Wednesday, October 31, 2007

poincettia--போயின்செட்டா? இதுவரை பேர்தெரியாப்பிச்சை!இது மலரா? இல்லை இலையா? எதுவோ ஆனால் என் மனம் கவர்ந்தது.
பள்ளியில் படிக்கும் காலத்தில்...ஒரு நாள் அருகில் அமர்ந்திருந்த விடுதி மாணவியின் புத்தகத்தின் நடுவில் ஒரு வாழ்த்து அட்டையைப் பார்த்தேன். அந்தக்காலத்தில் வாழ்த்து அட்டை கலாச்சாரம் வெகுவாக பரவாத காலம். மிஞ்சிமிஞ்சிப்போனால் தீபாவளி,பொங்கல்,புத்தாண்டு வாழ்த்து அட்டைகள்தான் கடைகளில் கிடைக்கும். அதுவும் சிவகாசியில் அச்சடித்த காகிதத்தில்.
மக்கள்ஸும் போக்கிடமின்றி அவைகளையே வாங்குவார்கள்.

இப்பிடியாப்பட்ட நேரத்திலே புத்தகத்தின் நடுவில் நான் பார்த்தது...சுத்தமான வெளிநாட்டு சரக்கு. 'இது ஏது?' என்று அவளிடம் கேட்டேன். ஹாஸ்டல் மதரிடம் விலைக்குக் கிடைக்கும் என்றாள். எனக்குள் சந்தோஷ மணியடித்தது. இது வரை தெரியாமல் போயிற்றே!எப்போதடா பள்ளி மணியடிக்குமென்று
காத்திருந்தேன். ஆசிரியர் சொல்லியது எதுவும் காதில் ஏறவில்லை...எப்பொதுதான் ஏறியது?

டண்டண்..மணியடித்தது. விட்டேன் ஜூட் ஹாஸ்டலுக்கு. மதரிடம் ஏனனக்கு சொல்லவில்லை கொஞ்சம் பிராண்டினேன். அவர்கள் ஹாஸ்டல் மாணவிகளுக்கு மட்டும் விற்பதாக கூறினார். எனக்கும் வேண்டுமென்று பிடிவாதம் செய்ததாலும் தலைமையாசிரியரின் செல்லம் என்பதாலும் சம்மதித்து ஒரு டப்பா நிறைய வாழ்த்துஅட்டைகள் எடுத்து வந்து கொடுத்தார்.பரப்பி வைத்துப்பார்த்ததில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிறைய இருந்தன. அழகழகான
படங்களுடன். மனசுக்குள் பொங்கி வழிந்தது சந்தோஷம்! குடும்பத்தார்க்கு வாழ்த்து அனுப்புவதற்கு சிலவும் படம் அழகாக இருந்ததினால் சிலவுமாக கை நிறைய அள்ளிக்கொண்டேன். மதருக்கும் சந்தோஷம்! பெரிய கிராக்கி கிடைத்ததனால். அது முதற்கொண்டு புது கன்சைன்மெண்ட் வந்ததும் எனக்கு சொல்லியனுப்புவார்கள். கொத்தாக இப்படி யார் அள்ளுவார்கள்?இவையெல்லாம் புத்தம்புது அட்டைகள் என்றுதானே நினைக்கிறீர்கள்? அல்ல அல்ல கான்வெண்ட் மதர்களுக்கு பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த அட்டைகளின் நடுப்பக்கத்தை கிழித்துவிட்டு பொத்தாம்பொதுவாக 'season's greetings' என்று அச்சடித்து நடுவில் ஒட்டி விற்பனை செய்வார்கள். அதன் வருமானம் பள்ளிநிதிக்கு.நானும் பரவாயில்லை என்று அழகான படங்களுக்காகவே வாங்குவேன்.


அன்று ஆரம்பித்தது. குடும்பத்திலுள்ளோர் அனைவரது பிறந்தநாள், திருமணநாள் எல்லாம் குறித்துக்கொண்டு விடாமல் அனுப்பவாரம்பித்தேன். எல்லாம் கடைகளில் கிடைக்காத
அட்டைகள் என்பதால் பெறுபவருக்கும் சந்தோஷம் எனக்கும் சந்தோஷம்!!

இவ்வாறு பொறுக்கிய(நாந்தான் பொறுக்கியாயிற்றே!) அட்டைகளில் எனக்கு மிகவும் பிடித்தது..மெரூன் கலரில் இலையா? பூவா? என்று தெரியாத..பெயரும் தெரியாத பூவும் இலையுமான படங்கள்தாம். அவைகளை விரும்பி வாங்குவேன். ட்ராயிங் க்ளாசில் வரைவதற்கும்
அந்தப் படங்களையே வரைந்து வண்ணம் தீட்டுவேன். ட்ராயிங் மதரிடம் பாராட்டும் வாங்குவேன்.

இப்படியாகத்தானே பள்ளி நாட்களில் என் மனம் கவர்ந்து..என் மனஆழத்தில் படிந்துபோன அந்தப் பெயர் தெரியாத தாவரத்தை நேரில் பார்த்தபோது என் மனம் எப்படி பொங்கிப்பூரித்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்! ஆம்! சென்ற முறை கிறிஸ்மஸ் சமையம்
கலிபோர்னியாவிலிருதேன்.

ஷாப்பிங் மால்களுக்கு சென்ற போது வாசலிலேயே இந்தப் 'பேரில்லாப்பிச்சை..இல்லை பேர்தெரியாப்பிச்சை' அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்து. அசலும் நகலும் கலந்து...எது அசல் எது நகல் என்று
தெரியவில்லை. தொட்டுப்பார்த்தால்தான் ஜில்லென்று குளிர்ச்சியாக உள்ளது அசல் என்று புரிந்து கொள்ளலாம். பார்க்கப்பார்க்கப் பரவசம்!! ஒருவரை ஒருவர் கண்ணால் பார்க்காத 'காதல் கோட்டை' காதலர்கள் சந்தித்தபோது அவர்களுக்குண்டான பரவசத்தையும் சந்தோஷத்தையும் நானடைந்தேன். பிறருக்கு இது கொஞ்சம் ஒவராகத்தெரியலாம். ஆனால் நான் மட்டுமே உணர்ந்த அந்த மகிழ்ச்சியை சக பதிவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டதின் விளைவே இப்பதிவு.

ஆங்! சொல்லமறந்தேனே! அந்த தாவரத்தின் பெயர் 'POINCETTIA' வாம்! போயின்சிட்டா?

அப்போதே அதை வாங்க ஆசைப்பட்டேன். கூட வந்த மருமகள்,'அத்தை! இப்போது வேண்டாம். கிறிஸ்மஸ் முடிந்ததும் கம்மி விலையில் வாங்கலாம்.'என்றாள். நாம கொலுமுடிந்ததும் அடுத்தவருடத்துக்கு குறைந்தவிலையில் பொம்மைகள் வாங்குவோமே அதைப்போல.

கிறிஸ்மஸ் முடிந்ததும் அவளையும் கூட்டிக்கொண்டு 'வால்மார்ட், மைக்கேல்ஸ்' போனோம். ஆசை தீர அள்ளிக்கொண்டேன் முக்கியமாக என் கொலு அலங்காரத்துக்காக.
இந்த வருட கொலுவில் பார்த்திருக்கலாம். ஒரே போயிசிட்டாவாக இருந்திருக்குமே!!

6 comments:

said...

போயின்செட்டா...செட்டாயிற்றா..என்று ஒரு பரீட்ச்சாத்த பின்னோட்டம்.ஓகேவா?

said...

ஆங்! சொல்லமறந்தேனே! அந்த தாவரத்தின் பெயர் 'POINCETTIA' வாம்! போயின்சிட்டா?

போயின்சிட்டா சூப்பர்....

said...

பாயிண்ட்செட்டியா
பியுடிஃபுல்.
இதுக்குப் பின்னால இவ்வளவு கதையா:))))
அழகா இருக்குமா.
தீபாவளி கார்த்திகை வாழ்த்துகள்.

Anonymous said...

Golu after Christmas?

said...

ஓஹோ!!பாயிண்ட்செட்டியாவா?
ஓகே..ஓகே!

said...

அனானி!
christmas after kulu என்று நினைக்கிறேன்.சரியா?