Friday, January 16, 2009

கடை எட்டாவது வள்ளல்....ஒருமறுபதிவு


சங்க காலத்தில் கடையேழு வள்ளல்கள் இருந்ததாக தமிழ் வரலாறு கூறுகிறது.
இந்த கலிகாலத்திலும் அப்படி வாரிவாரி வழங்கிய வள்ளல்தான்...புரட்சித்தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப் படும் 'மக்கள்திலகம் எம்ஜியார்!'

மக்கள்திலகம் என்ற பேருக்கேற்ப இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். அரசியலில் அவர் பெயரை ஆதாயத்துக்காக பயன் படுத்துவோர் ஒரு புறமிருக்க, எந்தவித எதிர்பார்ப்புமின்றி அவர் பெயரைச் சொன்னாலே பொங்கி, பூரித்து, மெய்சிலிர்த்து நிற்க ஒரு மாபெரும் கூட்டமே இருக்கு. இதைத்தான் அரசியல்வாதிகள் வோட்டுவங்கி என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் நைச்சியமாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

இவ்வகையான ஏமாற்று வித்தைகளையெல்லாம் சட்டை செய்யாமல் இன்றும்...அவர் மறைந்து 20ஆண்டுகள் கழிந்தபின்னும் அவரது பிறந்தநாள், நினைவுநாட்களில் சொந்த செலவில் ஷாமியானா கட்டி மேஜை போட்டு அவர் படம் வைத்து மாலைபோட்டு காலையிலிருந்து மாலைவரை அவரது படப் பாடல்களை ஒலிபரப்பி அஞ்சலி செலுத்தும் பாமரமக்கள்தான் எம்ஜியார் சேர்த்து வைத்த மாபெரும் சொத்து!!

அவரது தனிப்பட்ட குணங்கள் எப்படியிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு மேலேறி நிற்பது அவரது வள்ளல் குணம்தான்.

அரசு ஊழியர்களிடம் அவர் காட்டிய பரிவு,பாசம் பற்றி பொதுப்பணித்துறையிலிருந்து ஓய்வு பெற்ற எங்க வீட்டு ரங்கமணி அடிக்கடி நினைவு கூர்வார். அப்படி அவர் கூறிய இரண்டு சம்பவங்கள் உங்களுக்காக.

தலைநகரில் தமிழ்நாடு இல்லத்தில் பொறுப்பிலிருந்த பொறியாளர் எம்ஜியார் அங்கு வந்த போது அவருக்கான அறையில் சகல ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து முடித்திருந்தார்.
அதில் மகிழ்ந்து போனவர் தன் பாதுகாவலரை விட்டு பொறியாளரை அழைத்து வரச்சொன்னார்.

அவர் வந்ததும் அவரைப்பாராட்டி தன் பாக்கெட்டில் கைவிட்டு வந்த பணத்தை பொறியாளரிடம் நீட்டினார். அதிர்ந்து போனவர் செய்வதறியாமல் திகைத்தார்!! முதலமைச்சரிடமிருந்தே பணம் வாங்குவதா? அதுவும் ஓர் அரசு ஊழியர்!

அவரது தயக்கத்தைப் பார்த்த பாதுகாவலர் வாங்கிக்கொள்ளும்படி சைகை காட்டினார். காரணம் அப்போது அவர் முதலமைச்சரில்லை...மக்கள்திலகம் எம்ஜியார்!!!

பின்னொரு சமயம் வெளியூருக்கு காரில் செல்லும் போது திடீரென்று அவருக்கு எங்காவது ஓய்வு எடுக்கவேண்டியிருந்தது. வழியில் பல்லடம் என்னும் ஊரிலுள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இன்ஸ்பெக்ஷன் பங்ளாவுக்குள்(IB)கார் நுழைந்தது. சிஎம் காரைக்கண்டதும் ஓடோடி வந்த உதவிப் பொறியாளர் சிஎம்க்கான அறை மற்றும் குளியலறைகளை தயார் செய்தார்.

எம்ஜியார் அறைக்குள் நழைந்ததும் நேரே பாத்ரூமுக்குத்தான் சென்றார். அங்கு ரெண்டு பெரிய பக்கெட்டுகள் நிறைய தண்ணீர் நிரப்பியிருந்தது. வெளியே வந்ததும் உதவிப்பொறியாளரைப் பார்த்து, 'குழாயில் ஏன் தண்ணீர் வரவில்லை?' என்று கேட்க அவர், 'மோட்டார் ரிப்பேர் சார்!' என்க, 'ஏன் ரிப்பேர் செய்யவில்லை?' என்று விடாமல் வினவ, 'கோவையிலிருந்து மெக்கானிக் வரவேண்டும்.' என்று உடம்பெல்லாம் பதற பதிலளித்தவர்...கடைசியாக அந்த ஹைவேஸ் என் ஜினியர் சொன்னதுதான் ஹைலைட், முதலமைச்சரிடமே, 'சார்! சார்! எங்க டி.இ.கிட்ட சொல்லிடாதீங்க சார்!'என்றார். எம்ஜியார் குபுக்கென்று சிரித்துவிட்டு அவரிடம் அவரது குடும்பம், பிள்ளைகள் படிப்பு எல்லாம் அக்கறையாக விசாரித்துவிட்டு, வழக்கம்போல் சட்டைப்பையிலிருந்து வந்த பணத்தையும் கொடுத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.

பொறியாளர் நெகிழ்ந்து நின்றார். வெளியில் வந்து காரில் ஏறப்போகும் போது திரும்பி பொறியாளரைப் பார்த்து குறும்பாக சிரித்துக்கொண்டே, 'அடுத்த முறை வரும் போது குழாயில் தண்ணீர் வர வேண்டும்! இல்லாவிட்டால் உங்க டி.இ. கிட்ட சொல்லிடுவேன்!!' என்றாரே பார்க்கலாம்!!

இப்போது இப்படி நடந்தால் அந்த பொறியாளர் எந்த தண்ணியில்லா காட்டுக்கோ? யாரறிவார் பராபரமே!
இந்த மனிதாபிமானம்தான் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெறக் காரண்மோ?

8 comments:

said...

//இந்த மனிதாபிமானம்தான் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெறக் காரண்மோ?//

அதே ! அதே !!!

//முதலமைச்சரிடமே, 'சார்! சார்! எங்க டி.இ.கிட்ட சொல்லிடாதீங்க சார்!'என்றார். எம்ஜியார் குபுக்கென்று சிரித்துவிட்டு //

:))) ஹையோ தாங்க முடியல .... சூப்பர் ..... கலக்கிப்புட்டாரு பொறியாளர் போங்க :)))


//இல்லாவிட்டால் உங்க டி.இ. கிட்ட சொல்லிடுவேன்!!' என்றாரே பார்க்கலாம்!!
//

செல்லும்போது எம்.ஜி.ஆரின் ஆன் த ஸ்பாட் நகைச்சுவையும் அருமை.

said...

முதல் பதிப்பில் இதற்கு கருத்து கூறியிருக்கிறேன். எம் ஜி ஆர் என்றாலே ஈவு இரக்கம் ஈகை-தான் எவர் நினைவுக்கும் முதலில் வருவது. இப்படிப் பட்ட பலநூறு சம்பவங்களாலேதான் இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெஞ்சில் தெய்வமாக வாழ்கிறார்.

//ஒருமறுபதிவு//

அவரது ஒவ்வொரு பிறந்ததினத்துக்கும் இதை மறுபதிவிட்டு மரியாதையுடன் நினைவுகூறலாம். நன்றி நானானி!

said...

அன்பின் நானானி

அருமை அருமை - அப்பப்ப ரங்க்ஸ் சொல்றதேயும் கேட்டு பதிவு போடறீங்களாக்கும் - நன்று நன்று

டி.இ கிட்டே சொல்லக்கூடாதென்பதும் - அடுத்த முறை தொடர்ந்தால் சொல்லி விடுவேன் என்பதும் தான் சூப்பர்

said...

என்றுமே அவர் ஹிட் மன்னந்தான். அவரை பற்றிய எழுதப்படும் அனைத்துப் பதிவுகளுமே ஹிட்களை குவிக்கின்றன.

said...

சதங்கா! நான் மிகவும் ரசித்து கேட்டதை பிறர் அறியத் தரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மறுபதிவு.
அதை நீங்களும் ரசித்தது நன்று.

said...

ஆமா! ராமலக்ஷ்மி! இன்றும் சந்து பொந்துகளிலெல்லாம் ஷாமியானா கட்டி படம் வைத்து மாலை போட்டு அவர் பாடல்களை ஒலிபரப்பி அஞ்சலி செலுத்தும் கூட்டமிருப்பதே அவரது ஈகை குணத்துக்கு சான்று.

said...

சீனா!
நான் இப்படித்தான் ரங்க்ஸ் சொல்வதை அப்பப்ப கேட்பேனாக்கும்!!!!

said...

எம்ஜியார் என்றால் ஹிட் என்பதை மறைந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் நிறூபிக்கிறார்.