Tuesday, January 22, 2008

வெற்றிலை போட வாங்க!!

இப்போல்லாம் இந்த மாதிரி அழைப்பெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை. கல்யாணமா? விருந்தா? சாப்பாடு முடிந்ததும் வெளியே வரும் போதே தட்டில் பீடாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆளுக்கொன்று (நான் ரெண்டு) எடுத்துக்கொண்டு கொதப்பிக்கொண்டே 'டாட்டா..பைபை..'சொல்லிக்கொண்டே தாம்பூலக் கவர் வாங்கிக்கொண்டு வெளியே வந்து விடுவோம். அத்தோடு சரி!

எங்கள் வீட்டில் கல்யாணங்கள் கூட வீட்டிலேயே நடக்கும். பந்தி முடிந்து ஹாலில் வந்து அமர்ந்துகொண்டு வெற்றிலை போடும் சுவாரஸ்யமிருக்கே...அட அட அட!

ஹால், மற்ற அறைகளிலும் ஜமக்காளங்கள் விரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஜமக்காளத்தின் நடுவிலும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு நிறைந்த தாம்பாளங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

அதுவும் கருவலநல்லூர் வெற்றிலையும் ரசிகலால் பாக்கும் வாசனைச் சுண்ணாம்பும் என்ன ஒரு அற்புதமான காம்பினேஷன்!!!



அது என்ன கருவலநல்லூர்?

திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோயிலுக்கு சிறிது தூரத்தில் அமைந்ததுதான் "கரிவலம்வந்தநல்லூர்"

அங்கு காட்டில் ஒரு சிவலிங்கம்! தினமும் யானை ஒன்று அந்த சிவலிங்கத்தை சுற்றி சுற்றி வலம் வந்து வழிபடுவதைக் கண்ட ஊரார் சிவலிங்கத்துக்கு ஆலயம் எழுப்பி வழிபடவாரம்பித்தனர்.

யானை வலம் வந்து வழிபட்டதால் ஊரின் பேரே 'கரிவலம்வந்தநல்லூர்!' என்று வழங்கப்பட்டது.
வெற்றிலையை குதப்பி குதப்பி ஊரின் பேர் 'கருவநல்லூர்' என்று சொதப்பிவிடது.

தமிழில் பெயர்...தமிழில் பெயர்..தேடிக்கொண்டிருக்கிறோம். அக்காலத்தில் இடப்பட்ட அழகிய தமிழ் பெயர்களெல்லாம் எப்படியெல்லாம் உருமாரி கருமாரி சிதைந்து சின்னாபின்னமாகியிருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

இந்த ஊர் வெற்றிலைக்குப் பெயர் பெற்றது. முற்றிய வெற்றிலையும் சரி, கொழுந்து..தளிர் வெற்றிலையும் சரி பிஞ்சு வெண்டக்கா மாதிரி ஒடியும்.

வீட்டில் ஒரு கட்டு வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு வாசலிலும் ஒரு கட்டு பூஜையறையிலும் இருக்கும்.
வாசலில் அப்பாவோடு சமமாக அமர்ந்து வெற்றிலை போடுபவர்கள், கையில் எடுத்துக்கொண்டு ஓடுபவர்கள் அப்பா அலுவலகம் சென்ற பின் சாவகாசமாக போடுபவர்கள் என்று பலவகையான பேர் இந்த வெற்றிலைக்காகவே வருவார்கள். சொல்ல மறந்தேனே அப்பாவுக்கு இப்பழக்கம் கிடையாது.

நான் அக்காலத்தில் இந்த வெற்றிலைக்கு அடிக்ட்...அடிமை என்பதை இப்படியும் சொல்லலாமல்லவா?

விசேஷ நாட்களில்...அக்காக்கள் வந்திருப்பாக...மதனிமார்கள் வந்திருப்பாக...அத்தைகள் வந்திருப்பாக...சித்திகள் வந்திருப்பாக...மற்றுமுள்ள உறவினரெல்லாம் வந்திருப்பாக...!

யாரும் சாப்பாடு முடிந்து கிளம்பிவிடமாட்டார்கள், வெற்றிலை செஷன் முடிக்காமல். அவரவர்க்கு தோதான சிறுசிறு குழுக்களாக ஜமக்காளங்களில் வட்டமாக அமர்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டு ஈர வெற்றிலையை அப்படி ரெண்டு எடுத்து தொடையில் தடவி காம்பு கிள்ளி சுண்ணாம்பையும் ரெண்டு இழுப்பு இழுத்து ரசிகலால் பாக்கு சிறிது வைத்து மடக்கி வாயில் அடக்கினால்....கிக் ஏறுமே!

சில பேர் வெற்றிலைக் காம்பை சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று மேலிருந்து நுனிவரை கிழித்து இலையை ரெண்டு பாகமாக்கி மடித்துப் போடுவார்கள். அது தனி...கலை.

ரெண்டு வெற்றிலையோடு முடியாது. சுண்ணாம்பு தடவி மடக்கி போய்க் கொண்டேயிருக்கும்.
இதற்குள் அடுத்த ஜமக்காளத்திலிருந்து அழைப்பு வரும்..'ஏட்டி! இங்கன வாயேன்!' என்று.

இங்கே ஒரு ஷார்ட் ப்ரேக் விட்டுவிட்டு அடுத்த ஜமக்காளத்தில் தொடரும். இப்படி சாப்பிட்ட விருந்தின் அளவை விட ஒரு படி மேலேயே போய்க்கொண்டிருக்கும். ஒரு அண்ணன், 'என்னடி இது? ஆடு தளை மேய்ஞ்சாமாதிரி!' என்று சொல்லிலக் கொண்டே
போவார். இன்னொரு அண்ணன், 'பாத்து! காக்கா கொத்திரப்போகுது!' என்பார். கழுத்து வரை இருக்குமாம், வாயைத்திறந்தால் காக்கா வந்து கொத்திவிடுமாம்.

எங்கள் தாத்தா, மாமா எல்லாம் வெற்றிலை போடுவதைப் பார்ப்பதே...சுதா ரகுநாதன் கச்சேரி பார்ப்பதைப்போல் அழகாகயிருக்கும். மெத்தைமேல் ரெண்டு தலையணை போட்டு அதில் சாய்ந்து கொண்டு வெற்றிலைச் செல்லத்தை செல்லமாய் திறந்து வெற்றிலையைத் துடைத்து சுண்ணாம்பு தடவி பாக்கு வெட்டியால் கொட்டைப்பாக்கை வெட்டி வைத்து மடக்கி வாயில் அடக்குவதே ஓர் அழகு!

வெற்றிலை எப்படியெல்லாம் உறவுகளை கட்டிப்போட்டிருந்தது!!
திருமணத்துக்குப் பிறகு ஊருக்குப்போகும் போதெல்லாம் கொஞ்சம் வெற்றிலை எடுத்து வருவேன். இங்கு வந்ததும் சிறிது வாடியிருக்கும். அந்த வாட வெத்தல..வதங்கன வெத்தலையும்
அம்புட்டு ருசியாயிருக்கும்.

இரண்டாவது மகன் பிறந்த உடன் ஒரு முறை ஊருக்குச் சென்ற போது, அண்ணன் மகன், 'அத்தை! ஜர்தா பீடா போடுகிறீர்களா? வாங்கிவரவா?' என்றான். தூக்குத்தூக்கி படத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அழகாக மடித்துக்கொடுக்கும் பீடாவாக்கும் என்று,என்ன ஏது என்று தெரியாமல் வாங்கி வரச் சொன்னேன்.

அரைநொடியில் ஓடிப்போய் வாங்கி வந்தான். வாயில் போட்டு மென்று ஒரு துளி சாறு தான் உள்ளேயிரங்கியிருக்கும்.........கீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று தலை சுற்றியது. சம்திங் ராங் உள்ளே மணியடிக்க ஓடிப்போய் வாஷ் பேசினில் துப்பி, உள்ளேயிரங்கிய துளிச் சாற்றையும் வெளியே தள்ளி, வாயை நன்றாக கழுவிய பின்தான் ஆசுவாசமாகியது. 'என்னத்தைடா கொடுத்தே?' என்றபோது 'உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன்' என்றான் சாவகாசமாக!!!!!!

இப்போதெல்லாம் கருவநல்லூர் வெற்றிலையுமில்லை, ரிப்பேரான பற்களால் பாக்கு போடவும் முடியவில்லை. இனிப்பு பீடா என்றால் போடுவேன்.

வேண்டியமட்டும் வெற்றிலையை இளவயதில் மேய்ஞ்சாச்சு...இப்போது பழைய நினைவுகளை அசை போடத்தான் முடியும். கண்கள் மூடி சுகமாக அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

23 comments:

said...

சூப்பரு... :)

said...

நானானி,
நமக்கும் இப்படி ஒரு அடிமைத்தனம் இருக்குங்க. அசைவம் சாப்பிட்டதுக்கப்புறம் வெத்தலை போடலைன்னா சாப்பிட்டா மாதிரியே இருக்காது..

Anonymous said...

//வேண்டியமட்டும் வெற்றிலையை இளவயதில் மேய்ஞ்சாச்சு...இப்போது பழைய நினைவுகளை அசை போடத்தான் முடியும். //

என்னாங்க இப்புடி சொல்லிப்புடீங்க!
அப்ப்போ போட்டதெல்லாம் உங்கள் சுவைக்காக ஆனா இனிமேபோடனும் உடல் ஆரோக்கியத்துக்காக.
வெத்திலயில------------இரத்த விருத்திக்கு அவசியமான இரும்பு சத்து

சுன்னாம்புல------------எலும்புக்கு அவசியமான கல்சியம்

பாக்ல---------------- இரத்தில இருக்கிற சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருத்துவத் தன்மையும் இருக்குதாங்க.

அதனால நம்மட இயற்கை மருத்துவத்தையெல்லாம் அலட்சியப் படுத்திடாதீங்க. நீங்களா வீட்டுல சுத்தமா தயார்பண்ணி சாப்புட்டுடுங்க. :)

said...

நன்றி! இராம்!

said...

ஏளா! இளா!
இதாரு? நம்ப ஜமகாளத்தில் புது வரவு!
வாங்க வாங்க...நல்ல போடுங்க தளிர் வெற்றிலை!!!

said...

அனானி!
இளவயதில் வயற்றுக்கு வஞ்சகம் செய்ததில்லை அதோடு தாம்பூலம் போடுவதிலும் குறையில்லை. அப்படி சாப்பிட்டதினால்தான் இன்று என் மகள், 'அம்மா! முதுகு வலிக்குது, கால் கை வலிக்குது' என்று அடிக்கடி சுணங்கிக் கொள்ளும் போது அவளுக்கு பணிவிடை செய்யும் தெம்பு இருக்கிறது. ஆனால் நீங்கள் சொன்னா மாதிரி இப்போதும் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி தூள் பாக்கு கொஞ்சம் வைத்து நிறைய குல்கந்து வைத்து எப்போதாவது சாப்பிடுவேன்.
உங்கள் அக்கரைக்கு நன்றி அனானி!!

said...

வெததல, கும்ப கோணம் தான் பேமசுன்னு சொல்வாங்க - சீவல் வாசன சுண்ணாம்பு - மேயலாம். அதெல்லாம் அந்தக் காலம் - இப்பல்லாம் வெத்தலப் பொட்டியே இல்லய - அசை போட வேண்டியது தான் - நல்ல பதிவு

Anonymous said...

vethilai podurathaye paartha mathiri irunthathu. as usual, bw. photos'm pottiruntha romba nalla irunthurukkum.

said...

எங்க பாட்டி வெற்றிலை கதை பேசினது தான் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல நடை!

said...

ஆஹா.. ரொம்ப நாள் விட்டுப்போயிருந்ததை நினைவு படுத்தி விட்டீர்கள்... நான் ஒரு வெற்றிலை ப்ரியை. எந்த அளவுக்குன்னா.. திருமணம் முடிந்து மாமனார், மாமியார், கணவர் சகிதம் உப்பிலியப்பன் கோவில் (கும்பகோணம்) சென்றபோது பெரியவர்களை ஓரம் கட்டிவிட்டு நாங்கள் இருவரும் மட்டும் தனியே சென்று கும்பகோணம் வெள்ளை வெற்ரிலைக்காக நல்ல ஒரு ஆடு மேயரமாதிரி மேஞ்சுட்டு வந்து அசடு வழிந்தோம் அந்த அளவுக்கு வெற்றிலை மோகம்.. ஆனால் இப்பெல்லாம் சென்னை வெற்றிலை போடுவதை விட போடாமால் இருப்பதே மேல் என்று உள்ளது (எங்கள் ஊர் வெற்றிலையும் திருநெல்வேலி பக்கம் மிகவும் பிரபலம் ஏனெனில் எங்கள் பகுதி வெற்றிலை வாழை கொடிக்காலுக்கு பெயர் பெற்றதாகும்).. நன்றி ஒரு சுகமான வெற்றிலை போட்ட அனுபவத்தை தந்ததற்கு.. வாழ்த்துக்கள்..

said...

கும்பகோணம் கொழுந்து வெத்தல, தஞ்சாவூர் சீவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அழுத்தமான வண்ணத்தில் காரசாரமாயிருக்கும். என்னென்னாலும் கருவநல்லூர் வெத்தலக்கு ஈடாகுமா? நன்றி சீனா!

said...

படங்கள் இருந்தால் போட்டிருக்கமாட்டேனா? எங்கள் அண்ணாச்சியின் இருட்டு அறையில் தேடினால் கிடைக்கும். அதுமட்டுமல்ல பெரிய புதையலே கிடைக்கும். காசு பணமல்ல பழைய போட்டோக்கள்!
அவ்வளவும் இப்போது பொக்கிஷங்கள்!!!

said...

சரி சரி... காட்டாறு... ஓடும் வேகத்திலும் நைசாக என்னைப் பாட்டியாக்கிவிட்டீர்கள்!! ஆனாலும் நான் 'அம்மம்மாவாக்கும்!!'

said...

என் ஜமக்காளத்தில் இன்னொரு புது வரவு. வருக வருக...வெத்தல போட வருக.

said...

வெத்தலை போடுவது பற்றிய உங்க பதிவு படிக்க சுவாரஸ்யமாக இருந்தது!

சுண்ணாம்பு போடாமல் வெத்தலை போட்டா, நாக்கு சிவக்குமா??

said...

திவ்யா!
வெத்தல, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சேர்ந்துதான் வாய் சிவக்க வைக்கும்.
மேலும் நம் உடம்பிலும் சில அதிகப்படியான ரசாயனங்கள் ஏதாவதும் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சிலருக்கு ஜிவுஜிவு என்று பிடிக்கும். அப்படி பிடிக்கும் பெண்களை, 'உனக்கு உன் புருஷனை ரொம்ப பிடிக்கும் அல்லது உன் புருஷனுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்.' என்று கேலி செய்வார்கள்.

மருதாணியும் இதே போல்தான். ஆகவே திவ்யா மூன்றையும் சேர்த்து போட்டு எப்படி பிடித்தது என்று சொல்லுங்கள்.

said...

ஆகா, ஆகா என்ன ரசனையுடன் எழுதியிருக்கீங்க நானானி.....

நான் கடந்த முணு மாதங்கள் முன்பு வரை வெற்றிலை-புகையிலை போட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
இப்போ பொகயலைய விட்டுபுட்டேன். இப்பவும் நல்ல வெற்றிலை மற்றும் சரியான தோழமை கிடைத்தால் ஜமாவே தனி தான்.

//வெற்றிலைச் செல்லத்தை செல்லமாய் திறந்து வெற்றிலையைத் துடைத்து சுண்ணாம்பு தடவி பாக்கு வெட்டியால் கொட்டைப்பாக்கை வெட்டி வைத்து மடக்கி வாயில் அடக்குவதே ஓர் அழகு!//

நீங்க எழுதியிருப்பது அப்படியே எனது குடும்பத்திலும் ஒருகாலம் நடந்ததுதான். நாங்க சோழவந்தான் வெத்தலைன்னு சிறப்பா சொல்லுவோம். (இன்றும் மதுரைக்கு வரும் நல்ல செங்காம்பு, சிறு வெற்றிலை அங்கிருந்துதான் வருது).
என் தந்தையின் பாக்கு வெட்டி, வெற்றிலைச் செல்லம் எல்லாம் அப்ப-அப்ப நான் உபயோக படுத்துகிறேன்.

said...

ஆஹாஹா!!
என் ஜமக்காளம் நிரம்பிகொண்டேயிருக்கிறதே!!
வாங்க வாங்க...எங்கூர் வெத்தலையும் ருசி பாருங்கள்.

said...

நான் சின்னவனாக இருந்தபோது வாசவநல்லூரிலிருந்து (கரிவலம்வந்தநல்லூர் கருவநல்லூர் ஆனது மாதிரி வாசுதேவநல்லூரை வாசவநல்லூர் என்றுதான் சொல்வார்கள்) வைத்தியர் எங்கள் வீட்டிற்குவருவார். இப்போது மாதிரி ஸ்கேன் எல்லாம் கிடையாது. திப்பிலி லேகியம், மெழுகு, செந்தூரம் என்று மருந்துகள் தருவார். எந்த காய்ச்சலும், சளியும் வயிற்றுவலியும் மறுநாளே குணமாகிவிடும்.
அவரும் ஒரு வெற்றிலைப் பிரியர். ஆனால் பல்லெல்லாம் விழுந்துவிட்டதால் பாக்கை கடிக்க முடியாது. என் அம்மா ஒரு இரும்பு குழவியை என்னிடம் தந்து முதலில் வெட்டுப்பாக்கை இடிக்கச் சொல்வாள். வைத்தியர் வெற்றிலையில் அழகாக சுண்ணாம்பை அளவாகத் தடவி தருவார். பொடியான பாக்குடன் அதையும் சேர்த்து இடித்து அவருக்குத் தருவேன்.
வைத்தியர் நான் இடித்து தந்த வெற்றிலையை ஒரு திராட்சை பழம் சைசில் எடுத்து, "சபாஷ் இது உனக்கு கமிஷன்" என்று சொல்லித் தருவார். இப்போது நான் முறுக்கு தந்தாலே மிக்ஸியில் பொடியாக்கி சீனி சேர்த்துத் தான் சாப்பிடுவேன்
சகாதெவன

said...

சகாதேவன்? எங்கே ஆளையே காணோம்? அங்ஞானவாசமா?
உங்கள் தகவல் என் பதிவுக்கு கூடுதல் சுவாரஸ்யம்!
அந்த வைத்தியர் எங்கள் வீட்டுக்கும் வருவார், அப்பா கார் அனுப்பி அழைத்துவருவார். காச்சலுக்கு அவர் தரும் செந்தூரம்..அதிமதுரம்! வெற்றிலையில் சிறிது வைத்து அதில் தேன் ஊற்றி குழப்பித்தருவார். அதற்காகவே அடிக்கடி காய்ச்சல் வராதா என்றிருக்கும். ஆனால் அந்த மெழுகு...!உடம்பையே கிடுகிழுக்க வைத்துவிடும். சரிதானே?

said...

வலிமா விருந்து (கல்யாண விருந்து)முடிந்த பிறகு வந்திருக்கும் ஆண்/பெண் அனைவருக்கும் வெற்றிலை பாக்கு தரப்படும். இதன் பெயர் 'சுருள்'. சுருள் உள்ளே சன்னமாக வெட்டிய பாக்கு, தேவைக்கு தகுந்த வாசனை சுண்ணாம்பு முக்கோணமாக மடிக்கப்பட்ட சுருள் பிரியாமலிருக்க அதன் மேல் குத்தப்பட்ட கிராம்பு. . பிரியாணிக்குப் பின் சுருள் சாப்பிடுவது அட்டகாசம்

said...

நல்லாருக்கு நானானி !!...எங்க வீட்ல சின்ன வயசுல வெத்தலையே போட விடமாட்டாங்க......ஏன்னா நாக்கு தடிச்சிரும்ம்னு...இது நிஜந்தானா தெரியாது.ஆனா விடுவோமா யாருக்காவது கல்யாணம்னா வெத்தலைதான். நைசா போயி வெத்தலைய அதுக்கு வேணுங்கர சிசுருஷை செஞ்சு அதுக்குள்ள கொஞ்சம் டைமண்ட் கல்கண்டு வச்சு (காரம் தாங்காதுல்ல!)ஒரே அமுக்குதான். சாப்டப்ப்ரம் நாக்க நீட்டி நீட்டி செவந்த்ருகா செவெந்த்ருக்கான்னு கேட்டுக்கிட்டே திரிவோம்......!!!

Anonymous said...

Excellent writing style,I like it,
Thanks Neewin tajudeen