Saturday, March 10, 2007

இருபத்தியெட்டாவது நட்சத்திரம்!

'கோ..கிலா.....!' காலையில் எழுந்ததிலிருந்தே....கோகிலா..கோகிலாதான்
நரசிம்மனுக்கு. ஆபீஸ் கிளம்பும்போதும் 'கோகிலாஆஆஆ....!'
'வந்தேன்' பூஜை வேலையை விட்டுவிட்டு.என்ன என்பதுபோல் பார்த்தேன்.
'அதை திருப்பி சொல்லு..'

'உத்திரட்டாதி'

'ஒகே!ஒகே! ஞாபகம் இருக்கு' என்றபடி காரிலேறி அலுவலகம் சென்றுவிட்டார்.
மதியம் ஒரு மணியிருக்கும்..போன் அலறியது. பாதி சாப்பாட்டில் ஓடிப்போய்
காது கொடுத்தேன்,'madam, sir wants to talk to you.' அவரோட செகரட்டரி குயில்
போல் கூவினாள்.
அவர் லைனில் வந்து 'கோகி... இன்னொரு வாட்டி சொல்லேன்'
அடடா...ஆபீஸிலும் இதே நினைவா...'உத்திரட்டாதி! என்று இருத்தி சொன்னேன்.
மாலையாயிற்று..வேலை முடிந்து வந்து காரிலிருந்து இறங்கியபடியே
டிரைவரிடம் ,'நாளை காலையில் 8-மணிக்கே வந்துவிடு,' என்றபடியே உள்ளே
வந்தவர் என்னைப்பார்த்து ,'கோகிலா! டிரைவரை சீக்கிரம் வரச்சொல்லிவிட்டேன்,' ரொம்ப ஞாபகமாக சொல்லிவிட்டாராம்! உடனேயே
'இன்னும் ஒரே ஒரு தரம் சொல்லிடேன்!..ப்ளீஸ்!' அதானே பார்த்தேன்!
'உத்திரட்டாதி...உத்திரட்டாதி..உத்திரட்டாதி.' நொந்தேன் நூலானேன்.
வேறொன்றுஇல்லை, அமெரிக்காவிலிருக்கும் எங்கள் மகனுக்கு பத்து
நாட்கள் முன் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதற்காக நாளை வெள்ளிக்கிழமை அங்கு குழந்தைக்கு பெயர் சூட்டு விழா. அங்கெல்லாம்
பிரசவத்துக்கு ஹாஸ்பெட்டலில் சேரும்போதே குழந்தையின் பெயரைச் சொல்லிவிடவேண்டுமாமே! அங்கு அதுதான் வழக்கமாம்! மருமகளின் பெற்றொர்
உதவிக்காக சென்றிருக்கிறார்கள்,இங்கு இதுதானே வழக்கம்! ஹி..ஹி..
என் கணவர் இங்கு சென்னையில் ஒரு MNC-யில் நல்ல பதவியில்
இருக்கிறார். எப்போதும் பிஸி..பிஸி..பிஸி. அவரது அன்றாட வேலைகளைக் கூட வீட்டில் நானும் ஆபீசில் செகரட்டரியும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும்.

இன்று காலையில் எழுந்தவுடன் அவரிடம் ,'என்னங்க! நாளைக்காலையில்
நாமிருவரும் வடபழனி கோயிலுக்குப் போய் பேரக்குழந்தை பேரில் ஓர்
அர்ச்சனை செய்துவிட்டு வருவோம்...என்ன?..ஓகேவா?' உள்ளுக்குள் சிறிது
பயம் எங்கே வேலையிருக்கிறது என்று சொல்லிவிடுவாரோ..என்று.
ஹப்பா...! உற்சாகம் பொங்கிவழிந்தது முகத்தில். துள்ளிக்குதித்துக்கொண்டு,
'அப்ப, நாந்தான் குழந்தையின் பெயரும் நட்சத்திரமும் சொல்வேன்! உனக்கு ஓகேவா?' என்றார் குழந்தையைப்போல்.

'பின்ன..? தாத்தாவா லட்ஷணமா நீங்கதான் சொல்லவேண்டும்'
ஒரே பெருமை! முகத்தில். அது என்னங்க...? பேரக்குழந்தை பிறந்து தாத்தாவாகிவிட்டால் அவர்கள் குணச்சித்திரதையே புரட்டிப்போட்டுவிடுகிற்து!? இவ்வளவு மகிழ்ச்சியாய் அவரைப்பார்த்ததில்லை.
குழந்தைக்கு அவரது அப்பா பெயராம்..அதனால் மறக்காதாம்! நட்சத்திரம்
மட்டும் அப்பப்ப மறக்கிற்து.
இரவு உணவு முடித்து சிறிது நேரம் வீணையிசை கேட்டுவிட்டுத் தூங்கப்போனேன்.

படுக்கையில் இவர் தூங்காமல் யோசனையிலிருந்தார். 'என்னவாச்சு?' என்றேன்
'உனக்காகத்தான் காத்திருந்தேன், தூங்குமுன் ஒருமுறை சொல்லிவிடேன்! ப்ளீஸ்ஸ்..!

சரி!..உ..த்..தி..ர..டா..தி!' தாங்காதடா சாமி', என்றவாறே தூங்கிப்போனேன்.

நடுஇரவில் திடீரென்று விழித்தேன்...பார்த்தால்... விட்டத்தை பார்த்தவாறு
கொட்டகொட்ட விழித்திருந்தார்!!! கெஞ்சும் பார்வை பார்த்தார். 'சரி..சரி..
உத்திரத்தையே பார்த்துக்கொண்டிருகிறீர்கள் அல்லவா? அதையே ஞாபகத்தில்
வைத்துக்கொள்ளுங்கள்..உத்திரட்டாதி!!!!!! இல்லையென்றால் நானே சொல்லிவிடுகிறேன் இப்போது நிம்மதியாகத்தூங்குங்கள்.'
என்றவாறே உறங்கிப்போனேன்.

காலையில் இருவரும் சீக்கிரம் தயாராகி டிரைவர் வந்ததும் உற்சாகமாகக்
கிளம்பினோம். டிரைவர் ,'நூரடி ரோடு வழியா அல்லது டிநகர் வழியா?' என்று கேட்டார். எப்படியாவது சீக்கிரம் போ!

கார் ராஜ்பவன் தாண்டி டிநகர் வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் வந்தது.
பாலம் ஏறி இறங்கவே இருபது நிமிடமாயிற்று. ஒரு வழியாக ஆற்காடு ரோடு கடந்து வடபழனி கோயிலை அடைந்தோம்.

காரிலிருந்து விறுவிறுவென்று கோயிலை நோக்கி நடக்கவாரம்பித்தார்.
'நில்லுங்க..நில்லுங்க..'என்று நிறுத்தி அர்ச்சனை பொருட்கள் வாங்ச்சொன்னேன். முன்னேப்பின்னே கோயிலுக்கு வந்திருந்தால்தானே!!
அவருக்கு கோயிலெல்லாம் அவரது அலுவலகம்தான்!!

காலணிகளை அதற்கான இடத்தில் விட்டுவிட்டு நேரே முழுமுதற்கடவுள்
வினாயகரை வணங்கி, பின் நேரே முருகன் சன்னதிக்குவந்தோம்.
நான் வழக்கமாக வரும் கோயில்களில் இதுவும் ஒன்று. என்னைபார்த்ததும் குருக்கள் ஓடோடி வந்தார்,'என்னம்மா செளக்கியமா? பேரன் பிறந்திருக்கிறானாமே! ரொம்ப சந்தோஷம்! அதிசயமாக சாரும் வந்திருக்கிறாரே? என்ன விசேஷம்?' என்றார். இவருக்கு ஒரே ஆச்சரியம்!
'உனக்கு இவ்வளவு வரவேற்பா..!'
குருக்கள் அர்ச்சனைத் தட்டைவாங்கியவாறே,' யார் பேருக்கு அர்ச்சனை? என்றார்.

நான் வாயைத்திறக்குமுன்னால், இவர், தன் தந்தை பேரைச்சொல்லிவிட்டு
'திருவட்டாதி..! என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாரே பார்க்கலாம்!!!!!

குருக்கள் ' திருதிரு'என்று விழித்தார். என்னடா? இது இருபத்தேழு நட்சத்திரங்கள் தானே? இது என்ன இருபத்தியெட்டாவது நட்சத்திரமா...? புதிதாகத் தோன்றிவிட்டதா என்று குழம்பிப்போனார். ஒருவாறு அவரைத் தெளியவைத்து பூஜையை முடித்துகொண்டு பிரகாரத்தில் வந்து மெளனமாக அமர்ந்தோம்.

ஒரு கணம்தான்! ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
போவோர் வருவோர் எங்களை வேடிக்கைப்பார்க்க, 'யார் பையன்' படத்தில் N.S. கிருஷ்ணனும் T.A. மதுரமும் போல் 'கொல்லென்று'
சிரிக்கவாரம்பித்தோம்.......!

(சர்வேசனுடைய கதைப்போட்டிக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன், மற்ற கதையை அங்க படிங்க.)

6 comments:

said...

நல்லா இருக்கு :)))

வாழ்த்துக்கள் :)

said...

vazththukkallukku nanri ponns !

said...

ஹாஹாஹா..

படித்தேண் சிரித்தேன் நானானி.. :-)))

said...

thank you 'my friend' for making you laugh
naanani

said...

நல்லா இருக்கு...

said...

நன்றி! மாறன்!
ரெண்டே வார்த்தைகளில் நறுக்கு தெறித்துவிட்டீர்கள்!