Friday, April 4, 2008

ஏசி ரூமும் காரும் எட்டாக்கனியா?

'செல்வா! தூக்குச் சட்டியில் சோறும் குழம்பும் வெச்சிருக்கேன். மறக்காம எடுத்திட்டுப் போ!'
வேலைக்குப் போகிறபோக்கில் மகனிடம் சொல்லிவிட்டு தனக்கு ஏதும் எடுத்துக்கொள்ளாமல் ஆபீசுக்கு நடையைக் கட்டினாள் மலர். பேரெல்லாம் நல்லாத்தானிருக்கு ஆனால் அவள் உழைத்து உழைத்து வாடிய மலர்!
ஆபீஸ் என்றதும் ஏதோ பெரிய வேலையில் இருக்கிறாள் என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். காலை 9-மணிக்கு முன் அந்த ஆபீசை திறந்து கூட்டிப் பெருக்கி துடைத்து, தண்ணீர் ரொப்பி வைக்கவேண்டும். அதற்கு அவளுக்கு எழுநூறு ரூபாய் சம்பளம்!
அங்கிருந்து நேராக கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் ஒரு வீட்டுக்கு சமையல் செய்யப் போகவேண்டும். காலை டிபன் செய்து மதியத்துக்கும் இருவருக்கும் கையில் சாப்பாடு செய்து கட்டிக்கொடுக்கவேண்டும். பின் இரவு சாப்பாடும் செய்யவேண்டும். அதற்கு அவளுக்கு 2500 ரூபாய் சம்பளம்.

பிறகு நேராக வீட்டுக்கு வந்து மாலை பசியோடு வரும் மகனுக்கு ஏதாவது சமைத்து வைத்துவிட்டு வெளிவேலைகள்
செய்யும் இரண்டு வீடுகளுக்குச் சென்று..வீடு பெருக்கி பாத்திரம் துலக்கி துணி துவைத்து விட்டு வீடு திரும்பி அக்கடா என்று சிறிது நேரம் ஓய்வு எடுப்பாள். அந்த இரண்டு வீடுகளிலும் சேர்த்து ரூபாய் 1000 சம்பளம். மொத்தம் ரூபாய் 4300-யில் வீட்டு செலவு போக மீதி செல்வாவின் படிப்பு, உடைகள் மற்றும் அவன் தேவைகளுக்கு செலவு செய்வாள்.

மறுபடி மாலை ஐந்து மணிக்கு சமையல் செய்யும் வீட்டுக்குச் சென்று இரவு சமையல் செய்துவிட்டு, முடிந்தால் மறுநாளைக்கான காய்கறிகள் வாங்கிவந்து நேரமிருந்தால் நறுக்கி ப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஏழு மணிக்கு வந்தால் செல்வா வீடு திரும்பி படித்துக்கொண்டிருப்பான். 'சாப்பிட்டயாடா?' என்பாள் பரிவோடு. 'ம்ம்!' என்பான் புத்தகத்திலிருந்து
திரும்பாமலேயே.

இவன் படித்து முடித்து நல்ல வேலைக்குச் சென்று விட்டால் தன் கஷ்டமெல்லாம் தீரும்
என்று எண்ணீக்கொள்வாள். செல்வாவும் அதே நினைப்போடவே நன்றாகப்படித்தான். அம்மாவை உக்கார வைத்து சோறு போடவேண்டும் என்ற ஆசையும் அவனை மேலும் நன்றாக படிக்கத்தூண்டியது.

ஒரு நாள் மலரும் செல்வாவும் பேசிக்கொண்டிருந்தார்கள், கிடைத்த சிறிது ஓய்வு நேரத்தில்.
'ஏண்டா செல்வா! நான் சமையல் செய்யும் வீட்டில் ஓர் அறையில் நுழைந்ததும் 'ஜில்லுன்னு இருக்கு. எப்படிடா?' 'அம்மா..அது ஏசிரூம்மா! அதுக்குன்னு மெஷின் இருக்கு அதை அறையில் மாட்டிவிட்டால் ரூம் சும்மா ஜில்லுன்னு இருக்கும்மா!' என்றான் செல்வா, அறியாத அம்மாவுக்கு தெளிவாக சொன்னான். கூடவே 'கவலைப்படாதே அம்மா! நான் படிச்சு முடிச்சு
நல்லவேலைக்குச் சென்றதும் நமக்குன்னு வீடு வாங்கி அதில் ஒரு ரூமில் ஏசி போட்டுடலாம். என்ன?' என்றான் ஆசையாக. 'அப்படீன்னா, அந்த வீட்டில் உள்ளது போல் நீயும் ஒரு கார்
வாங்கவேண்டும்.' என்றாள் மலர், அன்றலர்ந்த பூப்போல் மலர்ந்து. 'ஓஒகேம்மா!' என்றான் செல்வா சிரித்துக்கொண்டே. மலரும் சேர்ந்து சிரித்தாள் மகனோடு.

காலம் ஓடியது. மலரின் கடும் உழைப்பில் செல்வா நன்றாகப் படித்து பட்டம் வாங்கி கை வழிய சம்பளத்தோடு நல்ல வேலையிலும் சேர்ந்துவிட்டான். முதல் மாதம் சம்பளம் வாங்கி
அம்மாவின் உழைத்துக்காய்த்த கைகளில் கொடுத்து, 'அம்மா! இது உன் உழைப்பின் பலன். இனி நீ வேலைக்குப் போகவேண்டாம். ஒரு வருஷம் பொறு நாம் வீடு வாங்கலாம்...அதில் ஏசி போடலாம், ஏன் கார்கூட வாங்கலாம்!' என்றான் ஆசையும் பரிவும் கலந்து. கண்களில் கண்ணீர் கசிய நின்றாள் மலர்.

ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய செல்வா அம்மா மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டு நாற்காலியில் சாய்ந்திருப்பதைக் கண்டு 'அம்மா! என்னம்மா ஆச்சு?' என்று பதறி தாங்கி படுக்கையில் படுக்க வைத்துவிட்டு டாக்ஸி பிடிக்க ஓடினான்.

செல்வா திரும்பிவந்தபோது வாடிய அந்த மலர் உதிர்ந்து விட்டது. செல்வாவிடம் சொல்லாமலேயே சென்றுவிட்டாள் அவன் தாய்! செய்வதறியாது திகைத்து நின்றுவிட்டான் செல்வா. இருவரின் ஆசைகளும் கனவுகளும் அந்தரத்தில் ஆட, இங்கு வாடி உதிர்ந்த அந்த மலர், வாடா மலராக தெய்வத்தின் திருப்பாதங்களை அடைந்தது. ஆனால் அத்தெய்வம் அவர்கள் ஆசைகளையும் நிறைவேற்றித்தான் விட்டது.

காரியங்கள் மளமளவென்று நடக்கவாரம்பித்தன. செல்வாவின் அலுவலக நண்பர்கள் ஓடோடி வந்தார்கள். மாலைகள் வந்தன. அதோடு வந்தது ஒரு ப்ரீஸர்பாக்ஸ்!!!! மலர் ஆசைப்படி ஏசிரூமுக்குப் பதிலாக ஏசிபெட்டி! செல்வா தாங்கமாட்டாமல் அழுதான்.

சடங்குகள் எல்லாம் முடிந்து மாலைகள் வழிய வழிய மாருதி வேன் ஒன்றில் தன் முதலும் கடைசியுமான கார் சவாரியை செய்கிறாள் மலர்!!!

குமுறி குமுறி அழும் செல்வாவை தேற்றமுடியாமல் தவித்தார்கள் அவன் நண்பர்கள்.

ஏசிரூமும் கார் சவாரியும் ஏழைகளுக்கு எட்டாக்கனியா? இப்படி எட்டும் கனிதான்.
பி.கு.
நேற்று மந்தவெளி அருகே எங்களைக் கடந்து சென்ற ஒரு மாருதி வேனில் ஒரு பெண்ணின் கடைசிப் பயணத்தைப் பார்த்ததும் மனதில் ஓடிய ஒரு கற்பனைக் கதை.

15 comments:

Anonymous said...

:( just got up from my bed and reading ur blog, cant stop my tears reading this

said...

நல்லா வந்துருக்கு நானானி.

மேலும் கதைகளை எழுதுங்கள்.
இன்ப முடிவா இருக்கணும்.

said...

கண்களில் வழிந்த கண்ணீர் கதையின் வெற்றியைச் சொல்கிறதே!!
நன்றி அனானி!

said...

நன்றி! துள்சி!
இன்ப முடிவு இந்த அளவு மனதைப் பாதிக்குமா? சொல்லுங்கள்?
மனதில் நிறைய யோசிப்பேன், ஆனால் எழுதியதில்லை. நேற்று என்னவோ என் கற்பனைக் குதிரை நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்தோடிவிட்டது.

said...

ரொம்ப கஷ்டமாயிடிச்சி
படிச்சிட்டு :(

ஆர்தி said...

பல ஏழைகளின் கனவுகள், கனியும் முன்னேயே காலாவதியாகி விடுகிற அவலத்தை அழகாகவும், படித்தவர் அழும் படியும் சொல்லியிருக்கிறீர்கள்!

said...

பல பபேருடைய வாழ்க்கை ,இறப்பில்,அடுத்தவருக்குப் பாடங்கள் சொல்லித் தருவதாக அமைந்து விடுகின்றன.எட்டும் தூரத்தில் இருந்தாலும் சில நமக்கு எட்டாக்கனிதான்.என்பதை..அருமையாக உணர்த்தியிருக்கிறீர்கள்.

RL said...

Too sad :(

No more sad stories from 9-west. Want to read events / stories with happy endings only...

said...

மங்களூர் சிவா, RL!
அருசுவைகளில் கசப்பும் உடம்புக்குத் தேவையான ஒரு ருசிதானே?
இனிப்பே சாப்பிடுக்கொண்டிருந்தால் திகட்டிவிடாதா? சோகத்திலும் ஒரு சுகமுண்டு...!

said...

RL!
9-west'll always be happy & make others happy!! OK?

said...

aarti!, கோமா!
நீங்கதான் சரியான கோணத்தில் படித்திருக்கிறீர்கள்! பின்னோட்டத்துக்கு
நன்றிகள்!!!

said...

மரணம் எப்போ இனிக்கும். படாத பாடு பட்டு போனாப் போதும்னு நினைக்கும் போதுதான்.
நல்லதொரு கற்பனை. கதையென்று நம்பவே முடியவில்லை:))

said...

வல்லி!
இது கற்பனைதான். ஆனால் இதற்குள்
சில நிஜங்களும் ஒளிந்திருக்கின்றனவே!

said...

Lower Middle Class குடும்பத்தில் பிறந்தவன் நான், கதையில் வரும் அளவிற்கு ஏழ்மை இல்லை என்றாலும் காரும் ACயும் எட்டக்கனியே. இவை இரண்டையும் நான் Delhi யில் இருந்த போது அம்மாவிற்கு கொடுக்க முடிந்தது, அடுத்த வாரம் Boston, USA வருகிறாள், இது அவளுக்கு முதல் Flight பயணம். என் அப்பாவிற்கும் என்னை வளர்த்த பாட்டிக்கும் இந்த சுகங்களை அளிக்க முடியாதது வருத்தமே.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

said...

அன்பு ஸ்ரீராம்!
உங்கள் வருத்தம் மிகவும் நியாயமானது.
இருந்தாலும் உங்கள் தாயாருக்காவது
இந்த சுகங்களை அளிக்க முடிந்தற்கு..அமெரிக்க பயணம் உட்பட
இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
உங்கள் தாயாருக்கு என் அன்பைச் சொல்லுங்கள்.