நான் கொண்டுபோன ஒரு டஜன் கைக்குட்டைகளையும் புத்தம்புதிதாக அப்படியே திருப்பிக்கொண்டு வந்துவிட்டேன்.
இந்த ஒரு காரணத்துக்காகவே அவ்வூர் எனக்கு பிடித்துப்போயிற்று.

Labels:


Thursday, November 15, 2007

 

செல்போனுக்கு ஐஸ் வை!!??PUT AN 'ICE' CONTACT IN YOUR CELL PHONE IN CASE OF EMERGENCY

ஏவ்வளவு முக்கியமான, அவசியமான அறிவிப்பு இது. ஏதேனும் ஆபத்து அல்லது விபத்து சமயங்களில் பாதிக்கப்பட்டவர் சுயநினைவு இல்லாமலிருந்தால் அருகிலிருப்போர் இந்த ICE CONTACT மூலம் உறவினர்களுக்கு தகவல் அனுப்ப மிகவும் உதவியாயிருக்கும். அதற்குத்தான் செல்போன் வைத்திருப்போர் தங்கள் போனில் ICE..in-case of-emergency என்று யாருக்கு தகவல் அனுப்பணுமோ அவர்கள் எண்களை அதில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

இப்படித்தான் எங்கள் நெருங்கிய உறவினர் பிரயாணத்தின் போது திடீரென மயக்கமாகி விட்டார்.அதற்கு சில வினாடிகள் முன் யாருக்கோ பேசியிருக்கிறார்.உடனிருந்தவர்கள் அவரது செல்போனில் லாஸ்ட் கால் நம்பரைப்பிடித்து தகவல் சொல்லியிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அது அவரது மகனின் எண் தான். உடனேயே அடுத்த ஸ்டேஷனில் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்தான்.
இப்போது நலமாக இருக்கிறார்.

இந்த ஐஸின் அருமை அப்போதுதான் புரிந்தது. எத்தனை பேர் செல்போனில் இந்த ICE CONTACT
உள்ளது? தேவையில்லாத SMS, PHOTOS களைத்தான் ஸ்டோர் பண்ணத்தெரியும். எந்த விஞ்ஞான
கண்டுபிடிப்பிலும் நல்லதும் கெட்டதும் உள்ளது. ஆனால் நம் கண்களில் பளிச்செனத்தெரிவது கெட்டவைகள்தாம். இது போன்ற நல்ல தகவல்களை நாமும் இப்படி கண்ணில் படும்படி விளம்பரம் செய்யலாமே!!

இது நான் சிகாகோ நகர்வலம் வந்தபோது கண்ணில் பட்டதும் க்ளிக்கினேன்.
படத்தின் மேல் க்ளிக்கினால் பெரிதாகத்தெரியும்.

Labels:


Wednesday, November 14, 2007

 

சாச்சா நேருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஆச்சா?


ரோஜாவின் ராஜாவாகிய, நாம் அன்போடு அழைக்கும் நேரு மாமாவின் பிறந்த தினமான இன்று
அவர் வாழ்த்துக்களோடு அனுப்பிய ரோஜாக்களை 'குட்டீஸ் கார்னர்' சுட்டீஸ்களுக்கும் மற்றும் வலையுலக குட்டீஸ்களுக்கும் சாச்சா நேருவின் சார்பாக வழங்குகிறேன்.

பவன் குட்டி,அபிக்குட்டி, நிலா,பொடியன் இன்னும் எனக்கு அறிமுகமாகாத வலைக் குட்டீஸ்!!!!
என் வீட்டு சுட்டிகளான...ஷன்னு,விக்ரம்,சங்கர்,ஷன்னு,சம்மி,ராஜா,ஷில்பா,ஷ்ரேயா,ஷிவானி,ஸ்ரீநிதி!!!
எல்லோரும் ஓடி வந்து ரோஜாப்பூக்களை அள்ளிச்செல்லுங்கள்!!!!!!!!!!

என்ன?என்ன? மிட்டாயா? என்வீட்டுக்கு துள்ளிவந்து மிட்டாய்களையும் அள்ளிச்செல்லுங்கள்!!!
சரிதானே? குட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]