Saturday, May 19, 2007

மங்கல மங்கையர் குங்குமம்


Image and video hosting by TinyPic


குங்குமச் சிமிழை நீட்டியதும் மோதிரவிரலை நுழைத்து அள்ளிஇட்டுக்கொள்கிறோமே.....அதைச் செய்வது எப்படி?

நினைவு தெரிந்து கடையில் குங்குமம் வாங்கியதில்லை. HOME MADE-தான்.

அப்பாவே செய்வார்.

சிறுவயது முதலே குங்குமம்தான் இட்டுக்கொள்ளவேண்டும் என்பது எங்கள்
தந்தையின் ஆசை! குங்குமம் காலியாகிவிட்டால்,'அப்பா! ' என்று போய் நிற்போம். அவரும் அவரது கோ-டவுனிலிருந்து.....பெரீரீ...ய ஹார்லிக்ஸ்
பாட்டிலிலிருந்து நிரப்பிக் கொடுப்பார்.


எங்கள் வீட்டுக் குங்குமம் மிகவும் பிரசித்தி! அப்படிப்பட்ட குங்குமம் செய்யும்
முறையை..பின்னாளில்... திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பிறகு அப்பாவிடம் போய்,'எனக்கு கற்றுக்கொடுங்கள்.' என்றேன். 'வந்தாயா! வா!'
என்று அதன் அருமை தெரிந்து வந்த மகளுக்கு ஆவலோடு கற்பித்தார்.


தேவையானவை:

1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் --ஒரு கிலோ
2) எலுமிச்சம் பழச்சாறு---------------------------------1 1/2 லிட்டர்
3)வெங்காரம்-------------170 கிராம்
4)சீனாக்காரம்------------65-70 கிராம்
5)நல்லெண்ணை--------100 கிராம்
6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர்----------வாசனைக்கு தேவையான சில துளிகள்


கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதனுடன் கலக்கவும் .

அத்துடன் வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும்


நன்றாகக் கலந்ததும் மெல்லிய வெள்ளைத்துணியால் மூடி தனியே வைக்கவும். தினமும் காலையும் மாலையும் நன்றாகக் கிளறிவிடவும்.

கிளறுவதற்கு மரக்கரண்டியையே உபயோகிக்கவும்
சாறு முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல் கிளறிக்கொண்டே
இருக்கவேண்டும். சாறு ஏற ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு மாறியிருக்கும்.


பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நிழலில் காயவைக்கவேண்டும்.
இப்போது கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும் நேரமும் நிறைய
பொறுமையும் பிடிக்கும் வேலையிது!


நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள இரும்பு உரல், உலக்கை
கொண்டு கைப்பிடி கைப்பிடி அளவாகப் போட்டு இடிக்கவேண்டும். சுமாராக
இடிபட்டதும் அதே பாத்திரத்தின் வாயை மெல்லிய வெள்ளைத்துணியால்
கட்டி பொடி செய்ததை அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்' செய்ய
வேண்டும். மேலிருக்கும் கப்பியை உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.


this process goes on & on till you get little கப்பி.
fine powder -ஆக கிடைத்த மஞ்சள் பொடியை....இனிமேல் 'குங்குமம்' என்றே
அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி
கிளறவும். நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை தேவை.


இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ அத்தர், ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக் கேட்பவர்க்கும்
கொடுக்கலாம்.


எல்லோரும் மஞ்சள் குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
பழைய பாட்டொன்றொடு முடிக்கிறேன்.

"கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு புடவை கட்டி
நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை பின்னிவிட்டு

உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு புகழ்ந்ததையா
நற்றிடும் பழமை அதை நாடுவதே நல்லதையா!"

5 comments:

said...

எனக்கு நானே ஒரு டெஸ்ட் கமெண்ட்
போட்டுப்பார்த்தேன்.

said...

அழகு...
உங்கள் தந்தையின் பாசம்

said...

ஆம்! தூயா!
ஆராதிக்கவேண்டிய அழகு...அந்தப்பாசம்!
நன்றி தூயா!

said...

ரொம்ப அழகான பதிவு. உங்கள் பதிவுகளில் நீங்கள் தெரிகிறீர்கள் - உங்கள் குணமும், பக்குவமும், கைமணமும்,நல்ல எண்ணங்களும் பிரதிபலிக்கின்றன- நிறைய எழுதுங்கள்... வாசிக்க காத்திருக்கிறேன்!

said...

நான் எப்போதும் நானாக இருக்கவே விரும்புவேன்.தீட்ஷண்யா!
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி! அதற்கு உரியவளாக இருக்க முயலுவேன்