Monday, May 16, 2011

இது என்ன ’சரிவா?’


மேலே உள்ள படத்தில் இருப்பது என் அப்பா வழி ஆச்சி, பொன்னம்மாள். இந்த ஆச்சியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.......பின்ன..? எட்டாவதா பொறந்துட்டு அப்பா ஆச்சியை பாக்கணும் அம்மா ஆச்சியைப் பாக்கணுமின்னா முடியுமா? இருந்தாலும் அடிமனதின் ஆஆஆழத்தில், ஒரு ஆச்சியையும் பாக்கலையே...பேசலையே...பழகலையே...கதை கேக்கலையே என்ற ஆதங்கம் இருந்து கொண்டேயிருந்தது.

அந்தக் குறை சமீபத்தில் தூதூதூரத்து சொந்தத்தில் ஓர் ஆச்சி மூலம் நிறைவேறியது. பார்த்தேன், பேசினேன், பழகினேன், கதை கேட்டேன். கதையின்னா கதை...ஒங்கவீட்டு எங்கவீட்டு கதையில்லை. ரொம்ப சுவாரஸ்யமான சந்திப்பு.

அண்ணன் மருமகளோடு பேசிக் கொண்டிருக்கையில், ‘பெரியம்மா! ஆச்சி வீட்டுக்கு ஒரு நாள் போயிருந்த போது, என் கையில் அணிந்திருந்த ப்ரேஸ்லெட் மாதிரியான வளையலைப் பார்த்துதுட்டு, “இது என்ன சரிவா?” என்று கேட்டார்கள். ஒண்ணும் புரியவில்லை எனக்கு. விவரம் கேட்ட போது கற்கால....அக்கால அணிகலன்களில் வளையலுக்குப் பேர் ‘சரிவு’ என்றார். எனக்கு ஒரே சிரிப்பு!’ என்றாள்.

சிரிப்பு வரவில்லை எனக்கு. ஆஹா....! ஆசைப்பட்ட பாட்டி...அதுவும் பழங்கதை சொல்லும் பாட்டி. எவ்வளவு விவரங்கள் கொட்டிக் கிடக்கும்!!! தகவல் களஞ்சியமல்லோ?
சும்மா விடலாமா?

’ உன் ஆச்சியை சந்திக்க விரும்புகிறேன். எனக்கு ஓர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடு.’ அதாவது தொண்ணூறுகளில் நல்ல நினைவாற்றலோடு....அதுவும் தன் குழந்தைப்பருவ காலம் தொட்டு திருமண பருவம் வரை ரசனையோடு சொல்லும் பாட்டி!!

‘பெரியம்மா! அப்பாயிண்ட்மெண்டெல்லாம் வேண்டாம். ஒரு நாள் நாம் போகலாம்.’
அப்பாயிண்ட்மெண்ட் என்று நான் சொன்னது....ஓய்வாயிருக்கும் போது. ஆச்சிக்கு யாராவது பேசக்கிடைத்தால் போதும்.

போச்சுடா! பெரிசு அறுக்க ஆரம்பிடுச்சு, என்றில்லாமல் என்னை இழுக்க ஆரம்பிடுச்சு, அவர் சொன்ன சின்ன தகவல், ‘இது சரிவா?’ மனம் சரிய ஆரம்பிடுச்சு!!!

"சிரமதில் திகழ்வது சீவகசிந்தாமணி
செவிதனில் மிளிர்வது குண்டலகேசி
திருவே நின் இடையணி மணிமேகலையாம்
கரமதில் மின்னுவது வளையாபதியாம்
கால் தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்”

என்று தமிழ் இலக்கியத்தால் தமிழன்னை மேனியெங்கும் அணிகலன் பூட்டி அழகு பார்த்தது தமிழ்நாடு. அத்தமிழ்நாட்டுப் பெண்டீர் பழங்காலத்தில் தாம் அணிந்து மகிழ்ந்த அணிகலன்கள் பேரெல்லாம் வழக்கொழிந்து போயின. இம்மாதிரி ஆச்சிகளால் மீண்டும் உயிர் பெற்று நாமெல்லாம் அறியக் கிடைத்தன....ஒரு மணி நேர சுவாரஸ்யமான கலந்துரையாடல் மூலம்.

ஆச்சியின் மருமகளும் அழகாக அவ்வப்போது,’ அத்தே! அதுக்கு ஏதோ சொல்வீங்களே?...அத்தே! இதை மறந்துட்டீங்களே!’ என்று அடியெடுத்துக் கொடுத்தார்..மாடிப்படி மாது,’நாயர் வாட்சை விட்டுட்டீங்களே!’ என்பது போல்.

ஆச்சியின் நகைப் பெட்டகத்தை திறந்து பார்த்தபோது, பெரும் புதையலே கிடைத்தது.

சரிவு என்றால் கையில் அணியும் வளையல். கையை மேலே தூக்கினால் முழங்கையை நோக்கி சரியும், கீழே இறக்கினால் மணிக்கட்டை நோக்கி சரிவதால் அந்தப் பேரோ?

வெத்தலை கோர்வை - வெற்றிலை போல் தங்கத்தில் செய்து கோத்த காசு மாலை போன்றது

சுத்துரு - தாலி.

அலங்கார தாயத்து கொடி இடுப்பில் அணிவது.

பாதசரம் - தண்டை கணுக்காலில் அணிவது

பீலி - மெட்டி. கால் விரல்கள் ஐந்திலும் அணிவார்களாம்.

பாம்படம், முடிச்சு, தண்டட்டி, பூடி, பிச்சர்கல், சர்பைப்பூ இவை அனைத்தும் காதுகளிலும் காது மடல்களிலும் அணியும் அணிகலன்கள்.

வங்கி, நாகொத்து(வங்கியின் முகப்பில் நாகம் இருக்கும்), பாட்லா இவை முழங்கைக்கு மேல் அணிபவை.


புறாக்கூண்டு அட்டியல்...புறாக்கூண்டு போல், பின்னிய கழுத்தணி. அதாவது நெக்லேஸ்.

வகுப்பு சுட்டி, நெத்திச்சுட்டி, நிலா பிறை இவை இக்கால மணப்பெண் அணியும் தலை அணிகலன்கள்.

கண்டசரம், கெச்சப்பரம் நீண்ட சடை பின்னலின் அழகுக்கு அழகு சேர்ப்பவை.

சவடி, இது ஐந்து சரம் சங்கிலி.

ஆஹா..!இவற்றையெல்லாம் கேட்கையில் நகை ஆசை இல்லாத எனக்கே அவற்றையெல்லாம் பார்க்கவேண்டும், அணிந்தும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுகிறதே!
மேலே உள்ள படத்திலுள்ள ஆச்சி இவற்றையெல்லாம் அணிந்துள்ளார்கள் போலிருக்கிறதே!!

தங்கத்தை தவிர வேறு சேமிப்பு இல்லாத அக்காலத்தில் அத்தனை நகைகளையும் கட்டித்தங்கத்தில் செய்திருப்பார்களாம். அக்கால மகளிர், வீட்டு பெரியவர்கள் ஆசைக்கிணங்க அத்தனை நகைகளையும் அணிந்திருப்பார்களாம்(மூக்கால் அழுதுகொண்டே). அதற்கெல்லாம் நல்ல திமுசு கட்டை போன்ற உடலமைப்பு வேண்டும்.

இக்கால மெல்லிடையார்களை அத்தனையையும் அணியச்சொன்னால்....அணிந்த பின் ’பொத்’தென்று சரிந்து விடுவார்கள்!!!!

ஓஹோ...! இதுதான் சரிவா?


பி.கு.
இன்னும் வேறு தகவல் அடுத்த பதிவில்.

32 comments:

said...

அன்பின் நானானி - பழங்கதைகள் சொல்ல வேண்டிய வயதில் கேட்க் ஆசை வந்ததா - நன்று நன்று - இன்னும் இருக்கும் அக்கால ஆச்சிகளிடம் கேட்க நிறைய இருக்கிறது. நமக்குத்தான் நேரம் இல்லை. சில நாட்கள முன்னர்தான் எங்கள் உறவில் நூற்றி ஒன்றாவது பிறந்த நாளை பிள்ளையார்பட்டியில் கொண்டாடிய ஆச்சியைக் கண்டு மகிழ்ந்தோம். ஐம்புலன்களும் அழகாக வேலை செய்ய, ஐந்து தலைமுறையில் வந்தவர்களூம் கூடி இருக்க - அக்காட்சி கண் கொள்ளாக் காட்சி. ஆக்காலத்தில் ஆவணப்படுத்தும் பழக்கம் இல்லையோ ( இப்பொழ்து இருக்கிறதா? ) ஒரு முன்னோரின் நாட்குறிப்பில் மூதறிஞர் ராஜாஜி அவர் வீட்டிற்கு வந்த போது எடுத்த படங்களும் - பேசிய பேச்சுகளும் - செய்திகளும் - அடடா - ஆவணப்படுத்தி இருப்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனால் இன்று அதனை படிப்பார் இல்லை. அதில் இருந்து தான் ஆச்சாரியார் ஸ்திரப்பிரக்ஞன் என்ற சொல்லுக்குப் பொருள் கூறியதைப் படித்தேன். அருமை அருமை. நட்புடன் சீனா

said...

//"சிரமதில் திகழ்வது சீவகசிந்தாமணி
செவிதனில் மிளிர்வது குண்டலகேசி
திருவே நின் இடையணி மணிமேகலையாம்
கரமதில் மின்னுவது வளையாபதியாம்
கால் தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்//

அருமை.

said...

சீனா,
நாம் நம் பிள்ளைகளுக்கு, பேரப் பிள்ளைகளுக்கு பழங்கதை சொல்லலாம். நமக்கு ஆரு சொல்வாக? அதா. நீங் ஏன் செஞ்சுரி அடித்த அம்மூதாட்டியை பேட்டி எடுத்து எங்களுக்கெல்லாம் தரக்கூடாது? ம்?

said...

ராமலக்ஷ்மி.....
இதுக்குத்தான் பழைய தமிழ் சினிமா பாடல்களெல்லாம் தெரிஞ்சுகணும்றது!!

said...

ஆஹா..... ஆச்சியின் நகைப்பெட்டியப் பார்க்க எனக்கொரு அப்பாய்ண்ட்மெண்ட் ப்ளீஸ்.......


எனக்குப் பழங்கால நகைன்னா ஒரே பித்து!

said...

A beautiful tribute to My Aachi! :) So many times have I wished to enshrine my Aachi's experiences in writing. This blog has indirectly fulfilled that wish. Thank you Periamma. Hats off to you. Will be eagerly looking forward to reading more.

said...

விஜி,
உனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படி ஒரு தகவல் பெட்டகத்தை திறந்து பார்க்க வழி செய்ததற்கு.

said...

போச்சுடா! பெரிசு அறுக்க ஆரம்பிடுச்சு, என்றில்லாமல் என்னை இழுக்க ஆரம்பிடுச்சு,

பெரிசே பெரிசுகிட்டே கதை கேக்குதே...

வலைப்பூவில் நல்லதொரு நகைப்பூ....

said...

அன்பின் நானானி - முயல்கிறேன் - ஆவணப்படுத்த முயல்கிறேன். ஆலோசனைக்கு நன்றி - நட்புடன் சீனா

said...

துள்சி,

நகை ஆசை இல்லாத எனக்கே அப்படின்னா.....நகைப் பித்துக்கு?
சர்ர்ர்தான்.

said...

கோமா,
//வலைப்பூவில் நல்லதொரு நகைப்பூ....//

அல்ல...அல்ல...மற்றொரு பெருசே!
அறுபது வயது சின்னப் பெருசு....தொண்ணூறு வயது பெரும் பெருசிடம் ஆசை ஆசையாய்
இருபது வயது சிறுமியாய் கேட்ட கதையாக்கும்!!உக்கும்!

said...

அன்பு சீனா,
நீங்களும் இன்னொரு பெரிசாக நூற்றாண்டு தாண்டிய மா..பெரும் பெருசின் நினைவுகளை ஆவணப்படுத்துங்கள். சேரியா?

said...

துள்சி,
எனக்கு அந்த 'புறாக்கூண்டு அட்டியல்'
பாக்க ஆசை.

said...

கேக்கும்போதே ப்ரமிப்பா இருக்கு புறாக் கூண்டு!

என்னிடம் ஒரு காஞ்சிக்கா மாலை இருக்கு!

said...

துள்சி,

அழகான பின்னல் வேலைப்பாடு இருக்குமென்று நினைக்கிறேன்.

இப்ப வரும் நகைகளெல்லாம் பயங்கர பின்னல் வேலைகள் கொண்டது. அதோடு லையிட்வெயிட்.

எங்கம்மாவோட காசுமாலை..அறுபத்துநாலு அரைப்பவுன் காசு கோத்தது.
இப்ப எங்கே என்று கேக்காதீர்கள்.

said...

மற்றொரு பெருசே!
நானானி
திருத்திக்கொள்ளுங்கள் .நான்,எங்கள் வீட்டு ’மினிபெருசு’

said...

கோமா,
ஆயாச்சு...பெருசு! இதில் மினி என்ன, மிடி என்ன, மாக்ஸி தான் என்ன....?

பெரிசு பெரிசுதான்!!!!

said...

கோமா அக்கா - நீங்க என்ன விட பெரியவங்க இல்லையா - பெருசு தான் - சேரியா

said...

வாங்க சீனா,

அப்படி போடுங்க!!!

said...

அருமையாய் எழிலாய் பழ்மை பேசி பதிவு தந்த தங்களுக்குப் பாராட்டுக்கள்.

said...

எங்கம்மாவோட காசுமாலை..அறுபத்துநாலு அரைப்பவுன் காசு கோத்தது.
இப்ப எங்கே என்று கேக்காதீர்கள்.

என்று சொன்னதிலேயே தெரிந்துவிட்டது அதன் நிலைமை.
ஆசையாய் வாங்கிய நகைகள் என்ன ஆகும் ,வாரிசுகளை என்ன பாடு படுத்தும் என்பதை உணர்த்தவாவது அதைபற்றி சொல்லுங்களேன்

said...

பீலி,பாம்படம்,தண்டட்டி,கடுக்கன் எங்கள் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். மற்றவை எல்லாம் புதிது.

பின்னலுக்கு குத்துவது திருகுப்பூ என்பார்கள்.

said...

இந்த பெரிசு பட்டம் மட்டும் அடுத்தவங்களுக்குத் தரணும்னா எல்லோருக்கும் ஒரு சந்தோஷம்தான்.....

அனைத்து சிறிசுகளுக்கும் என் ஆசீர்வாதம்

said...

தோடா சீனா தானா பானா கூட சேர்ந்துட்டு என்னை கலய்ய்க்றதுன்னா நானானிக்கு என்ன சந்தோஷம்!!!!....இருக்கட்டும் இருக்கட்டும்
சந்தோஷமா இருந்தா சரி

said...

துள்சி,

// ஆச்சியின் நகைப்பெட்டியப் பார்க்க எனக்கொரு அப்பாய்ண்ட்மெண்ட் //
என்று கேட்டிருக்கிறீர்கள்.

//ஆச்சியின் நகைப் பெட்டகத்தை திறந்து பார்த்தபோது,// என்று நான் சொன்னது...ஆச்சியின் ஆழ்மனதில் பாங்க்லாக்கர் போல் பூட்டி வைத்திருந்த நகைப் பெட்டகத்தைத்தான் அப்படி சொன்னேன். அவர் சொன்ன நகை வரிசைகளெல்லாம், பொலபொலவென கண் முன் விரிந்தன!!!
நீங்களும் என்னைப் போலவே மனக்கண்ணால் பார்த்து ரசியுங்கள்..சேரியா?

said...

கோமா,
காசுமாலை இப்போது எல்லோரிடமுமிருக்கிறது.சேரியா?

said...

மாதேவி,
திருகு பூ, பின்புறம் ஸ்பிரிங்க் போன்ற அமைப்பை சடை பின்னலின் மேல் ஸ்க்ரூ செய்வது போல் திருகுவார்கள்.

said...

கோமா,
பெரிசு பட்டம் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். என்ன...கொஞ்சம் அறுக்காத பெரிசாயிருக்கோணும்.

said...

கோமா,
ஒருவர் மனம் நோகாத கலாய்ப்பால் இருவருக்கும் சந்தோஷம்தானே?

said...

கோமா,
// சிறிசுகளுக்கும் என் ஆசீர்வாதம்//
’பெரிசு’ ஆவதால் கிடைக்கும் பாக்கியம் ஈதல்லவா?

said...

கால்ல போடற நிறைய சலங்கை வெச்ச கொலுசையும் கச்சப்புரம்ன்னுதானே சொல்லுவாங்க ?.. சரியான்னு தெளிவுபடுத்துங்க நானானிம்மா..

நகைப்பட்டியலும் விவரமும்.. யப்பா!! இதுல திருகுப்பூவையும்,தலை நாகரையும் தரிசிக்கும் பாக்கியம் சின்னவயசுல கிடைச்சது :-)))

said...

அமைதிச்சாரல்,
நகைப் பட்டியல் பத்தி கேட்டே இவ்வளவு பிரமிப்பு!!இன்னும் நேரில் பார்த்தால்...? ஹப்பா!!!!