Sunday, February 24, 2008

காதலைச் சொல்லும் விதம் பலவிதம்!! இங்கு சொன்னவிதம் பிரமாதம்!!!!


அமெரிக்காவின் மிசோரி மாநிலத்திலுள்ள செயிண்ட் லூயிஸ் நகரில் அத்துணைக்கண்டத்தின் நடுவில் அந்நாட்டின் முன்னோர்கள் வாழ்வாதாரத்தை தேடி மேற்கு திசை நோக்கி நுழைந்த இடம்.
அந்நினைவாக எழும்பியதுதான் செயிண்ட் லூயிஸ் ஆர்ச் (வளைவு). இந்த ஆர்ச் எழும்ப காரணமான தாமஸ் ஜெஃபர்ஸ்ன் பேரால் "Jefferson National Ezpansion Memorial" என்று அழைக்கப்படுகிறது.

பார்க்க சாதரணமாக தோன்றும் ஆர்ச் பல பிரமாண்டங்களை உள்ளடக்கியது. முக்கோண வடிவமாக பல அளவுகளில் செய்து ஒன்றன் மேல் ஒவ்வொன்றாக, குழந்தைகள் பில்டிங்செட் அடுக்குவது போல பதமாக அடுக்கி, உச்சியில் வைக்கவேண்டிய கடைசி முக்கோணத்தை விழா போல் கொண்டாடி முடித்தார்கள்.
பலமான காற்றடித்தால் ஆர்ச் லேசாக ஆடுமாம்!!

பேரனை இடுப்பில் இடுக்கிக்கொண்டு ஆர்ச் பார்க்கப் போகிறேன்!

இதன் விசேஷம், வெளியிலிருந்து பார்த்துவிட்டு மட்டும் செல்லாமல்..அதன் உள்ளேயும் சென்று, அதாவது ஆர்ச்சின் அடியிலிருந்து இரு பக்கமாகவும் மேலே சென்று உச்சியிலிருந்து ஊரின் அழகை ரசிக்கலாம். அடியிலிருந்து சின்னச்சின்ன பெட்டிகளாக ஐவர் அமர்ந்து செல்லக்கூடிய வகையில்..லிஃப்ட் அல்லது மினி டிரெயின் என்ற அமைப்பில் மேலே சென்றோம்.

மேலே போனவுடன் சமதளமாக இருக்கிறது. சுமார் 30-40 பேர் நிற்கலாம். இருபக்கமிருந்தும் வந்தவர்கள் அங்கிருக்கும் ஜன்னல்கள் வழியாக இருபக்கமும் பார்த்து ரசிக்கலாம். ஒரு புறம் அமைதியாக ஓடும் மிசோரி ஆறு, ஆர்ச்சை சுற்றியிருக்கும் புல்வெளி, பெரியபெரிய கட்டிடங்கள்,ஸ்டேடியம் ஆகியவை கண்களுக்கு விருந்து. சுமார் இருபது நிமிடங்கள் இருக்க அனுமதிக்கிறார்கள். பிறகு வந்த மாதிரி கீழேயிறங்கிவிடலாம்.

ஆர்ச்சின் அழகை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது மருமகள் அங்கு நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னாள். மனதில் பதிந்துவிட்ட அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தான் காதலிக்கும் பெண்ணிடம் வார்த்தைகளால் காதலைச் சொல்லத்தெரியாத காதலனொருவன்,
சில முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு அவளை ஆர்ச்சுக்கு மேலே கூட்டிச் சென்றான்.
மேலே சென்றதும் குறிப்பிட்ட ஜன்னல் வழியே அவளைப் பார்க்கச்சொன்னான். அவளும் பார்த்தாள்...பரவசமானாள்..'தனை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!!'

அப்படி அவள் என்ன பார்த்தாள்?

சில முன்னேற்பாடுகள்..என்றேனே! அது.. குறிப்பிட்ட ஜன்னல்வழியே பார்த்தால் தெரியுமாறு ஆர்ச்சின் புல்வெளியில் தன் நண்பர்கள் சிலரை கருப்பு உடையணிந்து, 'I LOVE YOU' என்ற வடிவில் படுத்துக் கொள்ளச் செய்து மேலிருந்து பார்த்தால் பென்சிலால் எழுதியது போல் தெரியுமாறு ஏற்பாடு செய்திருந்தான் அந்த அருமைக் காதலன்!! பின் ஏன் அவள் புல்லரித்துப் போகமாட்டாள்? புல்லில் கிடந்ததென்னவோ அவன் நண்பர்களல்லவா?

அங்கு பொது இடங்கள் எங்கு போனாலும் திருமண ஜோடிகள் சொந்தங்களோடு உலா வருவதைப் பார்க்கலாம். திருமணம் மணப்பெண் தன் கையிலுள்ள பூங்கொத்தை ஒரு உயரமான இடத்தில் திரும்பி நின்று கொண்டு தலைக்குமேலே வீசியெறிவாள் அதைப்பிடிக்க திருமணமாகாத அவளது உறவுப்பெண்கள் மற்றும் தோழிகள் அவள் பின் நின்றுகொண்டு அலைபாய்வார்கள்.
யார் கையில் கிடைக்கிறதோ அப்பெண்ணுக்கு அடுத்து திருமணமாகுமாம். நம்பிக்கைகளும் பலவிதம்!

8 comments:

said...

படங்கள் சூப்பர்.

said...

அழகான காதல் கதையுடன் சுவாரஸ்யமான செய்தி.

said...

துள்சி! படங்கள் மட்டும்தான் சூப்பரா?
நீங்களும் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மாதிரி ஆரம்பித்து விட்டீர்கள்?

said...

வாங்க! பிரேம்ஜி!
வந்ததுக்கும் சொன்னதுக்கும் நன்றி!!

said...

படங்கள் அருமை -ஒவ்வொரு சிறு அசைவௌகளைஇயும் கூர்ந்து கவனித்து விளக்கம் கொடுத்த விதம் மன மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறது. பாராட்டுகள்

said...

நன்றி! சீனா!
ப்ளாக்கில் எழுதுவேன் என்று தெரியாமலே படம் எடுத்தது. இப்போது கை கொடுக்கிறது. தெரிந்திருந்தால் இன்னும் அக்கறையோடு எடுத்திருக்கலாம். ஹூம்!!

said...

அருமை அருமை..

said...

பாசமலருக்கு...அருமையான நன்றிகள்!!