Saturday, July 16, 2016

 

வாசல் திறந்தது


9-west.blogspot  இன்று முதல் திறக்கிறது. எவ்வளவு நாளாய் அடைபட்டுக் கிடந்த வாசல் இன்று திறக்கிறது.  சிலு சிலு அரசமரக் காற்று உள்ளே வீசுகிறது. மனசுக்குள்  அக்காற்று புகுந்து சிலிர்க்க வைக்கிறது. நினைவுகள் எங்கெங்கோ பறக்கிறது.
பதிவுலக அன்பர்களை அன்போடு வரவேற்கிறேன்.
இது வரை பூட்டியிருந்த வாசல்


இப்போது திறந்தது
ஆஹா...நிலை வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாயிற்று.


வீட்டுக்குக்குள் சென்றதும் என் முதல் வேலை பூஜை அறையின் ஸ்லைடிங் டோரைத் திறந்து அங்கு வீற்றிருந்து ஆட்சி செய்யும் அம்பாள் ஶ்ரீராஜராஜேஸ்வரியை வணங்கி ஆசி பெறுவதுதான்.

மனசு நிறைவாக அப்பா அமர்ந்து கோலோச்சிய நாற்காலியில் வந்தமர்ந்தாயிற்று
உடன் அண்ணன் வடிவேல் முருகன் அமர வந்த போது ,பெரியவருக்கு மரியாதை நிமித்தம் எழுந்து அப்பாவின் ஆசனத்தை தந்தும் ஆயிற்று.
அதில் அமர்ந்து கொண்டு பழைய கதைகளையெல்லாம் அசை போட்டோம்.
அப்பா இருக்கும் வரை இந்த நாற்காலியில் அவருக்கு சமமாக நாங்கள் யாரும் அமர்ந்த்தேயில்லை. காரணம் மூத்தோர் காட்டிய வழி.
பின்னால் தங்கை கோமாதான்..அதென்ன? அப்பாதானே என்று அப்பாவோடு அமர்ந்து உரையாடி பழைய சம்பிரதாயத்தை உடைத்தாள்.  அப்பாவுக்கும் அது மனதுக்கு இதமாக இருந்திருக்கும் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
மரியாதை கொடுத்து எல்லோரு நம்மை ஒதுக்கிறார்களே என்று அவ்ர் மனது ஆதங்கப் ப்ட்டிருக்கும். 
.

   
காலையில் எழுந்ததும் ப்ரஷில் பேஸ்டை பிதுக்கிக் கொண்டு நான் வரும் இடம் இதுதான். அருவியாய் கொட்டும் இந்த குழாயைத் திருப்பிக்கொண்டு, தண்ணீர் சத்தத்தின் ஓசையை இசையாக காதில் வாங்கிக் கொண்டு பற்களை சுத்தம் செய்வேன். தண்ணீர் வெகு தாராளமாக கிடைத்த காலத்தில் நீர் சேமிப்பு பற்றி அறிந்திருக்கவில்லை, அதுக்கான அவசியமும் வயதும் இல்லை. 


இரவானதும் எங்க வீட்டு வேலையாள் வேலாயுதம் எனக்கான படுக்கையை விரித்து வைத்திருக்கும் இடம் இதுதான்.இந்த பட்டாலையில்தான் அப்பா, செம்பா, நான் கோமா நால்வரும் உறங்குவோம்
அன்று
மதியம் நானும் முருகனும் சித்தப்பா வீட்டுக்கு போகும் போது எதிர் திண்ணையில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். யாரோ என் நான் கவனிக்க வில்லை. வரும்போது முருகன், அந்த முதியவர் யாரெனத் திரிகிறதா/ எனக்கேட்டார். தெரியலையே என்றேன். அவர்தான் நம் வேலாயுதம்! என்றார்.
அடடா! முதலிலேயே ஏன் சொல்லவில்லை..அப்போதே பார்த்திருக்கலாமே! என்று உடனே திரும்பி அவரிடம் சென்றோம்,'வேலாயுதம்!என்னைத்தெரிகிறதா? ' தெரியுதம்மா! கல்யாணியம்மாதானே!' என்றதும் எனக்கு சந்தோஷமாயிருந்தது. இருவருக்குமே காலம் கோலத்தை மாற்றியிருந்தது. 'முருகமொதலாளியை அடிக்கடி பார்ப்பேன். உங்களை இப்பதான் பார்க்கிறேன்.நல்லயிருக்கேளாம்மா?'
நீ எப்படியிருக்கிறாய்? நல்லயிருக்கேம்மா..இரு குறையுமில்லை பிள்ளைகள் நல்ல பாத்துக்கிறாங்க. பொழுது போக இப்படி திண்ணையி உக்காந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். என்றான்(ர்). இது பெரிய கொடுப்பினையல்லவா என்று சிலாகித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
  
இத்தனைக்கும் காரணமான நிகழ்வு அன்பு மணிஅண்ணனின் பத்தாம்நாள் காரியங்கள் எல்லாம் நடை பெற்ற அனறு.
இனி அப்பெரிய வீட்டில் அண்ணி தனியே இருக்க முடியாதென்பதால் , மருமகளோடு சென்னைக்கு செல்வதென்று முடிவாகியது.
மனசுக்குள் பெரும்பாரம் அடைத்தது,  தூங்கா நகரம் என்பது போல் ,அடையாத கதவாக இருந்த  வீடு இனி பூட்டியேயிருக்கும் என்பதை நினைத்தபோது.
ஆகவேதான் நினைவுப் பெட்டகத்துள் பூட்டி வைக்க இடம் இடமாக நின்று படமெடுத்துக் கொண்டேன். சில படங்கள் மட்டும் பதிவுக்கு மற்றவை என்  மனப் பதிவுக்கு.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]