Saturday, June 16, 2007

ரயில் சட்னி!

வகை வகையான் சட்னிகளுக்குள் இது எங்கள் செல்லச் சட்னி!

சட்டுனு புரியலையா?

வட இந்தியாவில் நீண்ட பிரயாணங்களுக்காக சுக்கா சப்பாத்தி செய்து

அடுக்கி எடுத்துப்போவார்களே......அது போல் குறுகிய பிரயாணத்துக்காக

எங்கள் இல்லத்தில் தயார் செய்யப்படும் ஒரு சட்னி!

அநேகமாக எங்கள் பிரயாணமெல்லாம் திருநெல்வேலி-சென்னை அல்லது உல்டா! மாலையில் புறப்படும் ரயில் மறுநாள் காலை சென்னை

அல்லது திருநெல்வேலி சென்றடையும். அந்த ஓரிரவு சாப்பாட்டுக்குத்தான்

இந்தப்பாடு!

வயிற்றுக்கு ஒரு கேடும் செய்யாத ஓர் உணவு நம்ம இட்லிதாங்க.

தாமிரபரணித் தண்ணிரில் ஊற வைத்த அரிசி உளுத்தம் பருப்பில் அரைபட்ட

அந்த மல்லிப்பூ போன்ற இட்லி.....அதிலும் தட்டையான் இட்லித்தட்டில்

துணி போட்டு ஊற்றி எடுத்து சுடச்சுட தட்டில் விழும் போது எத்தனை

உள்ளே போச்சுன்னு கணக்கே தெரியாது. அதிலும் இட்லிப்போடி, தேங்காய்

சட்னி, மேலே கொஞ்சம் சீனி தூவிய கெட்டித்தயிர்...இவ்வளவும்

இருந்தால் போதும்....ம்ம்ம்...ம்ம்ம்ம்...உலகத்தையே எழுதிக்கொடுத்து விடலாம்.

ஹாங்? எப்படி?.....யார் வீட்டு சொத்து?

சரி..சரி..பாதை மாறுகிறேனோ? நாம்ப நம்ம ரயில் சட்னிக்கு வருவோம்.

ரயிலை துருவிப்போட்டு அரைக்கும் சட்னியெல்லாம் இல்லைங்க..

பயப்படாதீங்க!

தாளிதம்-கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, (விருப்பப்பட்டால் பொட்டுக்கடலை, வேர்கடலை சேத்துக்கலாம்), காரத்துக்கு தேவையான அளவு காய்ந்த மிளகாய், உப்பு, காயம், புளி,கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்து துருவிய தேங்காயையும் அதோடு சேர்த்து மிதமாக வறுத்து மிக்ஸியில் குறைவாக தண்ணீர் விட்டு அரைக்கவேண்டும்

எங்கூ____ரில் அம்மியில்தான் அரைப்பாக ,அதன் சுவையே....தனி.

தேங்காயையும் வறுத்து அரைப்பதால் நீண்டநேரம் கெடாமலிருக்கும்.

பிரயாணத்துக்கும் ஏற்றது. அநேகமாக ரயில் பயணம்தான்.

இட்லியின் இரு பக்கமும் ஜோதிகா மாதிரி நல்லெண்ணெய் ஊ__ற்றி

சாரி!..தடவி சட்னியை அதில் சாண்ட்விச் மாதிரி பரப்பி ரெண்டு ரெண்டு

இட்லிகளாக தேவையான.....ஆங்!....எத்தனை என்று சொன்னால்...கண்ணு படப்

போகுதுங்க! ...சாண்ட்விச் களாக வாழையிலையில் சுற்றி பேப்பர் பாக் செய்து

கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு ரயிலேறினால் இரவு 8-30 க்கு பிரித்து

மேய்ந்துவிட்டு, பாட்டிலிலுள்ள தாமிரபரணித் தண்ணீரையும் குடித்துவிட்டுப்

படுத்தால் சுகமாக தூக்கம் வரும்.

அண்ணி பாக் செய்யும் போதே... அப்படியே....எனக்கு மறுநாள் காலைக்கும் சேர்த்து இட்லியும் சட்னியும் தனித்தனியாக ஒரு பார்சல் லவட்டீடு வந்துடுவேன். அத்தோடு மட்டுமல்ல கூட ரெண்டு மூன்று பாட்டிலில் தாமிரபரணி ஆற்றுத்தண்ணீரும் என்னோடு ஓடி வரும்.

இப்போதெல்லாம் அலுமினீய பாக் தான். தண்ணீரும் தாமிரச்சுவை

இழந்து சப்பென்றிருக்கும். யாரைத்தான் நோவதோ?

ஒரு முறை எங்களுக்கு ரயிலில் டிக்கெட் கிடைக்காததால் ஆம்னி

பஸ்ஸில் கிளம்புகிறோம். இட்லி-சட்னி பாக்கிங் மும்முரமாக நடந்து

கொண்டிருக்கிறது. அங்கு வந்த அண்ணனின் ஐந்து வயது பேரன் விக்ரம்," அம்மம்மா!

அவங்கதான் ரயிலில் போகவில்லையே? பின் ஏன் ரயில் சட்னி செய்தீர்கள்?"

என்றான் சட்டென்று.

அந்த அருமையான உடனடி நகைச்சுவையை ரசித்து சிரிக்கக்கூட

இயலாமல் பிரமித்து நின்றோம்!!

பஸ்ஸில் போகிறார்களே.... பஸ் சட்னிதானே கொண்டுபோகவேண்டும்?

இந்தக்காலக் குழந்தைகள் எத்துணை தெளிவாக சிந்திக்கிறார்கள்!!!!!!

நாம் தான் ரொம்பத்....தெளி.....வாக குழம்பிக்கொண்டிருக்கிறோம்!

25 comments:

said...

NO SE ARABE O EL IDIOMA EN EL QUE HAS ESCRITO PERO ME GUSTO TU BLOG
FELICITACIONES

Anonymous said...

chikku pukku rayilye kalakkuthu paar un styley....chatni suvai padikkum bothey chundi izhukkuthey ..saappitta eppadi irukkum.....ella trackkilum unga ezhuththup payanam thodara en manamaarntha vaazhththukkazh....

said...

ரயில் பயணங்கள்தான் எத்தனை இன்பம்..

தஞ்சை-சென்னை அடிக்கடி பாஸன்ஞர் வண்டியில் பயணம் செய்த அனுபவம் நிறைய உண்டு..

முன்பெல்லாம் ரயில் பயனங்களுக்கென்றே ரயில் கூஜா என்ற ஒரு பித்தளை கூஜா (தண்ணிர் எடுத்து வர)இருக்கும்...இந்த நவீனகாலத்தில் எல்லாம் 10ரூ மினரல் வாட்டர் பாட்டில்தான் துணை

said...

:) திருநவேலியா? பக்கத்து ஊர்தான். நீங்க இப்பிடிக் கொண்டு போனா...நாங்க கொஞ்சம் வேற மாதிரி...தூத்துடீல இருந்து கெளம்புவோம். தேங்கா, பொரிகடலை, உப்பு, பச்ச மெளகா போட்டு அரைச்சி....அடுப்புல சட்டிய வெச்சி...அதுல தொவையல வதக்கீருவோம். கெடாம கம்முன்னு ஒரு நாளைக்கு இருக்கும். இந்தச் சட்டியோட இட்டிலி சண்ட போட்டா எப்படி இருக்கும் தெரியுமா...அடடடா!

பல நாள் பள்ளிக்கூடத்துல அம்மா குடுத்தனுப்புன தயிர்ச்சோத்துக்கு இந்தச் சட்டினி சரி சோடி போட்டிருக்குங்க.

குழந்த கேட்ட கேள்வியும் சூப்பரு.

said...

இட்லி சட்னி மட்டுமா? கூடவே தாளித்த தயிர் சாதமும், மிளகாய் மாங்காய் ஊறுகாயும். அந்த சாதம் கொஞ்சம் கெட்ட்டியாக ஆகி, லேசாக நெருப்பில் வாட்டிய வாழையில் பொதியப் பட்டிருப்பதால் உண்டாகும் வாசனையும்....ஹூம் என்னென்னவோ நினைப்பு எல்லாம் கிளப்பி விட்டுட்டீங்க.!!

said...

யெக்கோவ் நீங்க திருநெல்வேலியா....நானும் தேன்.....ஐய்யோ நம்ம ஊர் பெருமைய படிச்சா அப்பிடியே ஜிவ்வுங்குது...நமக்கு அம்பை..அங்கன??

said...

வந்ததே ஏஏஏஎ
சட்டினினு பாட ரொம்ப ஆசையாயிருக்கு நானானி.

இந்த ரயில் சட்டினி ரயில்ல போனாதான் நல்லா இருக்கும்னு தோணுது.
மூஊஉன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன நாங்க போகும்போது ரயில் கரிவாசனையோடு எல்லா சாப்பாடும்
ரொம்பவே நல்லா இருக்கும்.
இப்போ இந்த சட்டினி செய்ய வேண்டியதுதான். எல்லாமே ரகவன் சொல்லும் சட்டினி உட்பட அம்மில அரைச்சு அள்ளி வச்சா ம்ம்ம்ம்
வாசனையே தனிதான். ரொம்ப நன்றிப்பா.

said...

// ரயிலை துருவிப்போட்டு அரைக்கும் சட்னியெல்லாம் இல்லைங்க..//

என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன்.. :)

பதிவு படித்து முடிக்கும் போது நாக்கில் நிர் ஊறுகிறது.. நானானி ஒரு பாக்கட் இட்லி ரயில் சட்னி பார்சல் என்று சொல்ல தோன்றுகிறது.. :) கிடைக்குமா?? :)

வீ எம்

said...

சட்னி இப்படி துரைகளை(யும்) இழுக்குதுபோல இருக்கு. மொதல்லே வந்து
ஆஜர் கொடுத்துருக்கார்!

அணைச்சு வச்சுருந்த என் கொசுவர்த்தியை
ஏத்தியதை மென்மையாகக் கண்டிக்கிறேன்:-)))))

said...

லா செனோ வெரோ!
பாஷைதான் புரியவில்லை..French என்று நினைக்கிறேன்.பாராட்டியிருக்கிறீர்கள்
என்று மட்டும் புரிகிறது.நன்றி!

said...

சட்னியைப் போலவே உங்கள் பின்னோட்டமும் சுவையாயிருந்தது,
அனானி!

said...

அரவிந்தன்!
நீங்கள் குறிப்பிட்ட பித்தளை கூஜா
எங்கள் வீட்டிலும் உண்டு.புளி போட்டு
விளக்கி தங்கம் போல் பளபளக்கும்.என் தந்தை
ரயிலிலோ, காரிலோ பயணம் செய்யும்
போது பெயரிற்கேற்ப பின்னால் செல்லாமல் முன்னாலேயே ஏறிக்கொள்ளும்.

said...

சட்னியோடு இட்லி ஏன் சண்டை போடவேண்டும்? சமாதானமாகப் போனால் தானே சுவைக்கும்? ராகவன்!

said...

கொத்ஸ்!
தயிர் சாதத்தில் இஞ்சியை விட்டுடீர்களே? நான் வெள்ளரிக்காவும்
கூட போடுவேன்.

said...

ப்ரொப்பர் பாலக்காடு மாதிரி...நான்
ப்ரொப்பர் திருநெல்வேலிதான்!
அதென்ன டுபுக்கு?

said...

வல்லி! ரெண்டு சட்னியையும் செய்து பார்த்து,சுவைத்துப் பார்த்து சொல்லுங்கள்.

said...

வீ.எம்.!
டிக்கெட் கன்பார்ம் ஆனதும் சொல்லுங்கள் பார்சல் அனுப்புகிறேன்!

said...

டீச்சர்!
நீங்கள்தான் சரீஈஈயான தி. பா.வாச்சே! கொசுவத்தியை ஏத்திவிடுங்கள் ப்ரவாயில்லை.

said...

நானானி, அது லா செனோ thaanaa
அப்படின்னால் அது ஸ்பானிஷ்னு நினைக்கிறேன்.
அதுசரி சட்னி அனுப்புனு சொல்றாரொ என்னவோ.:))))))

Anonymous said...

La seno vero spanish-la eluthi irukaar. Here is the english translation:

ARAB OR THE LANGUAGE IN WHICH YOU HAVE WRITTEN BUT I I LIKE TU BLOG CONGRATULATIONS

The whole world is reading...
Hearty Congratulations.
kalakunga !! - RL

said...

ஆர்.எல்.!
இப்படி தெளிவா சொன்னா தானே
புரியும்! ஸ்பானிஷில் நன்றிக்கு எதுவோ அது!

Anonymous said...

Nandri in Spanish is "Gracias" :)

said...

'GRACIAS!' அனானி!

said...

first time to ur blog.நல்லா எழுதறீங்க. ஜூன் மாதம் sunnyvale வந்தேன். திருநெல்வேலியா wow - super ஊராச்சே!! கலக்குங்க... good luck

said...

தீட்ஷண்யாவின் தீர்க்கமான பார்வை முதன்முறையாக என் மேல் கொஞ்சம் லேட்டாகவாவது
விழுந்ததற்கு நன்றிம்மா!
சன்னிவேல் அழகான ஊர். இல்லையா?தீட்ஷண்யா?