Monday, May 23, 2011

ஆச்சியின் நினைவுகள் பின்...பின்னோக்கி பாகம் இரண்டு

நாச்சியார் ஆச்சியின் திருமணத்துக்குப் பிறகு ஓர் ஆண் குழந்தைக்குத் தாயான பின், தாத்தா இருவரையும் தன் பெற்றோர் பொறுப்பில் விட்டுவிட்டு வியாபாரம் செய்ய சிலோனுக்கு கிளம்பிப் போனார்.

இப்போது பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்குப் போவது போல் அப்போது அதே பிழைப்புக்காக சிலோனுக்குப் போவார்கள். இதனால் அந்நாடும் இங்குள்ள குடும்பங்களும் செழித்தன.

கொழும்புக்குச் சென்ற தாத்தாவிடமிருந்து வாரா வாரம்ஆச்சிக்கு கடுதாசி வரும். ஆச்சியின் மாமனார் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அதை பரண் மேல் சொருகி வைத்து விட்டு தன் மனைவியைக் கூப்பிட்டு, 'கடுதாசி வந்திருக்கு. அவளைப் படித்துப் பாத்துக்கச் சொல்' என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பிவிடுவாராம்.

மருமகளுக்கு வந்த கடிதத்தை, அதுவும் அவள் கணவனிடமிருந்து வந்த கடிதத்தைப் படிப்பது அநாகரிகம் என்றெல்லாம் அப்போது கவலைப் படுவதில்லை. காரணம் பெண்களுக்கு அநேகமாக படிப்பறிவு இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம்.

அதுவும் போக தாத்தாவுக்கும், 'மானே! தேனே! பொன்மானே!' என்றெல்லாம் காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதவும் தெரியாத காலம் என்றும் சொல்ல முடியாது. இதுக்கு காலமெல்லாம் தேவையில்லை..சங்க இலக்கியங்களில் எழுதாத காதல் கடிதங்களா, தூதா என்ன. ஆனாலும் தன் வீட்டு நிலவரம் தெரிந்த காலம் என்று சொல்லலாம்.

அதனால் ஜஸ்ட் மேட்டர் மட்டும்தான்!!

பல முறை ஆச்சியின் மாமியார் அத்தகவலை....பரண் மேல் கடுதாசியிருக்கும் தகவலை சொல்லவே மாட்டாராம். தனக்கு படிக்கத்தெரியவில்லயே என்ற கடுப்பாயிருக்கும்.
இவராகவே பரணிலிருக்கும் கடிதத்தை எடுத்து படித்துப் பார்த்துக் கொள்வாரம்.

ஆச்சி......அந்தக் காலத்து மூணாங்கிளாஸாக்கும்...!!!!

ஒரு முறை, ஒரு மாதமாகியும் சிலோனிலிருந்து கடிதமே வரவில்லை. தவித்துப் போன ஆச்சி , என்னவோ ஏதோ என்று, ஒருவருக்கும் தெரியாமல், கட்டிய கணவனுக்கு, என்னாச்சு? என்று (வி)சாரித்துவிட்டு தன்னையும் குழந்தையையும் அழைத்துப் போகுமாறு கடிதம் எழுதி போஸ்டும் பண்ணிவிட்டார்!

மறுவாரம் சிலோனிலிருந்து பதில் கடிதம் வந்தது. தனக்கு டைபாயிட் காய்ச்சல் வந்ததையும் அதனால்தான் கடிதமே எழுதவில்லை என்றும் அடுத்த வாரம் வந்து உன்னையும்
குழந்தையையும் அழைத்துப் போகிறேன், தயாராய் இரு என்று அதன் சாராம்சம் இருந்தது.

வழக்கம் போல் மாமனார் அதைப் படித்துவிட்டு பரணில் சொருகாமல், நாச்சியாரை அழைத்து, 'நீ அவனுக்கு கடுதாசி எழுதினாயா? ஏன் சொல்லவில்லை?' இது என்ன அனா.பினா.தனம் என்பது போல் கேட்டிருக்கிறார்.

அதுக்கு மாமியார் என்ன சொன்னார் தெரியுமா?

"இதுக்குத்தான் ஆனா ஆவன்னா தெரியாத பொண்ணை கட்டி வெச்சுருக்கணும்ங்றது!" என்று தம் கடுப்பைக் காட்டிக் கொண்டாராம்.

இது ஒரு வகையான மாமியார் கடுமை என்று சொல்லலாமா?
மோவாய்கட்டையில் இடித்துக் கொண்டு சொல்லும் விதம் அக்கால பி.ஸ். ஞானம், சுந்தரிபாய், பி.எஸ். சரஸ்வதி முதலியோரை நினைவுபடுத்துகிறதல்லவா?

மூணாங்கிளாஸுக்கே இந்த வரத்து என்றால்...?

குழந்தையை தங்களிடம் விட்டு விட்டு அவளை மட்டும் கூட்டிச் செல் என்ற உத்தரவையும் மீறி நாச்சியார் ஆச்சி தன் குழந்தை தன்னிடம்தான் இருக்க வேண்டும் என்று கைக்குழந்தையோடு பிடிவாதமாக கணவனோடு சிலோனுக்கு மிதந்தார்.......கப்பலில்.

இன்னும்..

15 comments:

said...

//அதனால் ஜஸ்ட் மேட்டர் மட்டும்தான்!!//

ஆஹா.............:-)))))))))))))))

said...

பிளாகிலே நீங்க ஆச்சியைப் பிடிச்சுட்டீங்க

said...

அவ மூணாங்ளாஸ் ஃபெயிலு
நான் ஒண்ணங்ளாஸ் பாஸுன்னு இருந்த காலமா

said...

துள்சி,

என்ன? ஆஹா..! எவ்வளவு நாசுக்காக வாழ்ந்த காலம் பாருங்கள்!!!

said...

கோமா,
இல்லையில்லை.....ப்ளாக்குக்காகவேஆச்சியை பிடிச்சேன்!!!

said...

கோமா,
அதே...அதே!!!

said...

அட, கதை ஜோராப் போவுதே!! (சில) மாமியார்கள் மாறவேயில்லைபோல - அப்போ அனா, ஆவன்னா; இப்போ “நாலு காசு (சம்பாதிக்கிற திமிர்)!!”

said...

ஹூஸைன்னம்மா,

எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்? நலமா?

எத்தனை காலம்தான் மாறினாலும்,”ஆனா ஆவன்னாவும், சம்பாதிக்கிற திமிரும் மாறாதுதான் போல.
நல்லா சொன்னீங்க.

said...

ஆச்சி தைரியசாலிதான்.

//கணவனோடு சிலோனுக்கு மிதந்தார்.......கப்பலில்.//

பயணம் தொடரட்டும்:)!

said...

ராமலக்ஷ்மி,

சொல்லாத வார்த்தைகளுக்கு பலம் அதிகம். சொல்லாமல் உறுதியோடு முறையாக செய்த செயலுக்கும் பலம் அதிகம்தான். அவ்வகையில் ஆச்சி தைரியசாலிதான்.
இம்மாதிரி ஆச்சிகள்தான் அக்காலத்தில் கௌரவம் குறையாமல் கட்டிக்காத்து, குடும்பத்தை முன்னேற்றியிருக்கிறார்கள். தாத்தாக்கள்...? வெறும் சம்பாதிக்கும் எந்திரங்களே!!!

said...

என் ஆச்சி அந்த காலத்துலயே புதுமை பெண். Today she is wisdom incarnate. இந்த புதுமை பெண்ணின் பேத்தியாக இருக்க நான் ரொம்ப பெருமை படுகிறேன். Nicely worded and aptly scripted. Good work Periamma !

said...

விஜி,
உனக்குத்தான் நன்றி சொல்லணும்.
இப்பதிவுகளுக்கு காரணமே நீதானே!

said...

ம்ம்ம்ம் படித்தேன்; என்ன சொல்றதுனு தெரியலை. ஆனால் அந்தக் காலங்களிலேயே நாசூக்கான மாமியார், மாமனார்களும் இருந்திருக்கின்றனர். பொதுவாகவே இது அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது. நான் என் மாமியாரிடம் கஷ்டப் பட்டேன்; அதனால் என் மருமகளைக் கஷ்டப் படுத்துவேன் என நினைக்காமல் என் கஷ்டம் பிறருக்கு வேண்டாம்னு நினைக்கலாம் இல்லையா??? உங்க ஆச்சி இரண்டாம் ரகமாய் இருந்திருப்பாங்கனு நினைக்கிறேன். அதான் பேசாமலே ஜெயிச்சுக் காட்டி இருக்காங்க.

said...

வாங்க கீதாம்மா...வாங்க. கயிறு கட்டி இழுத்தால்தான வருவீங்க போல. மிக்க நன்றி.
மாமியார்கள் அம்மாக்களாக மாறும் வரை இதெல்லாம் சகஜமம்மா....!

said...

.வாங்க. கயிறு கட்டி இழுத்தால்தான வருவீங்க போல.//

அதெல்லாம் இல்லை நானானி, மதியம் தான் நேரம் கிடைக்கும். அப்போ பதிவு எழுதுவதும், போடுவதும், பதில் கொடுப்பதுமே சரியாயிடுது. சில பதிவுகளைப் படித்தாலும் பின்னூட்டம் கொடுக்கிறதில்லை. எல்லாருமே நான் வரதில்லைனு சொல்றாங்க தான்! சாயந்திரம் அவசரம் அவசரமாச் சில குழும மடல்களைப்பார்ப்பேன். மின்சாரம் போயிடும். :)))))))))